
அரக்கர் கோன் தங்கை சூர்ப்பநகை
இலங்கை மா நகரம் ஒரு மங்கையால் அழிந்த தென்று யாவரும் அறிவர். கற்பிற் சிறந்த சீதையைச் சிறைசெய்த தீமையால் பேரழகு வாய்ந்த இலங்கையை அரசாண்ட இராவணன் அழிந்தான் என்பது உண்மையே. ஆயினும் இலங்கேசன் தங்கையாகத் தோன்றிய மங்கையே தமையனுக்குக் கூற்றாக அமைந்தாள் என்று கூறுதல் மிகையாகாது.
அரக்கர்கோன் தங்கையாய சூர்ப்பநகை தன் மனத்துக் கிசைந்த ஓர் அரக்கனை மணந்து இலங்கா புரியில் இனிது வாழ்ந்தாள். விதியின் விளைவால் இராவணன் அவ்வரக்கனை அமர்க்களத்தில் இனந் தெரியாது வாளால் எறிந்து கொன்றான். கணவனை இழந்த காரிகை அமர்க்களம் போந்து, மண்மீது கிடந்த தன் மணாளனைக் கண்டு அலறி அழுதாள். கொல்லாத மைத்துனனைக் கொன்ற பொல்லாத தமையன்மீது தள்ளரிய சீற்றங் கொண்டு,
“முன்னமே தான் என்னை
முறைமையாலே கொடுத்துப்
பின்எனை நூல் இழப்பித்த
இராவணனாம் என் தமையன்
தன்னைமூ வுலகாள
யான் கண்டு தாரவுணர்
மன்னனே உடல் சுமந்து
வாழ்வேனோ வாழ்வேனோ”
என்று வாய்விட்டு அரற்றினாள். தரைமீது கிடந்த தன் காதலனை நோக்கி, “ஐயனே! என் தமையன் செய்த தீமையை மறப்பேனோ ? அவன் உலகாள நான் உன்னை இழந்து உடல் சுமந்து வாழ்வேனோ?’ என்று அரக்கர்கோன் தங்கை அலறிய மொழிகளில் பழிக்குப் பழிவாங்கக் கருதிய அப்பாவையின் உள்ளம் பளிங்கு போல் விளங்கக் காணலாம். இவ்வாறு கன்றிய மனத்தினளாய்க் கதறிய சூர்ப்பநகை போர் வேந்தன் வீற்றிருந்த பொன்மனையிற் புகுந்து தன் குறையை முறையிட்டாள். விரித்த குழலொடும், வெறுங் கழுத்தொடும் பொடியிற் கிடந்து புரண்டு அழுத தங்கையைப் பலவாறு தேற்றி, தண்டக வனத்திற் சென்று வாழுமாறு தசமுகன் பணித்தான்.
தமையன் ஆணையை மேற்கொண்டு தண்டக வனம் சென்ற மங்கை, அவன் இழைத்த தீமையை இறையளவும் மறந்தாளல்லள்; தன்கணவனைக் கொன்ற தசக்கிரீவனது பத்துத் தலைகளையும் அறுத்துப் பழிவாங்கக் கருதியிருந்தாள். பிறர் செய்த நன்மை தீமைகளை மறக்கும் மனப்பான்மை பெரும்பாலும் அரக்கரிடமில்லை; பிறர் செய்த நன்றியை ஒருநாளும் மறவாது போற்றுவர்; அவ்வாறே பிறர் செய்த தீமையையும் எந்நாளும் மறவாது பழிக்குப் பழி வாங்க முனைந்து நிற்பர். தவறிழைத்தவர் உற்றாராயினும் உறவினராயினும் தீமையை மறக்கும் மனப்பான்மை அரக்கர்பால் இல்லை. இத்தகைய குல ஒழுக்கம் ஆடவர் மாதரென்னும் இருபாலரிடத்தும் அமைந்து விளங்கிற்று.
கறுவிய மனத்தோடு தண்டகவனத்திற் சூர்ப்ப நகை வாழ்ந்து வருகையில் கல்லெனத் திரண்ட தோளில் கார்முகந் தாங்கிய இராமன் பஞ்சவடி என்னும் பருவச் சோலையில் வந்து சேர்ந்தான்.
அவ் அஞ்சன வண்ணனைக் கண்ட அரக்கியைக் கம்பர் வருணிக்கும் முறையை அறியத் தக்கதாகும்.
“நீலமா மணிநிற
நிருதர் வேந்தனை
மூலநா சம்பெற
முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும்
பிறந்து தான்வினை
காலமோர்ந்து உடனுறை
கடிய நோயனாள் ”
பஞ்சவடியில் இராமனைக் கண்டாள் என்று கவிஞர் கூறுகின்றார். உடன் பிறந்தே கொல்லும் நோய் போல் இலங்கை வேந்தன் உடன் பிறந்து அவனைக் கொல்ல நின்ற தங்கையின் கொடுமையைக் கவிஞர் நன்கு அருளிப் போந்தார். நிருதர் குலத்தை வேரறுக்கும் வலிமை சான்றமங்கை, எழுதரிய எழில் நலம் புனைந்து இராமன் கண்ணெதிரே தோன்றிய கோலத்தை,
“பஞ்சி யொளிர் விஞ்சு குளிர்
பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர்
சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென
அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென
வஞ்சமகள் வந்தாள்”
என்று மெல்லிசை வண்ணமாகக் கவிஞர் எழுதிக் காட்டினார். மூவுலகையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட முன்னவனையும், அடல் கடந்த அரக்கர் குலத்தையும், வேரோடு அழிக்கவல்ல அரக்கியை, உலகை விழுங்கும் நஞ்சுக்கு உவமை கூறிய முறை சால அமைவுடைய தாகும். இங்ஙனம் எழில் போர்த்து வந்த மங்கை, இராமனைக் கண்டு மையலுற்று, மானபங்கமடைந்து இராவணன் வீற்றிருந்த இலங்கைமா நகரம் போந்து, சீதையின் பேரழகினை மணி மொழிகளால் இசைத்தாள். இயற்கையிலேயே சிற்றின்ப வெறி கொண்ட இலங்கேசன், தங்கையின் வாயிலாக அறிந்த மங்கையின் அங்க நலங்களையே நினைந்து வாடினான்; மாயத்தால் அம் மங்கையைக் கவர்ந்து தன் மணி நகரிற் சிறை வைத்தான்; அக்காரிகையின் கற்பழலால் முக்கோடி வாழ்நாளும் முடிந்து உயிர் துறந்தான்.
இவ்வாறு இலங்கேசன் உள்ளத்தில் காத லென்னுங் கடுநெருப்பை வளர்த்து, இராமன் அம்பால் அம் மன்னனைக் கொல்வித்த அரும்பணி, அரக்கர் குலத்துதித்த மங்கைக்கே உரியதாயிற்று. தன் கணவனைக் கொன்ற தமையன் உயிரைக் கவர்வதாக வஞ்சினம் பூண்ட தங்கையின் வஞ்ச மனத்தினை. விளங்கிய அறிவு வாய்ந்த விபீடணன் ஐயந்திரிபற அறிந்திருந்தான்.
“ கொல்லாத மைத்துனனைக்
கொன்றாய் என்றது குறித்துக்
கொடுமை சூழ்ந்து
பல்லாலே இதழதுக்கும்
கொடும்பாவி நெடும்பாராப்
பழி தீர்ந்தாளே ”
என்று இலங்கை அறிஞன், இறந்து கிடந்த இலங் கேசனை நோக்கிப் புலம்பும் மொழிகளில் தங்கையின் மனப்பான்மை நன்கு விளங்கக் காணலாம். தமையன் தனக்கு இழைத்த கொடுமையை மறவாது மனத்தில் வைத்து, அவன் உயிருக்கு உலைவைத்த அரக்கியைக் ‘கொடும்பாவி’ என்று கலையறிந்த நல்லான் கூறினான்.
வெஞ்சினம் பூண்ட இலங்கேசனை அழிப்பதாக வஞ்சினம் கொண்ட அரக்கியை, “பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி” என்று குறித்தான்; தமையனைக் கொல்லுமளவும் கறுவிய மனத்தொடு வாய் மடித்துப் பழி வாங்கக் கருதிய பாவை, இலங்கேசன் இறந்த நாளில் நெடும்பழி தீர்த்தாள் என்று மெய்யுணர்ந்து உரைத்தான்.
இவ்வாறு, இலங்கை, அறிஞன் மெய்யுணர்வால் அறிந்து கூறிய உண்மையை மாசற்ற கற்பமைந்த மண்டோதரி மெல்லிய முறையில் உணர்த்தும் திறம் அறியத்தக்கதாகும். நாடாளப் பிறந்த இராமன் கானாள நிலமகளைக் கைவிட்டுச் சென்றதும், கற்பினுக் கணியாய சீதை, பருந்தின் வழிச் செல்லும் நிழல் போல் கணவன் பின்னே சென்று கானகம் போந்ததும், வஞ்ச மகளாய சூர்ப்பநகை பஞ்சவடிச் சாலையில் அஞ்சன வண்ணனைக் காதலித்து மானபங்க முற்றதும், மூக்கிழந்த மங்கையின் மொழி கேட்டுக் கற்பின் கனலியாய சீதையைக் காவலன் கவர்ந்து சிறை செய்ததும், புரந்தரன் முதலிய வானவர் இயற்றிய பெருந்தவத்தின் பயனாக நிகழ்ந்தன வென்று மாசற உணர்ந்த மண்டோதரி,
“காந்தையருக் கணியனைய
சானகியார் பேரழகும்
அவர்தம் கற்பும்
ஏந்துபுயத் திராவணனார்
காதலும் அச் சூர்ப்பநகை
இழந்த மூக்கும்
வேந்தர்பிரான் தயரதனார்
பணியினால் வெங்கானில்
விரதம் பூண்டு
போந்ததுவும் கடைமுறையே
புரந்தரனார் பெருந்தவமாய்ப்
போயிற் றம்மா”
என்று சோகத்தாற் கூறும் சொற்கள் பொருள் நயம் வாய்ந்து விளங்கக் காணலாம். அழகின் வரம்பாகவும் கற்பின் அணிகலமாகவும் விளங்கிய சீதையைச் ‘சானகியார்’ என்று மண்டோதரி சிறப்பித்தாள்; இறந்து கிடந்த இலங்கேசனை ‘இராவணனார்’ என்று ஏத்தினாள்; கோசல நாட்டைக் குற்றமறப் புரந்த கொற்றவனை ‘தயரதனார்’ என்று குறித்தாள்; பெருந் தவமியற்றிய வானவர் தலைவனைப் ‘புரந்தரனார்’ என்று புகழ்ந்தாள். இவ்வாறு பெருமைக்குரியாரை யெல்லாம் பெருமை சான்ற முறையிற் குறித்த மண்டோதரி தன் கணவன் தங்கையைக் குறிக்கும் பொழுது ‘அச் சூர்ப்பநகை’ என்று சுட்டி உரைக்கும் முறை உய்த்து உணரத்தக்கதாகும். பல பல நினைந்து சில சிலவே சொல்லும் சீலம் வாய்ந்த மண்டோதரி, தமையனைக் கொல்லத் தலையெடுத்த தங்கையின் கொடுமையை நினைந்து நெஞ்சங் கருத்து வருந்தினாள் என்று கூறுதல் மிகையாகாது. ஆகவே, மூவுலகும் வென்று முட்டின்றி முறை செய்த காவலனும், அவன் கடி நகரும் அழிவதற்கு அவ் வேந்தன் தங்கையே கருவியாக அமைந்தாள் என்னும் உண்மை, ஆராய்ந்து அறிவார்க்கு இனிது விளங்கும்.


