யானைக்கும் கலங்கார்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திருமுறை மகா நாட்டிலே கலந்து கொள்வதற்காகப் போயிருந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த செய்தி இது. மகாநாட்டுக்கு இலங்கையின் கிழக்குப் பகுதியாகிய மட்டக் களப்பில் வாழும் தமிழர்களில் பலர் வந்திருந்தனர். திருக்கோணமலை என்ற சிவத்தலம் அந்தப் பகுதியில்தான் இருக்கிறது. அவர்கள் என்னை மட்டக்களப்புக்கு வந்து பேசவேண்டும் என்று அழைத்தார்கள்; ஒப்புக்கொண்டேன்.

மட்டக்களப்புக்குப் புறப்பட எண்ணிய அன்று அமாவாசை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீர்வேலி என்னும் இடத்தில் கந்தசுவாமி கோயில் ஒன்று உண்டு. அந்தக் கோயில் பூசகராகிய திரு இராசேந்திரக் குருக்கள் என்பவர் என்னிடம் பேரன்புடையார். அவர் வீட்டில் உணவு கொண்டு காரில் புறப்பட்டேன். என்னுடன் யாழ்ப் பாணத்துப் புலவராகிய திரு பொ. கிருஷ்ணப் பிள்ளை என்பவரும் மட்டக்களப்பு அன்பர்களும் வந்தார்கள். அன்பர் கிருஷ்ணப்பிள்ளை நன்றாகப் படித்தவர்: படித்தவர்களிடம் அன்பு கொண்டு அவர்கள் கூறுவதைக் கேட்டு இன்புறுபவர்.

கார் போகும்போது நாங்கள் இலக்கிய சம்பந்தமான பலவற்றைப் பேசிக்கொண்டே போனோம். பகல் பதினொரு மணிக்கு நீர்வேலியிலே புறப்பட்டவர்கள் மாலை ஏழுமணியளவுக்குப் பொலன்னருவா என்ற இடத்தை அடைந்தோம். அதுவரைக்கும் இடையே பல ஊர்களும் நகரங்களும் இருந்தன. அதற்கப்பால் பல மைல்களுக்கு ஒரே காடு. இருமருங்கும் வானளாவிய மரங்கள் சுவர் வைத்தது போல நெருங்கி அடர்ந்திருக்கும். அந்தச் செறிவினிடையே கார் போகும் சாலை ஒரே நேர் கோடாகச் செல்கிறது.

“பொலன்னருவா வந்ததும் எங்கள் காரை ஓட்டி வந்தவர் இரவு இங்கே தங்கி விடியற்காலையில் எழுந்து மட்டக் களப்புக்குப் போகலாமா?” என்று கேட்டார். என்னை அழைக்க வந்தவர்களுக்கு எப்படியாவது அன்று இரவே ஊர் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்று ஆசை. “அங்குள்ளவர்கள். இவர்கள் வருவார்களோ வரமாட்டார்களோ என்று ஐயமுற்று வழி பார்த்திருப்பார்கள். சிரமத்தைப் பாராமல் நேரே மட்டக்களப்புக்குப் போய்விட்டால் அங்கே இளைப்பாறிக் கொள்ளலாம்” என்றார்கள். “அப்படியே செய்யலாமே!” என்று நான் சொன்னேன். பொலன்னருவாவில் சிற்றுண்டி அருந்தி விட்டு மறுபடியும் புறப்பட்டோம்.

தமிழ்ச் செய்யுட்களையும் அவற்றின் நயங்களையும் எடுத்துப் பேசி அளவளாவினோம். கார் காட்டைக் கிழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மெல்ல மெல்லப் பேச்சு முருகனுடைய திருவருளைப் பற்றியதாக மாறியது. அப்போது நான் சில திருப்புகழ்ப் பாக்களைப் பாடினேன். பிறகு கந்தர் அலங்காரப் பாடல்களைச் சொல்லத் தொடங்கினேன். அதற்குமுன் பாட்டும் பொருளும் பேச்சுமாக விரவி வந்தது எங்கள் உரையாடல். அலங்காரப் பாடல்களைச் சொல்லத் தொடங்கிய போது அவை யாவும் நின்றன. நான் உணர்ச்சியோடு பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தேன். உடன் இருந்தவர்கள் அவற்றைக் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அந்த இருளிடையே காட்டுச் செறிவினூடே கார் படுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் அலங்காரப் பாடல்களில் உள்ளத்தைச் சிக்கவிட்டு மற்ற ஒன்றிலும் சிந்தையைப் போக்காமல் அமர்ந்திருந்தோம்.

கார் வரவர வேகமாகப் போவது தெரிந்தது. அதைப் பற்றிச் சிந்திக்கவோ, பேசவோ, அப்போது தோன்றவில்லை.

முருகனுடைய நினைவிலே மிதந்தோம்.

இரவு பத்து மணிக்கு மட்டக்களப்பு வந்து சேர்ந்தோம். அலங்காரப் பாடல்களை இடையீடின்றிப் பாடி வந்தமையால் எனக்கு ஒரு விதமான இன்பக் கிளர்ச்சி உண்டாகியிருந்தது.

மட்டக்களப்பு அன்பர்கள் நான் தங்க வசதியான இடம் ஒன்றைத் திட்டம் செய்திருந்தார்கள். அங்கே இறங்கியவுடன் கை கால் கழுவிக்கொண்டு விபூதிப் பையை எடுத்துத் திருநீறு இட்டுக் கொண்டேன். சொல்லவொண்ணாத ஆனந்தம் உள்ளத்தே நிலவியது.

அப்போது, காரை ஓட்டி வந்தவர் என் அருகே வந்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி எழுந்து, “திருநீறு வேண்டும்” என்று கையை நீட்டினார். “நான் என்ன தம்பிரானா? பண்டார சந்நிதியா? என்னை ஏன் வணங்குகிறீர்கள்?” என்று கேட்டேன், அவர், “உங்கள் கையால் திருநீறு தாருங்கள்: அப்புறம் சொல்கிறேன்” என்றார். நான் திருநீறு தந்துவிட்டு, “என்ன சொல்லப்போகிறீர்கள்?” என்று கேட்டேன்.

“இன்று உங்களால் நாம் எல்லோரும் பிழைத்தோம்” என்றார். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

“ஆம்; முருகன் திருவருள்தான் நம்மைக் காப்பாற்றியது.

“நாம் ஓர் ஆபத்திலும் அகப்பட்டுக் கொள்ளவில்லையே! அப்படியிருக்க நீங்கள் ஏதோ பெரிய விபத்திலிருந்தும் தப்பியது போலப் பேசுகிறீர்களே!”

“இரண்டிடங்களில் ஆபத்து நெருங்கியது” என்று அவர் சொன்னவுடன் எல்லோருமே அவரை நோக்கி,”என்ன, என்ன?” என்று கேட்டார்கள்.

“இப்படி ஏதாவது வரும் என்று எண்ணியே நான் பொலன்னருவாவில் தங்கி வரலாம் என்று சொன்னேன். ஆனால் இவர்களுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு புறப்பட்டு விட்டேன்.”

“என்ன ஆபத்து வந்தது?” என்று யாவரும் சேர்ந்து கேட்டோம்.

“இந்தக் காடுகளில் யானைகள் மிகுதி என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவை இரவிலே சஞ்சாரம் பண்ணும்; ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டுக்குப் போகும். அப்போது அருகில் காரில் யாராவது வந்தால் காரைக் காலாலே தள்ளி நசுக்கிவிடும். அதனால் பெரும்பாலும் இராக் காலங்களில் இந்தச் சாலை வழியே நாங்கள் காரில் போவதில்லை. அப்படிப் போக நேர்ந்தாலும் யானைகள் நடமாடுவது தெரிந்தால் அவை சாலையைக் கடக்கு மட்டும் நெடுந்தூரத்திலேயே காரை நிறுத்தி விளக்கை அவித்து விட்டு வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம். யானைகள் போய்விட்டன என்று தெளிவாகத் தெரிந்த பிறகே காரை நகர்த்துவோம்.”

ஏதோ துப்பறியும் கதையைக் கேட்பது போல நான் அவர் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நான் காரை நாற்பது மைல், ஐம்பது மைல் வேகத்தில் ஓட்டினேன். பிறகு அறுபது, எழுபது, எண்பது என்று முடுக்கினேன். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையோ?” என்றார்.

நாங்கள் கந்தர் அலங்காரத்தில் மூழ்கியிருந்தோம் என்று புலவர் கிருஷ்ணப் பிள்ளை சொன்னார்.

‘நாங்கள் கவனித்தோம்; விரைவில் ஊருக்குப் போவ தற்காக வேகமாக ஓட்டுகிறீர்கள் என்று எண்ணினோம்” என்றார்கள் சில அன்பர்கள்.

இரண்டிடங்களில் யானை வந்தது.

“என்ன! யானையா? நான் பார்க்கவில்லையே!” என்றேன்.

”நாம் பார்க்கும்படி வந்திருந்தால் கார் தப்பியிருக்குமா? அருகில் ஐந்தடி தூரத்தில் காட்டுக்குள் கிளையை ஒடித்துக் கொண்டிருந்தது ஒரு யானை. அது காரின் ஒலியைக் கேட்டுச் சாலைக்கு வந்திருந்தால் ஆபத்து நேர்ந்திருக்கும். அந்த ஓசையைக் கேட்டபோது எனக்குச் சிறிது நடுக்கம் உண்டாயிற்று. பிறகு தைரியம் பெற்று மிக்க வேகமாகக் காரை ஓட்டலானேன்.”

“ஆகவே, உங்கள் சாமர்த்தியத்தால் நாங்கள் தப்பினோம் என்று சொல்லுங்கள்” என்றேன் நான்.

“இல்லை, இல்லை; அதைத்தானே சொல்ல வருகிறேன்! யானை மரத்தை ஓடிக்கும் ஓசையைக் கேட்டவுடன் எனக்கு அச்சம் உண்டாயிற்று; கை நடுக்கமெடுத்தது. அப்போது நீங்கள் முருகனைப் பாடிக்கொண்டிருந்தீர்கள். பாட்டை நானும் கேட்டுக்கொண்டுதான் வந்தேன். அச்சம் உண்டான போது, நீங்கள் உருக்கமாகப் பாடினீர்கள். அதைக் கேட்டு முருகன் காப்பாற்றுவான் என்ற உறுதி உண்டாயிற்று: காரை வேகமாக ஓட்டினேன். ஆனால் சிறிது நேரங்கழித்துப் பின்னும் பெரிய ஆபத்து வந்தது.”

கேட்டுக்கொண்டிருந்த எங்கள் ஆவல் மிகுந்தது.

“இந்த முறை ஆணும் பெண்ணுமாக யானைகள் வந்தன . அதை வாசனையிலிருந்து கண்டு கொள்ளலாம். அவை சேர்ந்திருக்கும்போது சிறிய தடை உண்டானாலும் சும்மா விடுவதில்லை. சாலைக்கு மிகவும் அருகில் அவை இருந்ததை நான் உணர்ந்தேன். அப்போது என் கை மிகுதியாக நடுங்கியது. இப்போது தப்புவது அரிதென்றே எண்ணி விட்டேன். அப்போது…..”

”ஒன்றுமே எங்களுக்குத் தெரியாதே!” என்று அன்பர் ஒருவர் கூறினார்.

“தெரிந்து என்ன செய்ய முடியும்? வீண் கலவரந்தான் உண்டாகும். தெரியாமல் இருந்ததே நல்லது. எனக்கு அப்போது இருந்த நிலையை இப்போது எடுத்துச் சொல்ல முடியாது. அப்போது நீங்கள் சற்றே உரத்த குரலில் பாடினீர்கள். முருகன் திருநாமம் பாட்டில் வந்தது. அது காதில் விழவிழ மறுபடியும் எனக்குத் துணிவு பிறந்தது. காரின் வேகத்தை அதிகமாக்கினேன். அத்தனை வேகத்தில் நான் ஓட்டுவதே இல்லை. ஆபத்திலிருந்து தப்பிவிட்டோம். அதற்குக் காரணம் உங்கள் பாட்டு. என் மனத் தளர்ச்சியையும் உடல் தளர்ச்சியையும் அந்தப் பாட்டுப் போக்கியது” என்று கூறி முடித்தார் காரோட்டி.

உடன் இருந்த அன்பர் ஒருவர், “எதிரே வந்த கார்க்காரரிடம் எலியா என்று ஏதோ சொன்னீர்களே!’ என்று கேட்டார்.

“ஆமாம்; அதைக் கவனித்தீர்களா?காட்டின் கடைசிப் பகுதி வந்தபோது எதிரே ஒரு கார் வந்தது. அது காட்டின் வழியே போவது. அதை ஓட்டியவனிடம் யானை இருக்கிறது என்று எச்சரித்தேன். ‘எலியா’ என்பது சிங்கள மொழியில் “யானையைக் குறிக்கும் சொல்” என்று அவர் விளக்கினார்.

நான் முருகன் திருவருளை நினைந்து உருகினேன்; அதற்கு மேலாக அருணகிரிநாதப் பெருமானுடைய அருள் வாக்கை எண்ணி விம்மிதம் அடைந்தேன். கார் ஓட்டியிடம் பேசலானேன்: “முருகன் அருளால் நாம் ஆபத்திலிருந்து நீங்கினோம் என்று நீங்கள் சொன்னதுதான் உண்மை. அருணகிரி நாதர் திருவாக்கின் பெருமையை இன்று நான் உணர்ந்து கொண்டேன். ஒரு பாட்டின் உண்மைப் பொருளை இன்று தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.”

புலவர் கிருஷ்ணப்பிள்ளை, “என்ன பாட்டு?” என்று ஆவலோடு கேட்டார்.

கந்தர் அலங்காரத்தைப் பாராயணம் செய்தால் இன்ன பயன் கிடைக்கும் என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார். அலங்காரத்தில் ஒரு பாட்டைச் சொன்னாலும் வேந்தரால் பயம் உண்டாகாதாம்; யமனுக்கும் பயப்பட வேண்டாம்; கரடி, புலி, யானைகளுக்கும் பயப்பட வேண்டாம் என்று பாடுகிறார் அருணகிரியார்.

சலங்காணும் வேந்தர் தமக்கும் அஞ்
சார்;யமன் சண்டைக்கஞ்சார்;
துலங்கா நரகக் குழி அணு
கார்துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும்
யானைக்கும்; கந்தன் நன்னூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவி
தான்கற்று அறிந்தவரே

என்பது அந்தப் பாட்டு. “கலங்கார் யானைக்கும் என்பதை இப்போது நன்றாகத் தெளிந்தேன். இதை எந்நாளும் மற வேன்” என்று சொல்லும்போது எனக்கு மேலே பேச வாய் வரவில்லை.

அதுமுதல் கந்தர் அலங்காரம் சொல்லி இந்தப் பயனைத் சொல்லும் போதெல்லாம் என் கண்முன் இலங்கைக் காடும் அதனிடையே காரை ஓட்டிய சாரதியின் தோற்றமும் நிற்கின்றன. அருணகிரியார் வாக்கு உண்மை வாக்கு என்பதில் சிறிதும் ஐயத்துக்கு இடமின்றி, முருகன் திருவருள் தெளியவைத்ததை எண்ணி உருகுகிறேன்.

ஓம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *