மதுரை மீனாக்ஷி

காதல் எப்படிப் பிறக்கிறது என்பது ஒரு தேவ ரகசியம். மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய சிறந்த உணர்ச்சிகளில் தலை நிற்பது காதல். ஏன் ? சொல்லப்போனால் தேவர்களே இந்தக் காதல் உணர்ச்சி பெற மனிதர்களாகப் பிறக்க வேண்டி யிருந்திருக்கிறது. பர்வத ராஜன் புத்திரி பார்வதியை மணக்க பரமசிவன் இந்த உலகுக்கே இறங்கி வந்திருக்கிறார். அயோத்தியில் சக்ரவர்த்தி திருமகனாகவும், துவாரகையில் கண்ணனாகவும் விஷ்ணு அவதரித்ததே முறையே சீதையையும் ருக்மிணி யையும் மணக்கத்தானே. ஏன்? நமது தமிழ் நாட்டுக் கடவுள் முருகன் நம்பிராஜனது தினைப் புனத்துக்கு வந்து வேடனாக,விருத்தனாக எல்லாம் வேஷம் போட்டது அந்தக் குறமகள் வள்ளியின் காதலுக்குத்தானே.

இந்தக் கதைகளை எல்லாம் தூக்கி அடிக்கிறது, மதுரையில் அங்கயற்கண்ணியாம் தடாதகையை அந்த அழகன் சோமசுந்தரன் மணந்து கொண்ட கதை. அரசிளங்குமரியை மணக்க வந்த அவன் அன்றுமுதல் மனைவிக்கு அடங்கிய மணவாளனாக இருந்து விடுகிறான் இந்தச் சோமசுந்தரன். மீனாக்ஷி சுந்தரன் இருவரும் அந்த மதுரையிலே கோயில் கொண்டிருந்தாலும் மக்கள் என்னவோ கோயிலை மீனாக்ஷி அம்மன் கோயில் என்றுதான் கூறுகிறார்கள். அதனை சுந்தரன் கோயில் என்று சொல்வதில்லை. அத்துணை ஆதிக்கம் மீனாக்ஷிக்கு அங்கே. ஆம், பணக்காரப் பெண்ணை – அதிலும் அரசிளங்குமரியை மணந்து அவள் வீட்டிற்கே குடிவந்தால் மணமகன் அங்கு அடங்கி ஒடுங்கி இருப்பதுதானே இயல்பு.

மதுரை என்றவுடனே அங்கு அன்று நடந்த இரண்டு திருமணம் நமக்கு ஞாபகம் வரும். இரண்டையும் நடத்தி வைத்தவர் அந்த மகாவிஷ்ணுவே தான். ஆனால் ஒன்றுக் கொன்று எவ்வளவு வித்தியாசம். பாண்டிய நாட்டிலே தனி அரசு செலுத்திய அல்லியை மணக்க அந்த ஆணழகன் அருச்சுனன் என்ன என்ன எல்லாமோ செய்ய வேண்டியிருந்தது. அத்தனை செய்தும் அல்லியை அவள் சம்மதம் பெற்றுத் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை அவனுக்கு. கடைசியில் அந்தக் கள்ளக் கிருஷ்ணன் உதவியினால் அரண்மனையில் அவள் தூங்குகின்ற சமயம் பார்த்துக் கள்ளத் தாலி கட்டி, அந்தத் தாலி கட்டிய உரிமையினால்தான் அல்லியின் காதலனாக ஆகிறான் அர்ச்சுனன். ஆனால் மலயத்துவஜன் மகளாக இதே பாண்டிய நாட்டில் பிறந்த தடாதகை, அரசுக் கட்டிலில் ஏறி, அதன்பின் திக்விஜயம் செய்து ஏனைய அரசர் பெருமக்களை எல்லாம் வென்று, கடைசியில் சோமசுந்தரனைக் கண்டு காதல் கொண்டு அவனையே மணஞ்செய்து கொள்கிறாள். ஆம், எல்லோரையும் வென்றவளையும் வெற்றி கண்டு விடுகிறான் இந்தச் சுந்தரன். இந்தக் கதையைத்தான் பரஞ் சோதி முனிவர்

செழியர் பிரான் திருமகளாய்
கலைபயின்று, முடிபுனைந்து
செங்கோ லோச்சி
முழுதுலகும் சயம் கொண்டு,
திறைகொண்டு நந்திகண
முனைப்போர் சாய்த்து
தொழுகணவற்கு அணிமண
மாலிகை சூட்டி, தன்
மகுடம் சூட்டி செல்வம்
தழைவுறு தன்னரசளித்த
பெண்ணரசி

என்று பாடிப் பாடி மகிழ்கின்றார்.

இந்தப் பெண்ணரசியை அந்த உலகமுழுதாண்ட சுந்தரன் மணந்த வரலாற்றைக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ளலாம் தானே. மதுரையம்பதியை நிர்மாணம் செய்தவன் குலசேகர பாண்டியன் குமாரன் மலையத்துவஜன். அவன் காஞ்சன மாலையை மணம் புரிகிறான். இந்தக் காஞ்சன மாலையோ முத்திய பிறப்பில் வித்யாவதியாக இருந்து கடுந்தவம் இயற்றி அம்மை மீனாக்ஷியையே தன் மகளாகப் பிறந்து வளர வரம்பெற்றவள். அந்த வர பலத்தால் அங்கயங்கண்ணியே மலையத்துவஜனுக்கும் காஞ்சனைமாலைக்கும் மகளாகப் பிறக்கிறாள். அவள் பிறப்பில் ஒரு அதிசயம். மும்முலையுடைய பெண்ணாக வளர்கிறாள். இதைக் கண்டு மருகிய தாய்க்கு அசரீரி சொல்லிற்று. ‘குழந்தைக்குத் தடாதகை என்று பெயரிடுங்கள். அவள் பருவமடைந்து அவளை மணக்க வருகின்ற மாப்பிள்ளையைக் கண்டதும் மூன்றாவது முலை தானாகவே மறையும்’ என்று. தடாதகையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்கிறாள். தந்தைக்குப் பின் தானே மகுடஞ்சூடி பாண்டிய நாட்டை அரசு செய்கிறாள். அப்படி அரசு செய்யும் பொழுது ஒரு ஆசை. ஆம். திக்விஜயம் செய்ய வேண்டுமென்று. புறப்பட்ட திக்விஜயத்தில் பிறதேசத்து அரசர்கள் மாத்திரம் அல்ல, திக்கு பாலர்கள் எட்டுப் பேருமே தலை வணங்குகிறார்கள்.

இப்படி வெற்றிமேல் வெற்றியோடு இமயத்தையே அடைகிறாள்; பாகீரதியில் முழுகுகிறாள்; மேருவை வலம் வருகிறாள். கடைசியில் கைலாயத்திற்கே வந்து விடுகிறாள். அங்கு கைலாசபதி, வந்திருக்கும் தடாதகை தனக்கே உரியவள் என்று அறிந்து, சுந்தரரூபத்தோடு பினாகபாணியாக அவள் முன் வந்து சேருகிறான். எல்லோரையும் வெற்றி கண்ட பெண்ணரசி இந்தச் சுந்தரன் முன்பு நாணித் தலை குனிகிறாள். மூன்றாவது மார்பகமும் மறைகிறது. அப்போது ‘சரி. இவரே நம் கணவர்’ என்று அறிந்து கொள்கிறாள். அந்த சுந்தரனும் தடாதகையையின் பின்னாலே மதுராபுரிக்கே வந்து விடுகிறான். சோமசுந்தரனாக மதுரைக்கு வந்தவன் காஞ்சனமாலையின் சம்மதத்தோடு தடாதகையை ஆம் – அங்கயற்கண்ணியைத் தான், பலரும் அறிய மணம் புரிந்துகொள்கிறான். மலயத்துவஜன் ஸ்தானத்தில் மகாவிஷ்ணுவே கன்யாதானம் செய்கிறார்; தாரைவார்த்தே கொடுக்கிறார் தங்கை மீனாக்ஷியைச் சோமசுத்தரனுக்கு. அன்று முதல் சோமசுந்தரன், தன் மனைவி மூலம் ஸ்ரீதனமாகக் கிடைத்த பாண்டி நாட்டை ஆளும் பாண்டியனாகவே ஆகிவிடுகிறான்.

இந்தத் திருமண வைபவைத்தைதான், இன்றும் சித்திரைத் திருவிழாவாக மதுரையில் மக்கள் கொண்டாடுகிறார்கள். இப்படி நடக்கும் தங்கையின் திருமணத்திற்கே தந்தப்பல்லக்கு, முத்துக் குடை, தங்கக்குடம் முதலிய சீர்வரிசைகளுடன் அழகர் கோயிலில் இருந்து அந்தக் கள்ள அழகன் சுந்தரராஜன்,பன்னிரண்டு மைல் நடந்து வந்து சேருகிறான்.

இப்படி அழகு நிறைந்த அங்கயற்கண்ணியை அழகனான சுந்தரனுக்கு, கள்ள அழகன் மணம் முடித்து வைக்கும் காட்சியைக் கவிஞர்கள் மட்டுமல்ல, தமிழ் நாட்டுச் சிற்பிகளும் மறக்கவில்லை. திருமணக்கோலத்தில் உள்ள பெண், மாப்பிள்ளையோடு கன்னிகாதானம் செய்யும் அந்தக் கண்ணனையுமே உருவாக்கிக் காட்டுகிறார்கள் கல்லுருவில். அண்ணனுக்கும், அருமை நாயகனுக்கும் இடையில் நிற்கிறாள் ஆரணங்கு. புதுமணப் பெண்ணிற்கு உரிய அத்தனை நாணமும் அவள் தன் முகத்திலே மட்டுமல்ல, அங்கங்கள் ஒவ்வொன்றிலுமே வந்து புகுந்து கொள்கிறது. சோமசுந்தரனது நீட்டிய வலக்கரத்திலே தங்கை மீனாக்ஷியின் வலக்கரத்தை எடுத்து வைத்து இணைத்து, தனது வலக்கரத்தால் கெண்டியை எடுத்துத் தாரைவார்த்துக் கொடுக்கிறான் அந்த சுந்தரராஜன். நீண்டுயர்ந்த மணி மகுடங்கள் இரண்டு ஆடவர் தலையை அலங்கரிக்க. கொத்தார் குழலியின் கூந்தலை அழகான ஒரு சிறு கிரீடம் அழகு செய்கிறது.

மூவரும் அணிந்திருக்கும் ஆடையும் அணியும், இது ஒரு பெரிய இடத்துக் கல்யாணந்தான் என் பதைத் தெரிவிக்கிறது. கல்யாண மண்டபம் வெகு அழகாக மேலும் கீழும் விரிந்திருக்கிறது. பிரம்மாவே திருமணத்தை நடத்திவைப்பவராக அமைகிறார். மற்றைய தேவர்கள் எல்லாம் திருமணவிழா வைக் கண்டு களிகூறுகிறார்கள். இத்தனையையும் அழகு ஒழுகும் உயிர் ஓவியமாகத் தீட்டுகிறார் பரஞ் சோதி முனிவர், தனது திருவிளையாடற் புராணத்தில்

அத்தலம்நின்ற மாயோன்
ஆதி செங்கரத்து நங்கை
கைத்தலம் கமலப்போது
பூத்ததோர் காந்தள் ஒப்ப
வைத்தகு மனுவாய் ஓதக்
கரக நீர் மாரி பெய்தான்
தொத்தலர் கண்ணி விண்ணோர்
தொழுதுபூ மாரி பெய்தார்.

என்பது தானே அவர் சொல்லால் உருவாக்கும் சித்திரம். இதையே கல்லால் இழைத்த காவியமாகக் காட்டுகிறான் சிற்பி. இந்தச் சிற்ப வடிவத்தைக் காண விரும்புபவர்கள் நேரே அந்த சோமசுந் தரன் சந்நிதிக்கே செல்லவேணும். இல்லை, வழக்கம் போல் மீனாக்ஷியின் சந்நிதிக்குச் சென்று அவளைத் தொழுது வணங்கி, அவள் தன் அனுமதியும் பெற்று, அதன்பின் வடக்கு நோக்கி வரவேண்டும். வழியில் முக்குறுணிப்பிள்ளையாரையும் வணங்கிய பின், சொக்கலிங்கத்தை வலம் வந்தால் கம்பத்தடி மண்டபம் வந்து சேரலாம். அங்கு காணவேண்டிய சிற்பச்செல்வங்கள் பல இருக்கும். அத்தனையையும் ஒதுக்கிவிட்டு, கீழக்கோடிக்கே வந்து மேற்கே பார்க்கத்திரும்பினால் தெற்குத் தூணில் கிழக்கே பார்க்க, அண்ணனும் தங்கையும் அவர்களுடன் மாப்பிள்ளை சுந்தரனுமே திருமணக் கோலத்தில் காட்சி கொடுப்பார்கள்.

ஆனால் இந்தப் பாண்டி நாட்டுச் சிற்பிகளுக்கு முதுகுக்கு மண் காட்டியிருக்கிறான் சோழநாட்டுச் சிற்பி ஒருவன். ஆம், பாண்டியர் சோழர் போர், அதில் சோழ மன்னர் அடைந்த வெற்றியைப் பற்றி யெல்லாம்தான் சரித்திரத்தில் நிறையப் படித்திருக் கிறோமே. கலை உலகிலுமே இந்தப் போர் நிகழ்கிறது. கல்லில் உருவாக்கிய இந்தக் கல்யாண சுந்தரர் கோலத்தைச் செம்பிலே வடித்திருக்கிறான் ஒரு சிற்பி காவிரிக்கரையிலே.

‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்றபின் அண்ணனுக்கு அங்கு இடமில்லை. தாரைவார்த்துக் கொடுக்கும் சம்பிரதாயம் எல்லாம் அவசியம் இல்லை என்று கண்டிருக்கிறான். ஆதலால் அண்ணனை அப்படியே ஒதுக்கிவிடுகிறான். திருமணம் முடிந்ததும் முழுதுலகீன்றவள் செங்கையைப்பற்றி இழுத்துக்கொண்டு மிக்க மிடுக்கோடேயே தன் இருப்பிடம் கூட்டிச் செல்கிறான் சுந்தரன். புதுமணப் பெண்ணான அந்தத் தென்னவள் மகளோ, நாணிக் கோணினாலும் அழகனை மணந்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடேயே அவன் பின்னாலே மணவறையை வலம் வருகிறாள்.

மங்கையும் மணாளனும் மணவறை புகுகின்ற காட்சியையே செப்புச்சிலையாக வடிக்கிறான் இந்தச் சோழ நாட்டுச் சிற்பி. அந்த அழகிய கலியாணசுந்தரர் கோலத்தை நேரிலே காணவேண்டுமானால் மாயூ ரத்தை அடுத்த திருவேள்விக் குடிக்கே செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நான் நின்று கொள்கிறேன்.

இப்படிக் கலைஞர் நடத்தும் கடவுள் திருமணத் தையெல்லாம் கண்டுகளித்தவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை. தமிழ்நாட்டில் சிவன் கோயில்கள் எத்தனை எத்தனையோ. அத்தனை கோவில்களிலும் அம்பிகை சந்நிதிகளும் உண்டு. இந்த அம்பிகைகள் எல்லோரும் ஒரே மூர்த்தம்தான் என்றாலும் அவர்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கிறார்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பக்தர்கள். வண்டமர் பூங்குழலி, ஏலவார் குழலி, மட்டுவார் குழலி என்று அவள் தன் குழல் அழகிலேயே மெய் மறந்து நிற்பவர்கள் உண்டு. தேனார் மொழியாள், குழல்வாய் மொழியாள், யாழைப்பழித்த மொழியாள் என்று அவளது கரும்பன்ன சொல்லிலேயே மயங்கு பவர்களும் உண்டு. ஏன்? அன்னை அருந்தும் அமுத கலசமான அந்த உண்ணாமுலையையும், முயங்கு பூண் முலையையும், ஒப்பிலா முலையையுமே நினைந்து நினைந்து வாழ்த்தியவர்களும் உண்டு. என்றாலும் அவளது கருணை நிறைந்த கண்களையும் அக் கண் கள் மூலம் உயிர்களுக்கு அருளும் செல்வங்களையுமே நினைந்து வேல் நெடுங்கண்ணி, மாழையங்கண்ணி, மைமேவுகண்ணி யென்றெல்லாம் போற்றத் தெரிந் தவர்களே, அவளை மீன் கண்ணி, மீனாக்ஷி என்றெல்லாம் வாழ்த்தவும் தெரிந்திருக்கிறார்கள்.

இப்படி இறைவியை மீன் – கண்ணி என்று அழைப்பதுதான் எவ்வளவு பொருத்தம். உருவத்தாலும், வடிவத்தாலும் பிறழும் தன்மையாலும் அவள் கண் மீன் கண் போன்றது என்று உவமிப்பது எளிதுதான். ஆனால், உலகில் கண்படைத்த ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் கண் என்றிருந்தால் கண் இரைப்பை என்று ஒன்றிருக்க, இரப்பையே இல்லாது விழித்த கண் விழித்தபடியே இருந்து வாழும் ஜீவராசி மீன் ஒன்றே என்றும், இந்த உலகையும் உயிர்களையும் காக்கின்ற அம்மை விழித்த கண் விழித்தபடியே இருந்து, ஆம், கண் இமையாது நின்று காக்கின்றவள் என்றும் நாம் தெரிந்து கொள்ளும்போது அவளை மீன் கண்ணி என்று அழைப்பதின் அருமையை அறிந்து மகிழலாம் தானே. இத்துடன் மீன் முட்டையிடுவதும், அதிலிருந்து குஞ்சுகள் பிறப்பதுமே ஒரு விந்தை. மீன் தான் இடும் ஆயிரக்கணக்கான முட்டைகளைத் தன் இமையற்ற கண்களால் கூர்ந்து நோக்கியே குஞ்சுகளைப்பொரிக்கச் செய்கின்றன. ஆம், அதேபோலக் கடைக்கண் நோக்காலேயே மக்களுக்கு அருள் புரி யும் அன்னையை மீன்கண்ணி என்று அழைக்காமல் வேறு என்ன சொல்லித்தான் அழைப்பது. இதை யெல்லாம் தெரிந்துதானே

ஒளியால் உலகீன்று உயிரனைத்தும்
மீன்போல் செவ்வியுற நோக்கி
அளியால் வளர்க்கும் அங்கயற்கண்
அன்னே கன்னியன்னமே.

என்று மீனாக்ஷியையே கூவி அழைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

இந்த மீனாக்ஷியை மணந்த சுந்தரர் ஏதோ மனைவிக்கு அடங்கிய கணவனாக வாழ்ந்தாலும் சும்மா வீட்டில் முடங்கிக் கிடக்கவில்லை. தருமிக்குப் பொற்கிழி அளிக்க புலவனாக வேடம் தாங்கி, சங்கப் புலவர்களோடு வாதாடி இருக்கிறார். ஏழைச் செட்டிப் பையனது சொத்தை தாயாதிகள் அபகரித்துக்கொண்டபோது மாமனாக வந்து வழக்குரைத்தி ருக்கிறார். பாணபத்திரருக்காக விறகு விற்றிருக்கிறார். எல்லாம் வல்லசித்தராக கல்யானைக்கு கரும்பருத்தி இருக்கிறார். கரிக்குருவிக்கு உபதேசித்திருக்கிறார். ஏன், நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கும் குதிரைக்காரராகவும் வந்திருக்கிறார். வந்தியின் பிட்டுக்கு மண் சுமந்து மன்னவன் கையில் பிரம்படிபட்டிருக்கிறார். இப்படி இவர் செய்த திருவிளையாடல்கள் ஒன்றிரண்டு அல்ல; அறுபத்து நான்கு என்று அறிகிறோம். இத்தனை திருவிளையாடலையும் இவர் நடத்த இவருக்குப் பின்னிருந்து ஆட்டிவைத்தவள் அன்னை மீனாக்ஷியே என்பதையுமே நாம் தெரிவோம் தானே.

இந்தத் திருவிளையாடல்கள் எல்லாம் புராணப் பிரசித்தமானவை. சரித்திரப் பிரசித்திப் பெற்ற அம்மையின் திருவிளையாடல் ஒன்று சமீப காலத்தி யது. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் பிரபலமானவர் திருமலை நாயக்கர். மீனாக்ஷியம்மை கோயிலின் பெரும் பகுதியை மண்டபங்களாலும், கோயில்களாலும் அலங்கரித்தவர் அவரே.

அவருக்கு அன்னையிடம் ஆராத பக்தி. அவரது அவைக்கு குமரகுருபரர் வந்தபொழுது-அம்மையின் பேரில் ஒரு பிள்ளைத் தமிழ் பாடிக் கொடுக்க வேண்டினார். அவரும் இசைந்து பாடல்கள் எழுதினார். அந்தப் பிள்ளைத் தமிழின். அரங்கேற்றம் நடக் கிறது திருமலை நாயக்கர் முன்னிலையிலே. பாடல்களை ஒன்றுக்கு மேல் ஒன்றாகக் குமரகுருபரர் பாடிக் கொண்டே இருக்கிறார். அப்போது ஒரு சிறு பெண் ஐந்து ஆறு வயதிருக்கும், அர்ச்சகர்கள் இருந்த பகுதியிலிருந்து எழுந்து வந்து மிக்க உரிமையோடு நாயக்க மன்னர் மடிமீது ஏறி உட்கார்ந்து கொண்டது. அர்ச்சகர் பெண் என்று எண்ணிக்கொண் டார்கள் எல்லோரும். பெண்ணும் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அனுபவித்தது. கடைசியில்

தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே, துறைபழுத்த
நரைத் தீந்தமிழில் ஒழுகும் நறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
ஏற்றும் விளக்கே, வளர்சிமய இமயப்
பொருப்பில் விளையாடும் இளமென்
பிடியே,எரிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன்திருஉளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோவியமே, மதுகரம் வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும்
இளவஞ்சிக் கொடியே வருகவே
மலையத்துவஜன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே

என்ற பாட்டை குமரகுருபரர் பாடி முடித்ததும், நாயக்கர் மடியில் இருந்த பெண் எழுந்து நடந்து குமரகுருபரர் இருந்த இடம் சென்று தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையைக் கழற்றி அவர் கழுத்தில் போட்டுவிட்டு மறைந்துவிட்டது. அப்படி வந்து பிள்ளைத் தமிழைப் பிள்ளையாகவே இருந்து கேட்டவள் அன்னை மீனாக்ஷியே என்று அறிந்து அவள்தன் கருணைத்திறனை நினைந்து அதிசயித்து நின்றனர் எல்லோரும். இப்படிக் கண் கண்ட தெய்வமாக அன்னை மீனாக்ஷி ஆட்சி செய்கிறாள்; அருள் புரிகிறாள் அந்த பழமையான பாண்டியர் தலைநகரான மதுரையிலே.

வரைராஜனுக்கு, இரு கண்மணியாய்
உதித்தமலை வளர்காதலி
பெண் உமையே

அன்னை மீனாக்ஷியாக அவதரித்தவள் என்பதை நாம் முன்னரே அறிந்திருக்கிறோம். ஆனால் அவளே மலைமகள், அலைமகள், கலைமகள் மூவரும் ஒருங்கு சேர நிற்கும் பராபரை, பராசக்தி என்பதைத்தான்,

கலைமகளே, வடிவணங்கே
கமலமுகத் திருமாதே
கருணையாளே
மலைமகளே, அறந்தழைக்கும்
சொக்கர்பங்கில் மீனாக்ஷி
மதுரைத்தாயே

என்று பாடிப்பாடி மகிழ்கிறார் ஒரு கவிஞர்.

அதையே நாமும் பாடிப் பாடி மகிழலாம்தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *