
ஞானக் கொழுந்து
சைவ சமயத்தில் உள்ளவர்கள் எந்தக் காரியம் செய்தாலும் கணபதியைத் தொழுது தொடங்குவது வழக்கம். பெரிய அரண்மனையின் வாயிலில் யானை நிற்பது போலத் திருக்கோயில்களில் புகும்பொழுதே யானை முகனாகிய கணபதி வாயிலில் வீற்றிருப்பதைக் காணலாம்.
சைவ சமயத்தில் சிவபிரானுடைய குமாரர்களாகிய விநாயகரையும் குமரவேளையும் சிவபிரானுக்குரிய மதிப்புடனே போற்றுவது வழக்கம். எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய பிரணவ சொரூபி விநாயகர் என்று சாத்திரம் கூறும். ஞானத்தை வழங்கும் விநாயகரை யோகிகளும் மூலாதாரத்தில் உள்ள தெய்வமாகப் போற்றுவர்.
சிறந்த யோகியும் சிவாகமக் கருத்துக்களைத் தமிழில் அருளியவருமாகிய திருமூலர் முதலில் கணபதிக்கு வணக்கம் கூறுகிறார்.
விநாயகனுடைய திருவுருவத்தை நினைக்கும்போது யானை முகந்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த முகத்தின் சிறப்பிலக்கணம் துதிக்கை. யானைக்குத் துதிக்கையாகிய ஒரு கைதான் உண்டு. ஆனால் யானை முகனாகிய கணபதிக்கோ தெய்வ நிலைக்கு ஏற்ப அமைந்த நான்கு திருக்கரங்களும் யானை முகத்துக்கு ஏற்ப அமைந்த நெடுங்கையாகிய துதிக்கை ஒன்றும் ஆக ஐந்து கரங்கள் உண்டு. துதிக்கை அன்பர்கள் உள்ள இடத்துக்கு நீண்டு சென்று வழங்கும் ஆற்றல் உடையது.
“தருகை நீண்ட தசரதன்”
என்றது போலக் கணபதி நீண்ட கை படைத்திருப்பது, தான் வேண்டியதைப் பெறுவதற்கு அன்று; அவன் ஒன்றாலும் குறைவு இல்லாதவன். தன்னை அணுக அஞ்சுவாருக்கும் நீண்டு சென்று வழங்கும் வண்மையை உடையவன் என்பதைத் துதிக்கை காட்டுகிறது.
இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்ற நாட்டம் பிறவாமல் நம்மை மலத்தில் அழுத்துவதற்குக் காரணமாக இருப்பது நம்முடைய பொறிகள். இந்தப் பொறிகளின் வாயிலாக நுகரும் நுகர்ச்சிக்கு அடிமைப்பட்டு அந்த நுகர்ச்சியே வாசனையாகப் படிய, அதனால் பிறந்து பிறந்து உழல்கிறோம். ஐம்பொறிகளின் குறும்பை அடக்க வேண்டுமானால் ஞானம் உண்டாக வேண்டும். இறைவனுடைய திருவருளால் ஞானம் உண்டாகும். ஞான தாதாவாகிய விநாயகன் ஐம்பொறிகளையும் அடைத்து அருள் செய்ய ஐந்து கரங்களைப் பெற்றிருக்கிறான்.
“உரன்என்னும் தோட்டியான் ஓர்.ஐந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து”
என்று வள்ளுவர் வாய் மலர்ந்தார். ஐம்பொறிகளாகிய மதயானையை அடக்கும் அங்குசத்தையும் பாசத்தையும் தன் கரங்களில் வைத்திருக்கிறவன் கணபதி. மற்ற யானைகள் பாசத்தையும் அங்குசத்தையும் கண்டால் அஞ்சும், கணபதியோ அவ்விரண்டையும் தன் திருக்கரத்திலே கொண்டவன். அவை கட்டுப்படும் யானைகள். இவனோ கட்டுப்படாத யானை மட்டும் அன்று; ஐம்பொறிகளாகிய யானைகளைக் கட்டுப்படுத்தி, அவற்றால் அஞ்சிக் கட்டுப்பட்ட உயிர்களைப் பாசத்தினின்றும் விடுவிப்பவன். மற்ற யானைகளுக்குக் காமத்தால் மதம் புறப்படும். கணபதிக்கோ அருளாகிய மதம் மலரும்.
“கருணையென்னும் வெள்ளமதம் பொழிசித்த வேழம்.”
கை செயலுக்கு அறிகுறி. கை என்ற சொல்லுக்கே செயல் என்ற பொருள் உண்டு; கையறல் என்ற தொடரால் அது விளங்கும். ஐந்து கைகள் உடையவன் என்பது ஐந்து தொழிலை உடையவன் என்பதற்குரிய அறிகுறியுமாகும். படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருளல் என்னும் ஐந்துக்கும் தலைவன் ஐங்கரன்.
யானைத் தலை பெரியது. அறிவுக்குத தலை அடையாளம். மற்றவர்களுக்கெல்லாம் உள்ள தலைகளை விடக் கணபதிக்குப் பெரிய தலை இருக்கிறது; அவன் யாவரினும் பெரிய அறிவுடையவன் அல்லவா? ஞானத்தின் இருப்பிடம் அவன்; முற்றறிவுடைய மூர்த்தி.
அவனுக்கு யானையைப்போல இரண்டு கொம்புகள் இருந்தும் ஒன்றை ஒடித்து விட்டான். இப்போது இருப்பது ஒற்றைக் கொம்புதான். மற்ற யானைக்கும் தனக்கும் வேறுபாடு தோற்றும்படி ஒற்றைக் கொம்புடன் விளங்குகிறான். அக்கொம்பு மூன்றாம் பிறைச் சந்திரனைப் போல மாசு மறுவற்று வெண்மையாய் வளைவையுடையதாய் விளங்குகின்றனது.
விநாயகன் தன் கொம்புகளில் ஒன்றை ஒடித்துக் கயமுகாசுரனைச் சங்காரம் செய்தான்; மேரு மலையில் பாரதத்தை எழுதினான். நல்லோருக்குத் தீங்கு பயக்கும் அசுர சக்திகளை ஒடுக்கிக் கல்லையும் பதப்படுத்தும் ஆற்றல் அக்கொம்புக்கு உண்டு. இறைவனுக்கு நிக்கிரகம், அநுக்கிரகம் என்ற இரண்டு ஆற்றல்கள் உள்ளன. அவை பகையினாலும் நட்பினாலும் அமைவன அல்ல. அருளால் செய்வனவே அவை இரண்டும். குணமற்ற பிள்ளையை அடித்தும் குணமுள்ளவனை அணைத்தும் வளர்க்கும் தாய்போல் இருப்பவன் அவன். அடித்தலுக்கும் அணைத்தலுக்கும் காரணமாக இருப்பது தாயினுடைய அன்பே ஆகும். அவ்வாறே நிக்கிரகம், அநுக் கிரகம் இரண்டுக்கும் மூலம் அருள்தான். நிக்கிரகத்துக்குக் காரணமானதை மறக்கருணை யென்றும், அநுக்கிரகத்துக்குக் காரணமானதை அறக்கருணையென்றும், கூறுவர்.
விநாயகருடைய கொம்புகள் இரண்டில் ஒடித்த கொம்பு மறக் கருணையையும், ஒடிக்காத கொம்பு அறக்கருணையையும் குறிப்பன. அடிபணியும் அன்பருக்கு மறக்கருணை தோற்றாது. அறக் கருணையை நினைவுறுத்தும் ஒற்றைக் கொம்புதான் தெரியும், இந்துவின் இளம் பிறையைப் போலக் கண்ணுக்குக் குளிர்ச்சியாய்த் தோற்றம் அளிக்கும். நமக்கு அருள்புரிவான் என்ற எண்ணத்தால் உள்ளம் குளிருமல்லவா?
ஐந்த கரத்தனை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை.
[ஐந்து கரத்தனை என்றது: ஐந்தாவது கரமெனப்படும் துதிக்கை பிரணவாகாரமாதலால் அதனனச் சிறப்பித்தற்கே; அன்றியும் தேவிபஞ்சப் பிரணவங்களில் முதன்மை பெற்ற மஹா ஸாரஸ்வத பீஜமாகிய ஐங்காரத்தை முன்னர் அமைத்துப் பின்னர் ஆகாச வாசகமாகிய தகரத்தையும், பரமசிவ வாசகமாகிய உகரத்தையும் அமைத்த முறைபற்றிச் சகல சப்தமயப் பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாகிய சிதம்பரத்தின்கண் ‘ஆகாச சரீரம் ப்ரஹ்ம’ என்று வேதாந்தம் கூறியவாறு அதன் மயமாய், அதிற் கருணானந்தத் திருமேனி கொண்டருளிய பரமசிவத்தினது திவ்ய சொரூப இலக்கணம் அமைந்தது. -திருமந்திரம், மா.வே.விசுவநாத பிள்ளை பதிப்பு, 1912. ]
(ஐந்து திருக்கரங்களை உடையவனை, ஆனை முகம் உடையவனை, சந்திரனது இளம்பிறையைப் போன்ற ஒற்றைக் கொம்பை உடையவனை.)
விநாயகக் கடவுள் சிவபெருமானுடைய குமாரன், கடவுள் ஒருவனேயானாலும் தன்னை வழிபடுபவர்களுடைய நாட்டத்துக்கு ஏற்ப வெவ்வேறு திருவுருவம் கொண்டு காட்சி அளிக்கிறான். அவன் எடுக்கும் ஒவ்வொரு கோலத்திலும் தனித்தனியான சில இயல்புகள் சிறப்பாகப் புலப்படும். சிவபெருமான் தந்தை, விநாயகன் அவனுடைய பிள்ளை என்ற உறவு, உலகில் உள்ள தந்தை மகன் என்ற உறவு முறையைப் போன்றதன்று. கங்கையில் உள்ள நீரைத் தமக்குப் பயன்பட வேண்டும் என்ற கருத்தினால் ஒரு வெள்ளிக் குடத்தில் எடுத்துக் கொணர்ந்த வைத்துக் கொள்கிறார் ஒருவர். அவர் அதை வெள்ளிக்குடத்து ஜலம் என்று சொல்வார். அந்த நீரையே கங்காஜலம் என்றும் சொல்லலாம். இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. சிவபரஞ்சுடரின் இயல்புகளை எண்ணும் பக்தர் களுக்கு விநாயகன் வேறு அல்லன் என்ற உண்மை தெரியும். ஆயினும் விநாயகன் என்று தனியே வைத்து வழிபடும்போது பரம்பொருளின் இயல்புகளிற் சிலவற்றைச் சிறப்பாகவும் அழுத்தமாகவும் எண்ணும் நிலை உண்டாகிறது.
தன்னை எண்ணாதவருக்கு இடையூறுகளையும், எண்ணுவாருக்கு இடையூறு நீக்கத்தையும் உண்டாக்குபவன் என்று விக்கினேசுவரனைச் சொல்வார்க்ள. அது அவனது சிறப்பியல்பு. யானை தீங்கும் புரியும்; நன்மையும் புரியும் அல்லவா?
சிவபிரானுடைய குமாரனாகிய விநாயகன் ஞானக் கடலின் ஓர் அலை. ஞானக் கடல் சிவபிரான்; அவனுடைய குமாரன் அதன் அலை. அலை என்று தனியே பெயர் சொன்னாலும் அது கடலினின்றும் வேறு என்று சொல்லலாமா?
நந்தி என்பது சிவபிரானுக்கு ஒரு பெயர். விநாயகன் அந் நந்தியின் மகன். நந்தி ஞானக் கற்பகம் போல நிற்பவன்; அக் கற்பகத்தின் கொழுந்தாக விளங்குபவன் கணபதி.
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை.
[ஞானக் கொழுந்தினை என்றது: அவர் திருமேனி சுத்த சைதன்ய மயமென்று குறித்தற்கு; அது மூலாதாரத்தின்கண் யோகி களின் பாவனா ரூபமாய் அமைதலால் என்க.-திருமந்திரம், மா.வே.விசுவநாத பிள்ளை பதிப்பு. ]
(சிவபிரானுடைய திருக் குமாரனை, ஞானமென்னும் கற்பக மரத்தின் கொழுந்து போன்றவனை.)
விநாயகனைப் பார்க்கும்போது முதலில் அவன் துதிக்கையும் மற்றக் கைகளும் தெரிகின்றன; ஐந்து கரத்தன் என்று போற்றுகிறோம். பிறகு பெரிய ஆனைமுகம் காட்சி அளிக்கிறது. ஒற்றைக் கொம்பையும் காண்கிறோம். ஐம் பொறியை அடக்கும் ஞானத்தை வழங்கும் வள்ளல், பேரறி வுடையவன், அநுக்கிரக சக்தி யுடையவன், பரம சிவத்தின் கான் முளை, ஞான சொரூபி என்றெல்லாம் தெரிந்து கொண்டோம். அந்த எண்ணங்கள் யாவற்றையும் நம்முடைய புத்தியிலே வைத்துப் பார்க்கிறோம். ஒருவன் சிறந்தவன் என்ற அறிவு உண்டானால் நமக்கு அவனிடம் மதிப்பு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் நாம் அவனிடம் பணிவாக நடக்கத் தொடங்குவோம். இங்கே கணபதியின் இயல்புகளைச் சிந்தித்துப் பார்த்தோம்; புத்தியில் வைத்தோம். அப்போது அவனிடத்தில் பக்தி தோன்றுகிறது. உடனே, அவனைப் பணிய வேண்டும் என்ற உணர்வு எழுகிறது. அவன் திருவடிகளில் விழுந்து வணங்குகிறோம்.
திருமூலர் அவன் இயல்புகளைப் புந்தியில் வைத்தார்; பின்பு அவன் அடியைப் பணிந்து வணங்குகிறார்.
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
(புத்தியில் வைத்துத் திருவடிகளைப் பணிகின்றேன்.)
‘ஐந்து கரமும் ஆனை முகமும் பிறையைப் போன்ற ஒற்றைக் கொம்பும் உடையவன் விநாயகன்; அவன் சிவகுமாரன்; ஞான சொரூபி. அதனைத் தியானித்து அவன் திருவடியை வணங்குகிறேன்’ என்று திருமூலர் பாடுகிறார்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்றுகின் றேனே.
(இந்து-சந்திரன். வடசொல் ஆதலின் உகரம் முற்றுகரமாகக் கெடாமல் நின்றது. எயிறு-கொம்பு; எயிற்றன்-கொம்பை உடையவன். புந்தி; புத்தி யென்பதன் திரிபு. ஐந்து கரத்தன் முதலிய யாவும் விநாயகனையே குறித்தன.)
இவன் அருளுவான் என்ற நம்பிக்கையோடு கணபதியை அணுகுவதால், அந்த நம்பிக்கையை அருளும் ஐங்கரங்களை முதலில் சொன்னார். தன்னிடம் ஒன்று இல்லாதான் பிறனுக்கு எவ்வாறு கொடுக்க இயலும்? இவன் பிறருக்கு அளிக்கும் பொருளாகிய அறிவு நிரம்பப் பெற்றவன் என்பதற்கு ஆனைமுகத்தன் என்று பின் கூறினார். கொடுக்கும் கையும், பொருளும் உடையவனானாலும் அருளும் இயல்பு உண்டோ என்று ஐயுறுவாருக்கு, அநுக்கிரக சக்தியுடையவன் என்பதை உணர்த்த, இளம் பிறை போலும் எயிற்றன் என்றார். இவன் இப்படி இருப்பதற்கு அடி எங்கே எனின்; நந்தி மகன் என்றார். நந்திக்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ என்பாருக்கு ஞானக் கொழுந்து என்றார்.
இத்தகைய பெருமானை வெறு நிலத்தில் விளைய விடாமல் புத்தியாகிய நிலத்தில் வைத்துப் போற்றுவேன் என்றார். கரமும் முகமும் எயிறும் அவன் பெருமைகளைக் காட்டினாலும் அவை புந்தியிலே வைத்தற்குரியனவே யன்றி, யான் பற்றிக்கொள்வதற்கு உரியன அவன் திருவடிகளே என்று குறிப்பிக்க, “அடி போற்றுகின்றேனே!” என்றார்.
மனம், மொழி, மெய் என்ற மூன்று கரணங்களாலும் கடவுளைப் போற்றுதல் மரபு. ‘புந்தியில் வைத்து” என்பது மனத்தால் நினைத்தலைக் குறித்தது. “அடி போற்றுகின்றேன்” என்றது மெய்யால் வழிபடுதலைக் குறித்தது. வாக்கால் வழுத்துகிறேன் என்று தனியே எடுத்துச் சொல்லாவிட்டாலும், இந்தப் பாட்டை அருளியதே வாக்கின் செயலாதலின் மொழியால் போற்றியதாயிற்று; இது உடம்படுபுணர்த்தல் என்பதன்பாற் படும்.
இந்தப் பாட்டுத் திருமந்திரத்தில் உள்ள காப்புச் செய்யுள்.


