
காசி விசாலாக்ஷி
கைலையைக் காண ஆசைப்பட்டார் அப்பர். அதுவும் இந்தப் பூத உடலோடேயே. ஆனால் அவருக்கு அந்தத் தள்ளாத வயதிலே அத்தனை தூரம் நடந்து சென்று கைலையைக் காண இயலவில்லை. அதற்காக ஏங்கினார். ஒருநாள் அவரது கனவில் கைலாசபதியே எழுந்தருளி கைலையைக் காண நீ நீண்ட தூரம் நடக்க வேண்டியதில்லை. நீ தங்கியிருக்கும் திருவையாற்றிலே உள்ள கோயில் திருக்குளத்திலேயே மூழ்கினால் கைலையைக் காணலாம் என்று சொல்லிவிட்டு மறைகிறார். விடிந்ததும் அடி யார்கள் புடை சூழ, அப்பர் ஐயாறப்பனும், அறம் வளர்த்தாளும் கோயில் கொண்டிருக்கும் அந்தக் கோயிலுக்குள்ளேயே நுழைந்து அங்குள்ள திருக்குளத்தில் முழுகுகிறார். அப்படி முழுகி எழுந்த போது கைலையை நேரிலேயே காண்கிறார். அவர் கைலை சேர்ந்து கைலாசநாதனை அந்த லோகநாயகியுடன் கண்டு தொழுது பாடுகிறார்:
மாதர் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி
போதொடுநீர் சுமந்து ஏத்தி
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதன கண்டேன்.
என்று கூத்தாடவே ஆரம்பித்து விடுகிறார். ஆம், கைலையை, அங்குள்ள பெருமானையும் பெருமாட் டியையும் தெருவிலே வருகிற களிறிலே பிடியிலே, ஆடி வருகிற மயிலிலே பெடையிலே எல்லாம் கண்டு கண்டு மகிழ்கிறார். ஆம், சிவனும் சக்தியும் ஒன்றி நிற்கின்ற அந்த மாதிருக்கும் பாதியனையே அல்லவா கண்டு விடுகிறார். இப்படி அப்பர் கண்ட கைலாச தரிசனம் ஞாபகார்த்தமாக ஐயாறப்பன் கோயிலுக்குள்ளே ஒரு சிறு கோயில் கைலாச நாதருக்கு.
இதைப் போலவே, அந்தக் காசி விஸ்வநாதரும் விசாலாக்ஷியும், தமிழ் நாட்டுக் கோயில்களுக்குள் கோயில் தவறாமல் எழுந்தருளியிருக்கிறார்கள். இப்படி இவர்கள் தலம் தலமாக வந்து குடியேறுவானேன். விஷயம் இதுதான். நமது தமிழர்களுக்கு ஓர் ஆசை. இறப்பதற்கு முன் காசி சென்று கங்கையில் மூழ்கி, விசுவநாதரை – விசாலாக்ஷியைத் தரிசனம் செய்துவிட வேண்டும் என்று. ஏன் ? அந்தக் காசியிலே இறந்தால் முத்தி நிச்சயம் என்பது நம்பிக்கை. ஆனால் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்ற, காலம், பொருளாதாரம், உடல் நலம் எல்லாம் இடந்தராமல் எத்தனையோ பேருக்கு காசி செல்ல முடிகிறதில்லை. ஆதலால் அவர்கள், அந்த ஆசை நிறைவேற அவரவர்கள் இருக்கும் ஊரிலே உள்ள சிவன் கோயிலிலேயே, விசுவநாதரையும் விசாலாக்ஷியையும் பிரதிஷ்டைபண்ணி வணங்கி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இமைப் பொழுதும் நெஞ்சைவிட்டு நீங்காத இறைவனை, கோயிலில் வைத்து கும்பிட விரும்பும் பக்தர்களுக்கு, விசுவநாதன் காசியிலிருந்து விசாலாக்ஷியையும் அழைத்துக் கொண்டே வந்துவிடுகிறான். இல்லை. காசிக்கே சென்றால் அங்குள்ள இறைவனை அணுகி, நாமே நேரிலே அபிஷேகம் செய்து, மலரால் அருச்சித்து வழிபாடு செய்யலாம். சில தலங்களில் அர்ச்சகர்களாலும் தீண்டாத் திருமேனியோடு விளங்கும் இறைவன், இங்கு எல்லோராலும் தீண்டும் திருமேனியோடு விளங்குகிறான் என்றால் எவ்வளவு எளியவனாக அவன் பக்தர்களுக்காக இறங்குகிறான் என்று தெரிந்து கொள்ளலாம் அல்லவா.
இப்படி ‘எம்மானாக, எளிவந்த பிரானாக’ எல்லாம் விளங்கும் காசி விசுவநாதனோடு கோயில் கொண்டி ருப்பவளே விசாலாக்ஷி. கஞ்சி காமாக்ஷியுடனும், மதுரை மீனாக்ஷியுடனும் ஒருங்கு வைத்து எண்ணப்படுகிறவள். மீனாக்ஷி விழித்த கண் விழித்தபடியே இருந்து அருள் புரிகிறவள் என்றால், இவள் கண்களை அகலத் திறந்து விரிந்த அருளையே அன்பர்களுக்குக் கொடுக்க வல்லவள் ஆகிறாள். ஆனால் காசியில் உள்ளவர்கள் இவளை விசாலாக்ஷி என்று வணங்குவதில்லை. அன்னை அன்னபூரணி என்றே தொழுகிறார்கள். உண்மைதானே. மக்கள் பசிப்பிணி அகற்றுவதுதானே அன்னையின் கடமை. ‘உண்டிகொடுத் தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற உண்மைக்கு நிதரிசனமாக, பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து, தன் இரத்தத்தாலேயே வளர்த்து, பின் பெற் றெடுத்து, தன் முலைப்பாலால் அமுதூட்டி அதன் பின், உண்ண உணவை எல்லாம் அருளும் அன்னையை அன்னபூரணி என்று சொல்லுவதில்தான் எவ்வளவு பொருத்தம்.
குமரிக் கரையில் கன்னியாக நின்று மக்கள் நலனுக்காகத் தவஞ்செய்கிறாள் ஓர் அன்னை. அவளைப் போலவே மக்களை எல்லாம் ஊட்டி வளர்த்து ஆளாக்குகிறாள் ஓர் அன்னை, அந்த தொலை தூரத்திலுள்ள காசியிலே. இந்த இரண்டு அன்னையாருக்கும் இடையிலேதான் மற்றவர்கள் எல்லாம். உலகம் புரக்கும் தேவியாக விளங்குகிறார்கள். இத்தனை அன்னையரையும் பற்றிச் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட முடியவில்லை தான். பரவாயில்லை. இந்த அளவிற்காகவாவது தெரிந்து கொண்டு அவர்களை வணங்கலாம்தானே.


