
புழுவிற் கடைமனிதர்
மனிதப் பிறப்பு மிகமிக உயர்ந்தது. உயிரினம் அனைத்துக்கும் மனிதனே நாயகன். ஆண்டவனுக்கு அடுத்து அணியார் சிறப்புடையது மனித இனமேயாகும். ஏன்? ஆண்டவனையே கூட, வளர்ந்த மனிதர்கள் ஏவல் கொள்வார்கள். இத்தகு சிறந்த மனித இனம் இன்று தாழ்ந்து கிடக்கும் நிலையினை எண்ணினால் வேதனை பெருகுகிறது. ஏன்? எதனால்?
மனிதனை, மனித இயல்புகளை ஆராய்வதில் அப்பரடிகளுக்கு இணை யாரோ? அப்பரடிகள் இந்த ஆய்வின் முடிவுகளைப் பிறர்மீது ஏற்றிக்கூற மாட்டார். “பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு” என்பது வள்ளுவமன்றோ? எந்தக் குறையினையும் தம்மீது ஏற்றியே பாடும் இயல்பு குணக்குன்றனைய அப்பரடிகளுக்கு உண்டு. குற்றமிலராய் வாழ்தல் சிறப்பு. ஆயினும் குற்றம் வந்திடுமோ என்று அஞ்சி, அஞ்சி அறநெறியில் நின்றிடுதல் அதனினும் சிறப்பு.
உயிரினங்கள் அனைத்திற்கும் பசி உண்டு. பசியைத் தணித்துக் கொள்ள உணவினை நாடி முயலும் முயற்சி எல்லா உயிர்களுக்கும் உண்டு. உண்டு மகிழ்தலும் உண்டு; உறங்கிக் கழித்தலும் உண்டு; இன்ப துன்பங்களைச் சார்ந்து மகிழ்தலும் நோதலும் உண்டு. இவையனைத்தும் மிகுதிப்படுவது தீமையென்றாலும் உயிரின் இயற்கையாகும். இவை உயிரியல் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவும் ஆகும். இதனால், இந்தக் குணங்களால் வேறு இனத்திற்குக் கேடொன்றுமில்லை. மனிதனோ, இவைகளோடு மட்டுமில்லாமல் மற்ற உயிரினத்திடத்தில்லாத ஒரு பெரிய தீமையைப் பெற்றிருக்கிறான். அதுதான் பொல்லாங்கு பேசுதலும், பொல்லாங்கு செய்தலும் ஆகும். எந்தவொரு விலங்கும் வலிய மேற்சென்று யாருக்கும் தீங்கு செய்வதில்லை. மனிதனோ விலங்கிலிருந்து உயர்ந்து விளங்கிக் காட்சி தரவேண்டியவன். அணைத்து அள்ளித் தூக்கமுடியாத அளவுக்கு ஆசாபாசக் கடலில் வீழ்த்தி விடுகிறான்.
ஒரு சாதாரணப் புழு, உடலைப் பேணுவதில் மனிதனைப் போலவே அதிக அக்கறை காட்டுகிறது. ஆனால் அப்புழு பொல்லாங்கு பேசுவதில்லை; பொல்லாங்கு செய்வதில்லை! சிவனடியார் திருக்கூட்டம் என்பது பழுத்த மனத்தடியார் கூட்டமாகும். அவர்கள் நன்றுடையவனையே கருதுவார்கள்: அல்லன கருதார். செம்மணச் சான்றோராக விளங்கித் தம் மகவெனப் பல்லுயிரையும் ஒப்பப் பார்த்து, பரிந்தோம்பிக் காப்பவர்கள். இத்தகு அடியார்கள் குறைவிலா நிறைவாகக் கோதிலா அமுதாக, புண்ணியத்தின் புண்ணியமாக விளங்கும் சிவபெருமானின் அடியார்கள். இவர்கள் உயிரால் தனித்து, இறைவனுடன் ஒன்றித்து வாழ்பவர்கள். ஆயினும், சீலத்தின் சார்பால் கூடி வாழ்பவர்கள். அவர்களுடைய கூட்டத்தைப் ‘புனிதர் பேரவை’ என்று சேக்கிழார் பாராட்டுவார். தூய்மையில் தூய்மையே புனிதம். தூய்மையில் தூய்மையின்மை ஒரோவழி காணலாம். ஆனால், புனிதத்தில் தூய்மையின்மை ஊழி பெயரினும் காண முடியாது. “ஊழி பெயரினும் தாம் பெயரார்” என்பது வள்ளுவம். இத்தகு சிறந்த சிவனடியார் கூட்டத்திற்குள் தனக்கு இடம் கிடைக்குமோ? என்று அப்பரடிகள் ஐயப்படுகிறார்.
புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளனபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே
என்பது அப்பர் திருப்பாடல்.
சிவம், பண்பு, இனிமை இவற்றிற்கு முரண்பாடு தீமை. அதாவது பொல்லாங்கு – தீயன எண்ணுவோர், செய்வோர் சார்வோர், சிவநெறியைச் சார்ந்தவராகக் கருதப்படமாட்டார்கள். அவர்களுக்குச் சிவன் எம்பிரானிடத்தில் இடமில்லை. ஏன்? அவனுடைய அடியார்கள் கூட்டதிலுங்கூட இடம் கிடைக்காது. சிவநெறி நாளும் நன்மை பெருகு அருள்நெறி இயக்கமாகும். இஃது அப்பரடிகளின் ஆணை.
ஓம் நமசிவாய ஓம்


