திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 541-550 of 1330

செங்கோன்மை

Wealth • Royalty
#541
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

Orndhukan Notaadhu Iraipurindhu Yaarmaattum
Therndhusey Vaqdhe Murai

Translation: Test and attest impartially Consult and act the laws justly

Meaning: To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on,

மு. வரதராசனார்: யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
சாலமன் பாப்பையா: குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.
மு. கருணாநிதி: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்

செங்கோன்மை

Wealth • Royalty
#542
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி.

Vaanokki Vaazhum Ulakellaam Mannavan
Kol Nokki Vaazhung Kuti

Translation: The earth looks up to sky and thrives And mankind to king's rod of justice

Meaning: When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive

மு. வரதராசனார்: உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
சாலமன் பாப்பையா: உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதிர்பார்த்தே வாழ்வர்.
மு. கருணாநிதி: உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது

செங்கோன்மை

Wealth • Royalty
#543
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

Andhanar Noorkum Araththirkum Aadhiyaai
Nindradhu Mannavan Kol

Translation: The Sage's scripture and virtue spring From the sceptre of a stately king

Meaning: The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described

மு. வரதராசனார்: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
சாலமன் பாப்பையா: அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
மு. கருணாநிதி: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்

செங்கோன்மை

Wealth • Royalty
#544
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

Kutidhazheeik Kolochchum Maanila Mannan
Atidhazheei Nirkum Ulaku

Translation: The world clings to the ruler's feet Whose sceptre clasps the people's heart

Meaning: The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love

மு. வரதராசனார்: குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.
சாலமன் பாப்பையா: குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
மு. கருணாநிதி: குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்

செங்கோன்மை

Wealth • Royalty
#545
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

Iyalpulik Kolochchum Mannavan Naatta
Peyalum Vilaiyulum Thokku

Translation: Full rains and yields enrich the land Which is ruled by a righteous hand

Meaning: Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice

மு. வரதராசனார்: நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
சாலமன் பாப்பையா: அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
மு. கருணாநிதி: நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்

செங்கோன்மை

Wealth • Royalty
#546
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

Velandru Vendri Tharuvadhu Mannavan
Koladhooung Kotaa Thenin

Translation: Not the spear but the sceptre straight That brings success to monarch's might

Meaning: It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice

மு. வரதராசனார்: ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
சாலமன் பாப்பையா: ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
மு. கருணாநிதி: ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்

செங்கோன்மை

Wealth • Royalty
#547
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

Iraikaakkum Vaiyakam Ellaam Avanai
Muraikaakkum Muttaach Cheyin

Translation: The king protects the entire earth And justice protects his royal worth

Meaning: The king defends the whole world; and justice, when administered without defect, defends the king

மு. வரதராசனார்: உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா: ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
மு. கருணாநிதி: நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்

செங்கோன்மை

Wealth • Royalty
#548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan
Thanpadhaththaan Thaane Ketum

Translation: Hard of access, the unjust king He shall himself his ruin bring

Meaning: The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace

மு. வரதராசனார்: எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
சாலமன் பாப்பையா: நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.
மு. கருணாநிதி: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்

செங்கோன்மை

Wealth • Royalty
#549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

Kutipurang Kaaththompik Kutram Katidhal
Vatuvandru Vendhan Thozhil

Translation: Save his subjects and chide the wrong Is flawless duty of a king

Meaning: In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime

மு. வரதராசனார்: குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
சாலமன் பாப்பையா: அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
மு. கருணாநிதி: குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்

செங்கோன்மை

Wealth • Royalty
#550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

Kolaiyir Kotiyaarai Vendhoruththal Paingoozh
Kalaikat Tadhanotu Ner

Translation: Killing killers, the king, behold Weeds removes from cropful field

Meaning: For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn

மு. வரதராசனார்: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
சாலமன் பாப்பையா: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
மு. கருணாநிதி: கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்