உதவாக்கரை மனிதர்கள்

இவ்வுலகிலே எத்தனையோ விதமான மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்களிலே பலவகையான மாறுபாடுகள்; தோற்றங்கள். உருவத்திலே உயரம்; குட்டை; பருமன்; ஒல்லி – இத்தகைய வேற்றுமை. நிறத்திலே கருப்பு; சிவப்பு; வெண்மை; மாநிறம் – இத்தகைய நிறவேறுபாடுகள். ஒவ்வோர் அங்கங்களிலும் சிறிது சிறிது வேறுபாடுகள்.

இவ்வேறுபாடுகள் இயற்கையானவை; அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்தவை; நாட்டைப் பொறுத்தவை; நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவை; ஒவ்வொரு குடும்பத்தையும் பொறுத்தவையும் ஆகும்.

மக்களிடையே தோற்றத்தில் சிறுசிறு வேற்றுமைகள் காணப்பட்டாலும் பண்பாட்டில் ஒன்றாக உள்ள இனத்தினர் உண்டு; மொழியினர் உண்டு; நாட்டினர் உண்டு; மதத்தினர் உண்டு. மக்கள் ஒருவர்க்கொருவர் உதவி செய்துகொண்டு – அன்புடன் ஒன்றுபட்டு வாழ்வதுதான் மனிதத் தன்மையாகும்; மனிதத் தன்மையின் சிறந்த பண்பாடுமாகும். இப்பண் பாட்டுக்கு – மனிதத் தன்மைக்கு – விரோதமாக வாழும் மனிதர்களும் உண்டு.

அத்தகைய மனிதர்கள் யார்? அவர்களால் மனித சமூகத்துக்கு என்ன பயன்? அவர்கள் மனிதர்களாகப் பிறந்ததனால் என்ன பயன்? என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்கிறார் பட்டினத்தார்.

ஒன்றிலும் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கியிருக்கும் மனிதர்கள் சிலர்; இடி இடித்தாலும், மழை பெய்தாலும் அவர்கள் கவலைப்படவே மாட்டார்கள்; நல்ல காரியங்களிலும் தலையிட மாட்டார்கள்; கெட்ட காரியங்களிலும் தலையிட மாட்டார்கள். அவர்கள் உண்டு, அவர்கள் வேலை உண்டு; உழைப்பார்கள்; உண்பார்கள்; உறங்குவார்கள்; பெண்டு பிள்ளைகளுடன் வாழ்வார்கள்; சாவார்கள். இவர்கள் வாழும் பொழுதும் இவர்கள் பெயரைப் பிறர் அறியார்; இவர்கள் செத்த பின்னும் இவர்களைப்பற்றி யாரும் எதுவும் பேச மாட்டார்கள். இவர் களால் யாருக்கும் நன்மையும் இல்லை; தீமையும் இல்லை. இம்மாதிரியான மனிதர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதேயில்லை.

வெறுக்கத்தக்க சில மனிதர்கள் உண்டு; மற்றவர்கள் பார்த்து அஞ்சத்தக்க சில மனிதர்கள் உண்டு. அவர்கள் யார் என்பதைத்தான் நாம் அறியவேண்டும். அவர்களிடம் – அத்தகைய மனிதர்களிடம் – நாம் கொஞ்சம் பாதுகாப் புடனேயே நடந்து கொள்ள வேண்டும். அம்மனிதக்ள் யார் என்று பட்டினத்தார் சொல்லுகிறார். அனைவருக்கும் புரியும் படி மிகவும் தெளிவாக அம்மனிதர்களின் இயல்பை எடுத்துக் காட்டுகிறார்.

வீண் வாதத்துக்கும் வீண் சண்டைக்கும் போவார்கள்; வாதுக்கு வரமாட்டோம் என்றாலும், சண்டைக்கு வரமாட்டோம் என்றாலும் விடமாட்டார்கள்; வலிய மடியைப் பிடித்து இழுப்பார்கள்; மீண்டும் வருவார்கள்; பிறர் கேட்கா விட்டாலும் – கேட்க விரும்பாவிட்டாலும் – தமது வழக்கை மற்றவர்களிடம் சொல்லுவார்கள்; அவர்களைக் கேட்கும்படி வற்புறுத்துவார்கள்.

நன்மைக்கு உதவி செய்யமாட்டார்கள்; தீமை யென்றால் அதற்கு உதவி செய்யப் பின்வாங்க மாட்டார்கள்; தாராளமாக உதவி செய்வார்கள்; தீமைகளை வளர்ப்பதிலே அவர்களுக்கு ஓர் அலாதியான ஆனந்தம்.

தினந்தோறும் துன்பப்பட்டுப் பொருளைத் தேடுவர். அப்பெருளைத் தாம் விரும்பும் பெண்ணுக்குக் கொடுத்து, அப் பெண்ணையே சரணாகதியாக அடைந்து கிடப்பர்; அவள் ஆசையிலே மயங்கிக் கிடப்பர்; தம் ஆயுள் முடியும் மட்டும் – அதாவது தாம் சாகும் வரையிலும் இப்படியே நாளைப் போக்கு வார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் இவ்வுலகிலே ஏன் பிறந்தார்கள்? இறைவனே! காஞ்சியில் உள்ள ஏகம்ப நாதனே! இவர்கள் மனிதர்களாகப் பிறந்து பெற்ற பயன்தான் என்ன?

என்று பாடியிருக்கிறார். இப்பொருள் கொண்ட பாடல் கீழ்வருவது:

வாதுக்குச் சண்டைக்குப் போவார்;
வருவார்; வழக்குரைப்பார்;
தீதுக்கு உதவியும் செய்திடுவார்;
தினம் தேடிஒன்றும்
மாதுக்கு அளித்து மயங்கிடுவார்
விதி மாளுமட்டும்;
ஏதுக்கு இவர்பிறந்தார்? இறைவா!
கச்சி ஏகம்பனே!

இது தீய மனிதர்களின் இயல்பைக் கண்டறிந்து பாடிய பாடல். மேலும் தீயோர் இயல்பைப் பற்றிப் பட்டினத்தார் கூறியிருப்பதைக் காண்போம்.

சில மனிதர்கள் உண்மை என்பதைப் பேசியே அறிய மாட்டார்கள். ஓயாமல் பொய் பேசுவதில்தான் அவர்களுக்கு இன்பம். எதைப்பற்றியாவது, யாரைப் பற்றியாவது பொய் பேசுவதுதான் அவர்கள் வழக்கம். பொய் பேசுவதனால் புகழ் வந்தாலும் சரி, பழி வந்தாலும் சரி – அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவே மாட்டார்கள். பொய் சொன்னால்தான் அவர்கள் வயிறு நிரம்பம்; நெஞ்சம் மகிழும்.

நல்லவரை ஒருநாளும் போற்ற மாட்டார்கள்; புகழ மாட்டார்கள்; பாராட்ட மாட்டார்கள்; அவர்களைப் பின்பற்றவு மாட்டார்கள். நல்லவர்களைப் பற்றி நாலு வார்த்தைகளாவது பழித்து – இழித்து – எள்ளி – நகையாடிப் பேசினால்தான் அவர்கள் நாக்கின் அரிப்பு அடங்கும். நல்லோரை நிந்திப்பதனாலேயே தமக்கு மதிப்பு, பெருமை உண்டு என்று நம்பித் திரிவார்கள்.

வசைபாடுவதற்கு இன்னார் இனியார் என்று பார்க்க மாட்டார்கள். தன்னைப் பெற்று வளர்த்த தாயையே நாவில் வந்தபடியெல்லாம் திட்டுவார்கள். முன்னறி தெய்வமாக வணங்க வேண்டிய அன்னையையே தாறுமாறாகப் பழித்துப் பேசும் இவர்கள் மிகவும் பயங்கரமான மனிதர்கள்.

நல்ல செயல்களைப்பற்றிச் சிந்திக்கவே மாட்டார்கள். மற்றவர்கள் துன்புறுவதைக் கண்டால்தான் இவர்கள் மனம் மகிழும். ஆதலால், ஆருக்கு என்ன தீமை செய்யலாம்? எவர் குடியை எப்படிக் கெடுக்கலாம்? எவரை எந்த வம்பிலே மாட்டி வைக்கலாம்? – என்று தான் சதா சதித்திட்டம் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். திட்டம் போடும் முடிவு செய்து, யாருக்காவது ஏதாவது தொல்லை கொடுத்துக் கொண்டுதான் இருப்பாக்ள்.

