கல்லிலும் செம்பிலுமா கடவுள்?

மக்களிடம் ஆதிகாலத்திலே கடவுள் நம்பிக்கை இல்லை; இருந்ததென்று சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கையே இல்லாமல் அவர்கள் வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. அவர்கள் ஓரளவு நாகரிகம் பெற்ற பிறகுதான் அவர்களிடம் தெய்வ நம்பிக்கையும் பிறந்தது. தெய்வ நம்பிக்கையும் அவர்கள் உள்ளத்தில் உதித்த பயத்திலிருந்து பிறந்ததுதான். இடி, மின்னல், காற்று, வெள்ளம், தீ, ஆறு, மலை போன்ற இயற்கைகளை யெல்லாம் அவர்கள் தெய்வங்களாக நம்பினர்; வணங்கத் தொடங்கினர்.

அவர்கள் தாங்கள் நம்பிய தெய்வங்களுக்குக் கல்லை நட்டுவைத்து வணங்கினர்; நாளேற நாளேற மரத்தில் உருவஞ் செய்து வைத்து வணங்கினர்; கல்லிலும் உருவம் செய்து வைத்து வணங்கினர்; உலோகங்கள் கண்டு பிடிக்கப்பட்டவுன் செம்பு முதலிய உலோகங்களிலும் உருவங்கள் செய்து வைத்து வணங்கினர்.

தெய்வங்களுக்கு உருவம் வைத்து வணங்கும் வழக்கம் ஒருகாலத்தில் உலகம் முழுவதும் குடிகொண்டிருந்தது.

உருவ வணக்கம் செய்யும் மக்கள், உருவங்களுக்குப் பூசை போட்டுத் திருவிழாச் செய்து கொண்டாடுகின்றனர். அத் தெய்வங்களைப் பற்றி ஏறக்குறைய மனிதர்களைப் போலவே வரலாறுகள், கதைகள் சொல்லி அவற்றைப் பாராட்டு கின்றனர். இன்றும் தெய்வங்களுக்கு உருவச் சிலை செய்து வைத்து வணங்கும் வழக்கம் உலகத்தை விட்டு மறைந்துவிட வில்லை. நமது நாட்டில் இவ்வழக்கம் மிகுதியாக இருக்கின்றது.

உருவ வணக்கம் காரணமாக மக்களிடம் ஒருவித மூட நம்பிக்கை வளர்ந்து வருவதைக் கண்ட அறிஞர்கள் பலர் அதைக் கண்டித்திருக்கின்றனர். உருவ வணக்கம் கடவுளையே அவமானப் படுத்துவதாகும்; உருவத்தை வணங்குவோன் நாத்திகன் என்று கூறிய அறிஞர்கள் உண்டு; இக்கொள்கையை ஒப்புக்கொள்ளும் மதங்களும் உண்டு.

நமது நாட்டிலே பிறந்த ஞானிகள் சிலரும் உருவ வணக்கத்தைக் கண்டித்திருக்கின்றனர். எங்கும், எல்லாப் பொருள்களிலும் பரந்துள்ள இறைவனை ஒரு கல்லிலோ, ஒரு மரக்கட்டையிலோ, ஒரு செம்புப் பதுமையிலோ இருப்பதாக நினைப்பது அறியாமை என்று பலர் பாடியிருக்கின்றனர். சிறப்பாகச் சித்தர்கள் என்பவர்களிலே பலர் இக்கருத்தை வெளியிட்டிருக் கின்றனர். உலக நிலையாமையைப் பன்னிப் பன்னிப் பாடும் பட்டினத்தாரும் விக்கிரகங்களில் இறைவன் இல்லை என்றே பாடியிருக்கின்றனர். அவர் பாடியுள்ள பாடல்களிலே இரண்டு பாடல்களைக் காண்போம்.

இறைவன் எங்கேயிருக்கின்றான் என்று தேடித் திரிந்து தடுமாற வேண்டாம்; அவன் சொல் வடிவமாக நிற்கின்றான்; ஆதலால் சொல்லிலே இருக்கின்றான்.

இறைவன் சொல்லின் பொருளாக, சொல்லின் முடிவான பொருளாக இருக்கின்றான்.

சொற்களையும், சிறந்த பொருளையும் கொண்ட வேத மந்திரப் பாடல்களிலே இறைவனைக் காணலாம்; வேத மந்திரங்களின் உருவமாக இறைவன் இருக்கின்றான்.

இரவிலும் இறைவன் பரவியிருக்கின்றான்.

குற்றமற்ற வானவெளியெங்கும் இறைவன் பரந்து நிற்கின்றான். உலகில் உள்ள எல்லாவற்றையும் ஆராய்ந்தவர் கள், எது உண்மை, எது பொய் என்ற உண்மையை அறிந்தவர்கள். பொய்யை விலக்கி உண்மையைப் பின்பற்றி நடப்பவர்கள் ஆகிய அருளுடையோர் உள்ளத்திலே இறைவன் இருக்கின்றான்; என்றும் இருப்பான்.

யார் இறைவனையே எப்பொழுதும் நினைத்து அன்பு செலுத்துகின்றார்களோ அவர்களை விட்டு இறைவன் பிரியவே மாட்டான். எப்பொழுதும் அவர்களுடனேயே இணைந்து – இரண்டறக் கலந்து வாழ்வான்.

உண்மையாகவே இறைவன் இருக்குமிடம் இவைகள். சொல், சொல்லின் பொருள், வேதம், இரவு, வானவெளி, தத்துவ ஞானிகள் உள்ளம், அன்பர்கள் மனம் – இவைகள் ஈசன் இருக்கும் இடம். இவற்றை விட்டு, கல்லையும், செம்பையும் கட்டிக்கொண்டு அழுவதனால் இறைவனைக் காண முடியுமா? கல்லிலும் செம்பிலுமா எங்கள் சிவபெருமான் வீற்றிருப்பான்? இல்லை; இவ்வுண்மையை உணருங்கள் என்று பாடினார் பட்டினத்தார்.

இப்பொருள் கொண்ட செய்யுள் கீழ்வருவது:

சொல்லினும், சொல்லின் முடிவினும்;
வேதச் சுருதியிலும்,
அல்லிலும், மாசற்ற ஆகாயம்
தன்னிலும், ஆய்ந்துவிட்டோர்
இல்லிலும், அன்பர் இடத்திலும்
ஈசன் இருக்கும்இடம்;
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான்?
எங்கள் கண்ணுதலே?

என்பதுதான் அச்செய்யுள். மற்றொரு செய்யுளிலும் உருவங்களில் இறைவன் இல்லை என்பதை விளக்கிச் சொல்லுகிறார் பட்டினத்தார்.

உளியிட்டுச் செய்த கல்லுருவத்தை வணங்க மாட்டேன். சுண்ணாம்பைக் கொண்டு, இறைவனுக்கு ஒப்பென்று அமைத்த சுண்ணாம்புச் சிலையை வணங்க மாட்டேன். பிடித்த அழுக் காகிய களிம்பு போகும்படி புளியிட்டு விளக்கி வைக்கும் செம்பால் ஆகிய உருவத்தையும் வணங்க மாட்டேன். ஏனென்றால், கல்லுருவிலும், சுண்ணாம்புப் பதுமையிலும், செம்புச் சிலையிலும் தெய்வம் இருப்பதாக நம்புவது அறிவீனம்.

மாற்றுயர்ந்த பொன்போல் பிரகாசிக்கும் இறைவனுடைய இரண்டு பாதங்களையும் என் உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டேன். இப்படிச் செய்வதுதான் உண்மையாக இறைவனைக் காணும் முறையாகும். இதுவே பிறர் அறியும்படி செய்யும் உண்மையாகும். இவ்வுண்மையை வெளியிட்டு, என் உள்ளத்திலே இரண்டு பாத மலர்களையும் அடைத்து வைத்தேன். இதன் பிறகு நான் வேறு ஒன்றையும் விரும்ப வில்லை. இதுவே எனக்கு எல்லா இன்பங்களையும் தருவதாகும் என்று கூறுகிறது அப் பாடல். அப்பாடல் கீழ்வருவதாகும்:

உளியிட்ட கல்லையும், ஒப்பிட்ட
சாந்தையும், ஊத்தைஅறப்
புளியிட்ட செம்பையும் போற்று
கிலேன்;உயர் பொன்எனவே,
ஒளியிட்ட தாள்இரண்டு உள்ளே
இருத்துவது உண்மை,என்று
வெளியிட்டு, அடைத்துவைத் தேன்;இனி
மேல்ஒன்றும் வேண்டிலனே!

என்பதே அப்பாடல். மேலே காட்டிய இரண்டு பாடல்களும், உருவ வணக்கம் பயனற்றது என்று கூறுவதைக் காணலாம்.

கல்லுருவம், மரச்சிலை, செம்புச் சிலை, சுண்ணாம்பால் செய்யப்பட்ட பதுமை – இவைகளை வணங்கும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் இருப்பதைக் காண்கிறோம்.

விக்கிரக வணக்கத்தை – உருவ வணக்கத்தை – ஆதரிப்போர் ஒரு கேள்வி கேட்பார்கள். எங்கும் இறைவன் உண்டு; எல்லாப் பொருள்களிலும் இறைவன் உண்டு என்றால், விக்கிரகத்தில் – உருவத்தில் – இறைவன் இருப்பதாக நினைத்தால் அங்கு வர மாட்டானா? இருக்க மாட்டானா? என்பதுதான் அக்கேள்வி. இக்கேள்விக்கு விடை கூறுவது கொஞ்சம் கடினந்தான்.

மக்களுக்குப் பயன்படும் பல பண்டங்களை, விக்கிரக ஆராதனையின் பெயரால் வீணாக்குவதை – பாழாக்குவதைக் காண்கிறோம். ஆதலால்தான் விக்கிரக வணக்கத்தைச் சிலர் வன்மையாகக் கண்டிக்கின்றனர் போலும். விக்கிரகங்களின் பெயரால் வீணாகும் பண்டங்கள் மக்கள் வாழ்வுக்குப் பயன்பட வேண்டும் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கலாம். இக் கருத்துடன் தான் அறிவாளிகள் பலர் விக்கிரக வணக்கத்தை வெறுத்துரைக்கின்றனர். இந்நோக்கம் சமரச நோக்கம் என்பதில் ஐயம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *