
கபிலர் அருளிச் செய்த
இன்னா நாற்பது
ந. மு. வேங்கடசாமி நாட்டார்
அவர்கள் எழுதிய உரையுடன்
இன்னா நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற் கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க் கணக்கியற்றிய ஆசிரியர்களுள் கபிலர், கூடலூர் கிழார் முதலிய சிலர் சங்கத்துச் சான்றோரென்பது ஒருதலை, கீழ்க்கணக்குப் பதினெட்டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில்,
” வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென்
மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே”
என்னும் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறி யலாவது. அவை அம்மையென்னும் வனப் புடையவாதலும் அவ்வுரையாற்றெளியப்படும்; பழைய பனுவல் களை அளவு முதலியனபற்றி மேற்கணக்கெனவும் கீழ்க் கணக் கெனவும் பின்னுள்ளோர் வகைப்படுத்தின ராவர்.
“அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு
ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்”
என்பது பன்னிரு பாட்டியல்.
கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன, இதனை,
” நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு”
என்னும் வெண்பாவானறிக. இதில் ‘நால்’ என்பதனை ‘ஐந்திணை என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணையெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். மற்றுஞ் சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக் கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் ‘திணைமாலை’ என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை’ ‘இன்னிலைய, ‘மெய்ந்லைய’ கைந்நிலையோடாம்’ ‘நன்னிலையவாம்’ என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். கீழ்க் கணக்குகள் பதினெட்டேயாதல் வேண்டு மென்னுங் கொள்கையால் இவ்விடர்ப்பாடுகள் விளைகின்றன.
இனி, இன்னா நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய கபிலரென்பார். இவரது காலம் கி. பி. 50 முதல் 125வரை ஆதல் வேண்டும். இவர் தமிழ்நாட்டு அந்தணருள் ஒருவர். இவர் அந்தணரென்பது ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’ (புறம். 126) என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்து கூறியிருத்தலானும், இவரே பாரிமகளிரை விச்சிக்கோன், இருங்கோவேன் என்பவர்களிடம் கொண்டு சென்று, அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டியபொழுது, ‘யானே பரிசிலன் மன்னு மந்தணன்’ (புறம் 200) என்றும், ‘அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே’ (புறம். 201) என்றும் தம்மைக் கூறிக் கொண்டிருத்தலானும் பெறப்படுவதாகும். இவரது சமயம் சைவமே. இவர் இந்நூற்கடவுள் வாழ்த்தில் சிவபெருமானை யடுத்து வேறு கடவுளரை யுங் கூறியிருப்பது இவர்க்கு ஏனைக் கடவுளர்பால் வெறுப்பின்றென்பது மாத்திரையேயன்றி விருப்புண் டென்பதையும் புலப்படுத்தாநிற்கும். சமயங்களின் கொள்கைகளும், சமயநெறி நிற்போர் நோக்கங்களும் அவ்வக் கால இயல்புக்கும் ஏனைச் சார்புகளுக்கும் ஏற்பப் பிழையின்றியோ பிழையாகவோ வேறுபாடெய்தி வருதல் உண்மை காணும் விருப்புடன் நுணுகி ஆராய்ச்சி செய்வார்க்குப் புலனாகும்.
இனி, இவரியற்றிய பாட்டுகள் சங்கத்தார் தொகுத்த எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் மூன்று வகுப்பிலும் உள்ளன. பல நூறு புலவர்கள் பாடிய செய்யுட்களில் இவர் பாடியன ஏறக்குறைய பதினொன்றிலொருபங்காக இருத்தலும், அவை ஒவ்வொரு தொகையிலும் சேர்ந் திருத்தலும் இவரது பாட்டியற்றும் பெருமையையும் நன்மதிப்பையும் புலப் படுத்துகின்றன. இவரியற்றிய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக் கலியும் இயற்கை வளங்களை யெழில் பெற எடுத்துரைப்பதில் இணையற்ற பெருமை வாய்ந்தன. தமிழ்ச்சுவை யறியாதிருந்த ஆரியவரசன் பிரகத்தனுக்கு இவர் குறிஞ்சிப்பாட்டியற்றித் தமிழ் அறிவுறுத்தினார் என்பதிலிருந்து, தமிழின்பால் இவருக்கிருந்த பெரும் பற்றும், ஏனோரும் தமிழினை யறிந்தின்புற வேண்டு மென்னும் இவரது பெரு விருப்பமும், தமிழின் சுவையறி யாதோரும் அறிந்து புலவராகும்படி தெருட்டவல்ல இவரது பேராற்றலும் புலனாகின்றன. நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேலழகர் முதலியஉரையாசிரியன்மாரெல்லாரும் ஆறாம் வேற்றுமைச்செய்யுட்கிழமைக்குக் ‘கபிலரது பாட்டு, என்று உதாரணங் காட்டியுள்ளார்களென்றால் இங்ஙனம் சான்றோர் பலர்க்கும் எடுத்துக்காட்டாக முன்னிற்றற் குரிய இவர் பாட்டுக் களின் அருமை பெருமைகளை எங்ஙனம் அளவிட்டுரைக் கலாகும்.?
இவ்வாறு புலமையிற் சிறந்து விளங்கிய இவ்வாசிரியர் அன்பு, அருள், வாய்மை முதலிய உயர்குணனெல்லாம் ஒருங்கமையப் பெற்றவராயும் இருந்தார். இவரது பாட்டியற்றும் வன்மையையும், வாய்மையையும், மனத் தூய்மையையும், புகழ் மேம்பாட்டையும் சங்கத்துச் சான்றோர்களே ஒருங்கொப்பப் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
” உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்” (அகம். 78)
என நக்கீரனாரும்,
” அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்” (பதிற்றுப்பத்து. 85)
எனப் பெருங்குன்றூர் கிழாரும்,
“தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறம். 53)
எனப் பொருத்திலிளங்கீரனாரும்,
” நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த னாளன் இரந்துசெல் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடினன்” (புறம். 127)
எனவும்,
“பொய்யா நாவிற் கபிலன்” (புறம். 174)
எனவும் மாறோக்கத்து நப்பசலையாரும் பாடியிருத்தல் காண்க.
இங்ஙனம் புலவரெல்லாரும் போற்றும் புலமையும் சான்றாண்மையும் உடையராய இவர்பால், அக்காலத்து வேந்தர்களும் வள்ளல்களும் எவ்வளவு மதிப்பு வைத்திருத்தல் வேண்டும்! வரையா வள்ளன்மையால் நிலமுழுதும் புகழ் பரப்பிய பறம்பிற்கோமானாகிய வேள்பாரி இவரை ஆருயிர்த் துணையாகக் கொண்டொழுகினமையே, இவர்பால் அவ்வள்ளல் வைத்த பெருமதிப்புக்குச் சான்றாகும். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் வேந்தர் பெருமான், இவர் பாடிய ஒரு பத்துப் பாடல்களுக்குப் பரிசிலாக நூறாயிரம் காணம் கொடுத்த தன்றி, ஒரு மலைமீதேறிக் கண்ட நாடெல்லாம் கொடுத்தான் என்றால், அவ்வரசன் இவர்பால் வைத்த மதிப்பினை அளவிட லாகுமோ? மாந்தரஞ்சேர லிரும்பொறையென்ற சேரர்பெருமான் இப்புலவர் பெருந்தகை தமது காலத்தில் இல்லது போனமைக்கு மனங்கவன்று ‘தாழாது, செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன், இன்றுள னாயின் நன்றுமன்’ என்று இரங்கிக் கூறினன். இது கேட்ட பொருந்தி லிளங்கீரனார் என்ற புலவர் அவ்வரசனைப் பாடுங்கால் இதனைக் கொண்டு மொழிந்தனர்.
இன்னணம் புலவரும், மன்னரும் போற்றும் புகழமைந்த இவர் தொல்லாணை நல்லாசிரியரும் ஆவர். இது, தமிழினை மதியாது கூறிய குயக் கொண்டான் பெரும் பிறிதுறுமாறு நக்கீரர் தாம் பாடிய அங்கதப் பாட்டினுள்,
“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி”
என்று, அருந்தவக் கொள்கை அகத்தியனாரொடு ஒப்பவைத்து வாழ்த்தி, இவரது ஆணை பிழையாமை காட்டினமையாற் றெளியப் படும். இவ்வாசிரியரது வரலாற்றின் விரிவையும், குறிஞ்சிப் பாட்டு முதலியவற்றின் ஆராய்ச்சியையும் யானெழுதிய கபிலர் என்னும் உரை நூலால் நன்கு அறியலாகும்.
இனி, இந்நூல் கடவுள்வாழ்த்து உட்பட நாற்பத்தொரு வெண்பாக்களையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது ‘இன்னா’ எனக் கூறுதலின், இஃது இன்னா நாற்பது எனப் பெயரெய்திற்று. இதற்கெதிராக இன்னது இன்னது இனிது எனக் கூறும் பாக்களையுடைய நூல் இனியவை நாற்பது என வழங்குகிறது. இவற்றுள் ஒன்று மற்றொன்றைப் பார்த்துப் பாடியதாகும் எனக் கருதற்கு இடனுண்டு. இவ்வாசிரியர் துன்பின் மூலங்கள் இன்னின்ன வெனக் கண்டு, அவற்றையே தொகுத் தெடுத்துக் கூறியிருப்பது பாராட்டற் பாலதொன்றாம். மக்கள் யாவரும், தாம் விரும்புவது இன்பமேயாயினும் இன்ப துன்பங்களின் காரணங்களை யறிந்து ஏற்ற பெற்றி நடவாமையால், துன்பமே பெரிதும் எய்துகின்றனர். இஃது எக்காலத்திற்கும் பொதுவாக ஒக்கும். இன்பத்தின் காரணத்தை யறிந்து மேற்கொள்ளுதலினும், முதற்கட் செய்யற்பாலது, துன்பத்தின் காரணத்தை யறிந்து அதனின் நீங்குதலாகும். ஆதலாற்றான் அந்தண்மை பூண்ட கபிலர் துன்பின் மூலங்களைத் தொகுத்துரைப்பாராயின ரென்க.
இந்நூல், திருக்குறள் முதலியன போன்று, கூறவேண்டும் பொருள்களையெல்லாம் அடைவுபட வகுத்துக் கூறவந்ததன்று; ஆகலின் இதனை, அவற்றோடு ஒப்பித்துப் பார்த்தல் பொருந்தாது. ஒரு பேரறிஞர் ஒருவாறாக உலகியலை விரைந்து நோக்குங்கால், அவருள்ளத்தில் இன்னாவெனத் தோன்றியவை, இதில், அவ்வப்படி வைக்கப் பட்டுள்ளன வென்றே கொள்ளல் வேண்டும். இதில் நீதிகளல்லாமல், சிற்சில மக்களியற்கை முதலியவும் கூறப்பட்டுள. ஒரே கருத்துப் பலவிடத்தில் வெவ்வேறு தொடர் களாற் கூறப்பட்டுமிருக்கிறது. இதிலுள்ள ‘இன்னா’ என்னுஞ் சொற்கு யாண்டும் துன்பம் என்றே பொருள் கூறிவந்திருப்பினும், சிலவிடத்து ‘இனிமையன்று’ எனவும், சிலவிடத்து ‘தகுதியன்று’ எனவும் இங்ஙனமாக ஏற்றபெற்றி கருத்துக் கொள்ளவேண்டும். கள்ளுண்டல், கவறாடல், ஊனுண்டல் என்பன இதிற் கடியப் பட்டுள்ளன. இந்நூலில் வந்துள்ள, ‘ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா’, ‘குழவிகளுற்ற பிணியின்னா’, ‘கல்லா ருரைக்குங்’ கருமப் பொருளின்னா என்னுந் தொடர்களோடு, இனியவை நாற்பதில் வந்துள்ள ‘ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே,’ குழவி பிணியின்றி வாழ்தலினிதே,’ ‘கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே’ என்னுந் தொடர்கள் ஒற்றுமை யுறுதல் காண்க.
இந்நூற்குப் பழைய பொழிப்புரை யொன்றுளது. சின்னாளின் முன்புஞ் சிலர் உரை யெழுதி வெளிப்படுத்தியிருக்கின்றனர். நம் தமிழன்னைக்கு அரிய தொண்டுகள் பல ஆற்றிப் போற்றிவரும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் விரும்பியவாறு இப்புதியவுரை பல மேற்கோளுடன் என்னால் எழுதப் பெறுவதாயிற்று. பல சுவடிகள் பார்த்துப் பாட வேற்றுமையும் காட்டப்பெற்றுளது. இதிற் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளி எனக்கு ஊக்க மளிக்குமாறு அறிஞர் களை வேண்டிக்கொள்கிறேன்.
“ஞால நின்புக ழேமிக வேண்டும்தென் னால வாயி லுறையுமெம் மாதியே”
இங்ஙனம்,
ந. மு. வேங்கடசாமி நாட்டார்.