நல்ல பொழுது போக்க வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்கு ஏற்படுவதில்லை. இவ்வெண்ணம் இருந்தால் நல்லவர்களுடன் நட்புக் கொள்ளுவார்கள்; நல்ல நூல்களை ஆராய்வார்கள்; ஆன் றார்களின் அறிவுரைகளான நல்ல நூல்களின் நுண்ணிய பொருள்களை அறிவார்கள்; அறநெறி யிலே நடப்பார்கள். நல்ல முறையில் பொழுது போக்க வேண்டும் என்ற கருத்து இல்லாதவர்கள் இதை ஏன் செய்யப் போகிறார்கள்? ஆதலால் இவர்கள் அறிவு நூல்களாகிய சாத்திரங்களைத் திரும்பியே பார்க்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட மனிதர்கள் யாருக்குத்தான் உதவி செய்வார்கள்? இவர்கள், பிறர் தமக்கு உதவ வேண்டும் என்று மட்டுந்தான் எதிர்பார்ப்பார்கள். தாம் பிறருக்கு உதவினால் தான், தமக்கும் பிறர் உதவுவார்கள் என்ற உண்மையை மறந்தவர்கள் இவர்கள். இவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுவதையே தொழிலாகக்கொண்டிருப்பார்; தமக்காக உழைத்தவர்க்குச் சரியான ஊதியங்கூடக் கொடுக்க மாட்டார்கள்.

தமக்காக உழைத்தவர்களுக்குக்கூட உதவாத இவர்கள் – அவர்களிடம் இரக்கங் காட்டாத இவர்கள் – தம்மிடம் உதவி தேடி வந்தவர்க்கு உதவவா போகிறார்கள்? ஒருக்காலும் இல்லை. இவர்களிடம் உதவிநாடி வந்தவர்கள் சும்மா வெறுங்கையுடன் திரும்ப வேண்டியது தான்.

இப்படிப்பட்ட மனிதர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேர் உண்டு. இவர்கள் மனிதர்கள் என்ற உருவில் – பெயரில் – வாழ்வதால் யாருக்கு என்ன பயன்? யாருக்கும் உதவி செய்யாத இவர்கள் இவ்வுலகில் உயிரோடு இருந்தால் என்ன? அல்லது இவ்வுலகை விட்டுப் போய்விட்டால் தான் என்ன? காஞ்சியில் உள்ள ஏகம்பநாதனே! இவர்கள் இருப்பதால் எவருக்கும் இலாபமும் இல்லை; செத்துப் போய் விட்டதால் யாருக்கும் நட்டமும் இல்லை என்று பயனற்ற – தீய – மனிதர்களைப்பற்றிப் பாடியிருக்கிறார் பட்டினத்தார். இப் பாடல் வருமாறு:

ஓயாமல் பொய்சொல்வர்; நல்லோரை
நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதிஆயிரம்
செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்குப காரம்செய்யார்;
தமைஅண் டினர்க்குஒன்று
ஈயார் இருந்தென்ன? போய்என்ன?
காண் !கச்சி யேகம்பனே!

இப்பாடல் மனிதத்தன்மை யற்றவர்கள் இன்னார் என்பதைக் குறித்தது. மேலே காட்டிய பாடலும், உதவாக்கரை மனிதர்கள் யாவர் என்பதைக் குறித்தது.

இப்பாடல்களின் மூலம் பட்டினத்தார், மக்களுக்கு அறிவுரை கூறினார். உலக மக்களே! நீங்கள் உதவாக்கரைகளாக நடமாட வேண்டாம். மனித சமுதாயத்துக்கு உதவி செய்யும் உத்தம மனிதர்களாக வாழுங்கள்! பண்புள்ள மனிதர்களாக வாழுங்கள்! வாழ முயலுங்கள்! என்று அறிவுறுத்துவதைக் காண்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *