
தென்னிலங்கைத் தெய்வம்
கணவனே தெய்வமென்று கருதி ஒழுகிய கற்புடைய மாதருள் மண்டோதரி தலை சிறந்தவளாவள். தூய வெண்ணீறு துதைந்த மேனியும், சிவனடி மறவாச் சிந்தையும் வாய்ந்த அம்மங்கை செந்நெறி வழுவாது வாழ்ந்து வந்தாள். தன் தலைவன், விதியின் விளைவால் மதிமயங்கி, நஞ்சு தோய்ந்த அமுதனைய சீதையை நயந்தான் என்றறிந்த போது மதிநலம் வாய்ந்த அம்மாது நடுங்கினாள்; மாதர் நெடும் புலவியினும் வணங்காத பெருமை வாய்ந்த மன்னவன் சிறியனாய் எளியனாய்ச் சீதையின் முன்னே இரந்து இறைஞ்சிய தன்மையை அறிந்து ஏங்கினாள். சீதையால் நேர்ந்த நெடும்போரில் நெடும்போரில் மேகநாதன் இறந்தழிந்த செயல் கேட்டுச் சிந்தை நைந்த அந்நங்கை,
“தலையின்மேற் சுமந்த கையள்
தழலின்மேல் மிதிக்கின் றாள்போல்
நிலையின்மேல் மிதிக்குந் தாளள்
நேசத்தால் நிறைந்த நெஞ்சள்
கொலையின்மேற் குறித்த வேடன்
கூர்ங்கணை உயிரைக் கொள்ள
மலையின்மேல் மயில் வீழ்ந்தென்ன
மைந்தன்மேல் மறுகி வீழ்ந்தாள்.”
மையறு மனத்தாளாய மண்டோதரி, தலையின்மேல் சுமந்த கையளாய், தழலின்மேல் மிதிப்பவள்போல் அஞ்சி நடந்து சென்று, மலைபோற் கிடந்த மைந்தன் மீது, வேடனது அம்பால் அடிபட்ட மயில்போல் விழுந்தாள்; மயங்கினாள்; புலம்பினாள்; தன் மைந்தனது குழவிப் பருவத்தை நினைந்து குமுறிக் குமுறி நெஞ்சம் குழைந்தாள்; ‘ஐயனே! வளர்மதி போல் நீ வளர்ந்து வருங்காலத்தில் உன் சிலையினால் அரியை வெல்லக் கண்டு வியந்தேனே! இப்போது உன் தலையிலா உடலைக் கண்டு கலங்கப் பாவியேன் என்ன தீவினை செய்தேனோ? நிலையற்ற இவ்வாழ்வை விரும்பி இன்னும் உயிர் தாங்கியிருப்பேனோ? ஐயனே! அழகனே! என் அரும்பெறல் அமிழ்தமே! உலக மூன்றினும் ஒப்பற்ற வீரனே! நின் மலர் முகம் காணாது இம் மண்ணுலகில் வாழ்வேனோ?” என்று பலவாறாகப் பன்னிப் பதறி அழுதாள். அந்நிலையில் மதிநலம் சான்ற அம்மங்கை பின் நிகழ விருந்த பெருந் தீமையை நினைந்தாள்; நெஞ்சம் உருகினாள்; தேவரினும் மூவரினும் வலியனாய இலங்கை வேந்தனும், இராமன் அம்பால் இறக்கப் போகின்றானே என்று எண்ணினாள். எண்ணிய கருத்தைச் சொல்ல நாவெழாது தரை மீது கிடந்த தன் மைந்தனது உடலை நோக்கி, ”அந்தோ, இலங்கை வேந்தனும் நாளை இத்தகைய னன்றோ?” என்று இயம்பும் முறை அம்மங்கையின் கற்பின் பெருமையை இனிது உணர்த்துகின்றது.
” பஞ்செரி யுற்ற தென்ன
அரக்கர் தம் பரவை யெல்லாம்
வெஞ்சின மனிதர் கொல்ல
விளிந்ததே மீண்ட தில்லை
அஞ்சினேன் அஞ்சினேன்
இச் சீதை யென்று அமுதாற்செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன்
நாளை இத்தகையன் அன்றோ?”
என்பது மண்டோதரியின் வாய்மொழி. கண்டோர் கருத்தைக் கவரும் பேரழகு வாய்ந்த சீதை, காமுற்ற ஆடவரை அழிக்கும் கற்பு வாய்ந்தவளாதலின் அத் திருமகளை, “ அமுதாற் செய்த நஞ்சு” என்று அரக்க மாதேவி கருதினாள். சீதையின் அழகெனும் அமுதை மாந்திய அரசன் அவ்வழகினுள் அமைத்த கற்பென் னும் நஞ்சால் அழிவது திண்ணம் என்றறிந்த மண்டோதரி அக்கருத்தை வெளியிடும் மொழிகளில் சோகம் பொங்கித் ததும்புகின்றது. அப்பால் போர்க் களத்தில் ஆவியிழந்த தலைவன் மேனியைக் கண்டு,
” பின்னேயோ விழுந்ததுவும் முடித்தலையோ
படித்தலைய முகம் காட்டாயோ
என்ளேயோ என்னேயோ இராவணனார்
முடிந்தபரிசு இதுவோ பாவம்”
என்று மண்டோதரி இரங்கிக் கூறும்பொழுது, உயிரிழந்த காதலனை “இராவணனார்” என்று சிறப்பித் துரைக்கும் செம்மை அம்மங்கையின் நிறையமைந்த நீர்மையை உணர்த்துகின்றது.
இத்தகைய மண்டோதரி, நாயகனது புண்ணுற்ற மேனியைக் கண்டு புலம்பியபோது. உணர்வரிய தித்த மெய்ஞ்ஞானம் பெற்றாள்; அந்நிலையில் ஞானத்தால் இலங்கைப் போர்முனையில் கால் தரை தோய நின்று கண்ணுக்கும் எளியனாய வீரன், என்று பாலாழியிற் பள்ளி கொள்ளும் பரமனே அறிந்தாள். “ஆரா அமுதாய் அலைகடலிற் கண் வளரும் நாராயணன் என்றிருப்பேன் இராமனை நான்” என்று மெய்ம்மை யுணர்ந்த மங்கை ஆவி துறந்தாள். தலையாய கற்புநெறி வழுவாது தலைவனுடன் சென்ற மண்டோதரி இறைவன் இணையடி சேர்ந்து பேரின்பப் பெருவாழ் வெய்தினாள். இங்ஙனம் ஈசனிடம் இடையறாப் பேரன்பு வாய்ந்து இன்பப் பேறெய்திய மண்டோதரியின் பெருமையை,
“ஏர்தரும் ஏழுலகேத்த
எவ்வுருவும் தன்னுருவாய்
ஆர்கலிசூழ் தென்னிலங்கை
அழகமர் மண்டோதரிக்குப்
பேரருள் இன்பமளித்த
பெருந்துறை மேயபிரானைச்
சீரியவாயாற் குயிலே
தென்பாண்டி நாடனைக் கூவாய்”
என்று மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் போற்றிப் புகழ்ந்தனர். வரத்தாலும் வலிமையாலும் சிறந்து விளங்கிய இராவணன் மனைவியா யமைந்து, தேவர் கோனையும் வென்று சிறையிட்ட மேகநாதனின் அன்னையாகத் திகழ்ந்து, சிவனடி மறவாச் செம்மை யிலே தலைநின்று, கணவன் இறந்த நிலையில் உயிரிழந்து ஞானத்தால் வீடுபெற்ற நங்கையைப் பஞ்சகன்னியருள் ஒரு கன்னியாக வைத்துப் பண்புடையோர் பாராட்டுகின்றார்கள்.


