திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1091-1100 of 1330

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1091
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

Irunokku Ivalunkan Ulladhu Orunokku
Noinokkon Rannoi Marundhu

Translation: Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart

Meaning: There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof

மு. வரதராசனார்: இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
சாலமன் பாப்பையா: இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.
மு. கருணாநிதி: காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

Kankalavu Kollum Sirunokkam Kaamaththil
Sempaakam Andru Peridhu

Translation: Her furtive lightning glance is more Than enjoyment of sexual lore

Meaning: A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace)

மு. வரதராசனார்: கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும்.
சாலமன் பாப்பையா: நான் பார்க்காதபோது, என்னைக் களவாக பார்க்கும் இவளின் சிறு பார்வை, காதலில் சரி பாதி அன்று அதற்கு மேலாம்.
மு. கருணாநிதி: கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

Nokkinaal Nokki Irainjinaal Aqdhaval
Yaappinul Attiya Neer

Translation: She looked; looking bowed her head And love-plant was with water fed

Meaning: She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love

மு. வரதராசனார்: என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
சாலமன் பாப்பையா: நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.
மு. கருணாநிதி: கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal
Thaannokki Mella Nakum

Translation: I look; she droops to earth awhile I turn; she looks with gentle smile

Meaning: When I look, she looks down; when I do not, she looks and smiles gently

மு. வரதராசனார்: யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா: நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.
மு. கருணாநிதி: நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

Kurikkontu Nokkaamai Allaal Orukan
Sirakkaniththaal Pola Nakum

Translation: No direct gaze; a side-long glance She darts at me and smiles askance

Meaning: She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles

மு. வரதராசனார்: என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா: நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.
மு. கருணாநிதி: அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1096
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

Uraaa Thavarpol Solinum Seraaarsol
Ollai Unarap Patum

Translation: Their words at first seem an offence But quick we feel them friendly ones

Meaning: Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood

மு. வரதராசனார்: புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
சாலமன் பாப்பையா: (பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
மு. கருணாநிதி: காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1097
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

Seraaach Chirusollum Setraarpol Nokkum
Uraaarpondru Utraar Kurippu

Translation: Harsh little words; offended looks, Are feigned consenting love-lorn tricks

Meaning: Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers

மு. வரதராசனார்: பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
சாலமன் பாப்பையா: (ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.
மு. கருணாநிதி: பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1098
அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

Asaiyiyarku Untaantor Eeryaan Nokkap
Pasaiyinal Paiya Nakum

Translation: What a grace the slim maid has! As I look she slightly smiles

Meaning: When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me

மு. வரதராசனார்: யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
சாலமன் பாப்பையா: யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.
மு. கருணாநிதி: நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

Edhilaar Polap Podhunokku Nokkudhal
Kaadhalaar Kanne Ula

Translation: Between lovers we do discern A stranger's look of unconcern

Meaning: Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers

மு. வரதராசனார்: புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.
சாலமன் பாப்பையா: முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.
மு. கருணாநிதி: காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்

குறிப்பறிதல்

Love • The Pre-marital love
#1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

Kannotu Kaninai Nokkokkin Vaaichchorkal
Enna Payanum Ila

Translation: The words of mouth are of no use When eye to eye agrees the gaze

Meaning: The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)

மு. வரதராசனார்: கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.
சாலமன் பாப்பையா: காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.
மு. கருணாநிதி: ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன