
மலர்ச்சிலம்படி
பல காலமாகச் சேக்கிழாருக்குத் தொண்டர் வரலாற்றைக் காவியமாகப் பாடவேண்டும் என்று ஆசை. ஆனால் அமைச்சராக இருக்கும்போது அரசியலில் ஈடுபடும் கடமை உடையவராதலின் அமைதியாக இருந்து அப்படிச் செய்ய இயலவில்லை. தலங்களுக்கு அடிக்கடிச் சென்று வரும் வழக்கம் உடையவராதலினால் அங்கங்கே நாயன்மார் களைப்பற்றி வழங்கும் வரலாறுகளை யெல்லாம் தக்கவர்கள் வாயிலாகக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார்.
இராசராச சோழன் காலத்திலிருந்தே எங்கும் தேவார பாராயணம் மிகுதியாயிற்று. தலங்களுக்குப் பெருமதிப்பு உண்டாயிற்று. நாயன்மார்களிடம் பக்தி வளர்ந்து வந்தது. பதினொரு சைவத் திருமுறைகளைத் தமிழ் மக்கள் ஆர்வத்துடன் ஓதியும் பயின்றும் இன்புற்றார்கள். சோழ மன்னர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தலங்களில் பலபல திருத் தொண்டுகள் இயற்றி வந்தனர். இந்த அருமையான காலத்தில் வாழ்ந்த சேக்கிழாருக்குத் திருத்தொண்டர் வரலாற்றைப் பாடவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது வியப்பன்று.
அக்காலத்தில் வாழ்ந்த குலோத்துங்க சோழன் தமிழ்ப் பழங் காப்பியங்களில் விருப்பமுடையவனாகிப் படித்து வந்தான். சீவக சிந்தாமணியில் அவன் உள்ளம் தேங்கியது. பரம சைவனானாலும் தமிழுக்காக அதைப் படித்த போது, ‘சைவ சமய சம்பந்தமாக இப்படி ஒரு காப்பியம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியது. அந்த எண்ணத்தைத் தன் அமைச்சராகிய சேக்கிழாரிடம் வெளியிட்டான். இறைவன் திருவருளே இந்தக் கருத்தை மன்னனுக்கு உண்டாக்கிய தென்று நினைந்து உவந்தார் அமைச்கர் பிரான். அவ ருடைய ஆவலும் அது தானே?
“புதிதாகவே ஒரு காவியம் இயற்றலாம். இறைவன் திருவருள் துணை செய்யும்” என்றார் சேக்கிழார்.
“யார் இயற்றுவது?” என்று கேட்டான் மன்னன்.
“அடியேனே பாடுகிறேன். நெடுநாட்களாக அடியேனுக்கு அந்த எண்ணம் உண்டு. அதைச் செயலில் நிறை வேற்றப் போதிய ஓய்வு இல்லை. அது ஒன்றுதான் தடை. இப்போது, மன்னர் பெருமானுக்கும் அத்தகைய காவியம் ஒன்று வரவேண்டுமென்ற ஆர்வம் இருப்பது தெரிந்து அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.”
“அப்படியா? இதுவரையில் நீங்கள் இதைச் சொல்ல வில்லையே!. எவ்வகையான காவியம் இயற்றலாம் என்று எண்ணுகிறீர்கள்?”
“இறைவன் பெருமையை உலகுக்குத் தெளிவாக்குகிறவர்கள் அடியவர்களே. சிவனடியார்களுடைய வரலாற்றையே காவியமாகப் பாடலாம் என்பது என் எண்ணம்.”
“மிகவும் சிறப்பான செயல்; பெரிய புண்ணியமான காரியம். அந்த வரலாறுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்திருக் கின்றனவா?’
“சுந்தர மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளியிருக்கும் திருத்தொண்டத் தொகைதான் மூல ஆதாரம். பின்பு நம்பியாண்டார் நம்பிகள் அதை அடியொற்றிப் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி இருக்கிறது. மூவர் முதலிகளுடைய வரலாற்றுக்குத் தேவாரத்திலிருந்து கிடைக்கும் பல செய்திகள் உபகாரமாக இருக்கும். இவற்றையல் லாமல் அங்கங்கே தலங்களுக்குச் சென்றபோது விசாரித்துப் பல செய்திகளை அறிந்துகொண்டிருக்கிறேன். பாடத் தொடங்குவதானால் இன்னும் சில தலங்களுக்குச் சென்று வரவேண்டும்.’
“நீங்கள் அவசியம் அந்தக் காவியத்தைப் பாடிவிடுங்கள். மற்றக் கவலை ஒன்றும் உங்களுக்கு வேண்டாம். காவியம் பாடி நிறைவேறு மட்டும் அரசியல் நினைவே வேண்டாம். இங்கே இருந்து பாடுகிறீர்களா? குன்றத்தூருக்குச் சென்று பாடுகிறீர்களா? எங்கே இருந்தாலும் வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.”
மன்னன் இவ்வாறு கூறவே, திருவருள் கூட்டுவித்தால் எதுவும் இனிதே நிறைவேறும் என்ற உறுதி சேக் கிழாருக்கு உண்டாயிற்று. “தில்லையில் இருந்து திருச் சிற்றம்பலவனுடைய தரிசனத்தைச் செய்து கொண்டே பாடலாம் என்பது என் எண்ணம்” என்று தம் கருத்தைத் தெரிவித்தார்.
அப்படி ஒரு காவியம் நிறைவேறினால் தமிழ் நாட்டுக்கே சிறப்பையளிக்கும் என்று சோழ மன்னன் நம்பினான். ஆகவே ஒரு நல்ல நாள் பார்த்துத் திருத் தொண்டர் புராணத்தைத் தொடங்கவேண்டும் என்று நிச்சயமாயிற்று. சேக்கிழார் அமைச்சுத் திருக்கோலத்தை விடுத்துத் திருநீறும் கண்டிகையும் திருமேனியெங்கும் அணிந்து கொண்டார். சிற்றம்பலவன் திருவருளால் இந்தப் பெரும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததை எண்ணி எண்ணி உருகினார். சிதம்பரத்துக்கு வந்து ஆனந்தத் தாண்டவ மூர்த்தியைக் கண் குளிரத் தரிசித்துக் கொண்டார். ஓர் அழகிய திருமாளிகையில் தங்கித் தொண்டர் புராணத்தை இயற்ற நினைந்தார். சிதம்பரேசன் சந்நிதியில் தொடங்க எண்ணி அபிஷேக ஆராதனைகள் செய்யச் சொல்லித் திருநீற்றுப் பிரசாதம் வாங்கி அணிந்து இறைவனை மனமுருகி வேண்டிக்கொண்டார். ஏடும் எழுத் தாணியுமாகக் கற்றுச் சொல்லிகள் உடன் அமர்ந்திருந்தார் கள். சிவநேசச் செல்வர்கள் அற்புதக் காவியத்தின் பிறப்பைக் கண்டுகளிக்கக் கூடியிருந்தார்கள்.
“எப்படித் தொடங்குவது?” என்ற சிந்தனையில் ஆழ்ந் திருந்தார் சேக்கிழார். இறைவனுடைய திருவருள் தமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கையோடு அவர் உண்முகப் பார்வையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அசரீரியாக அவர் காதில் “உலகெலாம்” என்ற தொடர் விழுந்தது. அதே சமயத்தில் அந்தப் புற ஒலியின் எதிரொலி போல அகத்தே, “உணர்ந்து ஓதற்கரியவன்” என்ற தொடர் உதயமாயிற்று. இரண்டும் சேர்ந்து,
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
என்ற அடியாக இணைந்தன.
இப்போது சேக்கிழாருக்குப் புதிய ஊக்கம் உண்டாயிற்று. தாம் மேற்கொண்ட காப்பியப் படைப்புக்கு. இறைவனுடைய அருளாணை கிடைத்துவிட்டது என்று பெருமிதம் கொண்டார். அப்பால் அந்த அடி விரிந்து முதற் பாட்டாக மலர்ந்தது.
உலகெ லாம்உணர்ந்து ஓதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
தில்லைச் சிற்றம்பலத்தில் நடமிடும் சிலம்புச் சீறடியை வாழ்த்தி வணங்கித் தொடங்கிய பெரியபுராணம் மிகச் சிறப்பாக நிறைவேறியது. குலோத்துங்க சோழன் திருத் தொண்டர் புராண அரங்கேற்ற விழாவைத் தமிழ்நாட்டுப் பெருவிழாவாகவே கொண்டாட ஏற்பாடு செய்தான். சேக்கிழார் திருவாக்கைக் கேட்டவர்கள் கவிச் சுவையிலும் பக்தி மணத்திலும் ஈடுபட்டார்கள். தெய்வம் மணக்கும் அந்தச் செய்யுட்களில் பக்திச் சுவை நனி சொட்டுவதை உணர்ந்து பாராட்டினார்கள். யாவரும் சேக்கிழாரையும் நாயன்மார்களுள் ஒருவராக எண்ணி வழிபட்டனர். குலோத்துங்க சோழன் அவரை யானையின் மேல் ஏற்றுவித்துத் தானும் உடன் அமர்ந்து இரு கையாலும் கவரி பணிமாறினான்.
தெய்வத் திருவருட் சின்னமாகக் கிடைத்த ‘உலகெலாம்’ என்ற தொடரைச் சேக்கிழார் பெரியபுராணத் தின் தொடக்கத்தில் வைத்ததோ டன்றி இடையிலும் ஈற்றுச் செய்யுளிலும் வைத்துப் போற்றி யிருக்கிறார்.
திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமான் திருவருளால் கிடைத்த முத்துச் சிவிகையில் ஏறியருளினார் என்ற செய்தியைச் சொல்லும் பாட்டில் ‘உலகெலாம்’ என்ற தொடர் நிற்கிறது:
சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்று
ஆதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி ஏறினார் உய்ய உலகெலாம்.
இது நூலின் இடையில் வைத்தது.
பெரியபுராணத்தின் கடைசிச் சருக்கமாகிய வெள்ளானைச் சருக்கத்தின் இறுதிப் பாட்டு வருமாறு:
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.
இது நூலின் கடைசியில் வைத்தது. இவ்வாறு தோற்றம் நடு இறுதி என்னும் மூன்றிடத்திலும் அசரீரி வாக்காகத் தோற்றிய தொடரை அமைத்து நிறைவேற்றிய பெரியபுராணம் சைவத்திருமுறைகள் பதினொன்றோடு சேர்ந்து பன்னிரண்டாவது திருமுறையாக விளங்குகிறது.
இறைவன் மனத்துக்கும் வாக்குக்கும் அப்பாற் பட்டவன். உலகிலுள்ள மக்களால் தம் அநுபவத்துக்கு உட் பட்ட பொருளையே நினைக்க முடியும்; தம் அநுபவத்துக்கு அகப்பட்டதைப் பற்றியே பேச முடியும். மனத்தினால் சிந்திப்பதற்கும் வாக்கினால் ஓதுவதற்கும் உரியவை உலகியற் பொருள்கள். கால எல்லை, இட எல்லை என்ற எல்லைகளுக்குள் அடங்கியவை அவை. அவற்றையன்றி அப்பாற் பட்ட பொருளை மனம் உணராது; வாய் பேசாது. மனமிறந்த பூர்ணப் பொருளாகவும் வாக்கிறந்த முழுப் பொருளாகவும் நிற்பவன் இறைவன். மனவாக்கினுள் தட்டாமல் நின்ற அவனுடைய எல்லையிறந்த தன்மையை முதலில் நினைக்கிறார் சேக்கிழார்.-
உலகெலாம் உணர்ந்து முதற்கு அரியவன்.
உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன் இறைவன் என்ற அவனது இலக்கணத்தைத் தெரிந்து கொள்ளும் போதே, உலகில் உள்ள உயிர்கள் அவனை உணரும் ஆற்றல் இல்லாதன, ஓதும் ஆற்றல் இல்லாதன என்பதையும் தெரிந்து கொள்கிறோம். இவ்வாலு இறைவனது அருமையைச் சொல்வதனால் அவனுடைய பெருமையையும் உயிர்களின் சிறுமையையும் சொல்லியபடி ஆயிற்று.
ஓம் நமசிவாய ஓம்


