பிரமனுடைய ஓர் நாள்

வேதத்தில் மனிதனுடைய ஆயுட்காலம் நூறாண்டுகளாகும் என்று குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் வந்த ஆழ்வாரும் “வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேனும்” என்று பேசுகிறார். எனவே வேதத்தை ஏற்றுக்கொள்ளுகின்ற இந்தப் புராணங்கள் ஆயிரம், பதினாயிரம் என்று கணக்குப் போடுவதில் ஏதோ ஒரு புதுமை இருக்க வேண்டும். புராண ஆய்வாளர்கள், ‘வர்ஷ’ என்ற சொல் இப்பொழுது வருடம் என்பதைக் குறிப்பது போல அக்காலத்தில் ஒரு நாளைக் குறித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். எனவே அதை ஏற்றுக் கொண்டால் ஆயிரம் வருடம் என்பது ஆயிரம் நாட்களாகக் குறுகிவிடும். இந்த முறை தவிர வேறு வழியில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

சத்திய, திருத, திரேத, கலி இந்த நான்கு யுகங்களுக்கும் சேர்ந்த ஒரு மகாயுகத்திற்கு எல்லை 43,20,000 மனித ஆண்டுகள் ஆகும். இதுபோன்று எழுபத்தியொரு மகாயுகங்களுக்கு 43,20,000 X 71 = 30,67,20,000 ஆண்டுகள் ஒரு மன்வந்திரமாகும். இதுபோன்று 14 மன்வந்திரங்களுக்கு, இந்த எண்ணிக்கையை 14ஆல் பெருக்கினால் வரும் ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். இந்த கல்பம் பிரமனுடைய ஒரு நாளாகும். பிரமனுடைய ஓர் இரவும் இதே அளவுள்ள ஆண்டுகளாகும். பிரமனுடைய நாளின் முடிவில், அதாவது 14 மன்வந்திரங்களின் முடிவில் ஒரு மகாபிரளயம் தோன்றுகிறது. அதன்பிறகு பிரமனுடைய இரவு முழுவதும் சூன்யமே நிலவுகிறது. பிரமனுடைய மறுநாள் காலையில் மறுபடியும் உற்பத்தி தொடங்குகிறது.

பிரம்மாண்ட புராணத்தின் இக்கணக்கு நம் அறிவையும் மனத்தையும் கதிகலங்கச் செய்யும் ஓர் எண்ணிக்கையாகும்.

இவ்வாறு நம் முன்னோர் கூறியதன் அடிப்படையைச் சிந்திக்க வேண்டும். இந்த பூமி நித்தியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பதற்கே இந்தக் கணக்கைப் பயன்படுத்தினர். யுக முடிவில் மகாபிரளய காலத்தில் 5 பூதங்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்கி ஆகாயமாக நின்று விடுகின்றது. அதனையே, திருமாலின் வயிற்றுக்குள் அனைத்தும் சென்று அடங்கிவிடுகின்றன என்று நம் முன்னோர் கூறினர். மறுபடைப்புக் காலத்தில் ஒன்றிலிருந்து ஒன்று வெளிப்பட்டுப் பிரபஞ்சமாகக் காட்சியளிக்கிறது. இவை ஒன்று ஒன்றாக மாறுதல் அடைவது தவிர, உள்ளது அழிவதுமில்லை, இல்லாதது தோன்றுவதுமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *