திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 251-260 of 1330

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan
Engnganam Aalum Arul?

Translation: What graciousness can one command who feeds his flesh by flesh gourmand

Meaning: How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures

மு. வரதராசனார்: தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
சாலமன் பாப்பையா: தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
மு. கருணாநிதி: தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

Porulaatchi Potraadhaarkku Illai Arulaatchi
Aangillai Oondhin Pavarkku

Translation: The thriftless have no property And flesh-eaters have no pity

Meaning: As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh

மு. வரதராசனார்: பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா: பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
மு. கருணாநிதி: பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#253
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

Pataikontaar Nenjampol Nannookkaadhu Ondran
Utalsuvai Untaar Manam

Translation: Who wields a steel is steel-hearted Who tastes body is hard-hearted

Meaning: Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness

மு. வரதராசனார்: ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது.
சாலமன் பாப்பையா: கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
மு. கருணாநிதி: படைக் கருவியைப் பயன்படுத்துவோர் நெஞ்சமும், ஓர் உயிரின் உடலைச் சுவைத்து உண்பவர் நெஞ்சமும், அருளுடைமையைப் போற்றக் கூடியவைகள் அல்ல

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#254
ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.

Arulalladhu Yaadhenin Kollaamai Koral
Porulalladhu Avvoon Thinal

Translation: If merciless it is to kill, To kill and eat is disgraceful

Meaning: If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life)

மு. வரதராசனார்: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
சாலமன் பாப்பையா: இரக்கம் எது என்றால் கொலை செய்யாமல் இருப்பதே; இரக்கம் இல்லாதது எது என்றால் கொலை செய்வதே; பாவம் எது என்றால் இறைச்சியைத் தின்பதே
மு. கருணாநிதி: கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும் எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.

Unnaamai Ulladhu Uyirnilai Oonunna
Annaaththal Seyyaadhu Alaru

Translation: Off with flesh; a life you save The eater hell's mouth shall not waive!

Meaning: Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in)

மு. வரதராசனார்: உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது.
சாலமன் பாப்பையா: இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் உயிர்நிலை இருக்கிறது. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
மு. கருணாநிதி: உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#256
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum
Vilaipporuttaal Oondraruvaa Ril

Translation: None would kill and sell the flesh For eating it if they don't wish

Meaning: If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money

மு. வரதராசனார்: புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.
சாலமன் பாப்பையா: தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.
மு. கருணாநிதி: புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

Unnaamai Ventum Pulaaal Piridhondran
Punnadhu Unarvaarp Perin

Translation: From eating flesh men must abstain If they but feel the being's pain

Meaning: If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it

மு. வரதராசனார்: புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
சாலமன் பாப்பையா: இறைச்சி, இன்னோர் உடம்பின் புண்; அறிந்தவர் அதை உண்ணக்கூடாது.
மு. கருணாநிதி: புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர் அதனை உண்ணாமல் இருக்கவேண்டும்

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#258
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon

Translation: Whose mind from illusion is freed Refuse on lifeless flesh to feed

Meaning: The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal

மு. வரதராசனார்: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
சாலமன் பாப்பையா: பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
மு. கருணாநிதி: மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#259
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

Avisorin Thaayiram Vettalin Ondran
Uyirsekuth Thunnaamai Nandru

Translation: Not to-kill-and-eat, truly Excels thousand pourings of ghee!

Meaning: Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc, in a thousand sacrifices

மு. வரதராசனார்: நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா: (மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.
மு. கருணாநிதி: நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது

புலால் மறுத்தல்

Virtue • Ascetic Virtue
#260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

Kollaan Pulaalai Maruththaanaik Kaikooppi
Ellaa Uyirun Thozhum

Translation: All lives shall lift their palms to him Who eats not flesh nor kills with whim

Meaning: All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh

மு. வரதராசனார்: ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
சாலமன் பாப்பையா: எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
மு. கருணாநிதி: புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்