திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 861-870 of 1330

பகை மாட்சி

Wealth • Friendship
#861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

Valiyaarkku Maaretral Ompuka Ompaa
Meliyaarmel Meka Pakai

Translation: Turn from strife with foes too strong With the feeble for battle long

Meaning: Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak

மு. வரதராசனார்: தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா: பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
மு. கருணாநிதி: மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்

பகை மாட்சி

Wealth • Friendship
#862
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.

Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan
Enpariyum Edhilaan Thuppu

Translation: Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong?

Meaning: How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?

மு. வரதராசனார்: ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
சாலமன் பாப்பையா: மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?
மு. கருணாநிதி: உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?

பகை மாட்சி

Wealth • Friendship
#863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

Anjum Ariyaan Amaivilan Eekalaan
Thanjam Eliyan Pakaikku

Translation: Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit

Meaning: In the estimation of foes miserably weak is he, who is timid, ignorant, unsociable and niggardly

மு. வரதராசனார்: ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
சாலமன் பாப்பையா: பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.
மு. கருணாநிதி: அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

பகை மாட்சி

Wealth • Friendship
#864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

Neengaan Vekuli Niraiyilan Egngnaandrum
Yaanganum Yaarkkum Elidhu

Translation: The wrathful restive man is prey To any, anywhere any day

Meaning: He who neither refrains from anger nor keeps his secrets will at all times and in all places be easily conquered by all

மு. வரதராசனார்: ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
சாலமன் பாப்பையா: கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.
மு. கருணாநிதி: சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்

பகை மாட்சி

Wealth • Friendship
#865
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.

Vazhinokkaan Vaaippana Seyyaan Pazhinokkaan
Panpilan Patraarkku Inidhu

Translation: Crooked, cruel, tactless and base Any foe can fell him with ease

Meaning: (A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities

மு. வரதராசனார்: ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
சாலமன் பாப்பையா: நீதி நூல்கள் ‌சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
மு. கருணாநிதி: நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்

பகை மாட்சி

Wealth • Friendship
#866
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

Kaanaach Chinaththaan Kazhiperung Kaamaththaan
Penaamai Penap Patum

Translation: Blind in rage and mad in lust To have his hatred is but just

Meaning: Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure

மு. வரதராசனார்: ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.
சாலமன் பாப்பையா: நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.
மு. கருணாநிதி: சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்

பகை மாட்சி

Wealth • Friendship
#867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

Kotuththum Kolalventum Mandra Atuththirundhu
Maanaadha Seyvaan Pakai

Translation: Pay and buy his enmity Who muddles chance with oddity

Meaning: It is indeed necessary to obtain even by purchase the hatred of him who having begun (a work) does what is not conductive (to its accomplishment)

மு. வரதராசனார்: தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா: ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.
மு. கருணாநிதி: தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்

பகை மாட்சி

Wealth • Friendship
#868
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.

Kunanilanaaik Kutram Palavaayin Maatraarkku
Inanilanaam Emaap Putaiththu

Translation: With no virtue but full of vice He loses friends and delights foes

Meaning: He will become friendless who is without (any good) qualities and whose faults are many; (such a character) is a help to (his) foes

மு. வரதராசனார்: ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
சாலமன் பாப்பையா: நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.
மு. கருணாநிதி: குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்

பகை மாட்சி

Wealth • Friendship
#869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa
Anjum Pakaivarp Perin

Translation: The joy of heroes knows no bounds When timid fools are opponents

Meaning: There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid

மு. வரதராசனார்: அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
சாலமன் பாப்பையா: நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.
மு. கருணாநிதி: அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்

பகை மாட்சி

Wealth • Friendship
#870
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

Kallaan Vekulum Siruporul Egngnaandrum
Ollaanai Ollaa Tholi

Translation: Glory's light he will not gain Who fails to fight a fool and win

Meaning: The light (of fame) will never be gained by him who gains not the trifling reputation of having fought an unlearned (foe)

மு. வரதராசனார்: கல்வி கற்காதவனைப் பகைத்துக்கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம் எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.
சாலமன் பாப்பையா: நீதி நூல்களைக் கல்லாதவனைப் பகைப்பதால் கிடைக்கும் பொருள் சிறிது எனினும், அதை விரும்பாத அரசுக்கு ஒருபோது் புகழ் சேராது.
மு. கருணாநிதி: போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்