நன்னெறி மூலமும் உரையும்


கடவுள் வாழ்த்து


மின்னெறி சடாமுடி விநாயக னடிதொழ நன்னெறி
வெண்பா நாற்பதும் வருமே.

பதவுரை: மின் எறி – மின்னல்போலும் ஒளியை வீசுகின்ற, சடாமுடி – சடைமுடியை யுடைய , விநாயகன் அடிதொழ – விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்குதலால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் – நன்னெறி என்னும் நூலின் நாற்பது வெண்பாவும் வரும்

ஏ: ஈற்றசை

(கருத்து) விநாயகக் கடவுளை வணங்குதலால் நன்னெறி என்னும் நூல் இடையூறின்றி இனிது முடியும் என்பதாம்.

முகமன் எதிர்பாராமல் உதவுக

1. என்று முகமன் இயம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் – துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து.

பதவுரை: பூவின் பொலி குழலாய் – பூவினால் விளங்குகின்ற கூந்தலை யுடையவளே, பூ கை – அழகிய கையானது, புகழவோ – தன்னைப் புகழ்தல் கருதியோ, நாவிற்கு – நாவினுக்கு, துன்றுசுவை- மிக்க சுவையுள்ள உணவினை, நயந்து உதவும் – விரும்பிக் கொடுக்கும் (புகழஅன்று; அதுபோல), தீது அற்றோர் – குற்றமற்றவராகிய பெரியோர், என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் – யாதொரு நாளிலும் (தமக்கு) அன்புமொழிகளைச் சொல்லாத வரிடத்திலும், சென்று பொருள் கொடுப்பர் – தாமே சென்று (அவர்க்கு வேண்டும்) பொருளைக் கொடுப்பார்.

(க-து) பெரியோர் தமக்கு அன்பு காட்டாதவ ரிடத்தும் தாமே சென்று அவர்க்கு வேண்டும் பொருளை வழங்குவர் (எ- ம்.) (1)

வன்சொல்லும் இனிதாதல் உண்டு

2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதென்க – ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.

பதவுரை: நல் நுதால் – நல்லநெற்றியை உடையவளே, மாசு அற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது – குற்றமற்ற மனத்தை யுடையவரது கடுஞ்சொல்லும் இனியதாகும்; ஏனையவர் பேசுற்ற இன்சொல் பிறிது என்க – (குற்றம் பொருந்திய மனத்தை யுடையவராகிய) பிறர் சொல்லிய இன்சொல்லும் கொடியதாகும் என்று அறிவாயாக; ஈசற்கு – சிவபெருமானுக்கு, நல்லோன் எறிசிலையோ – நற்குணமுடையவராகிய சாக்கிய நாயனார் (அன்போடு) எறிந்த கல்லோ, ஒள் கருப்பு வில்லோன் மலரோ – ஒள்ளிய கரும்புவில்லையுடைய மன்மதன் (அன்பின்றி) எறிந்த பூவோ, விருப்பு – விருப்பாயிற்று?

(க-து) மன நன்மையுடையோருடைய கடுஞ் சொல்லும் இன்பம் விளைக்கும்; மன நன்மை இல்லாதவருடைய இன் சொல்லும் துன்பம் விளைக்கும். உ – ம்: சிவபெருமான் சாக்கி யர்க்கு அருள் செய்தார்; மன்மதனை எரித்தார். (2)

இனிய நெறியறிந்து பெறுக

3. தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவன்
தங்கட் குரியவராற் றாங்கொள்க – தங்கநெடுங்
குன்றினாற் செய்தனைய கொங்கையாய்! ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து.

பதவுரை: நெடும் தங்கக் குன்றினால் செய்து அனைய கொங்கையாய் – நெடிய பொன்மலையினால் செய்தாற் போன்ற தனங்களை யுடை யவளே, ஆவின்பால் கன்றினால் கறந்து கொள்ப – (தங்களுக்குக் கொடாத) பசுவினுடைய பாலை (அப் பசுவுக்குரிய) கன்றைக் கொண்டு கறந்துகொள்வார்கள், (அதுபோல) தங்கட்கு உதவிலர் கை – தங்களுக்கு உதவாதவர்களுடைய கையினின்றும், தாம் ஒன்று கொள்ளின் – தாங்கள் ஒரு பொருளைக் கொள்ள வேண்டினால், அவர் தங்கட்கு உரியவரால் தாம் கொள்க – அவர்களுக்கு உரியவராலே (அப் பொருளைத்) தாங்கள் கொள்ளக் கடவர்கள்.

(க – து) தமக்கு உதவாதவரிடத்தில் ஒரு பொருள் பெற வேண்டின், அதனை அவருக்கு உரியவரைக் கொண்டு பெறல் வேண்டும் (எ – ம்.) (3)

செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியது

4. பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் – பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

பதவுரை: பிறர்க்கு உதவி செய்யா – பிறர்க்கு உபகாரஞ்செய்யாத, கருங் கடல் நீர் – கரிய கடலின் நீரை, புயல் சென்று முகந்து – மேகமானது போய் மொண்டுவந்து, பிறர்க்குப் பெய்யாக் கொடுக்கும்-பிறர்க்குப் பெய்து கொடுக்கும்; (அதுபோல) பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ்செல்வம் – பிறர்க்கு உபகாரஞ் செய்யாதவருடைய பெரிய செல்வமானது, வேறு – பிறிதேயாயினும், பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறு ஆம் – பிறருக்கு உபகாரஞ் செய் பவருடைய செல்வமாகும்.

(க – து) உலோபிகளின் பொருள் அதனை யெடுத்து ஈவோரின் பொருளாகவே கொள்ளப்படும் (எ – ம்.) (4)

நட்பிற் பிரியாமை நன்று

5. நீக்க மறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கி னவர்பெருமை நொய்தாகும் – பூக்குழலாய்!
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோற்
புல்லினுந் திண்மைநிலை போம்.

பதவுரை: பூக்குழலாய் – பூக்களை முடித்த கூந்தலையுடையவளே! நெல்லின் உமி சிறிது நீங்க – நெல்லினின்றும் உமியானது சிறிது நீங்கி, பழைமை போல் புல்லினும் – முன்போலவே கூடினாலும், திண்மை நிலைபோம் – (முளைத்தற்கேற்ற) வலிமையின் நிலை போய்விடும்; (அதுபோல) நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந் தாலும் – பிரிவு இல்லாத நண்பர் இருவர் பிரிந்து (முன்போலவே) கூடினாலும், நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் – பார்க்கு மிடத்து அவருடைய பெருமை அற்பமாகும்.

(க-து) இடையே பகைமையாற் பிரிந்து கூடும் நட்பு முன் போல் உறுதியுடையதாகாது (எ – ம்.) (5)

காதலர் ஒருமை

6. காதன் மனையாளுங் காதலனும் மாறின்றித் தீதி லொருகருமஞ் செய்பவே – ஓதுகலை எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கறான்
கண்ணிரண்டு மொன்றையே காண்.

பதவுரை: ஓது – புகழ்ந்து சொல்லப்படுகின்ற, எண்ணிரண்டு கலையும் ஒன்றும் – பதினாறு கலைகளும் பொருந்திய, மதி என் முகத்தாய்- சந்திரன் என்று சொல்லப்படும் முகத்தை யுடையவளே!, கண் இரண்டும் – இரண்டு கண்களும், நோக்கல் – பார்த்தல், ஒன்றையே – ஒரு பொருளையேயாம்; (அதுபோல) காதல் மனையாளும் காதலனும் – அன்பையுடைய மனைவியும் கணவனும், மாறு இன்றித் தீது இல் ஒரு கருமமே செய்ப – (தம்முள்ளத்தில்) மாறுபாடில்லாமல் (ஒத்துக்) குற்ற மில்லாத ஒரு கருமத்தையே செய்வர்.

தான்: அசை. காண்: முன்னிலையசை.

(க – து.) கணவனும் மனைவியும் ஒத்துச் செய்யும் அறமே நிறைவேறும் (எ – ம்.) (6)

கல்விச் செருக்கு விடுக

7. கடலே யனையம்யாங் கல்வியா லென்னும்
அடலே றனையசெருக் காழ்த்தி – விடலே
முனிக்கரசு கையான் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.

பதவுரை: முழங்கும் பனிக்கடலும் – ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய கடலும், முனிக்கு அரசு கையால் – முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்திய முனிவர் கையால், முகந்து உண்ணப்படும்- மொண்டு பருகப்படும்; (ஆதலால்) யாம் – நாம், கல்வியால் கடல் அனையம் – கல்விப் பெருமையால் கடலை நிகர்ப்போம், என்னும்- என்று கொள்கின்ற, அடல் ஏறு அனைய செருக்கு – வலிமை பொருந்திய ஆண் சிங்கத்தினது செருக்கைப் போலும் செருக்கிலே, ஆழ்த்திவிடல் – (உங்களை) அமிழ்த்திவிடாதிருங்கள்.

ஏ இரண்டும் அசை

(க-து.) எத்துணைப் பெருங்கல்வி யுடையவரும், செருக்கடைவாராயின் வல்லவரொருவராலே தப்பாது வெல்லப்படுவர் (எ – ம்.)(7)

சினத்தைக் காத்துக் கொள்க

8. உள்ளம் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க – வெள்ளந் தடுத்த
லரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்த
லரிதோ விளம்பு.

பதவுரை: உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் – மனத்தைத் தன்வயத்ததாக்கிக் கொண்டு எழுந்து வளர்கின்ற கோபத்தை, காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க – அடக்கிக் கொள்கின்ற கு’99மே (அருமையாகிய)குணம் என்று அறியக்கடவாய்; வெள்ளம் தடுத்தல் அரிதோ – (பெருகி வருகின்ற) வெள்ளத்தை (கரை கட்டி)த் தடுத்தல் அரியதோ, தடம் கரை பேர்த்து விடுத்தல் அரிதோ – முன் கட்டப்பட்டிருந்த பெரிய கரையை உடைத்து (அதனுள் அடங்கியிருந்த வெள்ளத்தைப் புறத்திலே செல்ல) விடுத்தல் அரியதோ, விளம்பு – நீ சொல்வாயாக, தான்: அசை

(க-து) சினங்கொள்ளுதல் எளிது; சினத்தை அடக்குதல் அரிது. ஆதலின், அரியதைச் செய்தலே பெருமை (எ – ம்) (8)

சார்பின் வலி

9. மெலியோர் வலிய விரவலரை யஞ்சார்
வலியோர் தமைத்தா மருவில் – பலியேல் கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே படர்சிறையைப் புள்ளரசைப் பார்த்து.

பதவுரை: பலி ஏல் – (அன்பருடைய) பூசையை ஏற்றுக்கொள்ளும், கடவுள் – சிவபெருமானது, அவிர் சடைமேல் கட்செவி- விளங்குகின்ற சடையின்மேல் அணியப்பட்டிருக்கின்ற பாம்பானது, படர் சிறை விரிந்த சிறகினையுடைய, அப் புள் அரசைப் பார்த்து – அந்தப் பறவைகட்கு அரசாகிய கருடனைப் பார்த்து, அஞ்சாது – பயப்படாது; (அவ்வாறே) மெலியோர் – வலிமையில்லாதவர், வலிய விரவலரை – வலிமை யுடைய பகைவருக்கு, தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் – தாம் (அவரினும்) வலியோரைச் சேர்ந்தால் பயப்படார். ஏ: அசை

(க – து) பகைவர் வலியவராயவிடத்து, அவரினும் வலியவரைச் சேர்ந்தாற் பயமில்லை (எ – ம்) (9)

தன்னலங் கருதாமை

10. தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் – திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா துலகின் நிறையிருளை
நீக்குமே னின்று.

பதவுரை: திங்கள் – சந்திரனானவன், கறை இருளை நீக்கக் கருதாது – தனது களங்கமாகிய இருளை நீக்குதற்கு நினையாமல், மேல் நின்று உலகின் நிறை இருளை நீக்கும் – ஆகாயத்திலே நின்று உலகத்து நிறைந்த இருளை நீக்குவான்; (அதுபோல்) விழுமியோர்- மேலோர், தம் குறை தீர்வு உள்ளார் – (தமது)குறை நீக்குதலை நினையாராகி, தளர்ந்து – மனம் இளகி, பிறர்க்கு உறும் – பிறருக்கு உண்டாகிய, வெம் குறை – வெவ்விய குறையை, தீர்க்கிற்பார் – நீக்குவார்.

(க-து) மேலோர் தங்குறையை நீக்காது பிறர்குறையை நீக்குவர் (எ – ம்) (10)

புலன்களால் வரும் புன்மை

11. பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் – துப்பிற் சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் றுரும்பு.

பதவுரை: சூறாவளி போய் – சுழற்காற்றானது சென்று, சிறு புல் துரும்பு – சிறிய நொய்தாகிய துரும்பை, சுழற்றும் – (எடுத்துச்) சுழற்றும்; துப்பின் – (அது – தன்) வலிமையால், கல்தூணைச் சுழற்றும் கொல் – கல்லுக்கம்பத்தைச் சுழற்றுமோ – (சுழற்றமாட்டாது;) (அதுபோல) பொய்ப் புலன்கள் ஐந்தும் – பொய்யாகிய ஐந்து புலன்களும், புல்லியர் பால் அன்றி – புல்லறிவாளரிடத் தல்லாமல், மெய்ப் புலவர் தம்பால் – மெய்யறி வுடையவரிடத்தே, நோய் விளையா – துன்பத்தைச் செய்யமாட்டா. ஏ, ஆம்: அசை.

(க-து) ஐம்புலன்களினால் மூடரேயன்றி, மெய்யறிவுடையவர் துன்பமடையார் (எ – ம்.) புலன்கள் ஐந்தாவன: ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்பன. (11)

உடம்பில் உயிர் அமைப்பு

12. வருந்து முயிரொன்பான் வாயி லுடம்பிற்
பொருந்துத றானே புதுமை – திருந்திழாய்! சீதநீர்
பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ
நிற்றல் வியப்பு.

பதவுரை: திருந்து இழாய் – திருந்திய அணிகலன்களை யுடையவளே, சீதநீர் – குளிர்ச்சியாகிய நீரானது, பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதலோ – இல்லிலையுடைய சிறிய குடத்திலே நில்லாது ஒழுகிப் போதலோ (ஆச்சரியம்), நிற்றல் வியப்பு – நிற்றலே ஆச்சரியமாகும்; (அதுபோல) வருந்தும் உயிர் – வருந்துகின்ற உயிரானது, ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதலே புதுமை- ஒன்பது துவாரங்களை யுடைய உடம்பிலே தங்குதலே ஆச்சரியம்; (நீங்குதல் – ஆச்சரியமன்று.) தான் : அசை.

(க-து.) ஒன்பது தொளைகளையுடைய உடம்பிலே உயிர் நிற்றலுக்கன்றி நீங்குதலுக்கு ஆச்சரிய மடைதல் பேதைமை(எ – ம்.) (12)

அன்பின் உதவுக

13. பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட் கேற்ப
விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் – சுரக்கு
மலையளவு நின்றமுலை மாதே! மதியின்
கலையளவு நின்ற கதிர்.

பதவுரை: மலை அளவு நின்ற சுரக்கும் முலை மாதே – மலையளவாக நின்ற (பால்) சுரக்கின்ற தனங்களையுடைய பெண்ணே, மதியின் கதிர் கலை அளவுநின்ற – நிலாவினுடைய கிரணங்கள் வளர்தலை யும் தேய்தலையும் பொருந்திய கலைகளினளவாக நின்றன; (அதுபோல) மேலோர் – பெரியோர்; பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப – வளர்தலையும் குறைதலையும் பொருந்திய செல்வத்திற்கு இசைய, விருப்பமொடு கொடுப்பர் – அன்போடு கொடுப்பர்.

(க -து) பெரியோர் தாம்பெற்ற செல்வத்திற்கேற்ப மிகுதியாகவும் குறைவாகவும் கொடுப்பர்; ஒன்றும் கொடாதிரார் (எ -ம்) (13)

செல்வச் செருக்கு விடுக

14. தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ
மென்று தலையா யவர்செருக்குச் சார்தல் – இலையால் இரைக்கும்வண் டூதுமல ரீர்ங்கோதாய்! மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.

பதவுரை: இரைக்கும் வண்டு ஊதும் – ஒலிக்கின்ற வண்டுகள் ஊதுகின்ற, மலர்ஈர்ங்கோதாய் – பூக்களாலாகிய குளிர்ச்சி பொருந்திய மாலையை யுடையவளே, மேருவரைக்கும் வளைவு வந்தன்று – (எக்காலத்தினும் அசைவற்றிருந்த) மகாமேரு மலைக்கும் (ஒரு காலத்தில்) வளைவு வந்தது; (ஆதலால்) தலையாயவர் – முதன்மையான அறிவுடையவர்கள், தொலையா – அழியாத, பெருஞ் செல்வம் – பெரிய செல்வத்திலே, தோற்றத்தோம் என்று – பிறந்திருக் கின்றோம் என்று, செருக்குச் சார்தல் இலை – செருக்கடைதல் இல்லை. ஆல் – அசை.

(க-து) எத்துணைப் பெருஞ் செல்வத்துக்கும் அழிவு வருமென்றறிந்து அடங்குவோரே அறிவுடையோர் (எ – ம்). (14)

அன்பிலார்க்குச் செல்வம் பயனில்லை

15. இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற்று
எல்லா மிருந்தும்அவற் கென்செய்யும் – நல்லாய் மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும் விழியிலார்க்
கேது விளக்கு.

பதவுரை: நல்லாய் – நற்குணமுடையவளே, மொழி இலார்க்கு முது நூல் ஏது – பேச்சில்லாதவராகிய ஊமைகளுக்குப் பழமை யாகிய நூல் யாது பயனைச் செய்யும்; தெரியும் விழி இலார்க்கு விளக்கு ஏது – பார்க்கின்ற கண்ணில்லாதவராகிய குருடர்க்குத் தீபம் யாது பயனைச் செய்யும்; (அதுபோல) இங்கு அன்பு இல்லானுக்கு – இவ் வுலகத்தில் அன்பில்லாதவனுக்கு, இடம் பொருள் ஏவல் எல்லாம் இருந்தும் – இடமும் பொருளும் ஏவலுமாகிய இவை யெல்லாம் இருந்தும், அவர்க்கு என் செய்யும் – அவனுக்கு யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனுஞ் செய்யா.) மற்று: அசை.

(க-து.) அன்பில்லாதவன், இடம் பொருளேவல்களுடைய வனாயினும், அவைகொண்டு அறமும் புகழுஞ் செய்துகொள்ள மாட்டான் (எ- ம்). (15)

மேலோர் அன்புடையார்க்குத் தாமே உதவுவர்

16. தம்மையுந் தங்க டலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் – தம்மின்
இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்ப ரல்கு கழியினுஞ்செல்
லாதோ கடல்.

பதவுரை: கடல் – (பெரிய) கடலானது, அல்கு கழியினும் – (தன்னை அடுத்த) சிறிய உப்பங்கழியிலும், செல்லாதோ – போய்ப் பாயாதோ (போய்ப் பாயும்; அதுபோல) உயர்ந்தோர் – (அறிவொழுக்கங் களினால்) உயர்ந்தவர்கள்; தமை அடைந்தோர் தம்மின் இழியினும் – தங்களைச் சார்ந்தவர்கள் தங்களைப் பார்க்கினும் தாழ்ந்தவர் களாயினும், தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துத் தம்மை மதியார் – தங்களையும் தங்களுடைய தலைமையையும் பார்த்துத் தங்களை மதியாதவர்களாகி, செல்வர் இடர் தீர்ப்பர் – (அவர்கள் இருக்கும் இடத்துக்குப்) போய் (அவர்களுடைய) துன்பத்தை நீக்குவார்கள்.

(க-து.) மேலோர் தம்மைச் சார்ந்தவர் தம்மிற் றாழ்ந்தவ ராயினும் செருக்கின்றி அவரிடந் தேடிச்சென்று பாதுகாப்பர் (எ- ம்). (16)

வறுமையிலும் உதவி

17. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ – பைந்தொடீ! நின்று
பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க்
கன்று முதவுங் கனி.

பதவுரை: பைந்தொடீ – பசும்பொன்னாலாகிய வளையல்களை யுடையவளே, எந்தை இரப்பார்க்கு ஈந்து நல்கூர்ந்தான் என்று – எங்கள் பிதா இரப்பவருக்குக் கொடுத்து வறியனானான் என்று, அவன் மைந்தர் தம் ஈகை மறுப்பரோ – அவனுடைய புதல்வர் தம் ஈகையைக் கைவிடுவரோ, (விடார்; எதுபோல எனின்) நின்று பயன் உதவி நில்லா – (முன்னே அழிவில்லாமல்) நின்றுகொண்டு (பழமாகிய) பயனைக் கொடுத்து (அதனாலே) அழிவை யடைந்த, அரம்பையின் – வாழைமரத்தினது, கீழ்க்கன்றும் – கீழ்நிற்கின்ற கன்றும், கனி உதவும் – பழத்தைக் கொடுக்கும் (அதுபோல).

(க-து.) தந்தை இரப்பவர்க்கு ஈந்து வறியனானானென்று அவன் மக்கள் ஈகையைக் கiடார் (எ -ம்). (17)

இன்சொல்

18. இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே – பொன்செய் அதிர்வளையாய்! பொங்கா தழற்கதிராற் றண்ணென் கதிர்வரவால்
பொங்குங் கடல்.

பதவுரை: பொன் செய் அதிர் வளையாய் – பொன்னாலே செய்யப்பட்ட ஒலிக்கின்ற வளையல் களையுடையவளே, கடல் தண் என் கதிர் வரவால் பொங்கும் – கடலானது குளிர்ச்சி பொருந்திய கிரணங்களையுடைய நிலாவின் வருகையினால் பொங்கும்; (அதுவன்றி) அழற்கதிரால் பொங்காது – வெம்மை பொருந்திய கிரணங்களையுடைய சூரியன் வருகையினாலே பொங்காது; (அதுபோல) இருநீர் வியன் உலகம் – பெரிய கடல் சூழ்ந்த பரந்த உலகத் திலுள்ளவர், இன்சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாது – இன்சொல்லினாலல்லாமற் கடுஞ் சொல்லினால் எந்நாளும் மகிழ்ச்சியடையார். ஏ: அசை.

(க-து.) இன்சொல்லினாலன்றி வன்சொல்லினால் ஒருவரும் மகிழ்ச்சியடையார் (எ – ம்). (18)

நற்குணம்

19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவார் – வல்லோர்
திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துஞ் சுழற்கால் வர.

பதவுரை: தேமா – தேமாமரமானது, தென்றல் வரத் தளிர் காட்டித் திருந்தும் – தென்றற்காற்று வரத் தளிரைக் காட்டிச் சிறப் புற்றிருக்கும்; சுழல்கால் வர வருந்தும் – சுழற்காற்று வர வருந்தும்; (அதுபோல) வல்லோர் – (கல்வியறிவில்) வல்லவர், நல்லோர் வரவான் முகநகை கொண்டு இன்பு உறீஇ – நல்லவருடைய வருகையினாலே முகமலர்ச்சி கொண்டு இன்பத்தை அடைந்து, அல்லோர் வரவான் அழுங்குவார் – தீயவருடைய வருகையினாலே துன்பத்தை அடைவார்.

(க-து.) கல்வியறிவுடையவர்க்கு, நல்லோர் வரவினாலே இன்பமும்; தீயோர் வரவினாலே துன்பமும் விளையும் (எ – ம்.) (19)

பிறர் துன்பங்கண்டு உள்ளங் கசிதல்

20. பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க – தெரியிழாய்! மண்டு
பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு
கலுழுமே கண்.

பதவுரை: தெரிஇழாய் – ஆராய்ந்த அணிகலன்களையுடையவளே! கண் – கண்கள், மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக் கண்டு – நெருங்கிய நோயினால் வருந்துகின்ற மற்றைய உறுப்புக்களைப் பார்த்து, கலுழும் – அழும்; (அதுபோல) பெரியவர் – (அறிவொழுக் கங்களிற்) பெரியவர். பிறர் நோய் கண்டு – பிறருக்கு வந்த நோயைக் கண்டு, தம் நோய்போல் உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க – தமக்கு வந்த நோய்போல் நினைத்து மனம் நெருப்பிலே பட்ட நெய்போல உருகுவார் என்று அறியக்கடவாய். ஏ: அசை.

(க-து.) பிறருக்கு வருந் துன்பத்தைக் கண்டபோது இரங்குதல் பெரியோர்க்கு இயல்பாகும் (எ – ம்.) (20)

அறிவிலார் செருக்கு அறிஞர்முன் அடங்கும்

21. எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம் – எழுத்தறிவார்
ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில்
வீயுஞ் சுரநீர் மிகை.

பதவுரை: சுரநீர் மிகை – ஆகாய கங்கையின் பெருக்க மானது, எழுத்து அறிவார் ஆயும் கடவுள் – எழுத்துக்களி னியல்பை அறியும் பேரியோரால் ஆராயப்படும் சிவபெருமானது, அவிர் சடைமுன் கண்ட அளவில் – விளங்குகின்ற சடையை எதிரே கண்ட அளவில், வீயும் – அடங்கிவிடும்; (அதுபோல) எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் – இலக்கண நூலை அறியாதவருடைய மற்றைக் கல்வியினது பெருக்க முழுதும், எழுத்து அறிவார்க் காணின் இலை – இலக்கண நூலை அறிந்தவரைக் கண்டால் இல்லாமற் போகும். ஆம் : அசை.

(க-து.) இலக்கண நூலுணர்ச்சியில்லாத வருடைய கல்வி இலக்கண நூலுணர்ச்சி யுடையாரெதிரே பயன்படாது (எ – ம்) (21)

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை

22. ஆக்கும் அறிவா னலது பிறப்பினான் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க – நீக்கு பவரார்
அரவின் பருமணிகண் டென்றுங் கவரார்
கடலின் கடு.

பதவுரை: அரவின் பருமணி கண்டு நீக்குபவர் ஆர் – (நஞ்சை யுடைய) பாம்பினிடத்து உண்டாகிய பருத்த மாணிக்கத்தைக் கண்டு நீக்குவோர் யாவர்; (ஒருவருமில்லை) கடலின் கடு என்று கவரார் – பாற்கடலினிடத்து உண்டாகிய நஞ்சை ஒருநாளும் கொள்வாருமில்லை; (ஆதலால்) மீக்கொள் உயர்வு இழிவு – மேலாகக் கொள்கின்ற உயர்வையும் (கீழாகக் கொள்கின்ற) இழிவையும், ஆக்கும் அறிவான் அலது பிறப்பினான் வேண்டற்க- (நற்குணங்களை) உண்டாக்குகின்ற கல்வியறிவினானல்லாமல் சாதியினாலே விரும்பாதிருக்கக் கடவீர்.

(க-து.) எக்குலத்தினராயினும் அறிவுடையோரை உயர்ந்தவ ராகவும் அறிவில்லாதோரை இழிந்தவராகவும் கொள்ள வேண்டும் (எ – ம்.) (22)

மனவுறுதி நெகிழலாகாது

23. பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் – நெகிழ்ச்சி பெறும்பூரிக்
கின்றமுலைப் பேதாய்! பலகால்
எறும்பூரக் கற்குழியு மே.

பதவுரை: பூரிக்கின்ற முலைப் பேதாய் – விம்முகின்ற தனங்களை யுடைய பெண்ணே, பலகால் எறும்பு ஊரக் கல் குழியும் – பலதரம் சிற்றெறும்புகள் ஊர்ந்து கொண்டு வந்தாலும் கருங் கல்லும் குழிந்து போகும், (அதுபோல) மடவார் பகர்ச்சி பயில – பெண் களிடத்தில் வாய்ப் பேச்சோடு பழகிக்கொண்டு வந்தாலும், நோன்பு ஆற்றல் திகழ்ச்சி தரும் நெஞ்சத் திட்பம் நெகிழ்ச்சி பெறும் – தவத்தைச் செய்தலில் விளங்குகின்ற (ஒருவனுடைய) மனத்தின் உறுதியானது (நாளுக்குநாள்) தளர்ந்துபோகும். ஏ: அசை.

(க-து.) மாதர்களிடம் பேசிப் பழகுதலால் தவஞ் செய்தற் குரிய மனவுறுதியும் கெட்டுவிடும் (எ – ம்). (23)

கீழோர் பிறர்குற்றமே பேசுவர்

24. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே – வண்டுமலர்ச் சேக்கை
விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்றோ
காக்கை விரும்புங் கனி.

பதவுரை: செழும் பொழில்வாய் – செழுமையாகிய சோலையினிடத்தே, மலர்ச்சேக்கை வண்டு விரும்பும் – பூவாகிய மெத்தையை வண்டுகள் விரும்பும், வேம்பு அன்றோ காக்கை விரும்பும் கனி – வேப்பம்பழமன்றோ காக்கைகள் விரும்பும் பழம்; (அதுபோல) இங்கு ஒருவர்க்குக் குணம் உண்டு எனினும் – இவ் வுலகத்தில் ஒருவருக்கு நற்குணம் உள்ளதாயினும், கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே – கீழோர் எடுத்துப் பேசுவது அவருடைய குற்றமேயாகும்.

(க-து) ஒருவரிடத்துள்ள நற்குணத்தையே மேலோர் எடுத்துப் பேசுவர்; தீக்குணத்தையே கீழோர் எடுத்துப் பேசுவர் (எ – ம்.) (24)

கீழோர் சேர்க்கை ஆகாது

25. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே – வில்லார் கணையிற்
பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம் புணையிற்
புகுமொண் பொருள்.

பதவுரை: வில் ஆர் கணையின் பொலியும் கருங்கண்ணாய் – வில்லோடு கூடிய அம்பைப்போலப் (புருவத்தோடுகூடி) விளங்கு கின்ற கருமையாகிய கண்களையுடையவளே, புணையில் புகும் ஒள்பொருள் நொய்து ஆம் – (கனமில்லாத) தெப்பத்திலே சேர்ந்த கனமுடைய பொருள் இலகுவாம்: (அதுபோல) கல்லா அறிவின் கயவர்பால் – கல்லாத அறிவினையுடைய மூடரிடத்திலே (சேர்ந்தால்), கற்று உணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணார் – கற்றறிந்த நல்லோர் தமது பெருமையை இழப்பர்.

(க-து.) கற்றறிந்தவர் மூடரிடத்தே சென்றால் தமது பெருமை இழப்பர் (எ – ம்.) (25)

கல்விப் பெருமை கருதுக.

26. உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் – மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான் விண்ணளவா
யிற்றோ விளம்பு.

பதவுரை: மடவரால் – இளமை பொருந்திய பெண்ணே, ஒள் புலவர் உடலின் சிறுமை கண்டு – ஒள்ளிய புலவருடைய உடலின் சிறுமையைக் கண்டு, கல்விக் கடலின் பெருமை கடவார் – (அவரின்) கல்வியாகிய கடலின் பெருமையை (ஒருவரும்) கடக்கமாட்டார்; கதிர் காணும் ஒளி – சூரியனுடைய ஒளியோடு கூடிக் காண்கின்ற கருமணி யொளியானது, கண் அளவு ஆய் நின்றதோ – (தனக்கிட மாகிய சிறிய) கண்ணினளவாக அடங்கி நின்றதோ, விண் அளவு ஆயிற்றோ விளம்பு – (தான் காண்கின்ற பெரிய) ஆகாயத்தினள வாக வியாபித்து நின்றதோ நீ சொல்லுவாயாக. தான்: அசை.

(க-து.) உருவத்தாற் சிறியவரும் அறிவினாற் பெரிய வராயிருப்பர் (எ – ம்.) (26)

கைம்மாறு கருதாது உதவுக

27. கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மால் இயலுதவி தாஞ்செய்வார் – அம்மா
முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு விளைக்கும் வலியனதாம் மென்று.

(பத) முளைக்கும் எயிறு – முளைக்கின்ற பற்களானவை, நாவிற்கு – (தமக்கு ஓருபகாரஞ் செய்தற்கியலாத) நாக்குக்கு, வலியன தாம் மென்று முதிர்சுவை விளைக்கும் – கடினமாகிய தின்பண்டங் களைத் தாமே மென்று கொடுத்து நிறைந்த சுவையை உண்டாக்கும்; (அதுபோல) கற்று அறிந்தோர் – கற்றறிந்தவர், கைம்மாறு உகவாமல்- பிரதி யுபகாரத்தை விரும் பாமல், மெய்வருந்தித் தம்மால் இயல் உதவி தாம் செய்வர் – உடம்பு வருந்தித் தம்மால் இயன்ற உதவிகளைத் தாமே செய்வர். அம்மா: வியப்பிடைச் சொல்.

(க-து.) அறிவுடையார் கைம்மாறு வேண்டாமலே பிறருக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர் (எ – ம்.) (27)

வெறுப்பிலும் உதவுவர் மேலோர்

28. முனிவினும் நல்குவர் மூதறிஞ ருள்ளக் கனிவினும்
நல்கார் கயவர் – நனிவிளைவில் காயினு
மாகும் கதலிதா னெட்டிபழுத் தாயினும்
ஆமோ அறை.

பதவுரை: மூதறிஞர் முனிவினும் நல்குவர் – பேரறிவுடையவர் கோபமுள்ள காலத்திலும் கொடுப்பர், கயவர் உள்ளக் கனிவினும் நல்கார் – மூடர் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் கொடார், கதலி நனி விளைவு இல் காயினும் ஆகும் – வாழையானது மிக முற்று தலில்லாத காயானாலும் பயன்படும், எட்டி பழுத்து ஆயினும் ஆமோ அறை – எட்டியானது பழுத்தாலும் பயன்படுமோ நீ சொல்வாயாக. தான்: அசை.

(க-து.) அறிவுடையவர் கோபத்தினுங் கொடுப்பர்; மூடர் மகிழ்ச்சியினுங் கொடார் (எ – ம்.) (28)

இடுக்கண் அஞ்சாது உதவுக

29. உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர்
அடுக்கும் ஒருகோடி யாக – நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியைமதி மான்.

பதவுரை: பண்ணின் புகலும் பனிமொழியாய் – பண்ணைப் போலப் பேசுகின்ற குளிர்ச்சி பொருந்திய சொல்லையுடையவளே, மதிமான் – சந்திரனிடத் திலிருக்கின்ற மானானது, மண்ணில் புலியைக் கண்டால் அஞ்சுமோ – பூமியிலிருக்கிற புலிகளுக்குப் பயப்படுமோ (பயப்படாது; அதுபோல) நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர் – (தம்முடைய) மனம் உயர்ந்த பரம்பொருளிடத்தே அழுந்தப் பெற்ற ஞானிகள், உடற்கு வரும் இடர் அடுக்கும் ஒருகோடி ஆக – (தம்முடைய) உடம்புக்கு வருந் துன்பங்கள் அடுக்கிச் சொல்லப்படும் ஒரு கோடியளவினவாக இருந்தாலும், நடுக்கம் உறார் – அச்சமடையார்.

(க – து.) கடவுளிடத்து மனம் அழுந்தப்பெற்றவர் எத்துணைப் பெருந் துன்பங்களுக்கும் அஞ்சார் (எ – ம்.) (29)

காலத்தில் அறஞ்செய்க

30. கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே – வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணைகோலி வையார்
பெருகுதற்கண் என்செய்வார் பேசு.

பதவுரை: கொள்ளும் கொடும் கூற்றம் கொல்வான் குறுகுதல் முன் – (உயிரைக்) கொண்டு செல்கின்ற கொடுமையாகிய யமனானவன் கொல்லும்படி அணுகுவதற்கு முன்னே, உள்ளம் கனிந்து அறம் செய்து உய்க – மனங்கரைந்து தருமங்களைச் செய்து பிழைக்கக் கடவாய்; வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் – வெள்ளம் வருவதற்கு முன்னே கரையைக் கட்டி வையாதவர், பெருகுதற்கண் என்செய்வார் பேசு – (அது) பெருகி வரும்பொழுது யாது செய்வார், நீ சொல்வாயாக. ஏ: அசை.

(க-து.) இறப்பு வருமுன்னே அறத்தை விரைந்து செய்தல் வேண்டும் (எ ம்.) (30)

பிறர் துயரந் தாங்குக

31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே வீரமொடு
காக்க விரைகுவார் – நேரிழாய்! மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேற் கைசென்று
தாங்குங் கடிது.

பதவுரை: நேர் இழாய் – தகுதியாகிய ஆபரணத்தை யுடையவளே, மெய் சென்று தாக்கும் வியன்கோல் அடி – உடம்பிலே போய்த் தாக்குகின்ற பெரிய கோலினுடைய அடியை, கை கடிது சென்று தன்மேல் தாங்கும் – கை விரைந்து போய்த் தன்மேலே ஏற்றுக் கொள்ளும்; (அதுபோல) பேர் அறிஞர் – பெரிய அறிவை யுடையவர், தாக்கும் பிறர் துயரம் வீரமொடு தாங்கி – வருத்துகின்ற பிறருடைய துன்பத்தை வீரத்தொடு தாம் ஏற்றுக் கொண்டு, காக்க விரைகுவார்- (அவரைப்) பாதுகாத்தற்கு முற்படுவர், ஏ: அசை.

(க-து.) பேரறிவுடையோர் பிறருக்கு வருந்துன்பத்தை விரைந்து நீக்குவர் (எ – ம்.) (31)

மெய்யுணர்ந்து உதவுக

32. பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார் மன்னும்
அறங்கள் வலியிலவே – நன்னுதால்! காமொன்
றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன்
றிலதாயிற் றான்.

பதவுரை: நல் நுதால் – நல்ல நெற்றியையுடையவளே, காழ் ஒன்று உயர் திண் கதவு – வயிரம் பொருந்திய உயர்ந்த வலிய கதவானது, தாழ்ஒன்று இலது ஆயின் வலி உடைத்தோ – ஒரு தாழ் இல்லாத தாயின் உறுதியை உடைத்தாகுமோ, (உடைத்தாகாது; அதுபோல) பன்னும் பனுவல் பயன் தேர் அறிவு இலார் – சொல்லப் படுகின்ற நூல்களினது பொருளை அறியும் விவேக மில்லாதவர் செய்யும், மன்னும் அறங்கள் வலி இலவே – மிகுந்த தருமங்கள் உறுதி யில்லாதனவேயாம். தான்: அசை.

(க-து.) விதிவிலக்குகளைப் பகுத்தறியும் அறிவில்லாதவர் செய்யுந் தருமங்கள் பயன்படா (எ – ம்.) (32)

பெரியோர் போற்றுதல் வேண்டார்

33. எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர் விள்ளா
அறிஞரது வேண்டாரே – தள்ளாக் கரைகாப்
புளதுநீர் கட்டுகுள மன்றிக் கரைகாப்
புளதோ கடல்.

பதவுரை: நீர்கட்டு குளம் தள்ளாக் கரை காப்பு உளது – நீரைக் கட்டி வைக்கின்ற (சிறிய) குளமே தள்ளப்படாத கரை காவலாக உள்ளது; அன்றிக் கடல் கரை காப்பு உள்ளதோ – அதுவல்லாமற் (பெரிய) கடலானது கரை காவலாக உள்ளதோ (உள்ளதன்று; அதுபோல), இழிஞர் எள்ளாது இருப்பப் போற்றற்கு உரியர் – அறிவில்லாத சிறியோர் (தம்மைப் பிறர்) இகழாதிருக்கும்படி காக்கப்படுதற்கு உரியவராவர், விள்ளா அறிஞர் அது வேண்டார் – நீங்காத அறிவுடைய பெரியோர், அங்ஙனம் காக்கப்படுதல் வேண்டார். ஏ : அசை.

(க-து.) பிறர் இகழாவண்ணங் காக்கப்படுதல் சிறியோருக் கன்றிப் பெரியோருக்கு வேண்டுவதில்லை (எ – ம்.) (33)

பெரியோர் பழிக்கு அஞ்சுவர்

34. அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பாற்
செறிபழியை அஞ்சார் சிறிதும் – பிறைநுதால்
வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோஇருளைக் கண்டு.

பதவுரை: பிறைநுதால் – பிறைபோலும் நெற்றியையுடையவளே! வண்ணம் செய் வாள்விழியே அன்றி- அழகு செய்கின்ற ஒளியை யுடைய கண்களே யல்லாமல், மறை குருட்டுக்கண் – (ஒளி மறைந்த) குருட்டுக் கண்களானவை, இருளைக் கண்டு அஞ்சுமோ – இருட்டைக் கண்டு அஞ்சுமோ, (அஞ்சா; அதுபோல) அறிவுடையார் அன்றி – அறிவுடையவரே யல்லாமல், அது பெறார் – அவ்வறிவைப் பெறாத மூடர்; தம்பால் செறிபழியைச் சிறிதும் அஞ்சார் – தம்மிடத்து நெருங்கிவரும் பழியைச் சிறிதும் அஞ்சார்.

(க-து.) அறிவுடையோர் பழிக்கு அஞ்சுவர்; மூடர் அஞ்சார் (எ – ம்) (34)

மேன்மக்கள் நல்லோரை விரும்புவர்

35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர்தாம் என்றும் மதியாரே – வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம்.

பதவுரை: வெற்றி நெடும் வேல் வேண்டும் வாள் விழியாய் – வெற்றியையுடைய நெடிய வேற்படை விரும்புகின்ற ஒளி பொருந்திய கண்களையுடையவளே! வாழைப்பழம் பால் வேண்டும் – வாழைப்பழத்தைப் (தித்திப்பாகிய) பாலானது அவாவும், புளிங் கொடி வேண்டா – புளிப்பாகிய காடிநீரானது (அதனை) அவாவாது; (அதுபோல) கற்ற அறிவினரை மேன் மக்கள் காமுறுவர் – (நூல் களைக்)கற்ற அறிவுடையவரை மேலோர் விரும்புவர்; மற்றையர் என்றும் மதியார் – கீழோர் (அவரை) எப்போதும் மதியார். தாம், ஏ : அசை.

(க-து.) கல்வி அறிவுடையவரை மேன்மக்களே விரும்புவர்; கீழ்மக்கள் விரும்பார் (எ – ம்) (35)

தக்கார்க்கே உதவி செய்க

36. தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று
மிக்கார்க் குதவார் விழுமியோர் – எக்காலும்
நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய்.

பதவுரை: எக்காலும் நீர் நெல்லுக்கு இறைப்பதே அன்றி – எக்காலத்தும் நீரை நெற்பயிருக்கே இறைப்பதல்லாமல், காட்டு முளிபுல்லுக்குப்போய் இறைப்பரோ – காட்டினிடத்தே உலரும் புல்லுக்குப் போய் இறைப்பரோ; (இறையார்; அதுபோல) தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று – தகுதியுடையவருக்கே கொடுப்பார்; தகுதியற்றவருக்குக் கொடுப்பவர் இல்லையென்று அறிந்து, விழுமியோர் – மேலோர், மிக்கார்க்கு உதவார் – நன்னெறி கடந்தவர்க்குக் கொடார்.

(க-து.) மேலோர் தகுதியுடையவருக்கன்றித் தகுதியில்லாத வர்க்குக் கொடார் (எ – ம்.) (36)

தற்புகழ்ச்சியால் தாழ்வு அடைபவர்

37. பெரியார்முன் தன்னைப் புகழ்ந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழும் – தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய்! விந்தமலை தன்னுயர்வு
தீர்ந்தன்று தாழ்ந்து.

பதவுரை: பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் – இலக்குமி யுடைய உயர்வை (அழகினாலே) நீக்கிய நெருங்கிய தனங்களை யுடையவளே, பெரியோர்முன் தன்னைப் புனைந்து உரைத்த பேதை – பெரியார் முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய மூடன், உயர்வு தரியாது அகன்று தாழும் – உயர்வைப் பொறுக்க மாட்டாது இழந்து தாழ்வை யடைவன், விந்தமலை தாழ்ந்து தன் உயர்வு தீர்ந்தன்று – (அகத்திய முனிவர் முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய) விந்தமலையானது (அவர் கையினாலே ஊன்றப் பாதாளத்திலே) தாழ்ந்து தன்னுடைய உயர்வு நீங்கியது; தெரியாய் கொல் – (நீ அதனை) அறியாயோ?

(க-து.) பெரியாரெதிரே தன்னைப் புகழ்ந்து ரைத்தவன் தாழ்வையடைவன் (எ – ம்.) (37)

தக்கார் தொடர்பு நலம் பெருக்கும்

38. நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும் அல்லார் செயுங்கேண்மை யாகாதே – நல்லாய்கேள் காய்முற்றின் தின்தீங் கனியாம் இளந்தளிர்நாள் போய்முற்றின்
என்னாகிப் போம்.

பதவுரை: நல்லாள் கேள் – நற்குணத்தையுடையவளே! கேட்பாயாக, காய்முற்றின் தின் தீம் கனி ஆம் – காயானது (நாள் சென்று) முற்றினால் தின்னுதற்குரிய இனிய கனியாகும், இளம் தளிர் நாள்போய் முற்றின் என் ஆகிப்போம் – இளந்தளிரானது நாள்சென்று முற்றினால் யாதாகிப்போகும். (அதுபோல), நல்லார் செயும் கேண்மை நாடோறும் நன்று ஆகும் – நல்லோர் செய்யும் நட்பானது நாடோறும் நன்றாகி வளரும், அல்லார் செயும் கேண்மை ஆகாது – அல்லார் செய்யும் நட்பானது நல்லதாகாது.

(க-து.) நல்லோர் நட்பு நாள் செல்லச் செல்ல இனிதாகும்; தீயோர் நட்பு அங்ஙனமாகாது கெடும் (எ – ம்.) (38)

தகாதார் தொடர்பில் தீமை உள்ளது

39. கற்றறியார் செய்யுங் கடுநட்புத் தாங்கூடி
உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே – பொற்றொடீ
சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.

பதவுரை: பொன் தொடீ – பொன்னாலாகிய வளையல்களை யுடையவளே, சென்று படர்ந்த செழுங்கொடி மென்பூ – போய்ப் படர்ந்த செழுமையாகிய கொடியின் மெல்லிய பூவானது, மலர்ந்த அன்றே மணம் உடையது ஆம் – மலர்ந்த அன்றைக்கே மணம் உடையதாகிப் பின் கெட்டுவிடும் (அதுபோல), கற்று அறியார் செய்யும் கடு நட்பும் – கற்றறியாதவர்கள் செய்கின்ற மிகுதியாகிய நட்பும், தாம் கூடி உற்ற உழியும் – (நெடுங்காலம்) தாங்கள் கூடியிருந்தவிடத்தும், தீமை நிகழ்வே உள்ளது – தீங்கு விளைதலே உள்ளதாகும்.

(க-து.) மூடருடைய நட்புத் தொடக்கத்திலே நன்றாயினும், பின்பு தீங்கு விளைவிக்கும் (எ – ம்.) (39)

தக்காரைப் போற்றிக் கொள்க

40. பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார் – மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக்
காணுங்கண் ஒக்குமோ காண்.

பதவுரை: பொன்னே – இலக்குமியைப் போன்றவளே, மின்னும் அணிபூணும் பிற உறுப்பு – விளங்குகின்ற, ஆபரணத்தை அணிந்து கொள்ளுகின்ற (கைகால் முதலிய) மற்றை அவயவங்களானவை, அது புனையாக் காணும் கண் ஒக்குமோ – அதனை அணியாத பார்க்கின்ற கண்களுக்கு ஒப்பாகுமோ? (ஒப்பாகா; அதுபோல), பொன் அணியும் வேந்தர் – பொன் ஆபரணங்களாலே அலங்கரித்துக் கொள்ளும் அரசர்கள், புனையாப் பெருங் கல்வி மன்னும் அறிஞரை ஒவ்வார் – (அதனை) அணியாத பெரிய கல்விப்பொருள் நிலை பெற்ற விவேகிகளுக்கு ஒப்பாகார். தாம், மற்று : அசை, காண்: முன்னிலையசை.

(க-து.) புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார் (எ – ம்.) (40)

நன்னெறி மூலமும் உரையும் முற்றிற்று.