பெருந்தேன் காயகல்பம்

உடம்பை நோயில்லாமல் பல காலம் வாழ வைக்கும் மூலிகைகளும் காயகற்பங்களும் இருக்கின்றன என்று சித்த வைத்தியம் தெரிந்தவர்கள் சொல்வார்கள். அமிர்தத்தை உண்டமையால் தேவர்கள் நோயில்லா உடம்புடையவராகித் தத்தமக்கு வரையறுத்த நாள் முழுவதும் வாழ்கிறார்கள். ஆனால் எந்த மூலிகையைச் சாப்பிட்டாலும், எந்த அமிர்தத்தை நுகர்ந்தாலும் மரணத்தை வெல்ல முடியாது. பன்னூறாண்டுகள் வாழ்ந்திருந்ததாகச் சொல்லும் சித்தர்களும் உடம்பை வீட்டு இறந்தே போனார்கள். பிறப்பு என்ற ஒன்று உண்டென்றால் இறப்பும் உண்டு.

இறவாமல் பிறவாமல் இருக்கும்படி ஏதேனும் மருந்து கிடைத்தால் எப்படி இருக்கும்! இறவாமல் இருப்பது என்பது இந்த உடம்பிலே சந்ததமும் இருந்து வாழ்வது அன்று. உடம்பையே பெறாமல் வாழும் வாழ்க்கை ஒன்று உண்டென்றால், அப்போது பிறப்பு இறப்பு என்னும் இரண்டும் இல்லை யாகும். அந்த நிலையைத்தான் முத்தி என்று சொல்வார்கள்.

பிறந்தவன் எப்போதும் இறக்க வேண்டியதுதான். மரணமில்லா வாழ்க்கை என்று பெரியோர்கள் சொல்வதெல்லாம் இந்த நாற்ற உடம்பை எடுத்தவன் இதிலே சாவாமல் இருப்பதை யன்று. இந்த உடம்பு கழிந்தபின் மீட்டும் உலகிற் பிறந்து இறவாத வாழ்க்கையையே- அப்படிக் குறிக்கிறார்கள். அத்தகைய வாழ்வைப் பெற ஏதாவது மருந்து உண்டா? இருந்தால் ஒரு மண்டலமோ, இரண்டு மண்டலமோ உண்டு நன்மையடையலாமே!

மருந்து உண்டு. ஆனால் மற்ற மருந்துகளை உண்பது போல் உண்பது அன்று அது. அந்த மருந்து கசக்காது; புளிக்காது; இனித்திருக்கும்; மிகமிக இனித்திருக்கும்; தேனைப் போல இனிமையாக இருக்கும்.

தேனை உண்டு ஊனை நீக்க வழி உண்டென்றால் அதை எல்லோருமே எளிதில் பயன்படுத்திக் கொள்ள லாமென்று தோன்றுகிறது. ஆனால் அந்தத் தேனில் மக்களுக்கு நம்பிக்கை பிறப்பதில்லை. கண்ணாலே கண்டு கையாலே வாங்கி நாவினாலே சுவைத்து உண்ணும்படி இருக்கம் வேண்டும்; அப்போது கூட நம் கையில் தானே வந்து விழ வேண்டும். அப்போதுதான் தேனையே நாம் உண்போம். அத்தனை சோம்பல்!

இந்தத் தேனோ நாவினால் சுவைப்பதற்குரியது அன்று. அறிவினால் சுவைப்பது இது. எண்ணி எண்ணிச் சுவைத்து இன்புறுவதற்கு உரியது.

“செய்வதைவிட எண்ணுவது மிகவும் எளிதாயிற்றே!” என்று நினைக்கலாம். நம்பிக்கையும் அன்பும் கொண்டு எண்ணுவது அவ்வளவு எளிதன்று. உள்ளத்தால் அந்தத் தேனை மொண்டு உண்ண வேண்டுமென்று அதை நுகர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அதனால் பயன் பெற்ற பெரியவர் ஒருவர் தம்முடைய அநுபவத்தைச் சொல்கிறார். பட்டினத்துப் பிள்ளையாரே அந்தப் பெரியவர்.

இந்த உடம்பில் இருந்து கொண்டே அவருக்கு உறுதி யான நம்பிக்கை உண்டாகி விட்டது. “வறுமை, நோய், பகை என்பவற்றால் வருந்துகிறோம். எல்லாம் இந்த உடம்பை எடுத்ததனால் உண்டாவன. இனிமேல் இந்த உடம்பே எனக்கு இல்லை” என்று அவர் நம்பினார்.

“நீங்கள் இப்போது எடுத்த உடம்பைக் கழிக்க வேண்டாமா?”

“ஆம்; மற்றவர்களைப் போல மறுபடியும் பிறப்பதற்காக இறப்பது அன்று அது. விடுதலை பெறும் இன்பம் அல்லவா இந்த உடம்பை விடும்போது உண்டாகும்? இறந்தும் பிறந்தும் வருந்தும் வருத்தம் எனக்கு இல்லை.”

வருந்தேன் இறந்தும் பிறந்தும்.

“இறந்த பிறகு பிறக்காமல் இருப்பது இருக்கட்டும். வாழுகின்ற இப்போது உடம்போடு தானே இருக்கிறீர்கள்? ஐம்புலன்களால் அலைப்புண்டு துன்புறும் இயல்புடைய தல்லவா இந்த உடம்பு? பாம்புப் புற்றில் இருக்கும் வரைக்கும் பாம்புக்குப் பயப்பட வேண்டியதுதானே?”

“பாம்பு கடித்தாலும் நஞ்சு ஏறாத மருந்தை உண்டு விட்டால் பாம்பினால் நாம் சாவமாட்டோம். நம் உடம்பிற் புகுந்த நஞ்சு செத்துவிடும். புலன்கள் மயக்க அவற்றின் வழியே சென்று பாவங்களை ஈட்டி அதன் விளைவாக நரகம் புகுந்து துன்புறுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.நான் அந்தத் தேனை உண்ட பிறகு இந்த உடம்பில் இருக்கும் போதே என் நிலை மாறிவிட்டது. ஐம்புலன்களின் சேட்டைகள் அடங்கிவிட்டன. அவற்றால் என்னை மயக்க இயலாது. அவற்றின் வழியே நான் சென்று பொருந்த மாட்டேன் ஆதலினால் நரகிலும் புகமாட்டேன்,”

மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன்; நாகிற புகுகின்றிலேன்.

“அவ்வளவு சிறப்பான தேன் எங்கே இருக்கிறது? அதைப்பற்றி யாரும் சொல்லவில்லையே!”

”அந்தத் தேனை அறிந்தவர்கள் புகழ்ந்து சிறப்பித் திருக்கிறார்கள். அன்புடையவர்களுக்கு அந்தத் தேனைப் பற்றிய புகழ் தெரியவரும். நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று ஒட்டாமல் இருப்பவர்கள் அதன் அருகில் இருந்தாலும் அதன் பெருமை தெரியாது.”

“யார் அதைப் புகழ்ந்திருக்கிறார்கள்? அது எங்கே இருக்கிறது?”

அது திருவிடைமருதூர் என்ற தலத்தில் இருக்கிறது; மருத மரத்துக்கடியில் உள்ள பெரிய தேன் அது; புகழ் பெற்ற தேன்.

அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ?

என்று மாணிக்கவாசகர் அதைப் புகழ்ந்திருக்கிறார். அவர் புகழ்ந்திருப்பதைக் கண்டு நான் அந்தத் தேனை அடைந்தேன்; முகந்து கொண்டு உண்டேன்.”

புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு.

அது நாவினாலே உண்ணும் தேனைப் போல இருக்குமா? அதன் சுவை எப்படி இருக்கும்?

“அது இன்னபடி இருக்கும் என்று சுட்டிச் சொல்ல முடியாது. உடம்பெல்லாம் தித்திக்கும்; உளமெல்லாம் தித்திக்கும்; உயிரெல்லாம் தித்திக்கும். அப்படிச் சொன்னாலும் விளங்காது. ஒன்று சொல்லலாம். அதை உண்ட பிறகு வேறு ஒன்றிலும் விருப்பமே உண்டாகவில்லை. புலன்களால் எதை உண்டாலும் அத்தகைய நிறைவு உண்டாவது இல்லை. அதை முகந்து கொண்டு உண்ட பிறகோ ஒரு நிறைவு உண்டாகிவிட்டது. வேறு எதிலும் ஆசை இன்றி இருக்கிறேன்.

பிறிதுஒன்றில் ஆசையின்றி இருந்தேன்.

“நிறைவு உண்டாயிற்று என்றால் இனி எந்தப் பொருளும் உங்களுக்கு வேண்டியது இல்லையா?”

“இதற்கு முன் சிறிய பொருளை யெல்லாம் பிறரிடம் சென்று இரக்கும் நிலை இருந்தது. உலகத்து மக்கள் எல்லோருமே ஒரு வகையில் பிறரிடம் எதையேனும் இரவாமல் வாழமுடியாது. பணம் படைத்தவன் பண்டங்களை யுடையவனிடம் சென்று இரக்க வேண்டியிருக்கிறது. பண்டம் படைத்தவன் பணக்காரனிடம் சென்று, ‘இதை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று இரக்க வேண்டியிருக்கிறது. பலமற்றவன் பலமுள்ளவனிடத்தில் இரக்கிறான். உடற் பலமுடையவன் பணப் பலமுடையவனிடம் இரக்கிறான். இந்தப் பிச்சைக்காரத் தொல்லை எனக்கு இல்லை. இனி யாரிடத்திலும் சென்று எதையும் இரக்கவேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. அந்தத் தேனை உண்டதனால் வந்த உயர் நிலை இது.”

