அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் கி.பி. பதினாந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்தவர். முருகனையே கடவுளாகக் கொண்டு வணங்கிப் பாடி வாழ்ந்தவர். இவர் இயற்றியிருக்கும் பாடல்கள் எல்லாம் -நூல்கள் எல்லாம்- முருகன் பெருமையையே போற்றுகின்றன.

இவர் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தார்; ஆதலால் அருணகிரிநாதர் எனப் பெயர்பெற்றார். இவர் இசைவேளாளர் குலத்திலே பிறந்தவர் என்பது வரலாறு. அருணகிரி என்பது திருவண்ணாமலை.

இவரைப்பற்றி வழங்கும் வரலாறுகள் பல உண்டு. அருணகிரியாரின் தந்தை பெயர் தெரியவில்லை. இருவருடைய அன்னையார், இவர் இளம் பருவமாயிருக்கும் போதே இறந்து போனார். அதனால் இவருடைய தமக்கையாரால் வளர்க்கப் பட்டார். இவர் தமது வாலிப வயதிலே காமவெறியராய்க் கணிகையர் நட்பில் காலங் கடத்தினார். இவர் செய்கையைத் தமக்கையார் வெறுத்தார்; கண்டித்தார்; ஆதலால் இவர் வாழ்விலே வெறுப்புக் கொண்டு துறவியானார் என்பர்.

அருணகிரியார், காமவெறியராய்த் திரிந்ததை அவர் தமக்கையார் கண்டித்ததனால் வெறுப்படைத்தார்; உயிர் விடத் துணிந்தார். அருணைக் கோயிலின் கோபுரத்தின் மேல் ஏறி நின்று கீழே குதித்தார்; குதித்தும் அவர் இறந்து போய் விடவில்லை; பிழைத்துக் கொண்டார். இப்பொழுது முருகன் ஆசாரிய வடிவில் தோன்றி அவருக்கு அருள் புரிந்தார்; உபதேசித்தார்; அதன்பின் துறவறத்தை மேற்கொண்டார்; எப்பொழுதும் முருகனையே பாடிக் கொண்டிருந்தார் என்பர்.

அருணகிரிநாதர் பாடல்களைப் படிக்கும்போது அவரைப் பற்றிய சில உண்மைகளை நாம் காணலாம். அவருடைய பாடல்களே அவ்வுண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன. அருணகிரிநாதர் சிறந்த கல்விப் பயிற்சியுள்ளவர்; தமிழ்க் கல்வியிலும் தேர்ந்தவர்; வடமொழிக் கல்வியிலும் தேர்ந்தவர். இயற்றமிழ்ப் பயிற்சியோடு இசைத் தமிழிலும் வல்லவர் ஆவார். அவர் வாலிப வயதிலே வேசையர்கள் வலையிலே வீழ்ந்து கிடந்தார். அதனால் அவர் பல துன்பங்களுக்கு ஆளானார்; வறுமை உடல்நோய் இவை களால் வருந்தினார். இதன் பிறகே காமத்தின் தீமையைக் கண்டறிந்தார்; விலைமாதர்களின்- வேசையர்களின்- பொய்யன்பையும், நயவஞ்சகங்களையும், பொருள் பறிப்பதற்காக அவர் செய்யும் நடிப்புக்களையும் உணர்ந்தார். நல்லறிவு பெற்றார். முருகனை வேண்டினார்; பாடினார்; பரவினார். வேசையர் நட்பால் தான் பட்ட தொல்லைகளைப் பிறரும் அறிந்து கொள்ளும் பொருட்டு விரிவாகப் பாடினார். இவையே அருணகிரிநாதர் பாடல்களிலிருந்து நாம் ஊகிக்கும் உண்மைகள்.

அருணகிரிநாதரால் பாடப்பட்ட நூல்கள் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, திருவகுப்பு, கந்தர் அந்தாதி, வேல் விருத்தம் என்பவை இன்னும் சில நூல்களும் உண்டு. இவற்றுள் பக்தர்கள் பலராலும் போற்றிக் கொண்டாடப்படும் நூல் திருப்புகழ் ஆகும். பதினாயிரம் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியதாகக் கூறுகின்றார். ஆனால் ஏறக்குறைய 1250 திருப்புகழ் தான் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன.

திருப்புகழ் என்ற மொழிக்கு அழகிய புகழ் அல்லது அழகிய பெருமை என்பதே பொருள். ஆகவே திருப்புகழ் என்னும் பெயர் பொதுப் பெயர். இப் பொதுப் பெயர், முருகன் புகழ் பேசும் நூலுக்குச் சிறப்புப் பெயராக அமைந்து விட்டது. திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்தும் வண்ணப் பாடல்கள்; அதாவது இசையுடன் பாடக்கூடிய பாடல்கள்.

அருணகிரிநாதர் பாடல்களிலே திருப்புகழ்தான் முருக பக்தர்களால் பெரிதும் போற்றப்படுகின்றது. முருகன் அடியார்கள் அப்பாடல்களை மனம் உருகிப் பாடுகின்றனர். திருப்புகழ் பாடுவோர்- திருப்புகழ் படிப்போர்- முருக பக்தர்களாகி விடுகின்றனர். இத்தகைய சக்தி- தன்மை- திருப்புகழ்ப் பாடலுக்கு இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

விலைமாதர்களின் வஞ்சகங்களை- பொருள் பறிப்பதற்காக நடிக்கும் தந்திரங்களை- மோசடிகளை- ஆடவர்களை மயக்குவதற்காக அவர்கள் செய்யும் மாயங்களை- விளக்கிச் சொல்லுவதிலே திருப்புகழுக்கு நிகராக வேறு எதையும் சொல்ல முடியாது. விலை மாதர்களுடன் நீண்ட நாள் பழகி, அவர்களின் மாயா ஜாலங்களிலிருந்து தப்பித்துக் கொண்ட ஒருவரால்தான் அவ்வளவு விளக்கமாகச் சொல்ல முடியும். விலை மாதர்களைப் பற்றி- அவர்கள் நடத்தைகளைப் பற்றி- திருப்புகழில் வர்ணிக்கப்படுவதைப் பார்க்கும்போது அருணகிரிநாதர் தமது அனுபவத்தைக் கூறுகிறாரோ என்று தான் எண்ண வேண்டியிருக்கிறது.

ஆபாசத்தை- காமவெறியூட்டும் நிகழ்ச்சிகளை- பன்னிப் பன்னிப் பாடும் நூல் திருப்புகழ் என்போர் உண்டு. ஆபாசத்தை எடுத்துக் காட்டுவது ஆபாசத்தைப் பாராட்டுவது ஆகாது; காமத்தால் விளையும் துன்பங்களை எடுத்துச் சொல்வது காமவெறியை ஊட்டுவது ஆகாது; தீயொழுக்கம் இன்னது என்பதை எடுத்துரைப்பது தீமையைப் போற்றுவது ஆகாது. மாதர் மயக்கால்- காமத்தால்- வேசையரால்- விலைமாதரால் – ஏற்படும் தீமைகளை வலியுறுத்தி வலியுறுத்திப் பாடுவது திருப்புகழ் அதனால் திருப்புகழைக் காமவெறியை ஊட்டும் நூல் என்று சொல்வது வீண் பழியாகும். திருப்புகழின் பெருமையை- சுவையை- உணராதவர் உரையாகும்.

திருப்புகழிலே, நீதிமொழிகள் பலவற்றைக் காணலாம்; அறிவுரைகள் பலவற்றைக் காணலாம்; மனித வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் பலவற்றைக் காணலாம். பல பாடல்கள் மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரையில் உள்ள வாழ்க்கையைச் சித்திரிக்கின்றன.

குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள்; வாலிப வயதில் உள்ள செயல்கள்; வயதேறிய பருவத்தில் வரும் நோய்கள்; கிழப் பருவத்தில் மக்கள் அடையும் துன்பங்கள்- இவைகளையெல்லாம் திருப்புகழ்ப் பாடல்களிலே காணலாம்.

வாத்திய வகைகள்; அவைகளின் முழக்கங்கள்; பெண்களின் ஆடை அணிகள்; குழந்தைகளின் ஆடை அணிகள்- இவைகளை யெல்லாம் திருப்புகழ்ப் பாடல்களிலே காணலாம்.

பதினைந்தாம் நூற்றாண்டிலே, தமிழகத்திலே நுண்கலை என்று சொல்லப்படும் இசை, நடனம் முதலியவை மிகுந்த வளர்ச்சியடைந்திருந்தன. இவ்வுண்மையைத் திருப்புகழ் விளக்கி நிற்கின்றது.

காமவெறி கொண்டு விலைமாதரை நம்பி வீணாகாதீர்கள்; முருகனை நம்பி- வழிபட்டு நன்மையடையுங்கள்; ஒழுக்கத்துடன் வாழுங்கள் என்று மக்களுக்கு உபதேசம் செய்வதே திருப்புகழாகும்.

திருப்புகழ்ப் பாடல்களிலே பிற மத வெறுப்பைக் காண முடியாது. முருகனே முதல் தெய்வம் என்று கூறுகின்ற திருப் புகழ்ப் பாடல்களிலிருந்து கந்தபுராணக் கதை முழுவதையும் எழுதிவிடலாம்; இராமாயணத்தை எழுதி விடலாம்; கண்ணன் திருவிளையாடல்களைத் தொகுத்து விடலாம்; நாயன்மார்களின் வரலாறுகள் பலவற்றையும் தொகுக்கலாம்.

அருணகிரியார், முருகனைத் திருமாலின் மருகன் என்று வைத்துப் பாடுகிறார். திருமாலை முருகனுடைய தாய்மாமன் பெருமையைப் பேசும் முறையிலே திருமாலின் அவதாரங்களின் சிறப்புக்களையும் புகழ்ந்து பாடுகிறார்.

இன்னும் சிவபெருமான், விநாயகர், சக்தி முதலிய பல தெய்வங்களின் பெருமைகளையும் திருப்புகழிலே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *