
தர்மத்தின் வழி நடந்தால்…
பவனா என்ற ஊரில் கௌதமன் என்பவன் வாழ்ந்து வந்தான்.பிறப்பால் பிராமணன் ஆயினும், அவன் தாயின் தூண்டுதலால் எந்தத் தீய காரியத்தையும் அஞ்சாமல் செய்யும் துணிவு பெற்றிருந்தான். அப்படி இருந்தும் வைசிய குலத்தைச் சேர்ந்த மணிகுண்டலன் என்பவன் இவனுக்கு நண்பனாக இருந்தான். மணிகுண்டலன் பெருஞ் செல்வந்தருடைய மகன். சூழ்ச்சிக்காரனாகிய கெளதமன் தோழனிடமிருந்து பொருளைக் கொள்ளை அடிக்க நினைத்தான். அது உள்ளூரில் முடியாத காரியம் ஆயிற்று. எனவே நல்லவன் போல் நண்பனைப் பார்த்து, “மணிகுண்டலா! நாம் இருவரும் வெளியூர் சென்று வாணிபம் செய்து பொருள் ஈட்டி வரலாம்” என்றான். இத்திட்டத்திற்கு மணிகுண்டலன் உடன்படவில்லை. ”நண்பனே! என் தந்தையிடம் பெருஞ்செல்வம் குவிந்து கிடக்கிறது. நான் ஏன் வெளியூர் சென்று பொருள் தேட வேண்டும்?” என்றான். சூழ்ச்சிக்காரனாகிய கௌதமன், “நண்பனே! மலைபோன்ற செல்வம் தந்தையிடம் இருந்தாலும் மகன் அதை அனுபவிப்பதில் பெருமை இல்லை. தானாகச் சம்பாதிப்பதுதான் சிறப்பாகும்” என்றான். இந்த வாதத்தை மணிகுண்டலன் ஏற்றுக் கொண்டதால் பெரும் பொருளுடன் இருவரும் வெளியூர்களுக்குச் சென்று வாணிபம் செய்தனர். கௌதமன் மிக ஏழை ஆதலால், முதலாகப் போட்ட பொருள் முழுவதும் மணிகுண்டலனுடையதே ஆகும். வியாபாரம் நன்கு நடக்கவே தோழர்கள் வருமானத்தைப் பங்கிட்டுக் கொண்டனர்.
எந்த நிலையிலும் தர்மம்தான் சிறந்தது. தர்ம வழி செல்வதே சிறப்புடையது என்று மணிகுண்டலன் கூறிக் கொண்டிருப்பான். பிராமணனாகப் பிறந்த கௌதமன், “பைத்தியக்காரத்தனம். தர்மமாவது, ஒன்றாவது! எப்படியாவது பொருளைச் சேகரித்து வாழ்வதே புத்திசாலித்தனம்” என்றான். கருத்து வேறுபாடு முற்றவே கௌதமன் ஒரு வழி சொன்னான். “மணிகுண்டலா! நாம் வெளியில் பார்க்கும் பலரையும் இதுபற்றிக் கேட்கலாம். அவர்கள் தர்மம்தான் சிறந்தது என்று சொன்னால், என் பங்குக்குரிய செல்வம் முழுவதையும் உனக்குத் தந்து விடுகிறேன். நான் சொல்வதுதான் சரி என்றால் உன் பங்குக்குரிய செல்வம் முழுவதையும் எனக்குத் தந்துவிடவேண்டும்” என்றான். அப்பாவியாகிய மணிகுண்டலன் அதற்குச் சம்மதித்தான். வழியில் போவோர்களைச் சந்தித்துக் கேட்டார்கள். அறிவில்லாத அந்தச் சாதாரண மக்கள் கௌதமன் சொல்வதுதான் சரி என்றனர். மணிகுண்டலன் பங்கு முழுவதும் கௌதமனுக்குப் போய்விட்டது. மறுபடியும் வியாபாரம் நடந்தது. மணிகுண்டலன் தான் சொன்னதையே சொன்னான். இரண்டாம் முறை பந்தயம் கட்டி மணி குண்டலன் கருத்தை யாரும் பேசாததால் கௌதமன் அவன் கைகளை வெட்டி எறிந்தான். அந்நிலையிலும் மணிகுண்டலன் தர்மத்தின் சிறப்பைப் பேசிக் கொண்டிருந்தான். அவனை ஒழித்துவிட எண்ணிய கௌதமன், மறுபடியும் பந்தயம் கட்டி தான் ஜெயித்தவுடன் மணிகுண்டலனின் இருகண்களையும் பிடுங்கி விட்டான். அப்பொழுதும் மணிகுண்டலன் தன் கொள்கையினின்று மாறவே இல்லை. தர்மம்தான் சிறந்தது, அது இறுதியில் வெல்லும் என்று சொல்லிக் கொண்டு எங்கெங்கோ அலைந்து கங்கைக் கரையில் உள்ள விஷ்ணுவின் சிலைக்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தான். அங்கேயே படுத்தும் விட்டான். நடு இரவில் இலங்கையில் இருந்து விபீஷணனும் அவன் காவலர்களும் இந்த விஷ்ணுவின் சிலைக்கு பூஜை செய்ய வந்தனர். அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த விபீடணனின் மகன், கண்ணிழந்த மணிகுண்டலனைப் பார்த்து அவன் வரலாறு முழுவதையும் தெரிந்து கொண்டான். அவன் சோகக் கதையைத் தந்தையாகிய விபீடணனிடம் சொன்னான். அப்போது வீடணன், “மகனே! இராம் – இராவண யுத்தத்தின்போது அனுமன் மருத்து மலையினைக் கொண்டு வந்தான். திருப்பி அம்மலையை அனுமன் எடுத்துச் செல்லும்போது அதி அற்புதம் வாய்ந்த விஷல்யகரணி என்ற மரத்தின் ஒரு பகுதி இங்கு விழுந்துவிட்டது. அதைத் தேடிப் பார்க்கலாம் என்று சொல்லித் தேடி, இறுதியில் அது பெரிய மரமாக வளர்ந்திருப்பதைக் கண்டார்கள். அதில் ஒரு சிறு கிளையை உடைத்து வந்து மணிகுண்டலன் மேல் போட்டவுடன் இழந்த கை, கண்கள் ஆகியவை பெற்று முழுவடிவுடன் விளங்கினான்.
ஒரு சிறிய நாட்டில் ஆட்சி செய்த அரசனுடைய ஒரே மகள் கண்களை இழந்து சோகத்தில் மூழ்கி இருந்தாள். தம் மகளின் கண்களை யார் சரி செய்கிறார்களோ அவர்கள் அவளைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டையும் ஆளலாம் என்று கூறியிருந்தார் அந்த அரசர். இதை அறிந்த மணிகுண்டலன் தனக்குத் தெரிந்த மருந்துச் செடியின் உதவியால் அரசகுமாரியின் இழந்த கண்களைப் பெறுமாறு செய்து, அவளைத் திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டை ஆண்டான். சில காலம் கழித்து காவலர்கள் ஒருவனைக் கொண்டுவந்து அவன்முன் நிறுத்தினர். அவன் வேறு யாருமல்ல, தீய வழியில் சென்று மணிகுண்டலன் பொருட்களையும் அபகரித்துக் கொண்டு அவனையும் கொல்ல நினைத்த கௌதமன் என்ற பிராமணனே ஆவான். மணி குண்டலன் அவனை அடையாளம் தெரிந்து கொண்டு அவனை மன்னித்து வேண்டுமான திரவியங்களும் தந்தான்.
தருமம் இறுதியில் வென்றது.


