
ஆர் அறிவார்!
அடியார்: திருமூலதேவரே, தேவரீர் இறைவனைப் பற்றி எவ்வளவோ விரிவாகத் தெரிந்து கொண்டிருப்பீர்களே; அவற்றை ஒன்றும் குறைவின்றிச் சொல்ல வேண்டும். இறைவன் பெருமையை முற்றும் கேட்க எங்களுக்கு ஆசை.
திருமூலர்: பெம்பெருமான் பெருமையையா கேட்கிறீர்கள்? எங்கள் அண்ணல் பெருமையை முற்றும் அறியும் ஆற்றல் உள்ளவர் யார்?
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை!
அடியார்: அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நீங்கள் இறைவன் திருவருளில் மூழ்கியவர்களாயிற்றே. அவன் மிகமிகப் பெரியவன் என்று நூல்கள் சொல்கின்றனவே. அவன் எவ்வளவு பெரியவன்? அகலம், நீளம் என்று கணக்குச் சொன்னால்தான் எங்களுக்கு விளங்கும்.
திருமூலர்: அவனுடைய வியாபகத்தைக் கேட்கிறீர்களா? அவனுடைய அகலத்தையும் நீளத்தையும் அளக்க நம்முடைய அறிவுக்கு ஆற்றல் ஏது? சர்க்கரைப் பொம்மையைப் கடலில் விட்டு அதன் ஆழத்தைப் பார்க்கலாமோ? அளந்து பார்க்கும் உள்ளம் அவனூடே கரைந்து போகுமே யன்றித் தனியே நின்று பார்த்துக்கொண்டிருக்குமா?
ஆர்அறி வார்அந்த அகலமும் நிகளமும்.
அடியார்: அளவு தெரியாது என்றால் ஒன்று சொல்லுங்கள். அவனுக்கு எத்தனையோ பேர்களைச் சொல்லுகிறார்களே; அவனுக்குச் சொந்தமான பேர் எது ? உங்களுக்கு அந்த இரகசியம் தெரிந்திருக்குமே!
திருமூலர்: பலர் பல விதமாகச் சாட்சி சொன்னால் அத்தனை சாட்சியும் பொய் என்றுதானே கொள்ள வேண்டும்?
அடியார்: எல்லாப் பேர்களும் பொய்யானால் மெய்யான பெயர் எது?
திருமூலர்: அது பேர் அறியாத பொருள்.
அடியார்: எல்லோருக்கும் சம்மதமாக அவனை எவ்வாறு சொல்வது?
திருமூலர்: அவனைப் பெருஞ்சுடர் என்று சொல்லலாம். நட்சத்திரங்களும் சூரிய சந்திர அக்கினிகளும் சிறுசுடர்கள். இந்தச் சுடர்கள் எல்லாவற்றிற்கும் மேலான பெரிய சுடர் அது. அந்தச் சுடரின் ஒளியைத்தான் இந்தச் சிறிய சுடர்கள் பெற்று விளங்குகின்றன.
அடியார்: அவனுக்கு அளவு தெரியாது, பேர் தெரியாது என்று சொல்கிறீர்களே! பின்பு என்னதான் சொல்லப் போகிறீர்கள்? அவனுடைய ஆதி வரலாறு தெரியுமா?
திருமூலர்: ஆதியில்லாதவன் அவன்; அநாதி. அந்தக் கற்பக விருட்சத்துக்கு வேர் இன்னது என்று யாரும் உணர்ந்தார் இல்லை; நானும் உணர்ந்திலேன்.
அடியார்: நீங்கள் பாடத் தொடங்கினீர்களே! ஒன்றும் தெரியாது என்று சொல்லும் நீங்கள் எதைத்தான் பாடப் போகிறீர்கள்?
திருமூலர்: அவனைப் பற்றித்தான் சொல்லப் போகிறேன். அவனுடைய வேரை அறியாமல் விளம்பத் தொடங்குகிறேன். அதனை அறிந்துவிட்டால் விளம்ப இயலாது: ‘கண்டவர் விண்டிலர்’ என்று கேட்டதில்லையா?
அடியார்: அதன் வேரை அறியாமல் எப்படி விளம்ப முடியும்?
திருமூலர்: எல்லை கட்டி இன்னதுதான் என்று சொல்ல இயலாதேயன்றி, அரைகுறையாகக் கண்ட அளவில் சொல்ல இயலாதா?’ கடல் கண்டோம்’ என்றால், ‘கடல் முழுவதையும் கண்டோம்’ என்றா பொருள்? அவரவர்கள் ஆற்றலுக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்றபடி கடலின் பகுதியைக் காண்கிறார்கள். நானும் அவ்வாறே கண்டதை விளம்புகிறேன். என் சொல்லுக்கு அடங்கிய அளவுடைய பொருள் அன்று அது. ஆயினும் நான் அதைப்பற்றி விளம்புகின்றேன்.
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை!
ஆர்அறி வார்அந்த அகலமும் நிகளமும்!
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்று; அதன்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
(எங்கள் பெருமானது பெருமையை யார் அறிவார்கள்? அவனுடைய அகலத்தையும் நீளத்தையும் யார் அறிவார்கள்? கடவுள் பலர் அல்ல. பேர் இன்னது என்பதை அறியாத பெரிய சுடர் ஒன்றுதான் உண்மைக் கடவுள்; அச்சுடரின் மூலத்தை அறியாமல் நான் இவற்றைச் சொல்லுகிறேன்.
அண்ணல்-தலைவன். நிகளம்-நீளம். அறியாமை-அறியாமல்.)
இறைவன் அருளால் பேரறிவு பெற்றவரும், ஆகமத்தின் நுட்பங்களைத் தமிழிலே பாடப் புகுந்தவருமாகிய திருமூலரே அவையடக்கமாக, “வேர் அறியாமல் விளம்புகின்றேனே” என்று சொன்னால் ஏனையோர்களைப் பற்றி என்ன சொல்வது!
இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டு இன்புறுபவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே உடம்புடன் உலகில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு நிலைகள் உண்டு. இந்த உலகையும் உடலையும் மறந்த இன்பத்தில் கரைந்து நிற்கும் நிலை ஒன்று. அந்த நிலையிலிருந்து மீண்டும் உலக நினைவுக்கு வரும் நிலை ஒன்று. உலக நினைவுக்கு வரும்போது அவர்கள் பேசுகிறார்கள்; அந்தப் பேச்சில் அவர்கள் அநுபவித்த இன்பத்தின் வாசனை இருக்கும்; பெருமிதத்தோடு பேசுவார்கள். உலக நினைவும் இருப்பதால் உலகத்தோடு ஒட்டியும் பேசுவார்கள்; அப்படிப் பேசும்போது அது குணமும் பணிவும் நிறைந்த பேச்சாக இருக்கும். நன்றாகக் கனிந்த பழத்தில் கண்ணுக்குத் தெரியாதபடி உள்ளே கனிந்த சாறு நிறைந்திருக்கும்; அது கனிந்ததை அதன் நிறத்தில் உண்டான மாறுபாடு தெரிவிக்கும். மாம்பழம் கனிந்தால் அதன் புளிப்பு இனிப்பாக மாறுகிறது; அது உள் மாற்றம். அப்படியே இறைவன் திருவருளில் ஒன்றி இன்புற்றவர்களுக்கு அவர்கள் மாத்திரம் உணரும் அனுபவம் ஏற்படும். அதோடு புறத்தாருக்கும் புலனாகும்படி அவர்களுடைய இயல்புகளில் மாறுபாடு உண்டாகும்; நெகிழ்ச்சியும் பணிவும் இனிமையும் அவர்களுடைய பேச்சிலும் செயலிலும் அமையும். அவை பழக்கத்தால் அமைவன அல்ல. அவர்கள் பெற்ற அநுபவத்தின் முதிர்ச்சி அந்த நிலையைப் புறத்திலும் உண்டாக்கும்.
இறைவனுடைய திருவருளில் ஈடுபட்டவர்களின் வாக்கில் இந்த இயல்புகள் யாவும் வெளியாகும். அவர்கள் உண்முகமாக இன்றி வெளி முகத்துக்கு வந்தவுடனே, பாடும்போது தாம் பெற்ற இன்பத்தைப் பெருமிதத்தோடு பாடுவார்கள். கருடன் தன் இரு சிறகுகளையும் விரித்து வானத்தில் எந்தப் பறவையும் செல்லாத உயரத்தில் மிதப்பதுபோல இருக்கும் அந்த நிலை. சற்றே கண் விழித்துப் பார்த்து உலகத்தவர் படும் வேதனைகளை உளம் கொள்ளும்போது அவர்கள் உள்ளத்தில் கருணை பிறக்கும். அப்போது மக்களைப் பார்த்து, “வீணாகக் கெட்டுப் போகாமல் இப்படிச் செய்யுங்கள்” என்ற உபதேசம் பிறக்கும். பின்னும் உலக நினைவு உள்ளத்திலே பதிந்து மற்ற மக்களோடு ஒருவராகக் கலந்து பழகும்போது, தாம் யாவரினும் இழிந்தவர்களைப் போலப் பேசும் பணிவு பிறக்கும். ”பணியுமாம் என்றும் பெருமை” என்ற குறளுக்கு இலக்கியமாக இருப்பார்கள். பின்னும் மிகுதியாக உலகத்தில் நிலையை உணரும்போது; அவர்கள் மற்ற மக்களோடு தம்மையும் ஒருவராக வைத்து அவர்கள் செய்யும் குற்றங்களைத் தம்முடையனவாகவே ஏறட்டுக்கொண்டு இரங்குவார்கள். முதல் நிலையில் நின்று பேசும் பெருமிதப் பேச்சுக்கும், இந்த நிலையில் நின்று பேசும் இரக்கப் பேச்சுக்கும் உள்ள வேறுபாடு பெரிதாகத் தோற்றும். நிலத்தில் மலையும் மடுவும் உண்மையாகவே பலகாலம் இருக்கும் மேடு பள்ளங்கள். அத்தகையன அல்ல இந்த நிலைகள். கடற்பரப்பில் திடீரென்று பேரலையும் அதையடுத்துக் குழிவும் உண்டாவது அடுத்த கணத்தில் மாறிச் சமம் பெறும். உண்மையில் இருப்பது அந்தச் சம நிலைதான்.
திருமூலர் இந்த அவையடக்கம் கூறும் நிலை பணிவான நிலை. இது அவருடைய குணச் சிறப்புக்கு அடையாளமாக நிற்கிறது.
திருமந்திரத்தில் பாயிரத்தில் வரும் பாடல் இது.