இனிச்சென்று இரவேன்
ஒருவரை யாதொன்றுமே,

இனிமை என்பது புலன்களுக்கு இன்பம் தரும் இயல்பு. நாவுக்கு இனிமை தருவது தேன். மற்றப் புலனுக்கு இனிமை தருவதையும் உருவக வகையால் தேன் என்று சொல்கிறோம். “தேன்போலப் பாட்டு இனிக்கிறது” என்று செவிப் புலனுக்கு இனியதற்குத் தேனை உவமை கூறுகிறோம். இனிமை யென்பதற்கு வேறு சொல் தேன் என்னும் அளவுக்கு வழக்கு வந்துவிட்டது. உள்ளத்துக்கு இனிமை தரும் கவிதையைத் தேன் என்று சொல்வதுண்டு.

“உள்ளத்தால் உண்ணப் படுந்தேனே”

என்பது தமிழ் விடுதூது.

இசையினிமையை அளந்து காட்ட அளவு கோல் இல்லை. கருத்துக்கு இனிக்கும் கவிதையினிமையை அளந்து காட்டவும் இயலாது. ஆனாலும் உருவகம், உவமை என்பவற்றால் அந்த இனிமையைப் புலப்படுத்துவதும் ஓர் அளவு வகைதான். புலனுக்கு இனிமை தருவதையும் கருத்துக்கு இனிமை தருவதையும் தேன் என்று சொல்லுவது போல, உயிருக்கு இனிமை தரும் பொருளையும் தேன் என்று சொல்வது பொருத்தந்தானே? ஆகையால் பட்டினத்துப் பிள்ளையார் உயிருக்கு இன்பந்தரும் சிவபெருமானைத் தேன் என்றார். திருவிடைமருதூரில் இந்த நினைவு உண்டாகவே மருதிலே உள்ள தேன் என்று சொன்னார்.

இறைவனுடைய அருளில் ஊறியவர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லாத முத்தி கிடைக்கும்; இவ்வுடம்பிலே இருந்தாலும் புலன்களை வென்று பாவமில்லாத தூயராக வாழ்வார்கள்; அவர்களுக்கு ஆசை இராது; ஒருவரிடம் சென்று ஒன்றை இரக்கும் அவசியமும் இராது என்ற திரண்ட கருத்தைப் பட்டினத்துப் பிள்ளையார் பாடல் உணர்த்துகிறது.

வருந்தேன் இறந்தும் பிறந்தும்;
மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தேன்; நாகிற் புகுகின்றி
லேன்: புகழ் மாமருதில்
பெருந்தேன் முகந்துகொண்டு உண்டு
பிறிதொன்றில் ஆசை இன்றி
இருந்தேன்; இனிச்சென்று இரவேன்
ஒருவரை யாதொன்றுமே.

[இனி இறந்தும் பிறந்தும் துயரமடையேன்; மயக்குகின்ற ஐம் புலன்களின் வழியிற் சென்று சாரேன்; நரகத்திற் புகேன்; திரு விடை மருதூரில் புகழையுடைய பெரிய மருத மரத்தடியிலுள்ள இறைவனாகிய பெரிய தேனை மொண்டு கொண்டு உண்டு, உள்ள நிறைவு பெற்று வேறு ஒன்றாலும் ஆசை இல்லாமல் இருந்தேன். இப்போது ஒருவரிடம் சென்று யாது ஒன்றையும் இரக்கமாட்டேன்.

புகுகின்றிலேன் – புகுகிறேனில்லை. மருது – மருதமரம்; திரு விடைமருதூரில் உள்ள தலவிருட்சம். அதனடியில் இறைவன் எழுந்தருளியிருக்கிறான். மருது என்பதே திருவிடைமருதூரைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். பிறிது – வேறு.]

திருவிடைமருதூர் சோழநாட்டில் உள்ள தலம். மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட தலங்களில் முக்கிய மானவை மூன்று. வடக்கே ஸ்ரீ சைலம் ஒன்று; அதற்கு மல்லிகார்ஜூனம் என்று பெயர். அர்ஜூனம் என்பது மருதமரத்திற்குப் பெயர். அது மேல் உள்ள மருதூர். தெற்கே திருப்புடை மருதூர் என்று பாண்டி நாட்டில் ஒரு தலம் உண்டு; அதைப் புடார்ஜுனபுரம் என்று வடமொழியில் சொல்வார்கள். அது கீழ் உள்ள மருதூர். நடுவில் இருப்பதனால் இதற்குத் திருவிடைமருதூர் என்ற பெயர் வந்தது. மூன்று மருதூர்களில் இது இடையில் இருப்பது. வடமொழியில் இதற்கு மத்தியார் ஜூனம் என்ற திருநாமம் வழங்கும். இங்குள்ள இறைவன் திருநாமம் மகாலிங்கம். மருதப்பன் என்பதும் ஒரு பெயர். அம்பிகையின் திருநாமம் பெருமுலை நாயகி; பிருகத்குசாம்பிகை என்று வடமொழியில் வழங்கும்.

இந்தப் பாட்டு, திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் மூன்றாவது பாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *