திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 231-240 of 1330

புகழ்

Virtue • Domestic Virtue
#231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

Eedhal Isaipata Vaazhdhal Adhuvalladhu
Oodhiyam Illai Uyirkku

Translation: They gather fame who freely give The greatest gain for all that live

Meaning: Give to the poor and live with praise There is no greater profit to man than that

மு. வரதராசனார்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா: ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.
மு. கருணாநிதி: கொடைத் தன்மையும், குன்றாத புகழும்தவிர வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது வேறெதுவும் இல்லை

புகழ்

Virtue • Domestic Virtue
#232
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

Uraippaar Uraippavai Ellaam Irappaarkkondru
Eevaarmel Nirkum Pukazh

Translation: The glory of the alms-giver Is praised aloud as popular

Meaning: Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor

மு. வரதராசனார்: புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.
சாலமன் பாப்பையா: சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.
மு. கருணாநிதி: போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்

புகழ்

Virtue • Domestic Virtue
#233
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

Ondraa Ulakaththu Uyarndha Pukazhallaal
Pondraadhu Nirpadhon Ril

Translation: Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!

Meaning: There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness

மு. வரதராசனார்: உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா: தனக்கு இணையில்லாததாய், உயர்ந்ததாய் விளங்கும் புகழே அன்றி, அழியாமல் நிலைத்து நிற்கும் வேறொன்றும் இவ்வுலகத்தில் இல்லை.
மு. கருணாநிதி: ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை

புகழ்

Virtue • Domestic Virtue
#234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku

Translation: From hailing gods heavens will cease To hail the men of lasting praise

Meaning: If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world

மு. வரதராசனார்: நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது..
சாலமன் பாப்பையா: தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌.
மு. கருணாநிதி: இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது

புகழ்

Virtue • Domestic Virtue
#235
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

Naththampol Ketum Uladhaakum Saakkaatum
Viththakark Kallaal Aridhu

Translation: Fame in fall and life in death Are rare but for the soulful worth

Meaning: Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise

மு. வரதராசனார்: புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா: பூத உடம்பின் வறுமையைப் புகழுடம்பின் செல்வமாக்குவதும், பூத உடம்பின் அழிவைப் புகழுடம்பின் அழியாத் தன்மை ஆக்குவதும், பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம்.
மு. கருணாநிதி: துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்

புகழ்

Virtue • Domestic Virtue
#236
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar
Thondralin Thondraamai Nandru

Translation: Be born with fame if birth you want If not of birth you must not vaunt

Meaning: If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born

மு. வரதராசனார்: ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா: பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்‌பதே நல்லது.
மு. கருணாநிதி: எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது

புகழ்

Virtue • Domestic Virtue
#237
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?

Pukazhpata Vaazhaadhaar Thannovaar Thammai
Ikazhvaarai Novadhu Evan?

Translation: Why grieve at those who blame the shame Of those who cannot live in fame?

Meaning: Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability

மு. வரதராசனார்: தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?
சாலமன் பாப்பையா: புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?
மு. கருணாநிதி: உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள், அதற்காகத் தம்மை நொந்து கொள்ள வேண்டுமே தவிரத் தமது செயல்களை இகழ்ந்து பேசுகிறவர்களை நொந்து கொள்வது எதற்காக?

புகழ்

Virtue • Domestic Virtue
#238
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

Vasaiyenpa Vaiyaththaark Kellaam Isaiyennum
Echcham Peraaa Vitin

Translation: To men on earth it is a shame Not to beget the child of fame

Meaning: Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world

மு. வரதராசனார்: தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.
சாலமன் பாப்பையா: புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.
மு. கருணாநிதி: தமக்குப் பிறகும் எஞ்சி நிற்கக் கூடிய புகழைப் பெறாவிட்டால், அது அந்த வாழ்க்கைக்கே வந்த பழியென்று வையம் கூறும்

புகழ்

Virtue • Domestic Virtue
#239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

Vasaiyilaa Vanpayan Kundrum Isaiyilaa
Yaakkai Poruththa Nilam

Translation: The land will shrink in yield if men O'erburden it without renown

Meaning: The ground which supports a body without fame will diminish in its rich produce

மு. வரதராசனார்: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.
சாலமன் பாப்பையா: புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
மு. கருணாநிதி: புகழ் எனப்படும் உயிர் இல்லாத வெறும் மனித உடலைச் சுமந்தால், இந்தப்பூமி நல்ல விளைவில்லாத நிலமாகக் கருதப்படும்

புகழ்

Virtue • Domestic Virtue
#240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya
Vaazhvaare Vaazhaa Thavar

Translation: They live who live without blemish The blameful ones do not flurish

Meaning: Those live who live without disgrace Those who live without fame live not

மு. வரதராசனார்: தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
சாலமன் பாப்பையா: தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
மு. கருணாநிதி: பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்