திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 151-160 of 1330

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Akazhvaaraith Thaangum Nilampolath Thammai
Ikazhvaarp Poruththal Thalai

Translation: As earth bears up with diggers too To bear revilers is prime virtue

Meaning: To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues

மு. வரதராசனார்: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்
சாலமன் பாப்பையா: தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்
மு. கருணாநிதி: தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

Poruththal Irappinai Endrum Adhanai
Maraththal Adhaninum Nandru

Translation: Forgive insults is a good habit Better it is to forget it

Meaning: Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that

மு. வரதராசனார்: வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா: தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
மு. கருணாநிதி: அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#153
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul
Vanmai Matavaarp Porai

Translation: Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength

Meaning: To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might

மு. வரதராசனார்: வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
சாலமன் பாப்பையா: வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது
மு. கருணாநிதி: வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.

Niraiyutaimai Neengaamai Ventin Poraiyutaimai
Potri Yozhukap Patum

Translation: Practice of patient quality Retains intact itegrity

Meaning: If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience

மு. வரதராசனார்: நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
சாலமன் பாப்பையா: சான்றாண்மை நம்மைவிட்டு விலகக்கூடாது என விரும்பினால் பொறுமையைப் பின்பற்றி வாழ வேண்டும்
மு. கருணாநிதி: பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

Oruththaarai Ondraaka Vaiyaare Vaippar
Poruththaaraip Ponpor Podhindhu

Translation: Vengeance is not in esteem held Patience is praised as hidden gold

Meaning: (The wise) will not at all esteem the resentful They will esteem the patient just as the gold which they lay up with care

மு. வரதராசனார்: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால், பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
சாலமன் பாப்பையா: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
மு. கருணாநிதி: தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள் பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

Oruththaarkku Orunaalai Inpam Poruththaarkkup
Pondrun Thunaiyum Pukazh

Translation: Revenge accords but one day's joy Patience carries its praise for aye

Meaning: The pleasure of the resentful continues for a day The praise of the patient will continue until (the final destruction of) the world

மு. வரதராசனார்: தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
சாலமன் பாப்பையா: தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தவர்க்குத் தண்டித்த அன்று மட்டுமே இன்பம்; பொறுத்துக் கொண்டவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் இருக்கும்.
மு. கருணாநிதி: தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும் மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

Thiranalla Tharpirar Seyyinum Nonondhu
Aranalla Seyyaamai Nandru

Translation: Though others cause you wanton pain Grieve not; from unjust harm refrain

Meaning: Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue

மு. வரதராசனார்: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா: கொடியவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், பதிலுக்குத் தானும் செய்தால் அவர் வருந்துவாரே என வருந்தி, அறம் அல்லாதவற்றைச் செய்யாது இருப்பது நல்லது
மு. கருணாநிதி: பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham
Thakudhiyaan Vendru Vital

Translation: By noble forbearance vanquish The proud that have caused you anguish

Meaning: Let a man by patience overcome those who through pride commit excesses

மு. வரதராசனார்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
சாலமன் பாப்பையா: மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
மு. கருணாநிதி: ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai
Innaachchol Norkir Pavar

Translation: More than ascetics they are pure Who bitter tongues meekly endure

Meaning: Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics

மு. வரதராசனார்: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
சாலமன் பாப்பையா: நெறி கடந்து தீய சொற்களால் திட்டுபவரையும் பொறுத்துக் கொள்பவர். இல்வாழ்க்கையில் வாழ்ந்தாலும் துறவியைப் போலத் தூயரே.
மு. கருணாநிதி: எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்

பொறையுடைமை

Virtue • Domestic Virtue
#160
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

Unnaadhu Norpaar Periyar Pirarsollum
Innaachchol Norpaarin Pin

Translation: Who fast are great to do penance Greater are they who bear offence

Meaning: Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others

மு. வரதராசனார்: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
சாலமன் பாப்பையா: பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.
மு. கருணாநிதி: பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள்கூடப் பிறர்கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில் தான் வைத்துப் போற்றப்படுவார்கள்