திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 341-350 of 1330

துறவு

Virtue • Ascetic Virtue
#341
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan

Translation: From what from what a man is free From that, from that his torments flee

Meaning: Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain

மு. வரதராசனார்: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
சாலமன் பாப்பையா: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
மு. கருணாநிதி: ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை

துறவு

Virtue • Ascetic Virtue
#342
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

Ventin Un Taakath Thurakka
Thurandhapin Eentuiyar Paala Pala

Translation: Give up all to gain the True And endless joys shall hence seek you

Meaning: After a man has renounced (all things), there will still be many things in this world (which he may enjoy); if he should desire them, let him, while it is time abandon (the world)

மு. வரதராசனார்: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.
சாலமன் பாப்பையா: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.
மு. கருணாநிதி: ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்

துறவு

Virtue • Ascetic Virtue
#343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

Atalventum Aindhan Pulaththai Vitalventum
Ventiya Vellaam Orungu

Translation: Curb the senses five and renounce The carving desires all at once

Meaning: Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired

மு. வரதராசனார்: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.
சாலமன் பாப்பையா: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
மு. கருணாநிதி: ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்

துறவு

Virtue • Ascetic Virtue
#344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

Iyalpaakum Nonpirkondru Inmai Utaimai
Mayalaakum Matrum Peyarththu

Translation: To have nothing is law of vows Having the least deludes and snares

Meaning: To be altogether destitute is the proper condition of those who perform austerities; if they possess anything, it will change (their resolution) and bring them back to their confused state

மு. வரதராசனார்: தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
சாலமன் பாப்பையா: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.
மு. கருணாநிதி: ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும் ஓன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்

துறவு

Virtue • Ascetic Virtue
#345
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

Matrum Thotarppaatu Evankol Pirapparukkal
Utraarkku Utampum Mikai

Translation: Why add to bonds while this body Is too much for saints to be birth-free

Meaning: What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them)

மு. வரதராசனார்: பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.
சாலமன் பாப்பையா: இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?
மு. கருணாநிதி: பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?

துறவு

Virtue • Ascetic Virtue
#346
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

Yaan Enadhu Ennum Serukku
Aruppaan Vaanorkku Uyarndha Ulakam

Translation: Who curbs the pride of I and mine Gets a world rare for gods to gain

Meaning: Shall enter realms above the powers divine

மு. வரதராசனார்: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
சாலமன் பாப்பையா: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.
மு. கருணாநிதி: யான், எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்

துறவு

Virtue • Ascetic Virtue
#347
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர் க்கு.

Patri Vitaaa Itumpaikal Patrinaip
Patri Vitaaa Thavarkku

Translation: Grief clings on and on to those Who cling to bonds without release

Meaning: Sorrows will never let go their hold of those who give not up their hold of desire

மு. வரதராசனார்: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
சாலமன் பாப்பையா: ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
மு. கருணாநிதி: பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன

துறவு

Virtue • Ascetic Virtue
#348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar

Translation: Who renounce all are free from care Others suffer delusive snare

Meaning: Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births

மு. வரதராசனார்: முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.
சாலமன் பாப்பையா: ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.
மு. கருணாநிதி: அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள் அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்

துறவு

Virtue • Ascetic Virtue
#349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

Patratra Kanne Pirapparukkum Matru
Nilaiyaamai Kaanap Patum

Translation: Bondage cut off, rebirth is off The world then seems instable stuff

Meaning: At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen

மு. வரதராசனார்: இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
சாலமன் பாப்பையா: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
மு. கருணாநிதி: பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்

துறவு

Virtue • Ascetic Virtue
#350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

Patruka Patratraan Patrinai Appatraip
Patruka Patru Vitarku

Translation: Bind Thyself to the unbound one That binding breaks all bonds anon

Meaning: Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire

மு. வரதராசனார்: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா: ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.
மு. கருணாநிதி: எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும் துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்