திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 101-110 of 1330

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

Seyyaamal Seydha Udhavikku Vaiyakamum
Vaanakamum Aatral Aridhu

Translation: Unhelped in turn good help given Exceeds in worth earth and heaven

Meaning: (The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received

மு. வரதராசனார்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.
சாலமன் பாப்பையா: ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது
மு. கருணாநிதி: ``வாராது வந்த மாமணி'' என்பதுபோல், ``செய்யாமற் செய்த உதவி'' என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#102
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Kaalaththi Naarseydha Nandri Siridheninum
Gnaalaththin Maanap Peridhu

Translation: A help rendered in hour of need Though small is greater than the world

Meaning: A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world

மு. வரதராசனார்: உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா: நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்
மு. கருணாநிதி: தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu

Translation: Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects

Meaning: If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea

மு. வரதராசனார்: இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .
சாலமன் பாப்பையா: இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
மு. கருணாநிதி: என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

Thinaiththunai Nandri Seyinum Panaiththunaiyaak
Kolvar Payandheri Vaar

Translation: Help given though millet-small Knowers count its good palm-tree tall

Meaning: Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit

மு. வரதராசனார்: ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.
சாலமன் பாப்பையா: தினை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்
மு. கருணாநிதி: ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#105
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

Udhavi Varaiththandru Udhavi Udhavi
Seyappattaar Saalpin Varaiththu

Translation: A help is not the help's measure It is gainer's worth and pleasure

Meaning: The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure

மு. வரதராசனார்: கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.
சாலமன் பாப்பையா: ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் திரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதியே அதற்கு அளவாகும்.
மு. கருணாநிதி: உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#106
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Maravarka Maasatraar Kenmai Thuravarka
Thunpaththul Thuppaayaar Natpu

Translation: Forget not friendship of the pure Forsake not timely helpers sure

Meaning: Forsake not the friendship of those who have been your staff in adversity Forget not be benevolence of the blameless

மு. வரதராசனார்: குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .
சாலமன் பாப்பையா: உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.
மு. கருணாநிதி: மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#107
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

Ezhumai Ezhupirappum Ulluvar Thangan
Vizhuman Thutaiththavar Natpu

Translation: Through sevenfold births, in memory fares The willing friend who wiped one's tears

Meaning: (The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction

மு. வரதராசனார்: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.
சாலமன் பாப்பையா: தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்
மு. கருணாநிதி: ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

Nandri Marappadhu Nandrandru Nandralladhu
Andre Marappadhu Nandru

Translation: To forget good turns is not good Good it is over wrong not to brood

Meaning: It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted)

மு. வரதராசனார்: ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா: ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
மு. கருணாநிதி: ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#109
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum

Translation: Let deadly harms be forgotten While remembering one good-turn

Meaning: Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred

மு. வரதராசனார்: முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
சாலமன் பாப்பையா: முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.
மு. கருணாநிதி: ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது

செய்ந்நன்றியறிதல்

Virtue • Domestic Virtue
#110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

Ennandri Kondraarkkum Uyvuntaam Uyvillai
Seynnandri Kondra Makarku

Translation: The virtue-killer may be saved Not benefit-killer who is damned

Meaning: He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit

மு. வரதராசனார்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
சாலமன் பாப்பையா: எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை
மு. கருணாநிதி: எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை