திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 971-980 of 1330

பெருமை

Wealth • Miscellaneous
#971
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

Olioruvarku Ulla Verukkai Ilioruvarku
Aqdhirandhu Vaazhdhum Enal

Translation: A heart of courage lives in light Devoid of that one's life is night

Meaning: One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)

மு. வரதராசனார்: ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.
சாலமன் பாப்பையா: ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.
மு. கருணாநிதி: ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்

பெருமை

Wealth • Miscellaneous
#972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa
Seydhozhil Vetrumai Yaan

Translation: All beings are the same in birth But work decides their varied worth

Meaning: All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions

மு. வரதராசனார்: எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
சாலமன் பாப்பையா: எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
மு. கருணாநிதி: பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்

பெருமை

Wealth • Miscellaneous
#973
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

Melirundhum Melallaar Melallar Keezhirundhum
Keezhallaar Keezhal Lavar

Translation: Ignoble high not high they are The noble low not low they fare

Meaning: Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base

மு. வரதராசனார்: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.
சாலமன் பாப்பையா: நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.
மு. கருணாநிதி: பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்

பெருமை

Wealth • Miscellaneous
#974
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

Orumai Makalire Polap Perumaiyum
Thannaiththaan Kontozhukin Untu

Translation: Greatness like woman's chastity Is guarded by self-varacity

Meaning: Exists while to itself is true

மு. வரதராசனார்: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
சாலமன் பாப்பையா: தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.
மு. கருணாநிதி: தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்

பெருமை

Wealth • Miscellaneous
#975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

Perumai Yutaiyavar Aatruvaar Aatrin
Arumai Utaiya Seyal

Translation: Great souls when their will is active Do mighty deeds rare to achieve

Meaning: (Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do)

மு. வரதராசனார்: பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
சாலமன் பாப்பையா: எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர்.
மு. கருணாநிதி: அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்

பெருமை

Wealth • Miscellaneous
#976
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.

Siriyaar Unarchchiyul Illai Periyaaraip
Penikkol Vemennum Nokku

Translation: The petty-natured ones have not The mind to seek and befriend the great

Meaning: It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature

மு. வரதராசனார்: பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
சாலமன் பாப்பையா: பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
மு. கருணாநிதி: பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை

பெருமை

Wealth • Miscellaneous
#977
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

Irappe Purindha Thozhitraam Sirappundhaan
Seeral Lavarkan Patin

Translation: The base with power and opulence Wax with deeds of insolence

Meaning: Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride

மு. வரதராசனார்: சிறப்பு நிலையும் தனக்கு பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்பு மீறிய செயலை உடையதாகும்.
சாலமன் பாப்பையா: பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம்.
மு. கருணாநிதி: சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கை

பெருமை

Wealth • Miscellaneous
#978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

Paniyumaam Endrum Perumai Sirumai
Aniyumaam Thannai Viyandhu

Translation: Greatness bends with modesty Meanness vaunts with vanity

Meaning: The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration

மு. வரதராசனார்: பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.
சாலமன் பாப்பையா: பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.
மு. கருணாநிதி: பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்

பெருமை

Wealth • Miscellaneous
#979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

Perumai Perumidham Inmai Sirumai
Perumidham Oorndhu Vital

Translation: Greatness is free from insolence Littleness swells with that offence

Meaning: Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness

மு. வரதராசனார்: பெருமை பண்பு செருக்கு இல்லாமல் வாழ்தல், சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
சாலமன் பாப்பையா: பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை.
மு. கருணாநிதி: ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்

பெருமை

Wealth • Miscellaneous
#980
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

Atram Maraikkum Perumai Sirumaidhaan
Kutrame Koori Vitum

Translation: Weakness of others greatness screens Smallness defects alone proclaims

Meaning: The great hide the faults of others; the base only divulge them

மு. வரதராசனார்: பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்
சாலமன் பாப்பையா: பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
மு. கருணாநிதி: பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்