
வேளூர் தையல் நாயகி
மனிதனுக்கு அடிக்கடி நோய்வருகிறது. நோய்க்குக் காரணம் என்ன என்ன என்று விவரமாக டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவத் துறவி லாரென்ஸ் சொல்கிறார், ‘நம்முடைய குணங்களையும் ஆற்றலையும் நல்ல வழியில் வளர்க்கவே நோய் வருகிறது. அது ஆண்டவனுடைய அருள்’ என்று. மேலும் சொல்லுகிறார் ‘நாம் சுகமாக வாழும்போது இறைவனை விட்டு விலகி நிற்கிறோம். நாம் பெறுகின்ற சுகம் நாமே தேடிப் பெற்றது என்று எண்ணி இறுமாந்து விடுகிறோம். ஆனால் நோய்வாய்ப்படுகின்ற போதுதான் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்பது நினைவுக்கு வருகிறது’ என்று. இதையே மிகவும் ரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் ஞானசம்பந்தர், ‘நோயுளார் வாய் உளான்’ என்றுதானே அவர் கடவுளுக்கு இலக்கணம் சொல்கிறார்.
ஆதலால் மனிதனுக்கு வருகிற நோய் அவன் அடைகிற துன்பம் எல்லாவற்றையும் தீர்க்க வல்ல வைத்தியனும் அவனாகவே தான் இருக்கவேண்டும் அல்லவா? அவனை அதனால் வைத்திய நாதன் என்று அழைப்பது எவ்வளவு பொருத்தம். இறைவ னுக்கு எத்தனை எத்தனையோ திரு நாமங்கள். ‘ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்று இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேனம் கொட்டத் தெரிந்தவன்’ தமிழன். ஆதலால் ஆபத்சகாயன், பக்தவத்சலன்; என்றான்; மாசில்லாமணி, தியாகேசன் என்றான். வழித்துணை தோன்றாத்துணை என்றான். இப்படி எல்லாம் அழைப்பதோடு அவரை வைத்தியநாதன் என்று அழைப்பதுதான் எவ்வளவு பொருத்தமானது, அழகானது?
இந்த வைத்தியநாதன் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் வைத்தீஸ்வரன் கோயில் என்னும் புள்ளிருக்கும் வேளூர். இங்கு இந்த ஆதி வைத்திய நாதன் கோயில் கொண்டிருப்பது ஒரு வேப்ப மரத்தடியிலே. இந்த மரத்திற்கே ஒரு சிறப்பு. இந்த மரம், அதன் பட்டை, அதன் பூ, இலை, பிஞ்சு, பழம், கொட்டை இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் எல்லாமே நல்ல மருந்துகளாக உபயோகமாகின்றன என்பதை அறிவோம். இதையெல்லாம் விட காற்றையும் சுத்தமானதாகச் செய்யவும் இந்த மரத்திற்கு இயலும் என்று கண்டிருக்கிறார்கள் பெரியோர்கள். வேப்பமரம் முன் வாயிலில் இருக்கும் வீட்டிற்குள் காலராவோ அல்லது டைபாயிடோ நுழைவதில்லை என்றும் தெரிந்திருக்கிறார்கள். இப்படி நல்ல ஆரோக்கியத்தையே அருளும் அந்த வேப்ப மரத்தடியில் வைத்திய நாதனே இருந்து அருள்புரிய முனைந்து விட்டால், மக்களது தீராத நோயெல்லாம் தீர்க்கிறது என்பதில் வியப்பு என்ன ?
ஆனால் எனக்குத் தோன்றுகிறது, இந்த வைத்திய நாதனுக்கு இத்தகைய சக்தியைக் கொடுப்பது வெறும் வேம்பு மட்டுமல்ல. அவன் பக்கத்திலே இருக்கும் கரும்பன்ன செல்வியாகிய தையல் நாயகியும்தான். ஆம். இந்த வைத்தீஸ்வரன் கோயில் தலத்தில் இருக்கும் அம்பிகையின் பெயர் தையல் நாயகிதான். பெண்களை, அதிலும் நல்ல அழகும் குணமும் உள்ள பெண்களைத்தான் தையல் என்று அழைப்பது வழக்கம். அந்தத் தையல்களுக்கு எல்லாம் நாயகியாக வாழ்வதற்கு உரிய நிலை இந்தத் தையல் நாயகிக்கு வாய்த்திருக்கிறது.
தில்லைச் சிற்றம்பலத்திலே நடராஜர் நடனம் ஆடுகிறார். வானம் மணி முகடாய் மால்வரையே தூணாக ஆன பெரும் பார் அரங்காக வைத்துக் கொண்டு ஆடினாலும் அவன் நோக்கெல்லாம் அன்னை சிவகாமி பக்கமே இருக்கிறது. ‘மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே ஆடுகின்றான் அவன்’ என்பது தானே சேக்கிழார் சொல்லும் விளக் கம். ஆனால் சிவகாமியை நோக்கி நடராஜர் ஆடுகிறார் என்று சொல்வதைவிட, சிவகாமி தனது ஒரு கண்ணால் அந்த ஆனந்தக் கூத்தைக் கண்டு மற்றொரு கண்ணால் உயிர்களைக் காத்து அருள்புரிகின் றாள் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம். இறைவனது ஐந்து தொழிலையும் விளக்கும் இந்த அற்புத நடனம் மனிதனது பிறவிப் பிணிக்கு ஓர் அறிய மருந்து. ஒரு பச்சைப் பசுங்குழவிக்கு நோய் என்றால் அந்தக் குழந்தைக்கு மருந்து கொடுப்பதில்லை. அப் பாலுண் குழவி பசுங்குடல் பொறாது என நினைந்து, தாயே அந்த நோய்க்கு உரிய மருந்தை உண்டு அந்தக் குழந்தையின் நோய் தீர்ப்பது போல, அன்னை சிவகாமியும் தன்னுடைய ஒரு கண்ணால் இறைவனது திரு நடனத்தின் குறிப்பை எல்லாம் வாங்கிப் பக்குவப் படுத்தி, மற்றொரு கண்ணால் உயிர்களுக்கு எல்லாம் வழங்குகின்றாள் என்பது தானே இதற்குப் பொருள். இது போலவே டாக்டர் வைத்தியநாதன் மக்கள் பிணி தீர்க்க அருளும் மருந்தை எல்லாம் ஏதோ கம்பவுண்டர் போலக் கலக்கிக் கொடுப்பதோடு நில்லாமல் தானே உண்டு, அதன் மூலம் தன் மக்களாகிய உயிர்களை எல்லாம் கருணையோடு காக்கும் அன்னையைத் தையல் நாயகி என்று அழைக்காமல் வேறு என்ன பெயர் கொண்டு அழைப்பது. ஆதலால் திருக்கடைக் கண் கொழித்த பெருவெள்ளம் குடைவார் பிறவிப் பெரும் பிணிக்கு மருந்து அவளே என்று கொண்டு நம் பிணிகளை அகற்றக் கற்றுக் கொள்வோமானால் அதுவே போதும். ஆம். அதற்கு
கரும்புருவச் சிலையும் வரிக்கயல்விழியும்
வள்ளைவார் காதும் முல்லை
அரும்பு இளநகையும் செங்கனிவாயும்
பிறைநுதலும். அமுதவாக்கும்
பொருந்திய மங்கலநாணும் மலர்க்குழலும்
விளங்க எழிற் புள்ளூர் மேவும் திருந்துமணம்
கமழ் சாந்துக் கழுத்துமை வாலாம்பிகைதாள் சிரமேற்கொண்டு
வாழ்த்தி வணங்கத் தெரிந்து கொள்ளலாம் தானே.


