வஞ்சக உள்ளம்

ஒரு பிராமணர் நாள்தோறும் பல வீடுகளுக்குச் சென்று உபாதானம் வாங்கிவருவது வழக்கம். அப்படிப் போகும்போது ஒவ்வொரு வீட்டிலும், “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லி நிற்பார். அவர் வந்திருப்பது தெரிந்து வீட்டில் உள்ளவர்கள் அரிசி போடுவார்கள்.

ஒரு நாள் இந்தப் பிராமணர் ஒரு வீட்டுக்குள் சென்று, “கிருஷ்ணாய நமஹ” என்றார். வீட்டில் இருந்தவர்கள் எங்கோ பின்கட்டில் வேலையாக இருந்தார்கள். இந்தப் பிராமணர் வந்திருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று முறை அவர் சொல்லியும் யாரும் வரவில்லை. அங்கே ஒரு வெண்கலக் கிண்டி பளபளவென்று மின்னியது. நன்றாகத் தேய்த்திருந்தார்கள். யாராவது வருகிறார்களா என்று எதிர் நோக்கிக் காத்துநின்ற அந்த ஏழைப் பிராமணர் கண்ணிலே அந்தக் கிண்டி பட்டது; கருத்திலும் பட்டது. தாம் வந்திருப்பதை யாரும் கவனிக்கவில்லையென்பதை அறிந்து அவர் திரும்பிச் செல்ல எண்ணினார். முன்னே இருந்த கிண்டி அவர் ஆசையைத் தூண்டியது. ‘இங்கே ஒருவரும் இல்லையே! இதை யார் பார்க்கப் போகிறார்கள்?’ என்று அதை எடுத்துப் பைக்குள் போட்டுக்கொண்டு போய் விட்டார்.

மறுநாள் வழக்கம் போல ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பிச்சை வாங்கிய அவர் இந்த வீட்டுக்கும் வந்தார். வரும் போதே அவர் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. வீட்டுக்குள் நுழைந்தார். முதல் நாள் அங்கிருந்த கிண்டியைத் திருடிய எண்ணம் முன் நின்றது. வழக்கம் போல, “கிருஷ்ணாய நமஹ” என்று சொல்லவேண்டியவர் தம்முடைய மனத்தில் கிண்டி உட்கார்ந்து கொண்டிருந்தமையால், “கிண்டியாய நமஹ” என்று சொல்லிவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் அதைக் கேட்டுத் திருட்டைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

இப்படி ஒரு கதையும், “கிண்டியாய நமஹ என்று வந்து நின்றான்” என்ற பழமொழியும் வழங்கி, வருகின்றன. நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து வரும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பெரிய புராணத்தில் இந்த உண்மையைப் புலப்படுத் தும் இடம் ஒன்றைப் பார்க்கலாம்.

திருக்கோவலூரில் மெய்ப்பொருள் நாயனார் அரசராக ஆட்சி புரிந்து வந்தார். சிவனடியார்களை வரவேற்று உபசரித்து வழிபடுவதில் அவர் சிறந்தவர். சிவவேடம் பூண்டவர் யாராயினும் அவரைப் பணிந்து அன்பு காட்டும் இயல்புடையவர். அவர்பால் பகைகொண்ட முத்திநாதன் என்ற அரசன் அவரை வெல்ல வேண்டும் என்று எண்ணினான். அதனால் அவரோடு போர் செய்தான். அவரை வெல்ல முடியாமல் தோல்வியுற்றான். சில நாள் கழித்து மீட்டும் படை திரட்டிக்கொண்டு சென்று போரிட்டான்.

அப்பொழுதும் தோற்றுப் போனான். இவ்வாறு பலமுறை தோல்வியுற்ற பிறகு, போர் செய்து வெல்வதை விட வஞ்சகமாக வெல்வதே தக்க வழி யென்று அவன் முடிவு செய்தான்.

மெய்ப்பொருளார் சிவவேடம் பூண்டாரை வழிபடும் இயல்புடையவர் என்பதைத் தெரிந்துகொண்டு தானும் அவ்வேடம் பூண்டு சென்று தன் கருத்தை முடித்துக்கொள்ளத் துணிந்தான். உடம்பெல்லாம் திருநீறு பூண்டு கையில் சுவடி போன்ற ஒரு பையில் வாளை மறைத்து வைத்துக் கொண்டு முத்திநாதன் மெய்ப் பொருளாரை நாடிச் சென்றான்.

திருக்கோவலூரை அடைந்து மன்னருடைய அரண் மனைக்குள் புகுந்தான். அவனது சிவவேடத்தைக் கண்டு யாவரும் வழி விட்டார்கள். அப்போது மெய்ப்பொருள் நாயனார் அந்தப்புரத்தில் துயின்று கொண்டிருந்தார். முத்திநாதன் நேரே அங்கே சென்றான். அங்கே காவல் புரிந்து கொண்டிருந்த தத்தன் என்பவன், ” அரசர் துயில்கின்றார்” என்று சொல்லியும் நில்லாமல் உள்ளே புகுந்தான்.

அவனைக் கண்ட அரசர் மனைவி அவரை எழுப்ப அவர் எழுந்து சிவனடியார் கோலத்தில் வந்தவனை வணங்கி, “இங்கே எழுந்தருளியது என் பாக்கியம்; என்ன திரு வுள்ளமோ?” என்று கேட்டார்.

“சிவபெருமான் திருவாய் மலர்ந்த ஆகமம் ஒன்றை உனக்குச் சொல்ல வந்தேன்” என்று முத்திநாதன் கூற, மெய்ப்பொருளார் தம் மனைவியை அனுப்பிவிட்டு, அவனை வணங்கும்போது கத்தியை உருவிக் குத்திவிட்டான். இதை வெளியிலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்த தத்தன் உடனே உள்ளே புகுந்து வாளினால் முத்திநாதனைக் குத்தப் புகுந்தபோது, “தத்தா, அவர் நம்மவர்” என்று தடுத்து விழுந்தார் மெய்ப்பொருளார். பின்பு தத்தனைக் கொண்டே முத்திநாதனை ஊரின் எல்லை கடந்து பாதுகாப்பாக விட்டு விட்டு வரச்சொல்ல, அவன் அவ்வாறே செய்துவிட்டு வருகிறவரைக்கும் உயிரைத் தாங்கி நின்று, அப்பால் சிவனடிக்கண் சேர்ந்தார்.

இது மெய்ப்பொருள் நாயனார் வரலாறு. முத்திநாதனைக் கண்டதும் மெய்ப்பொருள் நாயனார், “எனக்கு மங்கலம் பெருகும்படியாக என் நல்வாழ்வு வந்து அணைந்தாற் போலத் தேவரீர் இங்கே எழுந்தருளப் பெற்றதற்குக் காரணம் யாதோ?” என்று வணங்கிக் கேட்டார்.

“மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற
தென்கொலோ?என்று கூற,”

முத்திநாதன் விடை கூறுகிறான். “ஓர் ஆகம நூலை உனக்கு உபதேசம் செய்வதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன். அது சிவபிரான் முன்பு அருளிச் செய்தது. உலகில் அது எங்கும் கிடைக்காத அருமையான நூல்” என்று சொல்கிறான்.

அவன் இதுகாறும் சிவபிரானை நினைந்தவன் அல்லன். திருநீற்றின் பெருமையையும் உணராதவன். சிவனடியார் கூட்டத்திலும் சேராதவன். ஆயினும் சிவனடியாரைப் போல வேடம் புனைந்து வந்தவன். அவன் உள்ளத்தில் சிவபிரானிடம் அன்பு இல்லை; சிவபெருமானை நம்பி வாழும் பான்மை இல்லை. புறத்தே சிவனடியாரைப்போல வேடம் புனைவது எளிது. உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்றுவது எளிதன்று. அந்த உள்ளத்தின் வண்ணத்தை அவன் பேசும் பேச்சு வெளிப்படுத்திவிடுகிறது. அவன்,

“உங்கள் நாயகனார் முன்னம்
உரைத்தஆ கமநூல் மண்மேல்
எங்கும்இல் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப”

என்றான்.

சிவபெருமான் உரைத்த ஆகம நூல் என்பதை, ‘உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல்’ என்று சொல்கிறான். அவன் உள்ளத்தில் அடியாருடைய இயல்பு இருக்குமானால் என்ன சொல்லியிருப்பான்? “நம் நாயகனார்” என்றல்லவா சொல்லியிருப்பான்? இவனோ சிவபெருமான் மெய்ப்பொருள் நாயனாருக்கும் அவரைப் போன்றவர் களுக்குமே நாயகன் என்று எண்ணுகிறவன். தன் நாயகன் என்று ஒரு நாளும் கருதி அறியாதவன். ஆகவே “உங்கள் நாயகனார்” என்று வருகிறது பேச்சு. அந்தப் பேச்சில் அவனுடைய உள்ளம் புலப்படுகிறது. அவன் எத்தனைதான் திருநீற்றைப் பூசிக்கொண்டு சிவனடியார் வேடமாகிய போர்வையைப் போர்த்துக் கொண்டு வந்தாலும் அதனால் தன் உள்ளத்தை மறைத்துவிட முடியவில்லை. நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து வந்து விடுகிறது. ‘கிண்டியாய நமஹ’ என்பது எப்படித் திருட்டை வெளிப்படுத்தியதோ, அப்படி, “உங்கள் நாயகனார்” என்பது அவனுடைய வஞ்சக உள்ளத்தைப் புலப்படுத்திவிடுகிறது.

“மங்கலம் பெருக மற்றென்
வாழ்வுவந்து அணைந்த தென்ன,
இங்கெழுந் தருளப் பெற்றது
என்கொலோ?” என்று கூற,

“உங்கள் நா யகனார் முன்னம்
உரைத்தஆ கமநூல் மண்மேல்
எங்கும்இல் லாத தொன்று
கொடுவந்தேன் இயம்ப”

என்றான்.

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *