திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 631-640 of 1330

அமைச்சு

Wealth • Minister of State
#631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

Karuviyum Kaalamum Seykaiyum Seyyum
Aruvinaiyum Maantadhu Amaichchu

Translation: He is minister who chooses Right means, time, mode and rare ventures

Meaning: The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself)

மு. வரதராசனார்: செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா: ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
மு. கருணாநிதி: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்

அமைச்சு

Wealth • Minister of State
#632
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu
Aindhutan Maantadhu Amaichchu

Translation: With these he guards people, -by his Knowledge, firmness and manliness

Meaning: The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,

மு. வரதராசனார்: அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா: செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.
மு. கருணாநிதி: அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்

அமைச்சு

Wealth • Minister of State
#633
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

Piriththalum Penik Kolalum Pirindhaarp
Poruththalum Valla Thamaichchu

Translation: A minister cherishes friends Divides foes and the parted blends

Meaning: The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)

மு. வரதராசனார்: பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா: நாட்டிற்கு நெருக்கடி வரும்போது பகையானவரைப் பிரித்தல், தம்முடன் இருப்பவரைக் கொடையாலும் இன்சொல்லாலும் பிரியாமல் காத்தல், தேவைப்பட்டால் முன்னே நம்முடன் இருந்து பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
மு. கருணாநிதி: அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்

அமைச்சு

Wealth • Minister of State
#634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach
Chollalum Valladhu Amaichchu

Translation: A minister must sift reflect Select and say surely one fact

Meaning: The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity)

மு. வரதராசனார்: (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா: ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
மு. கருணாநிதி: ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்

அமைச்சு

Wealth • Minister of State
#635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun
Thiranarindhaan Therchchith Thunai

Translation: Have him for help who virtue knows Right wisdom speaks, ever apt in acts

Meaning: He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of

மு. வரதராசனார்: அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
சாலமன் பாப்பையா: அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
மு. கருணாநிதி: அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்

அமைச்சு

Wealth • Minister of State
#636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

Madhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam
Yaavula Munnir Pavai

Translation: Which subtler brain can stand before The keen in brain with learned love?

Meaning: What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?

மு. வரதராசனார்: இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா: இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?
மு. கருணாநிதி: நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது

அமைச்சு

Wealth • Minister of State
#637
செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

Seyarkai Arindhak Kataiththum Ulakaththu
Iyarkai Arindhu Seyal

Translation: Albeit you know to act from books Act after knowing world's outlooks

Meaning: Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly

மு. வரதராசனார்: நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையா: பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.
மு. கருணாநிதி: செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்

அமைச்சு

Wealth • Minister of State
#638
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

Arikondru Ariyaan Eninum Urudhi
Uzhaiyirundhaan Kooral Katan

Translation: The man in place must tell the facts Though the ignorant king refutes

Meaning: Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice

மு. வரதராசனார்: அறிவுறுத்துவாரின் அறிவையையும் அழித்துத் தானும் அறியாதவனாக அரசன் இருந்தாலும், அமைச்சன் அவனுக்கு உறுதியானவற்றை எடுத்துக்கூறல் க‌டமையாகும்.
சாலமன் பாப்பையா: அறிந்து சொல்பவர் அறிவையும் மதியாமல், செய்யவேண்டிய வழிகளைத் தாமும் தெரியாமல், ஆட்சியாளர் இருந்தால், அக்குற்றம் கண்டு கோபம் கொள்ளாமல், அஞ்சாமல், அவருக்கு நன்மை தருவதைக் கூற வேண்டியது அமைச்சர் கடமையாகும்.
மு. கருணாநிதி: சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்

அமைச்சு

Wealth • Minister of State
#639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor
Ezhupadhu Koti Urum

Translation: Seventy crores of foes are better Than a minister with mind bitter

Meaning: Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin

மு. வரதராசனார்: தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா: தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.
மு. கருணாநிதி: தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்

அமைச்சு

Wealth • Minister of State
#640
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.

Muraippatach Choozhndhum Mutivilave Seyvar
Thirappaatu Ilaaa Thavar

Translation: The unresolved, though well designed To fulfil an act they have no mind

Meaning: Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright

மு. வரதராசனார்: (செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
சாலமன் பாப்பையா: செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
மு. கருணாநிதி: முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்