திருக்குறள்

வாழ்வியல் வழிகாட்டி மற்றும் உலகப் பொதுமறை

திருக்குறள் என்பது வெறும் ஒரு நூல் மட்டுமல்ல; அது தமிழினத்தின் வாழ்வியல் அடையாளம் மற்றும் உலகப் பொதுமறை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதகுலம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்துக் கொடுத்த வள்ளுவனின் வரிகள், இன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடியதாக உள்ளது.

திருக்குறள் - முழுத்தொகுப்பு

Showing 1031-1040 of 1330

உழவு

Wealth • Miscellaneous
#1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

Suzhandrumerp Pinnadhu Ulakam Adhanaal
Uzhandhum Uzhave Thalai

Translation: Farming though hard is foremost trade Men ply at will but ploughmen lead

Meaning: Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer

மு. வரதராசனார்: உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.
சாலமன் பாப்பையா: உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.
மு. கருணாநிதி: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது

உழவு

Wealth • Miscellaneous
#1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

Uzhuvaar Ulakaththaarkku Aaniaq Thaatraadhu
Ezhuvaarai Ellaam Poruththu

Translation: Tillers are linch-pin of mankind Bearing the rest who cannot tend

Meaning: Agriculturists are (as it were) the linch-pin of the world for they support all other workers who cannot till the soil

மு. வரதராசனார்: உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.
சாலமன் பாப்பையா: உழவுத் தொழிலைச் செய்ய முடியாமல் பிற தொழிலைச் செய்யச் செல்வோர் எல்லாரையும், உழவர்களே தாங்குவதால் அவர்களே இந்த உலகத்தவர்க்கு அச்சாணி ஆவர்.
மு. கருணாநிதி: பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்

உழவு

Wealth • Miscellaneous
#1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

Uzhudhuntu Vaazhvaare Vaazhvaarmar Rellaam
Thozhudhuntu Pinsel Pavar

Translation: They live who live to plough and eat The rest behind them bow and eat

Meaning: They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life

மு. வரதராசனார்: உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.
சாலமன் பாப்பையா: பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.
மு. கருணாநிதி: உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது

உழவு

Wealth • Miscellaneous
#1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar
Alakutai Neezha Lavar

Translation: Who have the shade of cornful crest Under their umbra umbrellas rest

Meaning: Patriotic farmers desire to bring all other states under the control of their own king

மு. வரதராசனார்: நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
சாலமன் பாப்பையா: உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.
மு. கருணாநிதி: பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்

உழவு

Wealth • Miscellaneous
#1035
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

Iravaar Irappaarkkondru Eevar Karavaadhu
Kaiseydhoon Maalai Yavar

Translation: Who till and eat, beg not; nought hide But give to those who are in need

Meaning: Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg

மு. வரதராசனார்: கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.
சாலமன் பாப்பையா: தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.
மு. கருணாநிதி: தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்

உழவு

Wealth • Miscellaneous
#1036
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

Uzhavinaar Kaimmatangin Illai Vizhaivadhooum
Vittemen Paarkkum Nilai

Translation: Should ploughmen sit folding their hands Desire-free monks too suffer wants

Meaning: If the farmer's hands are slackened, even the ascetic state will fail

மு. வரதராசனார்: உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
சாலமன் பாப்பையா: உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தில் நிலைத்து நிற்க முடியாது.
மு. கருணாநிதி: எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்

உழவு

Wealth • Miscellaneous
#1037
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

Thotippuzhudhi Kaqsaa Unakkin Pitiththeruvum
Ventaadhu Saalap Patum

Translation: Moulds dried to quarter-dust ensure Rich crops without handful manure

Meaning: If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure

மு. வரதராசனார்: ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.
சாலமன் பாப்பையா: உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.
மு. கருணாநிதி: ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்

உழவு

Wealth • Miscellaneous
#1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

Erinum Nandraal Eruvitudhal Kattapin
Neerinum Nandradhan Kaappu

Translation: Better manure than plough; then weed; Than irrigating, better guard

Meaning: Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it)

மு. வரதராசனார்: ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.
சாலமன் பாப்பையா: உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.
மு. கருணாநிதி: உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது

உழவு

Wealth • Miscellaneous
#1039
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

Sellaan Kizhavan Iruppin Nilampulandhu
Illaalin Ooti Vitum

Translation: If landsmen sit sans moving about The field like wife will sulk and pout

Meaning: If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure

மு. வரதராசனார்: நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.
சாலமன் பாப்பையா: நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.
மு. கருணாநிதி: உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்

உழவு

Wealth • Miscellaneous
#1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

Ilamendru Asaii Iruppaaraik Kaanin
Nilamennum Nallaal Nakum

Translation: Fair good earth will laugh to see Idlers pleading poverty

Meaning: The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life

மு. வரதராசனார்: எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.
சாலமன் பாப்பையா: நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.
மு. கருணாநிதி: வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்