
யமனது எச்சரிக்கை
உலகில் பிறந்தவர்கள் யாவரும் இறந்துபோவார்கள். உடம்பைக் காய கற்பத்தால் நீண்ட காலம் உறுதியாக இருக்கும்படி செய்து வாழ்கிறவர்களும் ஏதேனும் ஒரு நாள் இறந்தே போவார்கள். இந்த உலகமே ஒரு காலத்தில் உருக்குலைந்து அழியும் என்றால், ஐம்பூதங்களின் சேர்க்கையால் உண்டான உடம்பு எப்போதுமே அழியாமல் இருக்கும் என்று சொல்லலாமா?
உயிரும் உடம்பும் கூடித் தோன்றுவதைப் பிறப்பு என்றும், உடம்பினின்றும் உயிர் பிரிவதை இறப்பு என்றும் சொல்கிறோம். உடம்பையும் உயிரையும் ஒன்று சேர்க்கும் வேலையைச் செய்கிறவன் பிரமன். ஒரு தனித்தலைவனாகிய இறைவன் ஆணையினால் எல்லாம் நிகழுமானாலும், அந்த ஆணையின் கருவிகளாக நின்று தொழில்புரிபவர் பலர். அவர்களே தேவர்கள். அரசாங்கத் தலைவர் ஒருவர் இருந்தாலும் அவர் ஆணைப்படி பல மந்திரிகளும் ஒவ்வொரு மந்திரியின் கீழும் பல அதிகாரிகளும் இருக்கிறார்கள். அரசாங்க அலுவல்களைப் பல பகுதிகளாகப் பிரித்து, இன்ன இன்ன பகுதிகளை இன்ன இன்ன அமைச்சர் பொறுப்பு ஏற்று நடத்த வேண்டும் என்று வரையறை செய்து கொண்டு, ஆட்சியை நடத்துகிறார்கள். உலகத்து அரசாட்சிக்கு மூல காரணமாக இருப்பது இறைவனுடைய அருளாணை.
அந்த ஆட்சிமுறை பல பகுதிகளாகப் பிரியும். ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு தேவருடைய பொறுப்பில் இருக்கும். படைப்பு என்னும் பகுதிக்குத் தலைவன் பிரமன். உயிரை உடம்பினின்றும் பிரிக்கும் வேலை யமனுக்கு உரியது. உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்துவதனால் கூற்றுவன் என்றும், உயிரைப் பிரிக்கும் காலம் அறிந்து பிரிப்பதனால் காலன் என்றும். இந்தக் கடமையை வழுவாது செய்வதால் தர்மராஜன் என்றும் அவனுக்குப் பெயர் வழங்கும். அவனுக்கு ஏவலர் பலர் உண்டு. கணக்குப் பிள்ளை கூட இருக்கிறான்; சித்திரபுத்திரன் என்பது அவன் பெயர். படைக்கும் தொழிலைப் போல உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் தொழிலும் மிகவும் கடுமையானது; பொறுப்பு வாய்ந்தது.
மரணம் என்றால் எல்லோருக்கும் அச்சம் உண்டாகும். “சாதலின் இன்னாதது இல்லை” என்று வள்ளுவர் சொல்கிறார். மரணத்துன்பம் கொடியதிலும் கொடியது. அதை நிகழ்த்துகிறவனும் அச்சந்தரும் தோற்றமுள்ளவனாக இருக்கிறான், மரணம் அச்சந்தருவதானால் மரணதேவனும் பயங்கர சொரூபியாகத்தானே இருக்கவேண்டும்? அந்த யமன் தன்னைக் காட்டிலும் பயங்கர உருவத்தை உடைய தூதர்கள் பலரை வைத்து வேலை வாங்கித் தன் உத்தியோகத்தை நடத்தி வருகிறான்.
உலகில் பிறக்கிறவர்கள் யாவரும் இறக்கிறார்கள்; அவர்களுடைய உடம்பினின்றும் உயிர்கள் பிரிகின்றன. அத்தனை பேருக்கும் மரணம் சம்பவிக்கிறது. ஆனால் யமனுடைய தூதுவர்களுக்கு வேலை வைக்காத மரணங்கள் சில நிகழ்வது உண்டு. அதைப் பற்றிச் சற்று இங்கே கவனிக்கலாம்,
ஓர் ஊரில் சிறைச்சாலை ஒன்று இருக்கிறது. அந்தச் சிறைச்சாலையில் பலவகையான குற்றவாளிகள் அடைபட்டிருக்கிறார்கள். அவர்களில் நல்லவர்களும் சிலர் இருக்கிறார்கள். சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்ற தொண்டர்களைப் போன்றவர்கள் அவர்கள். அவர்களை மற்றக் குற்றவாளிகளோடு சேர்த்து எண்ணலாமா? ஆனாலும் எல்லோரும் ஒரே சிறையில்தான் இருக் கிறார்கள்.
அந்தச் சிறையில் எல்லோரும் எப்போதுமே இருப்பதில்லை. அதிலிருந்து பழைய குற்றவாளிகள் வெளியே செல்வார்கள்; புதியவர்கள் வருவார்கள்.
வெளியே செல்பவர்கள் யாவரும் ஒரே வகையினர் அல்ல. ஒருவர் உள்ளிருந்து வெளியே வருகிறார். அவரை அழைத்துச் செல்ல மாலையுடன் சில நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு அன்று விடுதலை. அதுவரையில் அநுபவித்த சிறை வாழ்க்கை இனி அவருக்கு இல்லை. அன்றே மற்றொருவனும் அந்தச் சிறையிலிருந்து வெளி வருகிறான். ஆனால் அவனைப் போலீஸ் சேவகர்கள் பாதுகாக்கிறார்கள். அவர்களே சிறையினின்றும் அவனை அழைத்துச் செல்கிறார்கள். எங்கே? அவனை வேறு ஒரு சிறைக்குக் கொண்டு போய் அங்குள்ள காவலரிடம் ஒப்பித்துவிடுகிறார்கள். சிறையிலிருந்து புறத்தே வந்த இருவரில் ஒருவர் விடுதலை பெற்று அன்பர்களுடைய துணையோடு நேரே வீடு செல்கிறார். மற்றவனோ ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்குப் போலீஸ் காவலோடு போகிறான். அந்தச் சிறையினின்றும் நீங்கிச் செல்வதில் இரண்டு பேரும் ஒத்தவர்களா னாலும், சென்று சேரும் இடம், அழைத்துச் செல்வோர் ஆகிய திறத்தில் மாறுபாடு இருக்கிறது.
உலகில் வாழும் உயிர்கள் உடலென்னும் சிறையில் துன்பத்தை அனுபவிக்கின்றன. புண்ணியம் பாவம் என்னும் இரண்டு காரணங்களால் இந்தச் சிறைவாசம் நேர்கிறது.
‘ஏழையின் இரட்டைவினை யாயதோர் உடற்சிறை’ என்பார் அருணகிரிநாதர்.
இந்தச் சிறையிலே வாழ்ந்த காலத்தில் நல்ல நடத்தையுடன் இருந்தால், இனி உடம்பிலே புகாத விடுதலை கிடைக்கும். அத்தகையவர்களை இறைவனோடுள்ள சிவகணத்தினர் வந்து நேரே இன்ப நிலையமாகிய வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். செய்ய வேண்டியவற்றைச் செய்யாது, கழிக்க வேண்டிய சிறைவாச காலத்தில் பின்னும் புதிய குற்றங்களைச் செய்தவர்களுக் குப் போலீஸ் காவலோடு சிறை மாற்றம் ஏற்படுவது போல, பலருக்கு மரணம் உண்டானால் அடுத்தபடி வேறு பிறப்பு ஏற்படுகிறது; வேறு உடம்பிற் புகுந்து மீட்டும் உலக வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள்.
இறைவனுடைய அருள்பெற்ற பக்தர்கள், ஞானிகள் மரணம் அடைந்தாலும் அதை மரணம் என்று சொல்வது வழக்கமன்று; இறைவன் திருவடி அடைந்தார்கள், பரிபூரணம் எய்தினார்கள் என்றே சொல்வார்கள். அவர்களுக்கு இப்போது சம்பவிக்கும் மரணம் சிறைமாற்றம் அன்று; விடுதலை; நேரே வீட்டையடையச் செய்யும் நிகழ்ச்சி. ஆதலால் அதை மரணம் என்று கூறுவதைவிட விடுதலை என்று சொல்வதுதான் பொருத்தம்; விதேகமுத்தி அடைந்தார்கள் என்று சொல்வதும் அதனால்தான். மற்றவர்களோ, தாங்கள் செய்த வினைக்கு ஏற்ப வேறொரு சிறையாகிய உடம்புக்குள் புகுகிறார்கள்.
சிறையிலிருந்து இன்று யார் யார் வெளி வருகிறார்கள் என்ற கணக்கைப் போலீஸ்காரர்கள் தெரிந்துகொள்கிறார்கள். சிறைமாற்றம் யாருக்கு விதித்திருக்கிறதோ அவர்களை மாத்திரம் தம்முடைய காவலுக்குள் வைத்துக் கூட்டிச் செல்கிறார்கள். விடுதலை அடைகிறவர் பக்கத்தில் போவதில்லை. அவர்களை அழைத்துச் செல்லத்தான் நண்பர்கள் வந்திருக்கிறார்களே!
போலீஸ் தலைவர் தம் கீழ் வேலை பார்க்கும் போலீஸ் சேவகர்களைப் பார்த்து, “நீங்கள் எல்லோரையும் ஒரே தரமாக எண்ணி உங்கள் உருட்டல் மிரட்டல்களைக் காட்டாதீர்கள். தேச சேவைக்காகச் சிறைக்குப் போய் விடுதலை பெறும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெளிவந்தால் கும்பிடு போட்டு வழிவிட்டுத் தூரத்தில் நில்லுங்கள்” என்று சொல்லும் சந்தர்ப்பம் கூட உண்டு. போலீஸ் தலைவர் சொல்லுகிறாரோ இல்லையோ, யமன் தன் தூதர் களிடம் இது போன்ற எச்சரிக்கையைச் செய்வதாக நக்கீரர் பாடுகிறார்.
அவர்களைப் பற்றிச் சொல்ல வாயெடுக்கும்போது யமன் கைகள் தாமே குவிகின்றன. நேரே அவர்களை அவன் பார்க்கவில்லை. ஆயினும் அவர்களுடைய பெருமை அப்படிச் செய்கிறது. அந்த நமனே தொழும் தன்மையுடையவர்கள் இறைவனுடைய பக்தர்கள்.
“என்ன இவர் இப்படிக் கும்பிடு போடுகிறாரே! யாரைப் பார்த்து?” என்று திகைக்கிறார்கள் கால தூதுவர்கள்.
யமன் பேசத்தொடங்குகிறான்: “தூதர்களே! உடம்பை விட்டுச் செல்கின்ற உயிர்கள் எல்லாவற்றையுமே நம்முடைய காவலுக்கு உட்படுத்த வேண்டும் என்று எண்ணாதீர்கள். தெரியாமல் ஒரு பக்தனைப் பிடிக்கப் போய் உதைபட்டவன் நான் அந்த நினைவினால் சொல்கிறேன். குற்றமில்லாத புகழையுடைய காளத்திப் பெருமானிடத்தில் அன்புடைய பக்தர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் விழிப்பாயிருங்கள். அவர்களைக் கண்டால் பணிந்து விலகிப் போங்கள். அவர்கள் விடுதலை யடையும் நேரம் நமக்குத் தெரிந்தாலும் நமக்கு அவர்களிடம் வேலையில்லை. எத்தனை தூரம் அவர்களை விட்டு விலகி நிற்க முடியுமோ அத்தனை தூரம் அகல நில்லுங்கள். அவர்கள் கண்ணில் நீங்கள் படக்கூடாது. இதை உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”
தொழுது நமனும் தன் தூதுவர்க்குச் சொல்லும்,
“வழுவில்சீர்க் காளத்தி மன்னன்-பழுதிலாப்
பத்தர்களைக் கண்டால் பணிந்து அகலப்
போமின்கள் எத்தனையும் சேய்த்தாக ” என்று.
நமனும் சிவ பக்தர்களை நினைந்து தொழுது தன் தூதர்களைப் பார்த்து, ‘குற்றம் அற்ற புகழை யுடைய திருக்காளத்தியிலுள்ள இறைவனுடைய குற்றம் இல்லாத பக்தர்களைக் கண்டால் வணங்கி எத்தனை தூரமானாலும் அகன்று சொல்லுங்கள்” என்று சொல்வான்.
தொழுது-பக்தர்களைத் தொழுது.நமன் -யமன்; உம்மை, உயர்வு சிறப்பு. சொல்லும் -சொல்வான். என்று சொல்லும் எனக் கூட்டுக. வழு-குற்றம். பழுது-இழுக்கு. போமின்கள் – போங்கள். எத்தனையும் – உங்களால் இயன்ற அளவுக்கு. சேய்த்தாக தூரமாக.)
இறைவனை வழிபட்டுப் பக்தி செய்தால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழலாம் என்ற உண்மையை ஒரு சிறு நாட கம் போல அமைத்து நக்கீரர் பாடுகிறார். இது கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியில் உள்ள 86 – ஆவது பாட்டு.


