ஒளவையார் அருளிச் செய்த

நல்வழி

ந. மு. வேங்கடசாமி நாட்டார்

அவர்கள் எழுதிய உரையுடன்

நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப.

தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர் களிலும் பெண்டிர்களிலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ் நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையவ ரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தே யிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும், கருத்துக்களும் இந்நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்கு கின்றன. நல்வழியிலுள்ள செய்யுட்கள் பல மெய்ந்நூற்களின் முடிந்த கருத்துக்களை விளம்புவதாகும்.

இந் நூலின்கண் திருவைந்தெழுத்தும், திருநீறும் சிறப்பாக எடுத்தோதப்படுவதும், இறுதிச் செய்யுளில் திருக்குறள், திருநான் மறை முடிவு, தேவாரம் முதலிய சைவத்திருமுறைகள் என்னும் இவை யெல்லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும், உண்மை நூலுணர்வையும் புலப்படுத்துவதாகும். மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய காலம் 9 – ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகு மென்பதும் விளக்கமாம்.

இங்ஙனம்,

ந. மு. வேங்கடசாமி நாட்டார்.

நல்வழி மூலமும் உரையும்

கடவுள் வாழ்த்து


பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.

பதவுரை: கோலம் செய் – அழகினைச் செய்கின்ற, துங்கம் – உயர்வாகிய, கரிமுகத்து – யானை முகத்தையுடைய, தூமணியே – பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும் – ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும் ஆகிய, இவை நாலும் கலந்து – இந்நான்கையும் கலந்து, நான் உனக்குத் தருவேன் – அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்; சங்கத் தமிழ் மூன்றும் – சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா – தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.

இதன் கருத்து : விநாயகக் கடவுளே! தேவரீர் அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப் புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் – இயல், இசை, நாடகம் என்னும் பிரிவினையுடைய தமிழ். தமிழ் முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று.

நன்மையே செய்க

1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்த
அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந் தீதொழிய நன்மை செயல்.

பதவுரை: புண்ணியம் ஆம் – அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் – பாவமானது அழிவினைச் செய்யும்; போனநாள் செய்த அவை – முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு – பூமியிலே பிறந்த மனிதர் களுக்கு, வைத்த பொருள் – (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் – ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் – எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை – இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் – பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க.

புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் போக்கும் என்பன ஆம் போம் என நின்றன. (1)

ஈயாமையின் இழிவு

2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

பதவுரை: சாற்றுங்கால் – சொல்லுமிடத்து, மேதினியில் – பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை – இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவாநெறி – நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் – முறையோடு, இட்டார் – (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர் – உயர்வாகிய சாதியார்; இடாதார் – ஈயாதவரே, இழிகுலத்தார் – இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி – உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.

கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை எ-ம். (2)

ஈதலின் சிறப்பு

3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே இடும்பொய்யை மெய்யென் றிராதே – இடுங்கடுக
உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

பதவுரை: இயல் உடம்பு இது – பொருந்திய இவ்வுடம் பானது, இடும்பைக்கு – துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே – இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை – (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது – நிலையுடையதென்று கருதியிராமல் கடுக – விரையில், இடும் – வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் – (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் – மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை – நீங்கியவரை, கொண்டாடும் – விரும்புகின்ற, வீடு – முத்தியானது, ஊழின் – முறையாலே, உண்டாகும்- உங்கட்குக் கிடைக்கும்.

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் என்க. (3)

காலம் நோக்கிச் செய்க

4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லாற் – கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.

பதவுரை: யார்க்கும் – எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் – (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழு தல்லாமல், ஒரு கருமம் – ஒரு காரியத்தை, எண்ணி – ஆலோசித்து, செய்யொண்ணாது – செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான் – குருடன், மாங்காய் விழ- மாங்காயை விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் – எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் -புண்ணியம் வந்து கூடும் பொழுது, அவர்க்கு ஆகும் – அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும்.

புண்ணியமில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ – ம். மாத்திரை – அளவு. குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க. (4)

கவலையுறுதல் கூடாது

5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா – இருந்தேங்கி
நெஞ்சுசம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

பதவுரை: வாராத – (ஊழால்) வரக் கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் – பரிந்து அழைப்பினும், வாரா – வாராவாம்; பொருந்துவன – (ஊழால்) வரக்கூடியவை, போமின் என்றால் போயிடுங்கள் என வெறுப்பினும், போகா – போகாவாம்; இருந்து ஏங்கி – (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக – மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து – (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே – மாண்டு போவதே, மாந்தர் தொழில் – மனிதர் தொழிலாக வுள்ளது.

இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கதன்று எ-ம். (5)

பேராசை கூடாது

6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் – வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு.

பதவுரை: ஒருவர்க்கு – ஒருவருக்கு, உள்ளது ஒழிய – (ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர் சுகம் – மற்றொருவருடைய சுகங் களை, கொள்ள- அநுபவிக்க விரும்பினால், கிடையா – அவை கூடாவாம்; (ஆதலால்) குவலயத்தில் – பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு – மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல் ஓடி – வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள்தேடி), மீண்டு கரையேறினால் – திரும்பிவந்து கரையேறினாலும், என் – அதனால் பயன் என்னை?

கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினளவன்றி அநுபவித்தல் கூடாது எ-ம். (6)

ஞானிகள் பற்றற்றிருப்பர்

7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை – நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு.

பதவுரை: எல்லாப் படியாலும் – எல்லா வகையாலும், எண்ணினால் – ஆராயுமிடத்து, இவ்வுடம்பு – இந்த உடம்பானது, பொல்லாப் புழு – பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய் – நிறைந்த பிணிகளுக்கும், புல் குரம்பை – புல்லிய குடிசையாக இருக்கின்றது; நல்லார் – நல்லறிவுடையோர், அறிந் திருப்பார்-(இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால் – ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் – தாமரை இலையில் தண்ணீர் போல, பிறிந்து இருப்பார்- (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்; பிறர்க்குப் பேசார் – (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேச மாட்டார்கள். ஆம்: அசை.

உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப் பார்கள் எ-ம். (7)

மரியாதையே தேடத்தக்கது

8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த
வாயினும்ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் – தேட்டம் மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம்.

பதவுரை: மகிதலத்தீர் – பூமியிலுள்ள மனிதர்களே, கேண்மின்-கேளுங்கள்; ஈட்டும் பொருள்- தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த ஆயினும் – முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் – ஊழ்கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம் தரியாது – ஊழினாலே சேரினும்)அப்பொருள் நிலைபெறாது; தேட்டம் மரியாதை – (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்; ஆசை. காணுமிரண்டும் முன்னிலை யசை.

பொருள் ஊழினளவன்றி வாராமையானும், வந்த பொருளும் நிலைபெறாமையாலும், நிலை பெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேடல் வேண்டும் எ-ம். (8)

குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
 ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து.

பதவுரை: ஆற்றுப் பெருக்கு அற்று – ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடி சுடும் அந்நாளும்- (மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு – அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் – ஊற்றுநீர்ப் பெருக்கினால், உலகு ஊட்டும் – உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல)நல்ல குடிப்பிறந்தார் – நற்குடியிற் பிறந்தவர், நல்கூர்ந்தார் ஆனாலும் – வறுமையுடையவரானாலும், ஏற்றவர்க்கு – இரந்தவர்க்கு, இசைந்து – மனமிசைந்து, இல்லையென மாட்டார் – இல்லையென்று சொல்ல மாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் எ-ம். (9)

இட்டு உண்டு இரும்

10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

பதவுரை: மா நிலத்தீர் – பெரிய பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் – வருடா வருடந் தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ – இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா – (ஆதலினால்) அழ வேண்டுவதில்லை; நமக்கு அதுவழியே – நமக்கும் அம்மரணமே வழியாகும்; நாம் போம் அளவும் – நாம் இறந்துபோ மளவும் எமக்கு என் என்று – எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு இரும் – பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.

இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து வாழ்க எ-ம். (10)

பசி கொடியது

11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

பதவுரை: இடும்பைகூர் என் வயிறே – துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் – (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் – (கிடைத்த போது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய். ஒருநாளும் என் நோ அறியாய் – ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது – (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.

வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை எ-ம். (11)

உழவின் உயர்வு

12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த
வாழ்வும் விழுமன்றே – ஏற்றம் உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு
வேறோர் பணிக்கு.

பதவுரை: ஆற்றங்கரையின் மரமும் – ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் – அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும், விழும் அன்றே – அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் – உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு ஒப்பு இல்லை – அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு ஓர் பணிக்கு – வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம், பழுது உண்டு – தவறு உண்டு.

அம்: சாரியை. கண்டீர்: முன்னிலை அசை.

உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்திர முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும் எ-ம். (12)

விலக்க இயலாதன

13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர் – ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.

பதவுரை: அம் புவியதன்மேல் – அழகிய பூமியின்மேலே, மெய்- உண்மையாக, ஆவாரை அழிப்பார் யார் – வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது அன்றி – அது வல்லாமல், சாவாரைத் தவிர்ப்பவர் யார் – இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஓவாமல் – ஒழியாமல், ஐயம் புகுவாரை – பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் – தடுக்க வல்லவர் யாவர்? ஏ மூன்றும் அசை.

ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை எ-ம். (13)

மானமே உயிரினும் சிறந்தது

14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்.

பதவுரை: பேசுங்கால் – சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை – பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கை யாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை – பலவாகிய இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்; சிச்சீ – சீ சீ (இது என்ன செய்கை), வயிறு வளர்க்கைக்கு – இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம் அழியாது – மானங் கெடாமல், உயிர் விடுகை – உயிரை விடுதல், சால உறும் – மிகவும் பொருந்தும்.

பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து எ-ம். (14)

திருவைந்தெழுத்தின் சிறப்பு

15. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்.

பதவுரை: சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு – சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒரு நாளும் அபாயம் இல்லை – ஒருபொழுதும் துன்பம் உண்டாகாது; இதுவே – இஃதொன்றுமே, உபாயம் – (விதியை வெல்லுதற் கேற்ற)உபாயமும், மதி – இது வல்லாத எல்லா அறிவுகளும், விதியே ஆய்விடும் – விதியின்படியே ஆகிவிடும்.

சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து கொண்டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு எ-ம். (15)

வியத்தகு விழுப்பொருள்

16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

பதவுரை: தண்ணீர் நில நலத்தால் – தண்ணீ ரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் – நல்லோருடைய குணமானது ஈகையினாலும், கண் நீர்மை மாறாக் கருணையால் – கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றல் – பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் – கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் -வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும், என்று அறி – என்று நீ அறிவாயாக.

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும் எ – ம். (16)

தீவினையே வறுமைக்கு வித்து

17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை
நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் – வையத்து அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல்.

பதவுரை: வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து- பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கு – அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய் தீவினை இருக்க – செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் – இப்பொழுது கடவுளை வெறுத்தால், இரு நிதியம் எய்த வருமோ – பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ – வெறும் பானை (அடுப்பிலே வைத்து எரித்தால்)மேலே பொங்குமோ; (பொங்காது.)

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை எ -ம். (17)

இடிப்பார்க்கு ஈவர்

18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணங்
கொடுத்தாலுந் தாம்.

பதவுரை: பேர் உலகில் – பெரிய நிலவுலகத்திலே, பெற்றார் – (எம்மைப்) பெற்றவர், பிறந்தார் – (எமக்குப்) பிறந்தவர், பெரு நாட்டார் – (எம்முடைய) பெரிய தேசத்தார், உற்றார் – (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் – (எம்மை) நேசித்தவர், என வேண்டார் – என்று விரும்பாதவராகிய உலோபிகள், மற்றோர் – பிறர், இரணம் கொடுத்தால் – தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் – (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் – (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தா ராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ -தாம் இரண்டும் அசை.

உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையார் முதலாயி னோருக்குக் கொடார் எ-ம். (18)

பேரின்பம் நாடாப் பேதைமை

19. சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க்
கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின்
கொடுமையால் நாழி அரிசிக்கே நாம்.

பதவுரை: வயிற்றின் கொடுமையால் – வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் – (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் – (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் – தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் – (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் – பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் – (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் – நாம், உடம்பை – இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே – நாழி யரிசிக்காகவே, பாழின் – வீணிலே, போவிப்பம் – செலுத்துகின்றோம்.

வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமை யாகும் எ-ம். (19)

பரத்தையரால் செல்வம் பாழாம்

20. அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்
கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் – இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.

பதவுரை: கொம்மை முலை – திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் – விற்கின்ற பரத்தையரை (இன்பங் காரணமாக) கொண்டாடுதல், அம்மி துணையாக – அம்மிக் கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் – ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப் போலும்; (அன்றியும்) மாநிதியம் போக்கி- (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் – வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று – அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப் பிற்கும் நல்லதாகாது.

விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழி பாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன் எ-ம். (20)

வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன்

21. நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந் தருஞ்சிவந்த தாமரையாள் தான்.

பதவுரை: சிவந்த தாமரையாள் – செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு – வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் – நீர்வளத்தையும், நிழலும் – நிழல் வளத்தையும், நிலம்பொதியும் நெற்கட்டும் – நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் – பேரையும், புகழும் – கீர்த்தியையும், பெரு வாழ்வும் – பெரிய வாழ்வையும், ஊரும் – கிராமத்தையும், வரும் திருவும் – வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும் – நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் – எந்நாளும் கொடுத்தருளுவள்.

வஞ்சனை யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும் எ-ம். (21)

பாவிகளின் பணம்

22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.

பதவுரை: பணத்தைப் பாடுபட்டுத்தேடி – பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து – (உண்ணாமலும் அறஞ் செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே – நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் – (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடுவிட்டு – உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு – உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் – பாவிகளே, அந்தப் பணம் – அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் – இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்பதைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ-ம். (22)

வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ்

23. வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி சென்றிருந்து
வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ்
சொன்னார் மனை.

பதவுரை: மன்று ஓரஞ் சொன்னார் மனை – தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும் – பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் – வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் – பாதாளமூலி யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள்- மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடி புகும் – பாம்புகள் குடியிருக்கும்.

ஏ ஐந்தும் அசை.

நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ-ம். (23)

ஓரம் – நடுவுநிலை யின்மை.

வாழ்க்கை மாண்பு ஐந்து

24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ் – மாறில் உடன்பிறப்
பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி
யில்லா மனை.

பதவுரை: நீறு இல்லா நெற்றி பாழ் – விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் – நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் – நதி யில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் – மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே – (இல்லறத்திற்குத் தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும்.

திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ-ம். (24)

வரவறிந்து செலவிட வேண்டும்

25. ஆன முதலில் அதிகஞ் செலவானான் மானம்
அழிந்து மதிகெட்டுப் – போனதிசை எல்லார்க்கும்
கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் நல்லார்க்கும்
பொல்லனாம் நாடு.

பதவுரை: ஆன முதலில் செலவு அதிகம் ஆனால் – தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், மானம் அழிந்து – பெருமை கெட்டு, மதி கெட்டு – அறிவு இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் – தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் – எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் – (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவ னாவான்; நாடு – (இதனை) ஆராய்ந்து அறிவாயாக.

வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ-ம். (25)

பசி வந்திடப் பத்தும் பறக்கும்

26. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை – தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்
திடப்பறந்து போம்.

பதவுரை: பசி வந்திட – பசிநோய் வந்தால், மானம் – மானமும், குலம் – குடிப்பிறப்பும், கல்வி – கல்வியும், வண்மை – ஈகையும், அறிவுடைமை – அறிவுடைமையும், தானம் – தானமும், தவம் – தவமும், உயர்ச்சி – உயர்வும், தாளாண்மை – தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் – தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் – இப் பத்தும் விட்டோடிப்போம்.

மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ ம்.

தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது; பதவியும் ஆம். (26)

எல்லாம் இறை செயல்

27. ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட்
டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

பதவுரை: ஒன்றை நினைக்கின் – ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் – அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி அதுவரினும் வந்து எய்தும் – அப்படி யல்லாமல் அப்பொருளே வந்து கிடைத் தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் – (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் – (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கை களாகும்.

இருவினைகளுக்கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ-ம். (27)

மனவமைதி வேண்டும்

28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.

பதவுரை: உண்பது நாழி – உண்பது ஒரு நாழியரிசி யன்னமே யாகும்; உடுப்பது நான்கு முழம்- உடுப்பது நான்கு முழ உடையே யாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி- நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த – அகக்கண் குருடாயிருக்கிற, மாந்தர் குடி வாழ்க்கை – மக்களின் குடிவாழ்க்கையானது, மண்ணின் கலம்போல – மட்கலம்போல, சாம் துணையும் – இறக்குமளவும், சஞ்சலமே – (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள். எ-ம். (28)

கொடையாளருக்கு எல்லாரும் உறவினர்

29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்.

பதவுரை: மரம் பழுத்தால் – மரம் பழுத்திருந்தால், வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் – (இப்பழத்தைத் தின்னு தற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை -அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் – கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் – ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார்- உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.

கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார். எ-ம். (29)

விதியின் தன்மை

30. தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி.

பதவுரை: வேந்தே – அரசனே, தாம் தாம் முன் செய்த வினை – தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே – தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அநுபவிப்பார் – தாமே அநுபவிப்பார்கள்; ஒறுத்தாரை என் செயலாம் – (தீவினையினாலே தூண்டப்பட்டுத்)தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம்; ஊர் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போமோ – ஊரிலுள்ளார் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).

தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ-ம். (30)

நல்லன நான்கு

31. இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று – வழுக்குடைய
வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
தாரத்தின் நன்று தனி.

பதவுரை: இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று – இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது, உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று – உயர் குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று – தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று – பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவி யோடு கூடிய இல்வாழ்க்கையும், தீரா வசையை விளைவிக்கும் எ-ம். இசை – உலக வழக்காகிய சொற்றொடர். (31)

செல்வநிலையாமையறிந்து உதவுக

32. ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடுந் தண்ணீரும்
வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை
வீறும் உயர்ந்து.

பதவுரை: மா நிலத்தீர் – பெரிய பூமியிலுள்ளவர்களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் – ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப் படும் மேடும் பள்ளமும் போல, செல்வம் ஏறிடும் மாறிடும் – செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்; (ஆதலினால்) சோறு இடும் – (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள்; தண்ணீரும் வாரும் – (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வாருங்கள்; தருமமே சார்பு ஆக – (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும் – உள்ளத்திலே தூயதன்மை ஓங்கி விளங்கும். ஆம்: அசை.

நிலையில்லாத செல்வம் உள்ளபொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித்தால் மனம் தூய்மையுற்று விளங்கும் எ-ம். (32)

வன்சொல்லும் இன்சொல்லும்

33. வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்
வேழத்தில் பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது – நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை
பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.

பதவுரை: வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது – (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய) பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாறைக்கு நெக்கு விடாப் பாறை – நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் – பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் – வன்சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டா வாகும்; (இன் சொற்களே வெல்லும்)

வன்சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும் எ-ம் (33)

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை

34. கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர் – இல்லானை இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல்.

பதவுரை: கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் – (ஒருவன்) படியாதவனே யாயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர்- (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்; இல்லானை இல்லாளும் வேண்டாள்- (படித்தவனே யாயினும் பொருளே) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் – (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள்; அவன் வாயில் சொல் செல்லாது – அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. அங்கு, மற்று: அசை.

கல்லாதவனே யாயினும் பொருளுடையவனை எல்லாரும் மதிப்பர்; கற்றவனே யாயினும் பொரு ளில்லாதவனை ஒருவரும் மதியார் எ-ம். (34)

உரைப்பினும் பேதை உணரான்

35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே – தூவா விரைத்தாலும்
நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலுந்
தோன்றா துணர்வு.

பதவுரை: பூவாதே காய்க்கும் மரமும் உள – பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல) மக்களுளும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் – மனிதர்களுள்ளும் ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு; தூவா விரைத் தாலும் நன்று ஆகா வித்து என – தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது – மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து ) உண்டாகாது.

குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர்; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர் எ-ம். (35)

பிறர்மனை விரும்பாமை

36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் – ஒண்டொடீ போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.

பதவுரை: ஒள் தொடீ – ஒள்ளிய வளையலை அணிந்தவளே, நண்டு சிப்பி வேய் கதலி – நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும்; நாசம் உறும் காலத்தில் – தாம் அழிவை அடையுங் காலத்திலே; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் – (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை ஈனுந்தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம் – ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங்காலத்தில், அயல் மாதர்மேல் மனம் வைப்பார்- பிற மகளிர் மேல் மனம் வைப்பார்கள்.

ஒருவன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு அறிகுறியாகும் எ-ம். (36)

வீடடைவார்க்கு விதியில்லை

37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைபடேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி.

பதவுரை: வினைப்பயனை வெல்வதற்கு – இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை – வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை, (எனினும்) நெஞ்சே – மனமே, கவலைபடேல் கவலையுறாதே, மெய் விண் உறுவார்க்கு – மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண் உறுவது அல்லால் – (அவர்) நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை – ஊழ் இல்லையாம்.

முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது எ-ம்.

விண் – பரவெளியும் ஆம்; இப்பாட்டிற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவாரும் உளர். (37)

இறைவனுடன் இரண்டற்று நில்

38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே – நின்றநிலை
தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள்.

பதவுரை: நன்று என்றும் – (இது) நல்லது என்றும், தீது என்றும் – (இது) தீயது என்றும், நான் என்றும் – (இது செய்தவன்) நான் என்றும், தான் என்றும் – (இது செய்தவன்) அவன் என்றும், அன்று என்றும் – (இது) அன்று என்றும், ஆம் என்றும் – (இது) ஆகும் என்றும், ஆகாதே நின்ற நிலை – பேதஞ் செய்யாமல் (இரண்டறக் கலந்து)நின்ற நிலையே, தான் அது ஆம் தத்துவம் ஆம் – ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும்; தேடும் பொருள் – தன்னின் வேறாக மெய்ப்பொரு ளாகிய கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா – சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுதற்கு அதுவே அமையுமென்று அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும்.

உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை எ-ம்.

சம்பு – ஓர் வகைப் புல். (38)

முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி

39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் – செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

பதவுரை: முப்பது ஆம் ஆண்டு அளவில் – முப்பது வயதினளவிலே, மூன்று அற்று – முக்குற்றமும் ஒழியப்பெற்று, ஒரு பொருளை – கேவலப்பொருளாகிய கடவுளை, தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் – (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அனுபவ உணர்வால்) அடையானாயின், காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் – அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி) முலையினை யுடையராதல் மாத்திரமே போல, செப்பும் கலை அளவே ஆகும் – (அவன் முதுமையில் பதியுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.

மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப் பொருளை யடைந்தின்புற முயலல் வேண்டும் எ-ம். முக்குற்றம் காம வெகுளி மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆம். இப்பாட்டிற்கு யாம் கூறி பொருளே பொருத்த முடைத்தாதலை ஓர்ந்துணர்க. (39)

ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள்

40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.

பதவுரை: தேவர் குறளும் – திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திருநான்மறை முடிவும் – சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும் (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் – வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் – திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் – திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் – ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக.

திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருண் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் எ-ம். ‘முனிமொழியும்’ என்பதற்கு ‘வியாச முனிவருடைய வேதாந்த சூத்திரம்’ என்றும் பொருள் கூறுவர். (40)

நல்வழி மூலமும் உரையும் முற்றிற்று.