ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினாராகிய அவர் களுக்கு, உலகம் செல்வம் என்று நினைக்கும் பொருளைக் கண்டால் எப்படி இருக்கும்?

விருப்பு வெறுப்பின்றி வாழும் திருக்கூட்டத்தினர் ஓடானாலும் பொன்னானாலும் விருப்பு வெறுப்புக் காட்ட மாட்டார்கள்.. இரண்டுக்கும் வேறுபாடே அவர்களுக்குத் தோன்றாதாம். இரண்டையும் ஒக்கவே நோக்கும் சம திருஷ்டியுடையவர்கள் அவர்கள்.

ராமகிருஷ்ணர் சொல்லும் கதை ஒன்று இங்கே நினைவுக்கு வருகிறது. கணவனும் மனைவியுமாகிய இருவர் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள எண்ணிப் புறப்பட் டார்கள். கணவன் முன்னே செல்ல மனைவி பின்னே நடந்து கொண்டிருந்தாள். அப்போது ஒரு பொற்காசு வழியிலே கிடந்தது. அதைக் கண்ட கணவன் அது தன் மனைவியின் கண்ணிலே பட்டால் அவள் உள்ளத்தில் சபலத்தை உண்டாக்கும் என்ற நினைவினால் அது கண்ணிலே படாதபடி தன் காலால் அதன்மேல் மண்ணைத் தள்ளினான். அவன் மனைவி, “எதற்காக மண்ணைத் தள்ளுகிறீர் கள்?” என்று கேட்டாள். பொற்காசு கண்ணில் படாமல் இருப்பதற்காக அப்படிச் செய்ததை அவன் சொன்னான். உடனே அவள், “ஓ! உங்களுக்குப் பொன் வேறு, மண் வேறு என்று பார்க்கும் பார்வை இன்னும் இருக்கிறதா?” என்று கேட்டாளாம். அவள் பேதங் காணாப் பார்வையைப் பெற்றவள்.

திருக்கூட்டத் தொண்டர்கள்,

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

என்பது சேக்கிழார் வாக்கு. இதற்குச் சிறந்த உதாரணம் ஒன்று பெரிய புராணத்தில் இருக்கிறது.

அப்பர் சுவாமிகளுடை உள்ளத்தின் இயல்பை வெளிப்படுத்த இறைவன் திருவள்ளங் கொண்டான். திருப்புகலூரில் அப்பர் உழவாரத் திருப்பணி செய்து கொண்டிருந்தார். பிரகாரத்தில் அடியவர்கள் வலம் வரும் போது காலில் உறுத்தா தபடி கல்லையும் புல்லையும் உழவாரத்தால் அகற்றிக் குளத்தில் போட்டார். அப்போது உழவாரப் படை நுழைந்த இடங்களிலெல்லாம் பொன்னும் மணியும் இருக்கும்படியாக இறைவன் செயதான்.

“அந்நிலைமை யினில் ஆண்ட அரசுபணி செய்யஅவர்
நன்னிலைமை காட்டுவார் கம்பர்திரு மணிமுன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்தஇடம் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க அருள்செய்தார்.”

அவற்றை அப்பர் சுவாமிகள் ஏறெடுத்தும் பார்க்க வில்லை. ஓட்டோடு பொன்னையும் கல்லோடு மணியையும் ஒன்றாகவே பாவித்தார்; ஒன்றாகவே கண்டார். வலம் வருகிறவர்களின் காலில் ஓடானால் என்ன; பொன்னானால் என்ன, இரண்டும் உறுத்துகின்ற பொருள்களேயல்லவா? மணியும் கல்லும் அத்தகையவைதாமே? ஆதலின் அப்பர் சுவாமிகள் ஓட்டோடு பொன்னையும் கல்லோடு மணியையும் உழவாரத்தால் அகற்றி வாவியிலே எறிந்தார்.

“செம்பொன்னும் நவமணியும் சேண்விளங்க ஆங்கெவையும்
உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை யுடன்ஒக்க
எம்பெருமான் வாகீசர் உழவாரத் தினில் ஏந்தி
வம்பலர்மென் பூங்கமல வாவியினிற் புகஎறிந்தார்”

இவ்வாறு சம திருஷ்டிபெற்ற அப்பரை, “புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும், சொல்லோடும் வேறுபாடிலா நிலைமை. துணிந்திருந்த, நல்லோர்” என்று பாராட்டுகிறார். அதே நிலையில் உள்ள திருத் தொண்டர் களையே திருக்கூட்டச் சிறப்பில்,

ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்

என்று சிறப்பிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *