
தாயான தத்துவம்
பிரான்சு தேசத்திலே இரண்டு கதைகள்.
ஒரு கதை
கடவுள் மனிதனை முதல் முதலாகப் படைத்து பூமிக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் மனிதனுக்கு இந்த உலகம் பிடிக்கவில்லை. சுவர்க்கத்திற்கே திரும்ப ஓடி விடுகிறான். கடவுள் பார்க்கிறார். அவனை இந்த நில உலகத்திலேயே இருத்திக்கொள்வதற்காக இன்பப் பொருள்களான பசுஞ்சோலை, வண்ணமலர் சுவைப் பழம், இசைத் தும்பி, வெள்ளருவி, நீராழி இன்னும் என்ன என்ன எல்லாமோ கொடுத்துத் திரும்பவும் அனுப்பிவைக்கிறார். மனிதனுக்கு இவை ஒன்றும் அவன் விரும்பும் இன்பத்தை அளித்து விடவில்லை. ஆதலால் திரும்பத் திரும்ப சுவர்க்கத்திற்கே ஓடிவிடுகிறான். கடைசியிலே கடவுள் பார்த்தார். ஒரு பெண்ணைப் படைத்து அப் பெண்ணை மனிதனுடன் உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார். அவ்வளவு தான் உலகத்திற்கு வந்த மனிதன் சுவர்க்கத்திற்குத் திரும்பவே இல்லை. இப்படி ஒரு கதை.
மற்றொரு கதை
சைத்தான் கடவுளின் மகனைக் கெடுக்க எண்ணுகிறான். பூமிக்கடியிலே தங்கத்தையும் வைரத்தையும் புதைத்து வைக்கிறான். மரங்களில் இருந்து மதுவைக் குடம் குடமாகப் பொழிய வைக்கிறான். கடலுக் கடியிலே முத்தையும் பவளத்தையும் பரப்பி வைக்கிறான். இந்தப் பொன்னாலும் பொருளாலும் மதுவாலும் அவனைக் கெடுக்க முடியவில்லை.
கடைசியில் அவனைக் கெடுக்க, ஒரு பெண்ணையே அவனிடம் அனுப்பி வைக்கிறான். மனிதன் கெட்டே போய் விடுகிறான்.
கதை இரண்டுமே ஒரு கலைஞனது கற்பனையில் உதித்ததுதான். பெண் மனிதனை வாழ்விக்க வந்தவள், அவன் விரும்பும் இன்பத்தையெல்லாம் அவனுக்குக் கொடுக்கக் கூடியவள் என்ற ஒரு அடிப்படை எண்ணத்திலே உருவானது தான் முதல் கற்பனை. அதே சமயத்தில் எவ்வளவோ ஒழுக்கமாக வாழ்கிற மனிதனும், பொருளாலும் மதுவாலும் கெட்டொ ழிந்து போகாத மனிதனும், பெண்ணால் கெட்டு விடுகிறான் என்ற உண்மையை விளக்க எழுந்தது இரண்டாவது கதை. இரண்டு கதையிலும் உண்மை புதைந்து கிடக்கிறது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். ஆம் மனிதனை வாழ்விப்பவளும் தாழ்விப்பவளும் பெண்தான். இந்த அளவிற்குத் தான் பிரான்சு தேசத்து கலைஞனின் கற்பனை சொல்லு கிறது.
ஆனால் இதே கற்பனையைத் தொடர்ந்து நான் ஒரு கதை சொல்லக்கூடும். இப்படிப் பூமியிலே வந்து நிலைத்த மனிதனும் பெண்ணும் தங்களைப் படைத்த தலைவன் அறிய முற்படுகிறார்கள். மனிதன் சொல்கிறான் அந்த இறை ஆண்மகனாகத்தான் இருக்கிறான் என்று. பெண் சொல்லுகிறாள்: இல்லை, அந்தப் பரம்பொருள் பெண்மணியாகத்தான் இருக்கிறாள் என்று.
இருவருடைய விவாதமும் தீர்ந்தபாடாக இல்லை; கடைசியிலே இருவருக்கும் பிறக்கிறான் ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளை வளர்ந்து பெரியவன் ஆகிறான். அவனிடமே கேட்கிறார்கள், இந்த மனிதனும் மனுஷியும். ‘அவர்களை எல்லாம் படைத்த கடவுளின் திருவுரு’ எது என்று, அவன் சொல்கிறான் ‘அவள் தாயாக இருக்கிறாள்’ என்று. விளக்கம் கேட்டபோது மேலும் கூறுகிறான், ‘இறையினிடத் திலே ஆண்மையுமில்லை, பெண்மையுமில்லை தாய்மைதான் நிறைந்திருக்கிறது’ என்று. உண்மை தானே, அந்த மகன் கண்ட கண்கண்ட தெய்வம் தாய்தானே. அந்தத் தாய் சுட்டிக்காட்டிய பின் தானே தந்தயையே அறிந்து கொள்கிறான். அன்னை யிடம் பெற்ற அன்பால் வளருகிற பிள்ளை, தந்தையிடம் அறிவைப் பெறுகிறான். அன்பைச் சொரிபவளாக அம்மையும், அறிவை வளர்ப்பவனாக அப்பனும் அமைகிறார்கள். அதனால்தான் – கடவுளை மனிதன் முதன் முதல் வழிபடத் தெரிந்தது தாய் உருவில்தான்.
பால் நினைந்து ஊட்டும் தாயின் அன்பைப் பாடிய மணிவாசகர் கசிந்து கசிந்து மேலும் மேலும் இறைவன் அருளை
தாயாய் முலையைத் தருவானே
தாராது ஒழிந்தால், சவளையாய்
நாயேன் கழிந்து போவேனோ
என்று உள்ளம் உருகப் பாடுகிறார்.
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய்
உடன் தோன்றும் இறைவனை
தாயவன்காண், உலகிற்கு
தன்னொப்பில்லாத தத்துவன்காண்
என்று அப்பர் பாடி மகிழ்கிறார். இப்படித் தாயான தத்துவனாகவே, இறை வழிபாடு மனிதன் உள்ளத்தில் எழுந்திருக்கிறது.
பேசரிய உயிரையெலாம் பெற்று,
நோக்கி, பெரும் போகம் அவை
அளித்து பிறப்பினையும் ஒழித்திட்டு
ஆசு அகலும் அடியர் உளத்து அப்பனுடன்
இருக்கும் அன்னையைக்
கண்டு தொழாத கலைஞன் இல்லை
கசிந்து பாடாத கவிஞன் இல்லை.
இந்த உலகிலே பிறந்த மனிதன் முதலில் உண்ணத் தெரிந்திருக்கிறான். பிறகு உடுக்கத் தெரிந் திருக்கிறான். பின்னால் இருக்க, படுக்க இடம் தேடி இருக்கிறான். உண்டு. உடுத்து, இருந்த மனிதன் தன் வாழ்வு இதனால் மட்டும் நிறைவு பெறவில்லை என்று எண்ணியிருக்கிறான். அப்படி வாழ்பவன், இன்பத்திற்காக ஏங்குகின்ற மனிதன் ஓங்கி உயர்ந்த மலையைக் கண்டு, அதனுடைய அழகை, காம்பீரியத்தை கண்டு அதிசயித்து நின்றிருக்கிறான். அகன்று பரந்த கடலைக் கண்டு அந்தக் கடலில் விளையும் முத்தையும் பவளத்தையும் பார்த்து, அந்தக் கடல் அலை எழுப்பும் இன்னிசையைக் கேட்டு தன் வயம் இழந் திருக்கிறான். முன்னமே இறையைத் தாய்மை உருவிலே கண்டு தொழக் கற்ற இந்த மனிதன், மலையையும் அலையையுமே உருவகப்படுத்தி, மலை மகளாக, அலைமகளாக அந்த அன்னையை நினைத் திருக்கிறான். இந்த மலை மூலமாக அலை மூலமாக ஆரம்பித்த அன்னை வழிபாடு, அவன் உள்ளத்தில் எழுந்த அழகுணர்ச்சி காரணமாக அந்த அன்னையையே உலகிற்கு அன்போடு அறிவையும் நல்கும் நல்ல கலைமகளாகவும் உருவகப்படுத்தி யிருக்கிறது. இப்படித்தான், மலைமகள் அலைமகள், கலைமகளாக அன்னை அவன் எண்ணத்தில் தோன்றியிருக்கிறாள். இப்படி மூன்று அன்னையரை உருவாக்கிய அவன் மூவரையும் ஒருவராகவே காணும் பேற்றுக்குத் தவங் கிடந்திருக்கிறான். இப்படி மூவரும் ஓருருவாய் இணைந்து நிற்கும் அன்னையே தேவர் மூவர்க்கும் முதற்பொருள்; அவர்கள் செய்யும் முத்தொழிலுக்கும் அடிகோலுபவள். அவளே பராசக்தி என்றெல்லாம் எண்ணி யிருக்கிறான். இப்படி எண்ணியவன் உள்ளத்திலே.
மூவர்க்கும் முதற்பொருளாய்
முத் தொழிலிற்கும் வித்தாகி
நாவிற்கும், மனத்திற்கும்,
நாடறிய பேரறிவாய்
தேவர்க்கும், முனிவர்க்கும்,
சித்தர்க்கும், நாகர்க்கும்
யாவர்க்கும் தாயாகும்
எழிற்பரையை வணங்குவாம்
என்ற பாடல் எழுந்திருக்கிறது. இந்தப் பராசக்தி தான் எண்ணற்ற திருப்பெயர்களோடு, எழில் நிறைந்த எத்தனை எத்தனையோ திருவுருவங்களில் எல்லாக் கோயில்களிலும் காட்சி கொடுக்கிறாள் இன்று. சில தலங்களில் அழகொழுகும் கன்னிப் பெண்ணாக, சில இடங்களில் அழுகொழுகும் கருணை வடிவாக எல்லாம் அவளைக் காண்கிறோம். கன்னிப் பெண்ணாக, கட்டழகியாக, ஆட்சி புரியும் அரசியாக. அன்புடைய தெய்வமாக எல்லாம் நின்று நமக்கு அருள்புரிபவள்தான் அன்னை மீனாக்ஷி. அதனால்தான் இங்கு அவளுக்கு முதலிடம் கொடுத்திருக்கிறோம். அந்த அன்னையைப் போன்ற தேவியர் பலர் பிரசித்த மானவர்கள். அவர்களில் ஒரு சிலர்தான் இங்கு இடம் பெறுகிறார்கள். இடம் பெறாதவர்கள் எல்லாம் அற்ப சொற்பமானவர்கள் அல்ல. அண்ணாமலையில் உள்ள உண்ணாமுலையும், ஆரூர் கமலாம்பிகையும், ஐயாற்று அறம் வளர்த்தாளும், கழுக்குன்றத்து திரிபுரசுந்தரியும், தஞ்சைப் பெரிய நாயகியும் பிரபலமானவர்கள் மாத் திரம் அல்ல வேண்டுவார் வேண்டுவன எல்லாம் அளித்துக் காக்கும் அன்னையர். அவர்களைக் கண்டு தொழும்பேறு எல்லோர்க்கும் வாய்க்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
பொங்குருச் செல்வம் கல்வி
பொருவிலா வாய்மை தூய்மை
இங்கு எமக்கு அருளவல்ல
இணையிலா எம்பிராட்டி
பங்கயத் தடஞ்சூழ் கூடல்
பவளமால் வரையை நீங்கா
அங்கயற் கண்ணி மங்கை
அடிக் கமலங்கள் போற்றி
-வேம்பத்தூரார்


