
காஞ்சி காமாக்ஷி
காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி,காசி விசாலாக்ஷி மூவரும் மும்மூர்த்திகளைவிட, பிரபலமானவர்கள். காரணம்: மூவரும் அவர் தம் அருள் நோக்காலேயே மக்களுக்கு வேண்டுவன எல்லாம் தரவல்ல வர்கள். மதுரை மீனாக்ஷி, பாண்டியன் மகளாகப் பிறந்து மானுடப் பெண்ணாகவே வளர்ந்து அரசி யாகவே அரியணை ஏறியவள். ஆகவே, அவளுக்கு இரண்டே கைகள். செண்டேந்திய திருக்கரம் ஒன்று, ஒயிலாகத் தொங்கவிடப்பட்ட கரம் ஒன்று. ஆனால் அன்னை காமாக்ஷிக்கோ கரங்கள் நான்கு அவள் தன் தெய்வத் தன்மையை விளக்க. சாதாரணமாகக் கோயில்களில் உள்ள அம்பிகைகளுக்கு நான்கு கைகளிருந்தால், அவற்றில் ஒன்று வரத முத்திரை யோடும், ஒன்று அபய முத்திரையோடும் அமைந்திருக்கும். ஆம், அபயம் அருளுவதோடு வாரி வழங்கும் வரதம் அருளுபவளாக அவள் அருள் அமைந்திருக்கும். ஆனால் கஞ்சி காமாக்ஷிக்கோ கரங்கள் நான்கிருந்தும் அதில் வரதமும் காணோம்; அபயமும் காணோம். அவளோ பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதா சிவன் முதலான பஞ்ச பிரம்மாக்களையே தனக் காசனமாகக் கொண்டு அவ்வாசனத்தில் பத்மாசன மிட்டு உட்கார்ந்திருக்கிறாள். நான்கு கைகளிலும் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்புவில் முதலியவற்றைத் தாங்கியிருக்கிறாள். ஆம், அருள்புரிவதெல்லாம் மீனாக்ஷியைப் போலக் கண்களின் மூலமாகத்தான். வேண்டுவார் வேண்டுவன எல்லாம் அருளும் காமாக்ஷி அல்லவா அவள்? திருநேத் திரத்துடன் காமேஸ்வரி, காமேஸ்வரர்களின் சமஷ்டி வடிவத்துடன் லலிதை, ராஜேஸ்வரி, திரி புரை,காமாக்ஷி ஸ்ரீ சக்ர நாயகி என்னும் பல திரு நாமங்கள் பெற்று விளங்குகின்றாள். காஞ்சியில் இவள் அவதரிக்கக் காரணமாக இருந்தவர்கள் பந்த காசுரன், பண்டாசுரன் என்பவர்களே. இவர்கள் செய்யும் இடுக்கண்களினின்றும் விடுதலை பெற தேவர்கள் தேவியிடம் முறையிடுகிறார்கள். தேவியோ காஞ்சியில் செண்பக மரத்தில் கிளி வடிவத்துடன் வாசம் செய்ய வருகிறாள். அப்படி வந்தவள் அங்குள்ள ஒரு பிலாகாசத்திலிருந்து தோன்றி துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்கிறாள். ஆகவே அன்னை காமாக்ஷி பிலாகாசத்திலிருந்து சுயம்புவாகவே ஆவிர்ப்பவித்தவள் என்று சொல் கிறது தல வரலாறு.
இங்கு அம்பிகை மூன்று வடிவத்தில் இருக்கிறாள். ஸ்தூல வடிவத்தில் இருப்பவளைத்தான் காமாக்ஷி என்கிறோம். தன்னுடைய அடியார்களுக்குத் தன் கடைக் கண் நோக்காலேயே அவர்கள் விரும்பும் சர்வகாமங்களையும் கோடி கோடியாகத் தந்தருளுகிறாள். சூக்கும வடிவத்திலே அவள் ஸ்ரீ சக்ரமாக விளங்குகிறாள். வட்ட வடிவமாக அம்பிகையின் எதிரில் அமைந்துள்ள ஒரு சக்கரமே காம கோடி பீடம் எனப் பெயர் பெறுகிறது. இந்தப் பீடம் பல மகான்களால் பூஜிக்கப்பட்டு அம்பிகையின் சாந்நித்யம் முழுவதையும் பெற்றிருக்கிறது. காரண வடிவமாக இருக்கும் பிலாகாசமான குகைதான் அம்பிகையின் வாசஸ்தலம். அங்குதான் தேவியின் ஆன்ம சக்தி, நிறைந்த சாந்நியத்துடன் விளங்குகிறது.
இவற்றைத் தவிர்த்துத் தவக் கோலத்துடன் காமாக்ஷியும் அங்கு கர்ப்பக் கிரகத்திலேயே கோயில் கொண்டிருக்கிறாள். அன்னை பார்வதிக்கும் ஒரு காலத்தில் முனிவர்களது சாபம் ஏற்பட்டு விடுகிறது. அச்சாப விமோசனம் பெற அவள் காசியில் பன்னிரண்டு வருஷம் தவம் செய்கிறாள். அங்குள்ள வர்களின் பசியை எல்லாம் அகற்றி அன்னபூரணி என்ற பெயர் பெறுகிறாள். அப்படியும் சாப விமோசனம் பெற முடியாமல் காசியிலும் சிறந்த காஞ்சிக்கு வந்து காமகோடி பீடத்தை அடைந்து அங்கு ஏகாம்பரமாக விளங்கும் மாமரத்தடியில் தவம் புரிகிறாள்; அறம் வளர்க்கிறாள்.
எண்ணரும் பெருவரங் கள்முன்
பெற்று, அங்கு எம்பிராட்டி
தம்பிரான் மகிழ்ந்தருள
மண்ணில்மேல் வழிபாடு
செய்தருளி, மனையறம் பெருக்கும்
கருணையினால் நண்ணு
மண்ணுயிர் யாவையும்
பல்கு நாடு காதலின் நீடிய வாழ்க்கை
புண்ணியத் திரு காமக் கோட்டத்து
பொலிய முப்ப தோடு
இரண்டு அறம் பெருக்கும்
பான்மை பாரட்டப் படுகிறது. இப்படி அறம் வளர்த்த மாமரத்தடியில் மணலினால் லிங்கம் செய்து அமைத்து பூஜை செய்து வரும் பொழுதுதான், பரம சிவன் காமாக்ஷியின் தவத்தைக்கண்டு மகிழ்ந்து, அந்த மரவடியிலேயே காக்ஷி தந்து ஆட்கொள் கிறார். இவ்வாறு அவளும் இறைவனைக் கூடித் தழுவிப் பெரும் பேறு பெறுகிறாள்.
அருட்தவத்தாள் ஆயிழையாள்
உமையாள் பாகம்
அமர்ந்தவள் காண்
என்று அப்பர் பாடுவது இந்த அம்மையையும் அப்பனையும் நினைந்தே.
இருவரும் இரண்டற அந்த மாமரத்திலேயே கலந்தனர் என்பதை விளக்கத்தான், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலிலே மாவடிக் கோயில் ஏற்பட்டிருக்கிறது. நான்கு வேதங்களுமே அந்த மாமரமாக அமைந்திருக்கிறது என்பதனால் அந்த மாமரத்தின் கனிகளும் நான்கு சுவையுடையதாக இருக்கின்றன. அக்கனிகளை அருந்தினால் புத்திரப் பேறு சித்திக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.
இந்தக் காமாக்ஷி அம்மையைச் சுற்றித்தான் எத்தனை எத்தனை அம்பிகைகள். அரூப லக்ஷிமி எனப்படும் அஞ்சன காமாக்ஷி இடப்புறத்தில் வடக்கு நோக்கித் தவம் புரிகிறாள். மகாலக்ஷிமிக்கு தான் மிகவும் அழகுடையவள் என்று கர்வம். அதனால் ஒரு நாள் தன் நாயகனான மகாவிஷ்ணுவின் அழகையே பரிகசிக்கிறாள். அதனால் அவர் சாபமிடுகிறார். அந்தச் சாபம் நீங்க காம கோட்டத்தை அடைந்து, ஸ்ரீதேவியை நோக்கித் தவம் புரிகிறாள். காமாக்ஷியின் குங்கும நிர்மால்ய பிரசாத ஸ்பரிசத்தால் தன் சுய ரூபம் பெறுகிறாள் என்பது கதை. ஆம். எதிர்ப் பக்கத்தில் இப்படித் தவத்தால் பூரண செளந்தரியத்தைப் பெற்ற சௌந்தர்ய லக்ஷிமியும், அவள் சௌந்தரியம் பெற்றதைக் கண்டு அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்திருக்கும் கள்ளப் பெருமானுமே எழுந்தருளி யிருக்கின்றனர்.
இன்னும் வராஹி, அர்த்தநாரி, அன்னபூரணி. ராஜ சியாமளா என்னும் அஷ்டபுஜங்களோடு கூடிய சரஸ்வதி எல்லோருமே இங்கு இந்தக் காமாக்ஷியின் சந்நிதிக்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள். சக்தி அம்சம் அத்தனையையும் ஒருங்கே காண இந்த ஒரு கோயிலே போதும். மக்கள் விரும்பியவற்றை எல்லாம் கொடுப்பவளும், மக்களை வசீகரிக்கும் ஆற்றல் நிறைந்த அருள் விழிகளைப் பெற்றவளுமாகக் காமாக்ஷி விளங்குகின்றாள். அலை மகள், கலைமகள், மலைமகள் மூவரும் சேர்ந்த பராசக்தியின் அம்சமாகவே அன்னை காமாக்ஷி இலங்குகின்றாள் என்றால் அது மிகையன்று.
இதுவரை சொன்னதெல்லாம் மூலமூர்த்தியாம் காமாக்ஷியைப் பற்றியே. இங்குள்ள புராதனமான உத்சவ மூர்த்தி தனித் தங்கத்தால் ஆனவள்.
ஆகவே அவள் பங்காரு காமாக்ஷி எனப் பெயர் பெற்றிருந்தாள். அந்தச் சொர்ண காமாக்ஷியை மைசூரிலிருந்து ஆண்ட ஹைதர்அலி கைப்பற்றிச் செல்ல பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியிலே முயன்றிருக்கின்றான். தஞ்சையிலிருந்த நாயக்க மன்னர்கள் இந்தப் பங்காரு காமாக்ஷியைப் பத்திரமாகத் தஞ்சைக்கே எடுத்துச் சென்றிருக்கிறார்கள், அங்கு இன்னும் கோயில் கொண்டிருக்கிறாள் இந்த அழகான தங்கக் காமாக்ஷி. இந்தக் காமாக்ஷியின் ஞாபகார்த்தமாகவே காமகோடிபீடம் சங்கராச்சாரிய சுவாமிகள் 1941-ஆம் வருஷம், பங்காரு காமாக்ஷியின் பாதங்களை மட்டும் உருவாக்கிப் பிரதிஷ்டை செய்திருக்கிறார். ஆம், ‘பாதங்கள் இவை எனில் படிவங்கள் எப்படியோ?’ என்று கற்பனைக் செய்யத் தெரிந்தவன்தானே தமிழ் நாட்டுப் பக்தன்.


