கழுகின் காவலன் சடாயு

கோசல நாட்டைத் தசரதன் ஆண்டு வந்த காலத்தில் பஞ்சவடியின் அருகே இருந்த பசுங் கானகத்தில் கழுகின் காவலனான சடாயு வாழ்ந்து வந்தான். கோசல நாட்டு அரசனும் கழுகின் வேந்தனும் உடலும் உயிரும் போலவும், மணியும் ஒளியும் போலவும் உயிர் நண்பராக அமைந்து வாழ்ந்தார்கள். ஆண்மையிலும் அருளிலும் தலைசிறந்து விளங்கினான் கழுகரசன்.

தாயின் ஆணை தலைமேற் கொண்டு, நாடு துறந்து காடு புகுந்த கமலக்கண்ணன், கானகத்திலே கழுகின் வேந்தனைக் கண்ணுற்றான்; இரக்கமற்ற அரக்க னொருவன் நல்லோரை நலியுமாறு கழுகுருக்கொண்டு கானகத்தில் உறைகின்றானோ என்று எண்ணினான்; அப்பால் அப்பறவை மன்னனுடன் பேசியபோது, அவன் அரக்கன் அல்லன் என்றும், தன் தந்தை யாரின் உயிர்த் துணைவன் என்றும் உணர்ந்தான். வில்லைத் தாங்கிய வீரர் இருவரும் தசரத மன்னன் பெற்ற மைந்தர் என்று அறிந்த கழுகின் காவலன் அளவிலா மகிழ்வடைந்து ஆதி மன்னனது உடல் நலம் வினவினான். மறுவற்ற கதிரவன் மரபின் பெருமையைக் காத்து, தசரத மன்னன் மாண்டான் என்று மைந்தர் கூறியபோது,

“இரக்கமுற் றானென ஏக்கம் எய்தினான்
உறக்கமுற் றானென உணர்வு நீங்கினான்”

என்று கம்பர் அருளியபடி, கழுகரசன் ஏக்கமும் மயக்கமும் எய்தினான்; அப்பால் ஒருவாறு மயக்கம் தெளிந்து, கல்லும் புல்லும் கரைந்துருகக் கதறியழுது கண்ணீர் உகுத்தான்; தசரதன் உடலும், தான் உயிருமாக இருக்க, உயிரை மண்ணுலகில் விட்டு உணர்வற்ற கூற்றுவன் உடலை விண்ணுலகம் ஏற்றி னானே என்று வருந்தினான்; பின்பு,

“மருவினிய குணத்தவரை இருசிறகால்
உறத்தழுவி மக்காள் நீரே
உரியகடன் வினையேற்கும் உதவுவீர்
உடலிரண்டுக்கு உயிரொன்றானான்
பிரியவும் தான் பிரியாதே இனிதிருக்கும்
உடற் பொறையாம் பீழை பாராது
எரியதனில் இன்றேபுக்கு இறவேனேல்
இத்துயரம் மறவேன் என்றான்”

உடலிரண்டுக்கு உயிர் ஒன்றென நின்ற தசரதன் ஆவியகன்ற பின்னர், இவ்வுலகில் உயிர்வாழ மனமற்ற பறவையரசன், எரியில் விழுந்து இறக்கத் துணிந்தான். இறந்தாரைப் பிரிந்திருக்கலாற்றாது எரியில் விழுந்து இறக்கும் செயல் உண்மை அன்பின் உயரிய நிலையை உணர்த்துவதாகும். காதலரை இழந்த கற்பமைந்த மங்கையர், பிரிவாற்றாமையால் எரியில் இறங்கி இறக்கும் பான்மையை அகம் நிறைந்த காதலுக்கு அடையாளமாக ஆன்றோர் போற்றிப் புகழ்வர். இத்தகைய உயரிய காதல் கழுகின் காவலனிடம் அமைந்திருந்தமையாலேயே தசரதன் இறந்த துயரம் பொறாது, தானும் இறக்கத் துணிந்தான்; அந்நிலையில் மக்களாய இருவரும் இடைநின்று தடை செய்தமையால், அவர் நலங்கருதி உயிர் வாழ இசைந்தான். தந்தையை மெய்நெறியிற் செலுத்தி, தாயின் சொல்லைத் தலைக்கொண்டு, அரசுரிமையைத் தம்பிக்களித்த தாமரைக் கண்ணனைப் பறவை மன்னன் அன்புறத்தழுவி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான்; வாய்மை நெறியைக் காக்குமாறு கண்ணினும் இனிய மைந்தனைக் கானகம் போக்கி, அவன் பிரிவாற் றாது உயிர் துறந்த மன்னவன் பெருமையை மனமாரப் புகழ்ந்தான்; அவன் பெற்ற பெருமையும் புகழும் தனக்கும் உரியதென்று கருதி அகமகிழ்ந்தான். மன்னன் இறந்தானென்று கேட்டபோது எய்திய துன்பம் அவன் இறந்த ஏதுவை அறிந்தபோது இன்பமாக மாறிற்று. அயோத்தி மன்னனும் கழுகின் வேந்தனும் நேசமென்னும் பாசத்தாற் பிணிப்புற்று இன்ப துன்பங்களைப் பகுத்து நுகரும்பான்மை உற்றிருந்தாரென்பது இதனால் இனிதறியப்படும்.

பஞ்சவடியில் மைந்தரிருவரும் சீதையோடு அமர்ந் திருந்தபோது கழுகரசன், மூவர்க்கும் உற்ற துணையாக அமைந்து, “பார்ப்பைப் பார்க்கும் பறவை” போற் பாதுகாத்து வந்தான். இவ்வாறிருக்கையில் சீதையைத் தன் இதயமாம் சிறையில் வைத்த இலங்கை வேந்தன், அத் திருமகளை வஞ்சனையாற் கவர்ந்து செல்லக் கருதி மாயமானை அவள் முன்னே அனுப்பினான். அம் மானின் தன்மையுணராத மங்கை, அதனைப் பிடித்துத் தருமாறு தன் மணாளனை வேண்டினாள். மங்கையின் உள்ளத்தை மகிழ்விக்கக் கருதிய இராமன், மாயமானைப் பின் தொடர்ந்து சென்றான். நெடுந்தூரம் சென்ற தமையனைத் தேடித் தம்பியும் பின்னே போந்தான். அப்போது தனியாக இருந்த தையலை இலங்கை வேந்தன் நிலத்தொடு பெயர்த் தெடுத்துக் காற்றினும் கடிது செல்லும் விமானத்தி லேற்றி ஆகாய வழியே இலங்கையை நோக்கிப் புறப்பட்டான்.

இலங்கை மன்னனது மாயமே மானாக வந்து தன்னை மயக்கிற்றென்று சீதை அறிந்தாள்; இரக்கமற்ற அரக்கனைத் தடுத்துத் தன்னைக் காத்தற்குரிய தலைவனும் இளவலும் இல்லாமை கண்டு ஏங்கினாள் ; மலைகளும் மரங்களும், மாய அரக்கனை நோக்கி அஞ்சக் கண்டு மயங்கினாள்; தனக்கு உதவி செய்வார் ஒருவரையும் காணாது, மலைச்சாரலில் வாழ்ந்த மயிலையும் குயிலையும், கலையையும் பிணையையும் கூவி அழைத்து; அவ்வுயிர்களிடம் தன் துயரை அறிவித்தாள். தாயனைய கோதாவிரியைக் கண்டபோது,

“கோதா விரியே குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய் மனனே தெளிவாய் “

என்று தன் துயரை அவ் வாற்றினிடம் அறிவித்தாள். இவ்வாறு அரற்றியும் அபயம் அளிப்பார் எவரையும் காணாது, அரக்கன் கையில் அகப்பட்ட திருமகள் அழுது சாம்பினாள்.

அந் நிலையில், கழுகின் காவலன் அவ்விடம் வந்து சேர்ந்தான்; விண்ணிலே விரைந்துசென்ற விமானத்தில் நஞ்சினும் கொடிய இலங்கை நாதனைக் கண்டான், அன்னம் போன்ற திருமகள் அவன் வசப்பட்டு அலமந்த நிலைகண்டு அழுங்கினான் ;

‘சஞ்சலம் கலந்தபோது தையலாரை உய்யவந்து
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன
ஆண்மையே!’

என்று எண்ணி, அருந்துயரில் ஆழ்ந்த மங்கைக்கு அபயம் அளித்தான். இலங்கை வேந்தனது அளவிறந்த வலிமையையும் அரிய பெரிய வரங்களையும் கழுகரசன் அறியாதவன் அல்லன். முன்னவன் அருளால் முக்கோடி வாழ்நாளும், திக்கெலாம் வெல்லும் திறமும் பெற்றுயர்ந்த அரக்க மன்னன் திறமையை அறிந் திருந்தும், அவன் கவர்ந்து சென்ற காரிகையைக் காத்தல் தன் கடன் என்று கழுகின் காவலன் கருதினான். அன்றியும், மைந்தரிருவரையும் மகன்மை கொண்ட முறையில், சீதை, கழுகரசனின் மருகி யாயினள். அம் மங்கையையும், மைந்தரிருவரையும் காப்பதாகப் பறவை மன்னன் முன்னரே வாக்களித் தும் இருந்தான் ; ஆதலால், எவ்வாற்றானும் இலங்கை வேந்தனைத் தடுத்து, மங்கையை மீட்பதே முறையாகு மென்று துணிந்தான்.

கழுகரசன் ஆண்மையிற் சிறந்து விளங்கியவாறே; அருளிலும் தலைசிறந்து விளங்கினான். அருந்திறல் வாய்ந்த அரக்கர் தலைவனை அருளோடு நோக்கி, ‘அரக்கனே! கற்பிற் சிறந்த சீதையை நீ விட்டுச் சென்றால் பிழைத்தாய்; இன்றேல் நின் கிளையோடும் கெட்டாய். நின்வாழ்வை யெல்லாம் சுட்டாய். உலகின் தாயாய சீதையை நீ யாதாக நினைத்தாய்? இம்மைக்கும் மறுமைக்கும் கேடு சூழ்ந்தாய். இம்மங்கையின் தலைவனான இராமனே உலகுக்கெல்லாம் தலைவன். அவன் வில்லின் வெம்மைக்காற்றாது நீ உயிர் துறப்பாய். இறைவன் அருளால் நீ பெற்ற வரமும் பயனற்றுப் பாழாகும். ஆதலால் தேவியை விட்டு நின் ஆவியைக் காப்பாற்றிக் கொள்’ என்று கழுகரசன் எடுத்துரைத்தான்; ஆயினும், அரக்கன் கூறிய மாற்றத்தால் அவன் ஆவியற்ற போதன்றிச் சீதை பால் வைத்த ஆசை அறான். என்று ஐயமற அறிந்தான்.

இலங்கை வேந்தன் விமானத்தில் வீணைக் கொடி பறந்தது. ஆரந்தாழ்ந்த அவன் அழகிய மார்பில் வீரக் கவசம் விளங்கிற்று.

வலியகரங்களில் வில்லும் வேலும் வாளும் இலங்கின. இத்தகைய படைக்கலங்களோடு விளங்கிய வீரனை, வலியசிறகே வாகனமாகவும், மூக்கே வாளாகவும், நகமே வேலாகவும் கொண்டு கழுகின் காவலன் எதிர்த்தான்; புயவலியும் படைவலியும் படைத்த அரக்கர் கோனுடைய வீணைக் கொடியைப் பறித்து இறுத்தான்; அவன் வில்லைப் பல்லால் இழுத்துத் தாளால் முறித்தான்; முத்தார மார்பை மூடியிருந்த கவசத்தின் மூட்டறுத்தான். இதனைக் கண்ணுற்ற இலங்கை வேந்தன் கடுஞ்சினங் கொண்டு, கூற்றினும் கொடிய கூரிய வேற்படையை வேகமாகச் சுழற்றி விடுத்தான். அவ் வேல், வீரம் செறிந்த கழுகின் இறகைத் துளைக்க வலியற்றுக் குழைந்து மீண்டது.

அந் நிலையில், பறவையரசன் விரைந்தெழுந்து தேர்ப்பாகன் தலையைப் பறித்து, மோகம் படைத்த வேந்தன் முகத்தில் எறிந்தான். அது கண்ட இராவணன் பெருஞ்சீற்றமுற்று, ஓர் ஆடகத்தண்டால் கழுகரசனை அறைந்தான். அதன் வெம்மையைப் பொறுக்கலாற்றாது பறவை மன்னன் மால்வரை போன்று மண் மேல் வீழ்ந்தான். அச் செயலைக் கண்ட சீதை சிந்தை யழிந்து, வெந்த புண்ணில் வேல் நுழைந்தாற் போல் வருந்தித் துடித்தாள். பறவை மன்னன் தன் துயரை மறந்து, ‘அன்னமே அஞ்சேல்’ என்ற அபயமொழியோடு மீண்டும் அரக்கர் தேர்மீது பாய்ந்து, அவன் தண்டைப் பறித்துத் தரை மீது எறிந்தான். இவ்வாறு தன் படைக்கலங்களைப் பாழாக்கிய கழுகின் வலிமையை எவ்வாறு அழிக்கலாமென்று இலங்கை வேந்தன் எண்ணி இருக்கையில், பறவையரசன் தன் கூரிய மூக்கினால், அரக்கனுடைய பரிகளைக் குத்திக் கொன்று அவன் மார்பிலும் புயத்திலும் சிறகால் அறைந்தான். அப்போது அடலேறனைய இலங்கை நாதன் உடல் உலைந்து உயிர்ப்படங்கி மயங்கி முடி சாய்ந்தான்.

பின்பு, மயக்கந் தெளிந்த போது, இறைவன் அளித்த மந்திரவாளால் அன்றிக் கழுகரசன் மாளான் என்றறிந்து இராவணன் அவ்வாளை எடுத்து வீசினான். அவ்வாளின் வெம்மைக் காற்றாது கழுகரசன் குழைந்து மண்மேல் விழுந்தான். இவ்வாறு அறநெறி திறம்பிய அரக்கன் வாளால் அருள் நிறைந்த கழுகரசன் தோல்வியுறக் கண்ட திருமகள் நஞ்சுண்டவள் போல நடுங்கி,

‘அல்லல் உற்றேனை வந்து அஞ்சலென்ற இந்
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
இல்லையோ அறமென இரங்கி ஏங்கினாள்.’

“ஐயோ! அல்லலுற்ற ஏழையாய எனக்கு ஆதரவாக வந்து, அஞ்சேல் என்று அபயமளித்த அருளாளன் தோற்பதும், அல்லவை புரியும் அரக்கன் வெல்வதும் நீதியோ, முறையோ? இவ்வுலகில் மறமும் அறத்தை வெல்லுமோ? அறம் என்பது உலகில் இல்லையோ ?’ என்று ஏங்கி அழுதாள். இரக்கமற்ற அரக்கன், திருமகளைக் கொண்டு தென் திசை நோக்கிச் சென்றான்.

இலங்கை அரசனின் வலிமையைச் செவ்வையாக அறிந்திருந்தும், அவன் வஞ்சித்துக் கவர்ந்து சென்ற மங்கையின் துயர்கண்டு மனம் பொறாது அவ்வரக்கனுடன் பொருதுகொண்ட உயிர்த்துப் புகழ் கொடு பறவை மன்னன், ‘தெய்வ மரணம்’ எய்தினான் என்று இராமவீரன் மனமாரப் புகழ்ந்தான்.

“சரண் எனக்கு யார்கொல் என்று
சானகி அழுது சாம்ப
அரண் உனக்கு ஆவன் வஞ்சி
அஞ்சலென்று அருளின் ஓம்பி
முரணுடைக் கொடியோன் கொல்ல
மொய்யமர் முடித்துத் தெய்வ
மரணம் என்தாதை பெற்றது
என்வயின் வழக்கன் றாமோ?”

என்று இராமன் கூறும் இனிய மொழிகளால் கழுகரசன் எய்திய மரணத்தின் மாண்பு நன்கு விளங்கும். அடைக்கலம் புகுந்த புறாவின் உயிரைக் காத்தற் பொருட்டுத் தன் ஆருயிர் கொடுத்த அரசனும், உலகெலாம் காக்கும் உயரிய அருளால் ஆலமுண்ட நீலகண்டனும், ‘ஆதிமூலமே’ என்றழைத்த ஆனைபால் அருள் சுரந்து அதன் துயரந் தீர்த்த திருமாலும். அடைக்கலம் புகுந்த அந்தணனைக் காக்குமாறு காலனைக் காலால் உதைத்த கடவுளும், நஞ்சினுங் கொடிய இலங்கை நாதன் வசப்பட்டு அஞ்சித் ‘துயருற்ற வஞ்சியின் பொருட்டுக் கடும் போர் புரிந்து ஆவி துறந்த கழுகின் வேந்தனும், அறநெறியென்னும் திருநெறியில் தலைசிறந்தவரென்பதில் ஐயமொன் றுண்டோ?’ இதனாலேயே சொல்லின் செல்வனாய அநுமன், பறவை வேந்தன் பெருமையைச் சிறையிலிருந்த சீதையிடம் உரைக்கப் போந்தபோது. “தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு” என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *