நல்லாதனார் அருளிச் செய்த

திரிகடுகம்

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

அவர்கள் எழுதிய உரையுடன்

திரிகடுகம் என்பது கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறி வருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக்கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலானார் சங்கத்துச் சான்றோரென நன்கறியப்படுதலின், அவற்றுட் பலவும் அக்காலத்தினவெனக் கருதுவதில் இழுக்கொன்றுமின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில்,

வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியிற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே.

என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியப்படுவது. அவை, அம்மையென்னும் வனப்புடைய வென்பதும் அவ்வுரையாற் றெளியப்படும். அம்மை யெனவே, அவையெல்லாம் சிலவாகிய மெல்லிய சொற்களா லமைந்தனவென்பதும், அடிநிமிராதன வென்பதும் பெரும் பாலும் அறம் பொருளின்பங்களைப் பற்றியன வென்பதும் போதரும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக் கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினர்.

அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு
ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்.

என்பது பன்னிருபாட்டியல்.

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை சொற் காஞ்சியோ டேலா தியென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.

என்பதோர் வெண்பா. கீழ்க்கணக்கு நூல்கள் இவை யென்பதனை அறிவித்தற் கெழுந்தது. எனக் கொள்ள வேண்டும். இதனால் அறிவிக்கப்படும் நூல்களாவன: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியது நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இவற்றுள் இன்னிலை என்பதனை விடுத்துக் கைந்நிலை யென்பதொன்றைச் சேர்த்துக் கூறுவாருமுளர்; அவர் இன்னிலை யென்பது ஓர் பழம் பனுவலன்றெனவும், கைந்நிலையே பழமையாய தெனவும் கூறுவர். “நாலடி நான்மணி என்னும் வெண்பா”வானது, “ஐந்தொகை”, ‘இன்னிலைய’, ‘மெய்ந்நிலைய’, ‘கைந்நிலையோடாம்’, ‘நன்னிலையவாம்’ என்னும் பல பாடவேற்றுமைகளையுடையது; ஆகலின் அது கொண்டு இன்னிலை யென்றோ கைந்நிலை யென்றோ துணிதல் அரிதாகும். இப்பொழுது இன்னிலை யென்பதோர் நூலும் கைந்நிலை யென்பதோர் நூலும் வெளி வந்துள்ளன. இரண்டும் கீழ்க்கணக்கின் இலக்கணம் அமைந்தனவே. அவற்றுள், பதினெட்டென்னும் தொகையுட்பட்டது யாதாயினும் ஆக.

இனி, திரிகடுகம் என்னும் இந்நூலை இயற்றினவர் நல்லாதனார் என்பவர். நல்லந்துவனார், நன்முல்லையார், நல்வேட்டனார் என்றிங்ஙனம் நல் என்னும் அடையடுத்த பெயர்களையுடைய சங்கப் புலவர் பலராவர். ஆதன் என்னும் பெயர் நல் என்னும் சிறப்புப் பற்றிய அடையை முன்னும் ஆர் என்னும் உயர்வு பற்றிய விகுதியைப் பின்னும் பெற்று நல்லாதனார் என்றாயிற்று. இவர் திருமால் பத்தியுடையரென்பது ‘கண்ணகன் ஞால மளந்ததூஉம்’ என்னும் இந்நூற் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் அறியப்படும்.

இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண்பாக் களையுடையது; ஒவ்வொரு வெண்பாவும் மும்மூன்று பொருள் களைக் கூறுவதனாலும், ‘அருந்ததிக் கற்பினார் தோளும்’ என்னும் முதற் செய்யுளில் ‘இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து என இவரே உவமை கூறினமையாலும் இது திரிகடுகம் என்னும் பெயரினதாயிற்று. திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு என்னும் மூன்று கார்ப்புடைய மருந்துப்பொருள்கள். அவை உடற் பிணியை அகற்றி இன்பஞ் செய்தல் போல் இந்நூற் செய்யுட்கள் கூறும் மும்மூன்று பொருள்களும் உயிர்ப்பிணியாகிய அறியாமையைக் கெடுத்து இன்பஞ் செய்வனவாம் என்க. இந் நூலிலுள்ள வெண்பாக்களிற் பாதியின் மிக்கன இன்னிசை வெண்பா; ஏனையன நேரிசை வெண்பா.’

இங்ஙனம்,

ந. மு. வேங்கடசாமி நாட்டார்.