
பூரி ஜகந்நாதர் ஆலயம் தோன்றிய கதை
சத்தியயுகம் என்று கூறப்படும் முதலாவது யுகத்தில் மாளவ தேசத்தை அவந்தி என்னும் ஊரினைத் தலைநகராகக் கொண்டு இந்திரதூய்மன் என்னும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். கதிரவனும் வெட்கப்படும்படியான உடல் ஒளியும், இந்திரனும் அஞ்சும் பேராற்றலும் பெற்றவனாவான். வெறும் உடல் வன்மையோடு மட்டுமல்லாமல் வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தான். போர்க் கருவிகள் அனைத்தையும் கையாளும் பேராற்றல் பெற்றிருந்தான். சுருங்கச் சொன்னால் அவனுக்கு நிகரானவர் பூவுலகிலோ அன்றி தேவருலகிலோ இல்லை என்று கூறிவிடலாம். இவ்வளவு இருந்தும் கடுகளவும் அகங்காரம் கொள்ளாமல் விஷ்ணு பக்தியில் சிறந்து விளங்கினான். தனக்குள்ள செல்வம், ஆற்றல், அதிகாரம், செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்த ஒரு வழியைக் கண்டான். தன்னால் வழிபடப்படும் விஷ்ணுவிற்கு அன்று வரை யாரும் கட்டாத ஒரு சிறந்த கோயிலை அமைக்கத் தீர்மானித்தான். சிறந்த கோயிலாக அமைவதுடன், அக்கோயில் அமைகின்ற இடமும் ஈடு இணையற்றதாக இருக்க வேண்டும் என்று அவன் நினைத்ததில் வியப்பொன்றுமில்லை. எங்கும் பரவி இருந்த அவன் செல்வாக்கு காரணமாக எல்லாத் தீர்த்தங்களையும், இருமருங்கிலும் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலங்களையும் பார்த்து அலசி ஆராய்ந்தான். அவனுடைய தலைநகரான அவந்தியும் அதனைச் சுற்றியுள்ள பகுதியும் மிக அற்புதமாக இருந்தன. பெரிய பெரிய விண்ணை இடிக்கும் கட்டடங்கள் நிறைந் திருந்தது அவந்தி. ஓயாத மக்கள் நடமாட்டமும், பெரு வாணிபம் நடைபெறுகின்ற கடைவீதிகளும் நிறைந்திருந்த அவந்தியில், விஷ்ணு கோயிலைக் கட்ட ஏனோ அவன் மனம்
இடம் தரவில்லை. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், சிப்ரா நதி பாய்ந்தோடும் அவந்தி நகரத்தில், அந்நதிக் கரையில் மிகப் பிரசித்தமான மகாகாளர் திருக்கோயில் என்று வழங்கப்படும் ஒரு பெரிய சிவன் கோயிலும், கோவிந்த சாமி, விக்கிரம சாமி என்ற பெயர்களில் இரண்டு விஷ்ணு ஆலயங்களும் ஏற்கெனவே இருந்தன. மகா காளர் கோயிலைப் பொறுத்தமட்டில் ஒரு தனிச் சிறப்பும் உண்டு. அவரை ஒருமுறை வழிபட்டால் ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்ததற்கான பலன் உண்டு என்றும் சொல்லப் பட்டது. இவ்வாறு இருந்தும் அரசனின் மனம் இங்கு லயிக்கவில்லை.
எனவே தன் அமைச்சர்கள், படைகள் ஆகியோருடன் சிறந்ததோர் இடத்தைத் தேடிப் புறப்பட்டு விட்டான் இந்திர தூய்மன். நீண்ட தேடலுக்குப் பிறகு கடற்கரையை அடைந்தான். இக்கடற்கரைப் பகுதியில் சில காலம் வசித்த பிறகு மிக்க அழகு வாய்ந்ததும், இயற்கை எழில் கொஞ்சுவதும், பறவைகள் மகிழ்ந்து திரிவதுமான புருஷோத்தம க்ஷேத்திரம் என்ற இடத்தை அடைந்த அரசன், தான் நினைத்த ஆலயத்தைக் கட்ட இதுவே சிறந்த இடம் என்ற முடிவுக்கு வந்தான்.
மிக அழகிய இந்தப் பகுதிக்கு புருஷோத்தம க்ஷேத்திரம் என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணமுண்டு. பல காலத்திற்கு முன் விஷ்ணுவின் சக்தியின் பெரும்பகுதி பெற்ற மகா விஷ்ணு விக்கிரகம் இந்த இடத்தில் இருந்தது. யார் வந்து அதனை ஒருமுறை தரிசித்தாலும் அவருடைய பாபங்கள் அனைத்தும் அப்பொழுதே நீங்கிவிடும். எனவே மக்கள் அனைவரும் இங்கு வந்து இந்தச் சிலையை தரிசித்து பாபங்களினின்று நீங்கினதால் எமனுக்கு வேலையில்லாமல் போயிற்று. வேலை இல்லாத திண்டாட்டத்தில் அவதிப்பட்ட எமன் மகாவிஷ்ணுவை வணங்கித் தன் குறையைத் தெரிவித்தான். அவனுடைய குறையைப் போக்க வேண்டி மகாவிஷ்ணு இந்தப் பிரசித்திபெற்ற சிலையை மணலுக்குள் புதைத்து விட்டார். இப்பொழுது முன்போல மக்கள் வந்து உடனடியாகத் தங்கள் பாவத்தைப் போக்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும், ஊருக்கிருந்த மதிப்பு குறையாமல் இருந்தது. புருஷோத்தமன் என்பது மகாவிஷ்ணுவிற்கு ஒரு பெயராகும். எனவே அவரால் பிரசித்தி பெற்ற இந்த இடத்திற்குப் புருஷோத்தம நகரம் என்று பெயர் வந்தது இயல்பே. இந்த இடத்தைப் பார்த்தவுடன் இந்திர தூய்மன் மனத்தில் ஒரு நிறைவு ஏற்பட்டது. வேறு இடம் தேடிச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் போய்விட்டது. மிகச் சிறந்த இந்த இடத்தில் ஈடு இணையில்லாத ஒரு விஷ்ணு ஆலயத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டான்.
பேரரசனாகிய அவன் தான் மட்டும் இதனைச் செய்யாமல் பிற அரசர்கள், செல்வர்கள், வணிகர்கள் ஆகியவர்களும் இதில் பங்குபெற வேண்டி அவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்தான். கோயில் எப்படிக் கட்ட வேண்டும் என்ற திட்டம் உருவாயிற்று. அதற்கு வேண்டிய பொன், பொருள் முதலியவை கணக்கின்றிக் கிடைத்தன. கோயில் நிர்மாணம் தொடங்குவதற்கு முன் ஓர் அஸ்வமேத யாகம் செய்யவேண்டுமென அரசன் விரும்பியதால் பொன்னாலேயே ஒரு மண்டபம் தயாரிக்கப்பட்டது. பரத கண்டம் முழுவதிலிருந்து மன்னரும், மக்களும் பொன்னையும் பொருளையும் கொண்டு வந்து சேர்த்தனர். இந்த யாகத்தில் கிடைக்கும் தானத்தைப் பெறுவதற்காகவே பிராமணர்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்து கூடினார்கள். அஸ்வமேத யாகம் முடிந்தவுடன் கோயில் கட்டும் பணி துவங்கி அதுவும் முடிந்துவிட்டது. எந்த விக்கிரகத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து இங்கே பிரதிஷ்டை செய்வது என்ற கவலையுடன் உறங்கிய அரசனுக்கு விஷ்ணு கனவில் தோன்றி சமுத்திரக் கரையில் உள்ள மரத்தை அடையாளம் காட்டி அதனைப் பயன்படுத்திச் சிலைகள் செய்ய வழிகாட்டினார்.
ஜரா என்ற வேடன் எய்த அம்பு பட்டு கிருஷ்ணர் மரணத்தை தழுவினார், பின்னர் அவரது உடல் ஒரு பெரிய மரக்கட்டை போல ஆனது. புரி கடலில் அந்த பெரிய மரக்கட்டை மிதந்து வந்தது. அதைக் காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.
இதுவே இன்று பிரசித்தியுடன் விளங்கும் பூரி ஜெகந்நாதர் ஆலயம்.


