
எப்படிப் புகழ்வேன்!
கிள்ளிவளவன் சிங்காதனத்தில் வீற்றிருந்தான். அரசவை கூடியிருந்தது. அரசனுடைய சுற்றமாகிய அமைச்சர், படைத் தலைவர் முதலியோரும் புலவரும் பாணரும் பிறரும் அவையில் அமர்ந்திருந்தனர். புலவர்கள் அன்று கிள்ளி வளவனுடைய இயல்புகளைப் பாராட்டிப் பல பாடல்களைப் பாடினார்கள்.
ஒரு புலவர் அவனுடைய ஈகையைச் சிறப்பித்துப் பாடினார். “கற்பகமும் காரும் தோல்வி யுறும்படி ஈந்து உவக்கும் பெரு வண்மை படைத் தவன். யார் எத்தனை முறை வந்தாலும் இல்லை யென்னாமல் உதவும் பெருங் கொடையாளன்” என்று பாராட்டினார். அருகில் இருந்த புலவர்களும் பாணரும் அந்தப் பாடலை நன்றாகக் கேட்டு இன்புற்றனர். அரசனுடைய ஈகையை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். ஆதலின் அரசன் கொடையிற் சிறந்தவன் என்பதை மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் உணர்ந்து சுவைக்க முடிந்தது. புலவர் கூறியது அத்தனையும் உண்மை யென் பதைத் தம்முடைய சிரக் கம்பத்தால் புலப்படுத்தினார்கள். ஈதலால் வரும் இசையைத் தேக்கிக் கொண்டவன் கிள்ளிவளவன் என்பதை அந்தப் பாடலால் புலவர் நிலை நிறுத்தினார்.
அடுத்தபடி வளவனுடைய வீரத்தைப் பாராட்டி மற்றொரு புலவர் ஒரு பாடல் பாடினார். பகைவர்களுக்கு அஞ்சாமல் அவர்களுடைய நாட்டுக்குச் சென்று பொருது அவர்களைப் பணிய வைத்து அவர்கள் இட்ட திறைகளைக் கொண்டு வந்ததையும், அவ்வாறு பணியாத மன்னர்களைப் பொருது அழித் ததையும், புறங்காட்டினவர் அஞ்சினவர் முதலி யவர்களைக் கொல்லாமல் விட்டதையும் பாடினார் அவர். பின்னும் ஒரு புலவர் அவன் செய்த போர்களை வருணித்தார். அவையில் இருந்த படைத் தலைவரும் பிறரும் அரசனுடைய வீரப் புகழைப் பாடும் அந்தப் பாடல்களை மிகுதியாகச் சுவைத்து இன்புற்றனர். கிள்ளிவளவனுக்கு அவற்றைக் கேட்டபோது தோள்கள் பூரித்தன.
சோழனுடைய கொடையையும் வீரத்தையும் பாராட்டிய பிறகு வேறு சிறப்பாகச் சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது? ஆனாலும் மற்றொரு புலவர் புது வகையில் ஒரு பாடலைச் சொன்னார். அதில் கிள்ளிவளவன் குடிமக்களுடைய முறை வீட்டைக் கேட்டு நியாயம் வழங்கும் திறத்தை எடுத்துரைத்தார். சான்றோர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்களுடைய நல்லுரைகளைக் கேட்டுத் தானும் ஆராய்ந்து குற்றம் யாருடைய தென்பதைத் தீர்மானித்துக் குற்றவாளிக்குத் தண்டனையும், துன்புற்றவர்களுக்குக் குறைதீரும் வகையில் ஆறுதலும் பொருளும் அளிக்கும் இயல்பை விரித்துரைத்தார். அறங்கூரவையம் என்ற நியாய சபையில் மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் உரிய சான்றோர்களை நியமித்திருத்தலை அவர் தம் பாடலில் எடுத்து இயம்பினார். அதைக் கேட்டு அரசவையில் இருந்த சான்றோர்கள் யாவரும் மட்டில்லாத மகிழ்ச்சியை அடைந்தனர், “யார்க்கும் இல்லாத புகழ் இது” என்று அவர்கள் பாராட்டினார்கள்.
புலவரும் வீரரும் படைத் தலைவரும் அமைச்சரும் சான்றோரும் பிறரும் அந்த அவையில் கேட்ட பாடல்களில் தங்களுக்கு மிக்க விருப்பமானதைப் பற்றி எண்ணி இன்புற்றனர்.
ஒருவாறு புலவர்கள் தங்கள் கவிகளை யெல்லாம் சொல்லி விட்டார்கள்.இன்னும் யார் என்ன சொல்லப் போகிறார்கள் என்று அவைக்களத்தில் இருந்தவர்கள் ஆவலோடு பார்த்தார்கள். அங்கே ஓரிடத்தில் தனியே பெண்கள் சிலர் அமர்ந்திருந் தார்கள். பாட்டுப் பாடி ஆடும் விறலியர் சிலரும், அரசனுக்கு ஏவல் புரியும் மகளிரும் அங்கே இருந்தார்கள். அவர்களிடையே ஒரு பெண் புலவரும் இருந்தார். மாறோக்கம் என்ற ஊரிலிருந்து வந்தவர் அவர்; நப்பசலையார் என்ற பெயர் உள்ளவர்.
ஆடவர் கூட்டத்தில் இருந்த புலவர்கள் தங்கள் பாடல்களைச் சொன்ன போது நப்பசலையார் அவற்றைக் கேட்டுக் கொண்டே இருந்தார். எல்லோரும் தம்முடைய கவிகளைச் சொல்லி முடித்த பின்னர், இன்னும் யாராவது பாடல் சொல்லப் போகிறாரா என்று பார்த்தார். ஒருவரும் சொல்வதாகக் காணவில்லை. அப்போது, “நான் ஒரு பாடல் சொல்லலாமா?” என்று மெல்லக் கேட்டார்.
அதுவரையில் அப்பெண்புலவர் அங்கே இருந்ததை மற்றப் புலவர்கள் மறந்தே போயிருந்தனர். அவர் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அவர்கள்,
“அடடா! நப்பசலையாரை மறந்தே போய் விட்டோமே! அவருடைய பாடலை நாமே அல்லவா சொல்லும்படி கேட்டிருக்க வேண்டும்?” என் றார்கள்.
கிள்ளிவளவன் பெண்கள் பக்கம் திரும்பினான். “தங்களை ஆடவர்கள் அடியோடு மறந்தே போய் விட்டார்களே !” என்றான்.
“மறந்தாலும் நினைப்பூட்டுவது பெண்குலத்தின் இயல்பு” என்றார் நப்பசலையார்.
“தாய்த் தன்மை என்பது அதுதானே ? என்று கிள்ளிவளவன் நயமாகச் சொன்னான்; தங்கள் பாடலைக் கேட்க அவையினர் மிக்க ஆவலாக இருக்கிறார்கள். இத்தனை பேரும் என்னை வானளாவப் புகழ்ந்து விட்டார்கள். இவ்வளவு புகழையும் தாங்கும் வன்மை எனக்கு இல்லை. நீங்களும் இவர்களோடு சேர்ந்து சுமையை அதிக மாக்கப் போகிறீர்களா?” என்றான்.
“அவர்கள் போன வழியிலே நான் போக மாட்டேன். உங்கள் சுமையைக் குறைக்கலா மென்றே எண்ணுகிறேன்” என்றார் நப்பசலையார். புலவர்கள் சற்று விழித்தனர். நப்பசலையாரின் கருத்து அவர்களுக்கு விளங்கவில்லை.
நப்பசலையார் இப்போது புலவர்களை நோக்கிப் பேச ஆரம்பித்தார். இது காறும் நீங்கள் நம் மன்னருடைய புகழை விரிவாகப் பாடினீர்கள். அவர் இயல்புகளை யெல்லாம் எடுத்து எளிதிலே பாராட்டி விட்டீர்கள். எனக்கோ இப் பெருமானை இன்னபடி புகழ்வது என்று தோன்றவில்லை. உண்மையைச் சொல்லப் போனால், “இவருக்குப் புகழ் ஏது? புகழ வேண்டியது அவசியந்தானா என்று கூடத் தோன்றுகிறது.”
புலவர்கள் திடுக்கிட்டார்கள். ‘நப்பசலையார் அறிவுள்ள புலவர். மனம் போனபடி பேசமாட்டார். எதையோ சுற்றி வளைத்துச் சொல்ல வருகிறார்’ என்று எண்ணினார்கள். நப்பசலையார் மேலும் பேசலானார்.
“நீங்கள் எல்லாம் இப்பெருமானுடைய புகழைப் பலவகையில் சொன்னீர்கள். இவருடைய ஈகையைப் புகழ்ந்தீர்கள். மனிதர் நடக்கிறார்கள். அதைப் பார்த்து, ‘ஆகா என்ன அழகு! இவர் நடக் கிறாரே!’ என்று யாராவது பாராட்டுவார்களா? மனித இனம் பரம்பரை பரம்பரையாகக் காலால் நடக்கும் பழக்கத்தை உடையது. அதைப் பெரிது படுத்திச் சொல்லிக் கொண்டிருப்பார்களா? வளவர் குலத்தில் ஈகை என்பது மருந்துக்கும் இல்லாமல் இவரிடம் மாத்திரம் இருந்ததானால் அதைத் தனியே எடுத்துச் சொல்லலாம். கை படைத்த பயன் ஈகை என்று எண்ணும் குலம் இது. வெறும் பொருளை மாத்திரமா கொடுத்தார்கள்? பொருளைக் கொடுத்தார்கள்; புவியைக் கொடுத்தார்கள்; உடம்பையே கொடுத்தார்கள். மனிதருக்கு மாத்திரமா கொடுத்தார்கள்? பறவைக்கும் கொடுத்தார்கள். இந்தச் செம்பியர் குலத்தின் முன்னோர்களில் ஒருவன் சிபி என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒரு புறா அடைந்த இன்னலைக் கண்டு அதனை விடுவித்தற் பொருட்டு அதனைத் துரத்தி வந்த பருந்துக்குப் புறாவின் நிறைக்குத் தக்கபடி தன் உடம்பை அரிந்து கொடுத்த அவன் பெருமையை நம் நாட்டு இதிகாசங்கள் சொல்கின்றன. அந்த மரபில் வந்தவர் ஈகையில் வல்லவர் என்பது ஒரு புகழா?” நப்பசலையார் சிறிதே நிறுத்திப் புலவர்கள் முகத்தைப் பார்த்தார். அவர்கள் வியப்போடு நப்பசலையாரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“ஆகவே ஈதல் என்பது இவருக்கு மாத்திரம் உரிய தனிப் புகழ் அன்று என்று சொன்னால் தவறாகுமா?”
“தவறு ஆகாது” என்று அவையில் இருந்த சான்றோர் ஒருவர் சொன்னார்.
“அப்படியானால் என் பாட்டைக் கேளுங்கள். எல்லோரும் “ஈதல் நின்புகழ்” என்று பாடினார்கள். நான் ‘ஈதல் நின் புகழ் அன்றே’ என்று பாடுகிறேன். காரணத்தோடு பாடுகிறேன். கேளுங்கள்.
புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வாள்மருப்பு எறிந்த வெண்கடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல்நின் புகழும் அன்றே!
[புறாவினது வருத்தத்தைப் போக்கும் பொருட்டு உரலைப் போன்ற அடியையுடைய யானையினது வெண்மையான தந்தத்தை வெட்டிச் செய்த வெள்ளிய ஓரத்தையுடைய கோலைப் பெற்ற நிறுத்தலையுடைய தராசில் புகுந்தவனுடைய மரபில் வந்த மன்னனே, அவன் மரபில் வந்த உனக்குக் கொடை இயற்கையாக வந்ததே யன்றிச் சிறப்பாக வந்தது அன்று; ஆதலின் ஈவது உன் புகழுக்கு உரியது அன்று.]
கிள்ளிவளவன் முகத்தில் ஒளி வீசியது. நம்முடைய முன்னோர் பெருமையை நமக்கு நினைவூட்டி, பெரிய பெரிய தியாகங்களைச் செய்தவர்கள் இருக்க நாம் அளிக்கும் கொடை சிறிதென்று எண்ணச் செய்து, புலவர்களின் புகழால் நாம் தருக்கடையாமல் செய்கிறார் இந்த அன்னையார்’ என்ற சிந்தனையில் அவன் ஆழ்ந்தான்.
நப்பசலையார் பாடலைச் சொல்லிவிட்டு மறுபடியும் பேசத் தொடங்கினார்.
“பகைவர்களை வெல்வதும் கொல்வதுமாகிய வீரத்திற் சிறந்தவர் என்று மன்னர் பிரானை நீங்கள் புகழ்ந்தீர்கள். அந்தப் புகழ்ச் சுமையையும் இறக்கி, வளவர் பெருமானுக்கு ஆறுதல் அளிக்கலாமென்று எண்ணுகிறேன். சான்றோர் தம்மை ஒருவர் புகழ்ந்தால் நாணுவார்கள். நம் அரசர் பெருமான் நீங்கள் புகழப் புகழத் தலை குனிந்து கொண்டார். அவருடைய திருமுடி நிமிரும் பொருட்டு, நீங்கள் ஏற்றிய பாரத்தை ஒவ்வொன்றாக இறக்கி வைக்கப் போகிறேன். பகைவரை அடுதல் இப்பெருமா னுடைய புகழ் என்று பாராட்டினீர்கள். அதுவும் இவருக்கே உரிய புகழ் அன்று என்று நான் சொல்கிறேன்.’
இந்த முறை வளவர்பிரானுடைய முன்னோர்களில் யாரைச் சொல்லப் போகிறாரோ? என்று அவைக் களத்தினர் அத்தனை பேரும் ஆவலோடு காதைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தனர்.
இவ்வுலகத்தில் ஒரு நாட்டிலுள்ள அரசனை வெல்வது யாரும் செய்யும் காரியம். மலையரணும் காட்டரணும் நீரரணும் படைத்த பேரரசனாக இருந் தாலும் அவனுடைய அரண்கள் எல்லாம் இந்த நிலப் பரப்பில் இருக்கின்றவைதாமே? சோழர் குலத்தில் செய்தற்கரிய காரியங்களைச் செய்த பெரு வீரர்கள் இருந்திருக்கிறார்கள். வானத்தில் தொங் கும் மதிலையுடைய பகைவர்கள் உலகத்துக்குத் துன்பத்தைச் செய்து வந்தார்கள். முப்புரங் களுக்குத் தலைவர்களாகிய அசுரர்கள் அப்படிச் செய்ததாகப் புராணத்தில் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த உலகில் அவ்வாறு தொங்கிய மதிலை அழித்து வெற்றி கொண்ட அரசர் ஒரு செம்பியர்; சோழர் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியர் என்ற சோழ மன்னர் பெற்ற வெற்றி இந்தக் குலத்துக்கே உரியது. இந்தக் குலத்தில் வந்த ஒருவர், நிலத்தில் வாழும் மன்னர்களை அட்டார் என்பது எடுத்துச் சொல்வதற்குரிய செய்கையா? சிங்கம் யானையைக் கொன்றது என்பது வலியற்ற மனிதர்கள் பேசி பேசி வியக்கும் செயல். அகை மனிதர்கள் தமக்குள்ளே சொல்லிக் கொள்ளலாம். சிங்கத்தினிடம் போய், ‘ஆ! நீ யானையைக் கொன்றாயே! உன் வீரமே வீரம் என்று சொல்வது எதற்காக? ஆகையால் பகைவரை அடுவதும் நம் அரசர் பெருமானுடைய புகழுக்கு உரியது அன்று.’
புலவர்கள் தலையை அசைத்தார்கள். நப்பசலையார் பாட்டின் இரண்டாவது பகுதியைச் சொன்னார்.
சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்
தூங்குளயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்
அடுதல்நின் புகழும் அன்றே!
[அணுகுதற்கும் பகைவர்கள் அஞ்சும், அடைய அரிய, மிக்க திறலையுடைய, தொங்கும் மதிலை அழித்த நின்னுடைய முன்னோரை நினைத்தால், இப்போதுள்ள பகைவரைக் கொல்லுதல் நினக்கு இயற்கையான காரியமே யன்றிப் புகழுதற்குரிய சிறப்பான செயல் அன்றே!]
நப்பசலையார் பாட்டு இன்னும் முடியவில்லை. ஆகவே புலவர்கள் அடுத்தபடி அப்புலமைப் பிராட்டியார் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்தனர்.
“நீங்கள் சுமத்திய ஈகைப் புகழையும் வீரப் புகழையும் இறக்கி உங்கள் கோபத்தையும் அரசர் பெருமானுடை”
“வியப்போடு கலந்த மகிழ்ச்சியையும் பெற் றீர்கள்” என்று வளவன் அந்த வாக்கியத்தை முடித்தபோது அவையில் உவகை ஆரவாரம் எழுந்தது. புலவர் கூட்டத்திலிருந்து, “கோபமா! நாங்கள் வியப்பில் அல்லவா ஆழ்ந்திருக்கிறோம்?” என்ற வார்த்தைகள் வந்தன.
“அப்படியா! மூன்றாவது சுமையையும் இறக்கி விடுகிறேன். முறை செய்து நீதி வழங்கும் இயல்பை நீங்கள் பாராட்டினீர்கள். அதுவும் இப்பெருமானுக்குப் புகழ் அன்று. இந்த உறையூரை எப்போது கரிகால் வளவர் அமைத்தாரோ அப்போதே இங்கே அறங்கூரவையம் அமைந்துவிட்டது. வீரம் மிக்க சோழருடைய அவையத்தில் நீதி நிலையாக நிற்கிறது என்பது உலகமறிந்த உண்மை. ஆகவே முன்பே இருக்கும் நீதியை, முறையை, இம்மன்னர் பிரான் புதிதாக அமைத்தார் என்று சொல்லலாமா? எப்போதும் உள்ளதை இவர் மாற்றவில்லை என்று சொல்வது ஒரு புகழா ? ஆகவே முறைமை கூட இவர் புகழ் அன்று என்று சொல்கிறேன்.”
“நீங்கள் எப்படிச் சொன்னாலும் அழகாக இருக்கிறது” என்றார் சான்றோர் ஒருவர்.
நப்பசலையார் பாட்டின் அடுத்த பகுதியைச் சொன்னார்.
கெடு இன்று
மறம்கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற்று ஆதலின் அதனால்
முறைமைநின் புகழும் அன்றே!
[கெடுதல் இல்லாமல் வீரம் பொருந்திய சோழருடைய உறையூரிலுள்ள அவையில் அறம் எப்போதும் தளர்வில்லாமல் நின்று நிலைபெற்றிருக்கிறது; ஆதலால் முறை செய்து நீதி வழங்கு தலும் உனக்குப் புகழ் அன்று.]
இவ்வாறு கொடை, வீரம், முறைமை என்ற மூன்றையும் கிள்ளிவளவனுக்கே உரிய புகழாகச் சொன்ன புலவர்களுக் கெதிரே, அம் மூன்றும் நெடுங்காலமாகச் சோழர்குலத்துக்கு உரியன என்று சொன்னார் நப்பசலையார். “இந்தக் குலப் பெருமையை நீ பாதுகாக்கிறாய். மற்றவர்களுக்கெல்லாம் சிறப்புத் தரும் செயல்கள் உனக்கு இயல்பாகவே
இருக்கின்றன” என்று கிள்ளிவளவனைப் புகழாமல் புகழ்ந்தார்.
புலவர்கள் அவருடைய சதுரப் பாட்டை வியந்தார்கள். “இன்னும் பாடலை நிறைவேற்றவில்லையே!” என்றார் ஒரு புலவர்.
இதோ நிறைவு செய்கிறேன். புகழுக்குரிய கொடை, வீரம், முறைமைஎன்பவற்றில் ஒன்றும் இவருக்கென்று தனிச் சொத்தாக இல்லாதபோது இவரை எப்படிப் புகழ்வது என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இமயத்தில் வில்லைப் பொறித்த சேரனை வென்ற இப் பெருமானைப் புகழலாம் என்று முயன்றால், எவ்வாறு புகழ்வது என்ற கேள்வியே எழுகிறது. அந்தக் கேள்வியையே நான் பாட்டாகப் பாடிவிடுகிறேன். என்னசெய்வது!” என்று கூறிவிட்டுப் பாடலின் பிற்பகுதியைச் சொன்னார், அந்தக் கவிப் பெருமாட்டியார்.
மறம்மிக்கு
எழுசமம் கடந்த எழுகூறழ் திணிதோட்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ !
யாங்கனம் மொழிகோ யானே ? ஓங்கிய
வரை அளத்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி
மாண்விளை நெடுந்தேர் வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும்நின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே.
[வீரம்மிக்குக் கிளர்ந்தெழுந்த போரை வென்ற இருப்புத் தூண்போன்ற செறிந்த தோளையும் அழகையுடைய கண்ணியை யும் செருக்கையுடைய குதிரையையும் உடைய கிள்ளிவளவனே! உயர்ந்து நின்ற, இவ்வளவென்று அளந்து அறிய முடியாத பொன்விளைகின்ற உயர்ந்த சிகரத்தை உடைய இமய மலையிலே சூட்டிய காவலாகிய வில் அடையாளத்தையும், மாட்சிமை கைத் தொழிற் சிறப்பு இவற்றை உடைய உயர்ந்த தேரையும் பெற்ற சேரன் அழியும்படியாக அவனுடைய தலைநகரமாகிய வஞ்சிமா நகரத்தை வாடச் செய்த நின்னுடைய பெருமை பொருந்திய வலிய முயற்சியைப் பாடும்போது, நான் எவ்வாறு சொல்வேன்!]
“எப்படிச் சொல்வது? வழிசொல்லுங்கள்” என்று கூறி நிறுத்தினார் நப்பசலையார்.
“எப்படிச் சொல்வதென்று கேட்டுக் கொண்டே நம் மன்னர் பிரானுடைய வீரச் சிறப்பையும், வெற்றிப் பெருமையையும், முயற்சியின் வலிமையையும், குலத்தின் மாண்பையும், எளிதிலே ஈந்து வெற்றி கொண்டு நீதியை நிலைநிறுத்தும் இயல்பையும் அழகாகச் சொல்லிவிட்டீர்களே! இன்னும் சொல்வதற்கு என்ன இருக்கிறது? அழகு, அழகு!” என்றார் அங்கிருந்த சான்றோர்களில் ஆண்டில் முதிர்ந்த ஒருவர்.
அவர் கூறியது சரி என்பதை அப்போது அவைக் களத்தில் எழுந்த ஆரவாரம் உறுதி செய்தது.


