ஒளவையார் அருளிச் செய்த

மூதுரை

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

அவர்கள் எழுதிய உரையுடன்

மூதுரை என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிருள் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். புறநானூறு என்னும் அரிய தொகை நூலுள் அவரியற்றிய முப்பத்து மூன்று செய்யுள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் தொகைகளிலும் அவருடைய செய்யுள்கள் பல உள்ளன. இதினின்றே அவருடைய பெருமையை அறியலாகும். தொகை நூல்களிலுள்ள அவருடைய பாட்டுக்கள் மிக்க அருமை பெருமை வாய்ந்தவை. கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் அஞ்சி அவரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். அவன் ஒரு மலை முழைஞ்சினுள்ளே அருமை யாகப் பெற்ற அமிழ்த மயமான நெல்லிக்கனி யொன்றை அவருக்கு அளிப்ப, அவர் அதனையுண்டு நெடிது உயிர் வாழ்ந்தனரென அவரும் பிறரும் பாடிய சங்கப் பாட்டுக்கள் தெரிவிக்கின்றன. அவர் அதியமானிடத்திருந்து தொண்டைமான் இளந்திரையன் பக்கல் தூதாகச் சென்று, தொண்டைமானின் படைக் கலக் கொட்டிலைப் பார்த்துப் பாடிய பாட்டும், அதியமான் உயிர் நீத்தபின் கையற்றுப் பாடிய பாட்டுக்களும் அவருடைய செய்யுளி யற்றுந் திறமையையும், அஞ்சாமை, நன்றியறிவு, அன்பு, இரக்கம் முதலிய உயர் குணங்களையும் நன்கு புலப் படுத்தும்.

தமிழ் நாட்டிலே இளைஞரும், முதியவரும் ஆகிய ஆடவர் பெண்டிர்களுள் கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களே யாகும்.

தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையா ரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாக வுள்ள நீதிகளும், கருத்துக்களும் இந் நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்குகின்றன. நான்மணிக் கடிகையிலுள்ள “கல்லா வொருவர்க்கு” என்னுஞ் செய்யுளோடு, மூதுரையிலுள்ள “கல்லாத மாந்தர்க்கு” என்னுஞ் செய்யுள் சொல்லானும் பொருளானும் பெரிது ஒற்றுமையுறுகின்றது. வெண்பாவின் இடையிலும் மூச்சிரடி வருமென்பதற்கு இதிலுள்ள “அட்டாலும்” என்னுஞ் செய்யுளைத் தொல்காப்பிய உரையாளர்கள் எடுத்துக்காட்டி இருப்பது இந்நூலின் பெருமைக்குச் சான்றாகும். இந்நூல் மூதுரை யென்னும் பெயரானே தொல் காப்பியவுரை முதலியவற்றில் வழங்கியுள்ளது. ‘வாக்குண்டாம்’ என்னும் பெயரானும் பிற்காலத்தாரால் வழங்கப் பெறுகின்றது.

இங்ஙனம்,

ந. மு. வேங்கடசாமி நாட்டார்.