திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 941-950 of 1330

மருந்து

Wealth • Friendship
#941
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru

Translation: Wind, bile and phlegm three cause disease So doctors deem it more or less

Meaning: If (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease

மு. வரதராசனார்: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
சாலமன் பாப்பையா: மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
மு. கருணாநிதி: வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்

மருந்து

Wealth • Friendship
#942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin

Translation: After digestion one who feeds His body no medicine needs

Meaning: No medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested

மு. வரதராசனார்: முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா: ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
மு. கருணாநிதி: உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை

மருந்து

Wealth • Friendship
#943
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

Atraal Aravarindhu Unka Aqdhutampu
Petraan Netidhuykkum Aaru

Translation: Eat food to digestive measure Life in body lasts with pleasure

Meaning: If (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul

மு. வரதராசனார்: முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
சாலமன் பாப்பையா: முன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
மு. கருணாநிதி: உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்

மருந்து

Wealth • Friendship
#944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

Atradhu Arindhu Kataippitiththu Maaralla
Thuykka Thuvarap Pasiththu

Translation: Know digestion; with keen appetite Eat what is suitable and right

Meaning: (First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)

மு. வரதராசனார்: முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
சாலமன் பாப்பையா: முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.
மு. கருணாநிதி: உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

மருந்து

Wealth • Friendship
#945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

Maarupaatu Illaadha Unti Maruththunnin
Oorupaatu Illai Uyirkku

Translation: With fasting adjusted food right Cures ills of life and makes you bright

Meaning: There will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable

மு. வரதராசனார்: மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
சாலமன் பாப்பையா: ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
மு. கருணாநிதி: உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை

மருந்து

Wealth • Friendship
#946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi

Translation: Who eats with clean stomach gets health With greedy glutton abides ill-health

Meaning: As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously

மு. வரதராசனார்: குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
சாலமன் பாப்பையா: குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
மு. கருணாநிதி: அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை

மருந்து

Wealth • Friendship
#947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

Theeyala Vandrith Theriyaan Peridhunnin
Noyala Vindrip Patum

Translation: who glut beyond the hunger's fire Suffer from untold diseases here

Meaning: He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)

மு. வரதராசனார்: பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
சாலமன் பாப்பையா: தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
மு. கருணாநிதி: பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்

மருந்து

Wealth • Friendship
#948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Noinaati Noimudhal Naati Adhudhanikkum
Vaainaati Vaaippach Cheyal

Translation: Test disease, its cause and cure And apply remedy that is sure

Meaning: Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)

மு. வரதராசனார்: நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா: நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
மு. கருணாநிதி: நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)

மருந்து

Wealth • Friendship
#949
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal

Translation: Let the skilful doctor note The sickmen, sickness, season and treat

Meaning: The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)

மு. வரதராசனார்: மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா: மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
மு. கருணாநிதி: நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்

மருந்து

Wealth • Friendship
#950
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.

Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru
Appaal Naar Kootre Marundhu

Translation: Patient, doctor, medicine and nurse Are four-fold codes of treating course

Meaning: Medical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions

மு. வரதராசனார்: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா: நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
மு. கருணாநிதி: நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது