
சொற்கோயில்
திருப்பாதிரிப்புலியூரிலும் அதற்கு அருகிலும் சில ஜைன சமயத்தவர்கள். வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் வழிபடும் கோயில் ஒன்று அவ்வூரில் இருந்தது. மிகச் சிறிய கோயிலாக இருந்ததனால் அதைப் பெரிதாகக் கட்டவேண்டுமென்று அன்பர்கள் எண்ணினார்கள். கருங்கல்லால் கட்ட இயலவில்லை; போதிய பொருள் இல்லாததுதான் காரணம். ஆகவே செங்கல்லால் கட்டலாம் என்று எண்ணி, அதற்கு வேண்டிய முயற்சியைச் செய்தார்கள்.
அந்த அன்பர் கூட்டத்தில் தொல்காப்பியத் தேவர் என்ற தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் சமரச ஞானம் உடையவர். ஒரு கடவுளே அந்த அந்த மதத்தினருக்கு ஏற்றபடி உருவம் கொண்டு அவர்களுடைய வழிபாட்டை ஏற்றருளுகிறார் என்ற எண்ணம் கொண்டவர்.
ஜைனர்கள் வணங்கும் கடவுளுக்கு அருகன், ஜினன் என்று பெயர். ஜினாலயத்தைக் கட்ட வேறு ஓரிடத்தில் செங்கல் வாங்குவதானால் பொருட் செலவாகும் என்று எண்ணி, செங்கல் அறுத்துச் சூளை வைக்கலாம் என்று அன்பர்கள் தீர்மானித்தனர். ஓரிடத்தில் செங்கல் அறுத்து வந்தார்கள். அந்த இடம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவபெருமான் ஆலயத்தைச் சார்ந்தது. மண்ணை எடுத்துச் செங்கல் அறுப்பதனால் யாருக்கு என்ன நஷ்டம் வரப் போகிறது என்று ஜைனர்கள் எண்ணிவிட்டார்கள். ஆகையால் அவர்கள் சிவாலய அதிகாரிகளிடம் உடம்பாடு பெறவில்லை. அந்தக் காலத்தில் ஊரில் வேறுபாடு இல்லாமல் யாவரும் மனம் ஒன்றுபட்டுப் பழகி வந்தார்கள். தாங்கள் கல் அறுப்பது தெரிந்தாலும் ஆலய அதிகாரிகள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று ஜைனர்கள் நம்பினார்கள். “நல்ல காரியத்துக்குத்தானே நாம் மண் எடுக்கிறோம்? ஒரு மனிதன் தன் வீடு கட்ட உபயோகப்படுத்திக் கொள்வதாக இருந்தால் தவறு. இது பொதுக் காரியந் தானே?” என்பது அவர்கள் எண்ணம்.
ஆனால், நல்ல காரியத்துக்குத்தானே நானூறு தடைகள் வரும்? மக்களுக்குள் சில இழி தகைமையுடைய கயவர்கள் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களால் நல்ல செயல் ஒன்றும் செய்ய இயலாவிட்டாலும், பிறருக்குத் தீங்கு புரிவதிலும் பிறர் செய்யும் நற்செய்கைகளை இடைநின்று தடுப்பதிலும் அவர்கள் தம்முடைய சாமர்த்தியத்தைக் காட்டுவார்கள். இத்தகைய பேர்வழிகளில் ஒருவர் ஜினாலயத்துக்குச் செங்கல் அறுக்கும் வேலை நடைபெறுவதைக் கவனித்தார். தம்முடைய கலகம் மூட்டும் தொண்டுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததென்று மகிழ்ச்சி அடைந்தார். உடனே திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தோன்றாத் துணையீசர் திருக்கோயில் அதிகாரியிடம் சென்றார்.
“வரவரக் காலம் கெட்டுப் கொள்ளைக்காரர்கள் மிகுதியாகி விட்டார்கள்” என்று பேச்சை ஆரம்பித்தார்.
“ஏன்? உங்கள் வீட்டில் ஏதாவது திருட்டுப் போய்விட்டதா?” என்று ஆலய அதிகாரி கேட்டார்.
“என் வீட்டில் திருட்டுப் போனால் உங்களிடம் ஏன் வந்து சொல்கிறேன்? உங்கள் வீட்டில்தான் திருட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது” என்றார் கோள் சொல்லும் கோமான்.
“என்ன ஐயா உளறுகிறீர்? என் வீட்டில் எனக்குத் தெரியாமல் திருட்டுப் போகிறதாவது!”
“உங்கள் வீடு என்றால், நீங்கள் குடியிருக்கும் வீடு என்று எண்ணிக் கொண்டு பேசுகிறீர்கள். உங்கள் பொறுப்பில் இருக்கும் இடங்களெல்லாம் உங்கள் வீட்டைப் போன்றவை என்று நீங்கள் நினைக்க வேண்டாமா?”
‘சொல்லும் செய்தியைத் தெளிவாகச் சொல்லுங்கள். எங்கே எப்பொழுது என்ன நடந்தது?’
“நம்முடைய சிவபிரானுக்குரிய பொருள் திருட்டுப் போனால் அதை நாம் விடலாமா?”
“விடக்கூடாது. ஆலயத்தில் திருட்டுப் போகிறது என்ற செய்தி உமக்கு எப்படிக் கிடைத்தது? அதை மெய்ப்பித்துக் காட்ட முடியுமா?” என்று படபடப்பாகக் கேட்டார் கோயிற் பொறுப்பாளர்.
“ஆலயத்துக்குள்ளே திருட்டு நடக்கவில்லை. தோன்றாத் துணையப்பருக்குச் சொந்தமான பொருள் கோயிலுக்கு வெளியேயும் இருக்கிறதல்லவா? அது திருட்டுப் போகிறது.”
“என்ன பொருள்?”.
“நான் இதைக் கவனித்து வந்து சொல்லுகிறேன். நீங்கள் அதுபற்றிச் சிறிதும் கவலைப்படுபவராகத் தோன்றவில்லை. சிவபெருமானுடைய சொத்தை ஒருவர் திருடினாலும், பிறர் திருடப் பார்த்துக் கொண்டிருந்தாலும் என்ன பயன் உண்டாகும் என்பதை நீங்கள் சிந்திக்கவே இல்லை. நான் சொல்ல வந்தால் அதில் சிறிதும் கருத்து இருப்பவராகக் காட்டிக் கொள்ளவும் இல்லை.”
அதிகாரிக்குச் சிறிது கோபங்கூட வந்தது. ‘சொல்வதைத் தெளிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும். எதற்காக இப்படிச் சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள்? என்ன நடந்ததென்று சுருக்கமாகச் சொல்லுங்கள்; தெளிவாகச் சொல்லுங்கள்” என்றார்.
நம்முடைய தோன்றாத் துணையப்பருடைய நிலத்தில் செங்கல் அறுத்துச் சூளை போட்டு ஜைனர்கள் ஆலயம் கட்டப் போகிறார்களாம். செங்கல் அறுக்கும் வேலை நடந்து கொண்டே இருக் கிறது.
“அதனால் என்ன? கோவில் கட்டத் தானே மண் எடுக்கிறார்கள்? அதனால் என்ன குறை நேரப் போகிறது? செங்கல் அறுப்பதனால் அந்த நிலம் பள்ளமாகும். அது நமக்குத்தானே நல்லது?” என்றார் அதிகாரி
கோள்மூட்டும் மனிதர் அதைக் கேட்டுச் சிரித்தார். “வீட்டிலே பாம்பு வந்து விட்டதே என்றால் வரட்டுமே என்று சொல்பவனைப் போல நீங்கள் பேசுகிறீர்கள். ஜைனர்கள் சைவர்களுக்கு விரோதிகள். சைவத்தை அழிக்க வேண்டுமென்பதே ஜைனர்களுடைய நோக்கம். அத்தகைய பகைவர் களுக்கு நம்முடைய நிலத்தைக் கொடுக்கலாமா?” என்று நியாயம் பேசினார்.
“நிலத்தையா கொடுத்து விட்டோம்? அதில் இருந்த மண்ணைத்தானே எடுத்துக் கொள்கிறார்கள்?”
“நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது. நிலம் என்பது என்ன? மண் தானே? சிவபக்தர்கள், இப்படி ஒரு திருட்டு நடக்கிறது, அதைக் கோயில் அதிகாரி தடுக்கவில்லை என்று தெரிந்து கொண் டார்களானால், நாளைக்கு உங்கள் மேல் பழி வந்து மூளும். அந்த ஜைனர்களுக்கு இது தவறான காரியம் என்று தெரியும். உங்களிடம் சொன்னால் நீங்கள் இடம் கொடுக்க மாட்டீர்கள் என்ற பயம். ஆகையால் திருட்டுத்தனமாக இதைச் செய்கிறார்கள். யோசித்துப் பாருங்கள். அவர்கள் கோயில் கட்டுகிறார்களோ, குளம் கட்டுகிறார்களோ அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். வேறு ஒருவருக்குச் சொந்தமான பொருளை, உடையவரின் அநுமதி இல்லாமல் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்ளலாம்? இது பெரிய குற்றம். மற்றொன்று; நீங்கள் இதைப் பெரிதாக எண்ணவில்லை. உங்களுக்குச் சைவ சமயத்தின் பெருமை தெரியாது. பழைய வரலாறுகளையும் நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. சிவபெருமானிடத்தில் சிறந்த பக்தியுடைய பெரியவர்கள் காதில் இந்தச் செய்தி விழுந்தால், அவர்கள் எத்தனை சினம் கொள்வார்கள், தெரியுமா? கிளிக்குக் கொடுக்கும் பாலைப் பாம்புக்குக் கொடுக்க இவர் யார் என்று உங்களைக் குறை கூறுவார்கள். நாலு பேருக்குத் தெரியாமல் இருக்கும் விஷயம் அல்ல இது. பட்டப் பகலில் கொள்ளை போகிறது போல இந்தத் திருட்டு நடக்கிறது. சிவபெருமான் கோயில் நிலத்தில் இது நடப்பது உங்களுக்குத் தெரியாதே ஒழியப் பல சிவபக்த சிரோமணிகளுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் இந்த அபசாரத்தைத் தடுத்து விடுவீர்கள் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் உங்களைப் பற்றித் தங்களுக்குள் அவதூறாகப் பேசுகிறார்கள். இது என் காதில் விழுந்தது. எனக்கு உங்களிடத்தில் எப்போதுமே அன்பு உண்டு. இதை உங்களுக்குத் தெரிவிப்பது என் கடமை என்று நினைத்துச் சொன்னேன். விஷயம் எல்லை மீறிச் செல்வதற்கு முன் தடை செய்து, சிவபெருமான் நிலத்தையும் உங்கள் பெயரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் சொல்வதைச் சொல்லி விட்டேன். என்னை நீங்கள் வாயடக்கி அனுப்பி விடலாம். ஊர் வாயை மூடமுடியாது. சரி; நான் போய்வருகிறேன்.”- அவர் தீயை மூட்டிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று சொல்வார்கள். கோயில் அதிகாரி குண்டுணிக் கோமான் கூறிய வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்த்தார். தம்மிடம் உடம்பாடு பெறாமல் ஜைனர்கள் செங்கல் அறுப்பது தவறு என்றே உணர்ந்தார். ஊரார் பழி சொல்வார்கள் என்று அவர் எடுத்துக் காட்டினாரே, அதுதான் அதிகாரிக்கு அச்சத்தை உண்டாக்கியது. ஆதலின் ஜைனர்கள் செங்கல் அறுப்பதைத் தடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். கோயில் ஊழியக்காரர்களை அனுப்பி, சிவபெருமானுக்குரிய நிலமாகையால் அங்கு ஜைனர்கள் செங்கல் அறுக்கக்கூடாதென்று தடை செய்யும்படி செய்தார். ஜைனர்கள் தடையை மீறி ஒன்றும் செய்ய இயலவில்லை. முன்பே அநுமதி கேளாமற் போனதை எண்ணி வருந்தினார்கள்.
செங்கல்லை அறுத்துச் சூளைபோட்டு விரைவிலே கோயிலைக் கட்டிவிடலாம் என்று அவர்கள் எண்ணிச் செய்து வந்த காரியம் தடைப்பட்டு விட்டது. ‘இனி என்ன செய்வது?’ என்று சிந்தித்தார்கள். அதுவரையில் சிரமப்பட்டு அறுத்த கற்கள் அந்த இடத்திலே கிடந்தன. இன்னும் சில வாரங்கள் போனால் மழை வந்துவிடும். பட்ட பாடு அவ்வளவும் வீணாகப் போகும்.
தொல்காப்பியத் தேவருக்கு இந்தச் செய்தி தெரிந்தது. அவருடைய தமிழ்ப் புலமை அறிந்தது; நாடு ஊர் அறிந்தது. அவரிடம் ஊரில் உள்ள எல்லோருக்குமே நன்மதிப்பு உண்டு. ஆகவே, ஜைனர்கள் அவரிடம் போனார்கள். “நீங்கள் முயற்சி பண்ணினால் இப்போது வந்திருக்கும் தடை நீங்கிவிடும் என்று தோன்றுகிறது. ஆலய அதிகாரியிடம் நேரே சென்று, நாங்கள் முன்பே அவரிடம் சொல்லாமற் செய்தது பிழை என்று சொல்லிப் பிழை பொறுக்கும்படி வேண்டிக் கொள்ளச் சித்தமாக இருக்கிறோம். எங்கள் வார்த்தைகளைக் கேட்டு அவர் இசைவார் என்பது நிச்சயம் அன்று நீங்களும் வந்தால் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம். எங்கள் வார்த்தைகளைவிட உங்கள் வார்த்தைக்கு எப்போதும் எவ்விடத்திலும் மதிப்பு உண்டு” என்று பணிவாகச் சொன்னார்கள்.
தொல்காப்பியத் தேவர் யோசித்துப் பார்த்தார். பல நாட்களாகச் செய்த வேலை வீணாகி விடுமே என்ற நினைப்பு அவர் மனத்தில் முன்னே நின்றது. அவர் தம்மாலான முயற்சியைச் செய்ய எழுந்தார்.
ஜைன அன்பர்கள் தொல்காப்பியத் தேவரை முன்னிட்டுக் கொண்டு, சிவாலய அதிகாரியிடம் போனார்கள். அதிகாரி புலவரைக் கண்டவுடன் எழுந்து வந்து இனிய மொழிகளைப் பேசி அமரச் செய்தார். ஜைனர்கள் இன்னதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை அதிகாரி ஊகித்துக் கொண்டார்.
” எங்கே அருமையாக வந்தீர்கள்? இத்தனை பேரைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்களே!’ என்று ஆலய அதிகாரி கேட்டார்.
“இவர்கள் ஒரு தவறு செய்துவிட்டார்கள். அதை உங்களிடம் சொல்லிக் குற்றத்தைப் பொறுத் துக் கொள்ளும்படியும், மேலே இவர்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் படியும் உங்களைக் கேட்டுக் கொள்வதற்காக வந்திருக்கிறேன்.”
“அப்படியா!இதற்கு நீங்கள் வரவேண்டும் என்பதில்லையே! இவர்கள் வந்தால் போதாதா? உங்களுக்கு இது சிறிய விஷயம். ஆனால் இவர்களுக்கு இது பெரிய காரியம். நிறைவேற வேண்டு மென்ற கவலை மிகுதியால் நானும் வந்தேன்.”
இரண்டு பேரும் பேசினார்கள். நடந்த காரியத்தை அதிகாரி சொன்னார். நடக்க வேண்டியதைத் தொல்காப்பியத் தேவர் சொன்னார். கடைசியில், “இந்த விஷயத்தில் நான் ஒருவனே முடிவு பண்ணுவதற்கு எனக்கு உரிமை இல்லை. இன்னும் நான்கு பேர்களைக் கேட்டுத்தான் செய்யவேண்டும். சிறந்த புலவர் பெருமானாகிய நீங்கள் வந்திருக்கும் போது உங்கள் வேண்டுகோளைப் புறக்கணிக்கக் கூடாது. மற்றவர்களையும் கலந்துகொண்டு முடிவைத் தெரிவிக்கிறேன்” என்று அதிகாரி சொல்லி அவர்களை அனுப்பினார். குறிப்பிட்ட காலத்தில் வந்து சந்திப் பதாகச் சொல்லித் தொல்காப்பியத் தேவர் விடை பெற்றுக்கொண்டு நண்பர்களுடன் புறப்பட்டார்.
வீட்டுக்குச் சென்ற தொல்காப்பியத் தேவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.’அதிகாரி வேறு நான்கு பேர்களுடன் ஆலோசித்து முடிவு சொல்வதாகச் சொன்னாரே. அவர்கள் செங்கல் அறுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?’ என்ற எண்ணம் அவர் மன அமைதியைக் குலைத்தது. அப்படி அவர்கள் மறுத்தால் அருகக் கடவுளின் கோயில் கட்டாமலே நிற்கவேண்டியதுதானா? முன்பே அறுத்த செங்கல்கள் உழைத்தவர்களுக்குப் பயன் படாமல் வீணாகிப் போவதா? அவர் யோசனை படர்ந்தது.
இறுதியில் ஒரு வழி அவருக்கு உதயமாயிற்று. ‘சிவபெருமானாகவும் அருகனாகவும் திருமாலாகவும் இருக்கிறவர் ஒரே கடவுள்தானே? சிவபெருமானே எங்கும் நிறைந்திருக்கிறார் என்று சைவர்கள் சொல்லிக் கொள்கிறார்களே! அந்தச் சமசர ஞானம் சிலருக்கு இல்லாததனால்தான் வீண் பூசல்கள் நேர்கின்றன. அதை அவர்களுக்கு எடுத்துக் காட்டி அவர் களுடைய இசைவைப் பெறலாம்’ என்று நினைத்தார். பிறகுதான் அவருக்குத் தூக்கம் வந்தது.
குறிப்பிட்ட நாளில் மறுபடியும் தொல்காப்பியத்தேவர் திருக்கோயில் அதிகாரியிடம் சென்றார். புலவர் வருவாரென்று அதிகாரி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் நான்கு அன்பர்கள் இருந்தார்கள்.
தொல்காப்பியத்தேவர் அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்தார். அதிகாரி தமக்குத் துணையாக நான்கு பேர்களை அழைத்து வந்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டார். ‘இவர்கள் நமக்கு இணங்கப் போவதில்லை. அதிகாரி தாமாகச் சொல்ல முடியாதென்று எண்ணி இவர்களையும் கூட்டி வைத்திருக்கிறார்’ என்ற உண்மை அவருக்குத் தெளிவாகிவிட்டது.
புலவர் உள்ளே போய் அமர்ந்தார். எல்லோரும் அவரவர்களின் நலந் தீங்குகளைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் வயசு முதிர்ந்தவராகிய ஒருவர், புலவரவர்களுடைய சொந்த வீட்டுக்காக இருந்தால் செங்கல் அறுக்க மதித்துவிடலாம். ஏதோ பேருக்குச் சிறுதொகையை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் சிவன் கோயில் சொத்தை ஜினன் கோயிலுக்குக் கொடுப்ப தென்பது முறையன்று. தமிழ்நாடு முழுவதிலும் சைவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தலம் சைவ சமய ஆசாரியர்களாலே பாடப் பெற்றது. நெடுந் தூரத்திலிருந்து பல அன்பர்கள் வந்து இந்தக் கோயிலைத் தரிசித்துக் கொண்டு போகிறார்கள். நமக்குள்ளே இருக்கிற ஒற்றுமை அவர்களுக்குத் தெரியாது. ‘அப்பர் சுவாமிகளுக்குத் தீங்கு இயற்றிய ஜைனர்களுக்குச் சிவபெருமான் கோயிற் சொத்தைக் கொடுத்து விட்டார்கள்’ என்று தமிழ் நாட்டில் உள்ள சைவர்களெல்லாம் குறை கூறுவார்கள். ஆகையால் இந்தக் காரியத்தை இதோடு நிறுத்துவதுதான் நல்லது. நீங்கள் நினைத்தால் செங்கல் அறுக்க வேறு இடமா கிடைக்காது?’ என்று நயமாகச் சொன்னார். அவர் படித்தவர். அநுபவத்தில் பழுத்தவர்.
தொல்காப்பியத் தேவர் இந்த மறுப்பை எதிர் பார்த்துத்தானே வந்திருக்கிறார்? அவர் முன்பே தீர்மானித்து வைத்திருந்தபடி இப்போது பேசத் தொடங்கினார்.
“நீங்கள் சொல்லும் நியாயத்தை நான் கேட்டுக் கொண்டேன். நீங்கள் நன்றாகப் படித்தவர்கள். சிவபெருமானுடைய பெருமையை உணர்ந்தவர்கள். நான் ஜைனனாக இருந்தாலும் சைவர்களுக்கு விரோதி அல்ல. சிவபெருமானுடைய புகழைக் கூறும் சமய நூல்களை நன்றாகப் படித்திருக்கிறேன். அதனால் நான் கூறும் நியாயங்களுக்கு நீங்கள் சிறிதே செவி சாய்க்க வேண்டும்” என்று பணிவாகத் தொடங்கினார் புலவர்.
“அப்படியா! சைவ நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஆச்சரியந்தான்” என்று முதியவர் சொன்னார்.
சைவர்கள் தமிழ் நாடு முழுவதும் இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். அது உண்மை தான், அதைக் காட்டிலும் பெரிய உண்மை ஒன்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.
சிவபெருமான் எவ்விடத்திலும் இருக்கிறார் அல்லவா? அவர் உலகமே திருவுருவமாக விளங்குகிறவர். ஐம் பெரும் பூதங்களும் சந்திர சூரியர்களும் உயிரும் அப்பெருமானுடைய திருவுருவங்கள். அதனால் தானே அட்ட மூர்த்தி என்று இறைவனை நூல்கள் சொல்கின்றன? அப்பர் சுவாமிகள்,
இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னய்எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய்அட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர்உருவும் தம்உருவும் தாமே ஆகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடைவடிகள் நின்றவாறே
என்றல்லவா திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்? ‘பிறர் உருவும் தம் முருவும் தாமே ஆகி’ என்று சுவாமிகள் சொல்வதை ஊன்றிக் கவனித்துப் பாருங்கள். அருகக் கடவுள் என்றும் வேறுவகை யாகவும் பிற சமயத்தார் வணங்கும் பிறர் உருவம் அவருடையனவே என்று திருநாவுக்கரசர் சொல்கிறாரே. அதன்படி ஜைனர்கள் கட்டும் கோயிலில் “அருகனாக எழுந்தருளி இருக்கிறவன் சிவபிரான் அல்லவோ?”
முன்னே உட்கார்ந்திருந்த சைவ அன்பர்கள் தேவாரப் பாடலைக் கேட்டு மகிழ்ந்தனர். முதியவரோ, சிவபெருமானுடைய வியாபகத்தைப் புலவர் கூறும் போது மனம் உருகிப் போனார். யாரோ ஒரு சைவர் பிரசங்கம் செய்வது போலத் தோன்றிற்றே ஒழிய, வேறு நினைப்பு அவருக்கு உண்டாகவில்லை. புலவர் மேலும் பேச ஆரம்பித்தார்.
“சிவபெருமானுடைய வியாபகத்தை என்ன வென்று சொல்வது! அவர் திருவாக்குத் தான் வேதம். விசும்பே அவர் திருமேனி. கதிரவன், சந்திரன், அக்கினி என்ற மூன்றுமே அவருடைய கண்கள். இந்த நிலவுலகம் முழுவதும் அப்பெரு மானுடைய திருவடி அவர் உடுத்த சிறப்பான ஆடை எது? உலகைச் சூழ்ந்துள்ள கடல். எட்டுத் திசையும் அவருடைய திருக் கைகள். அவருடைய மூச்சுத்தான் காற்று. எங்குமாகி யாவுமாகி நின் சிவபெருமானை நாம் திருப்பாதிரிப் புலியூர் நாதராக வணங்குகிறோம். இதை எண்ணும் போது நான்கூட அப்பெருமானுடைய பெருமையை நினைந்து பாடினேன்,”
“என்ன, நீங்கள் எங்கள் சிவபெருமானைப் பாடினீர்களா?” என்று திடுக்கிட்டு ஒருவர் கேட்டார்.
“ஆம்; நீங்கள் மறந்து போனதை நான் நினைத்துப் பாடினேன். பாட்டைக் கேளுங்கள்” என்று சொல்லி மெல்ல,
வேதம் மொழி, விசும்பு மேனி, சுடர்விழி,மண்
பாதம், திருப்பா திரிப்புலியூர் – நாதர்
மரமாம் பரமாம் படுகடல், எண் திக்கும்
கரமாம், அவர்க்கு உயிர்ப்பாம் கால்.
[திருப்பாதிரிப்புலியூர் நாதருக்கு வேதமே திருவாக்கு, ஆகாயமே திருமேனி; மூன்று சுடர்களே மூன்று கண்கள்; உலகமே திருவடி; ஒலிக்கின்ற கடலே மேலான ஆடையாம்; எட்டுத் திசையும் திருக்கரங்களாம்; அவருக்கு மூச்சாக இருப்பது காற்று. பரமாம்பரம் பரம் அம்பரம்; மேலான ஆடை உயிர்ப்பு- மூச்சு. கால் -காற்று.]
என்ற பாட்டைச் சொன்னார்.
அதற்கு முன் அவர் சொல்லி வந்த செய்திகளிலே மனத்தைப் பறி கொடுத்து அமர்ந்திருந்த முதியவர், இந்தப் பாட்டைக் கேட்டாரோ இல்லையோ, கடகடவென்று கண்ணீரைப் பெருக்கினார். அவர் உண்மையான பக்தர். “ஆ ஆ! என்ன அழகான பாட்டு! உங்கள் வாக்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது!” என்று பாராட்டினார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணிய தொல்காப்பியத் தேவர் அந்த முதியவரின் உள்ளம் நெகிழ்ந்திருக்கிற அப்போதே மேலும் சில நியாயங்களைச் சொல்லலானார்.
உலக முழுவதையும் திருவடியாக உடைய பெருமானுக்கு இந்தக் கோயில்தான் சொந்தம், இந்த நிலந்தான் சொத்து என்று வரையறுத்து அவனுடைய பெருமைக்கும் அருளாட்சிக்கும் எல்லை கோலலாமா? நினைத்துப் பாருங்கள். நாங்கள் செங்கல் அறுக்கும் இடம் தோன்றாத் துணையப்பருக்குச் சொந்தம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாங்கள் வேறு எங்கே போவது? சிவபெருமானுக்குச் சொந்தமல்லாத இடம் என்று ஒன்றைக் காட்டுங்கள்; அங்கே போகிறோம். உலகப் பரப்பு முழுவதும் அவன் திருவடியாக இருக்கும்போது அதற்குள்ளே இருந்து வாழும் மக்களுக்கு அதற்குப் புறம்பே செல்ல வகை ஏது? வேறு இடம் நீங்கள் நினைத்தால் கிடைக்காதா என்று எளிதாகச் சொன்னீர்கள். சிவபெருமானுக்குச் சொந்தம் அல்லாத இடம் ஒன்று உண்டென்று நீங்கள் கினைக்கிறீர்களா? அப்படியானால் ஒன்றைக் காட்டுங்கள்; நாங்கள் அங்கே போகிறோம். சிவபெருமா வியாபகம் இல்லாத இடமும் உண்டு என்று நீங்கள் சொல்வீர்களா?”
முதியவர், “அப்படிச் சொல்வது அபசாரம்! அபசாரம்!” என்று சொல்லிவிட்டு உடன் இருந்த நண்பர்களின் முகத்தைப் பார்த்தார். பிறகு ஆலய அதிகாரியைப் பார்த்துச் சொல்லலானார். “தொல் காப்பியத்தேவர் சொன்ன அத்தனையும் சாஸ்திர சம்மதமானது. அவர் இவ்வளவு தூரம் சிவபெருமானிடத்தில் ஈடுபட்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ளவே இல்லை. சைவர்கள் என்று பேர் வைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பேர்களை விடச் சிறந்த சைவர் இவர். இவர் வேண்டுகோளை மறுப்பது தவறு. இவர் விருப்பப்படியே இணங்குவது தான் திருவருளுக்குச் சம்மதமாக இருக்கும். அது மாத்திரம் அன்று. இப்போது திருப்பாதிரிப் புலியூர் நாதரைப் பற்றி ஒரு பாடலைச் சொன்னாரே, அந்தப் பாட்டுக்கு விலையாகச் செங்கல் அறுக்கும் நிலத்தையே கொடுத்து விடலாம்; அது சிறிதும் முறையினின்றும் பிறழந்தது ஆகாது…” முதியவர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார்.
தொல்காப்பியத் தேவர் இடைமறித்துப் பேசினார்: “தாங்கள் உண்மையை உணர்ந்து கொண்டது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். சிவபெருமானாக விளங்கும் அருட்கடலே வெவ்வேறு சமயத்தில் உறையும் தெய்வமாக இருக்கிறான் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டவர்கள். இந்த ஒரு பாட்டல்ல, இன்னும் நூறு பாட்டு வேண்டுமானாலும் இறைவனைப் பற்றி நான் பாடுகிறேன்” என்றார்.
“அப்படியா! உண்மையாகவே சொல்கிறீர் களா?” என்று முதியவர் வியப்புத் தாங்காமல் கேட்டார்.
“இதுவரைக்கும் கூறிய செய்திகள் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை இதுவும். நான் நூறு பாட்டையுடைய ஒரு நூலையே பாடி அளிக்கிறேன். இப்போது சொன்ன பாடலும் அதில் இருக்கும்.”
முதியவர் எழுந்தார். தொல்காப்பியத் தேவர் காலில் விழுந்து பணிந்தார்.
“உங்கள் பக்தியை எண்ணி நான் வியப்படைகிறேன். எல்லாம் சிவபெருவான் திருவருள். ஆலய அதிகாரி தடை செய்ததும் நல்லதாகப் போயிற்று. உங்கள் பங்கில் உண்டாகும் லாபத்தைக் காட்டிலும் எங்கள் பங்கில் தான் லாபம் அதிகம். நீங்கள் நூலைப் பாடி நிறைவேற்றுங்கள் “என்றார்.
“மறுபடியும் உங்கள் பங்கு, எங்கள் பங்கு என்று வேறு பிரித்துப் பேசாதீர்கள். எல்லோரும் ஒரே கடவுளுக்கு அடியார்களே !” என்று தொல் காப்பியத் தேவர் கூறிப் புன்முறுவல் பூத்தார்.
செங்கல் அறுக்கும் வேலை மீண்டும் ஆரம்பமாயிற்று. முன்னாலே நினைத்ததை விடப் பின்னும் மிகுதியாகச் செங்கல் அறுத்துச் சூளை போட்டார்கள் ஜைனர்கள். பிறகு ஜினேந்திரனுடைய திருக்கோயிலையும் கட்டினார்கள். அந்தக் கோயில் கட்டி முடிவதற்குள்ளே தொல்காப்பியத் தேவர் திருப் பாதிரிப்புலியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் மேல் நூறு செய்யுட்கள் அடங்கிய கலம்பகம் ஒன்றைப் பாடி முடித்தார். அந்தக் கலம்பகத்தில் “வேதம் மொழி” என்ற பாட்டை இரண்டாவதாக அமைத்தார்.
கலம்பகம் நிறைவேறியவுடன் அதை அரங்கேற்றினார். மிக இனிய பாடல்கள் அடங்கிய அக் கலம்பகத்தைச் சைவர்களும் தமிழன்பர்களும் கேட்டு மகிழ்ந்து பாராட்டினார்கள்.
அரங்கேற்றத்துக்குப் பின் சில நாட்களில் ஜினேந்திரனுடைய திருக் கோயில் கட்டி நிறை வேறியது. கும்பாபிஷேகம் சிறப்பாக நடை பெற்றது. தொல்காப்பியத் தேவரை, “எங்கள் பெருமானுக்கு ஓர் அழகிய செஞ்சொற் கோயில் கட்டி அளித்தார்” என்று சைவர்கள் கொண்டாடினார்கள். “எங்கள் பெருமானுக்கு ஓர் அழகிய செங்கற் கோயில் கட்டி அளித்தார்” என்று ஜைனர்கள் பாராட்டினார்கள்.
ஓம் நம்சிவாய ஓம்


