தொட்டிலில் வளரும் முருகன்

சோழ நாட்டில் விளத்தொட்டி என்ற ஊர் இருக்கிறது. குத்தாலம் ரெயில்வே நிலையத்துக்கு வடக்கே உள்ளது அது. அந்த ஊரில் முருகக்கடவுள் தொட்டிலில் வளரும் குழந்தையாக, இள முருகனாகக் காட்சி அளிக்கிறான். அந்த ஊருக்கு வில்வவனமென்றும், கூவிளங் காடென்றும் பெயர்கள் உண்டு. கூவிளம் என்பது வில்வத்துக்குப் பெயர். கூவிளம் என்பதிலுள்ள பிற்பகுதியும் முருகன் வளரும் தொட்டிலால் சிறப்புடைமையால் தொட்டி என்னும் பெயரும் இணைந்து விளத்தொட்டி என்ற பெயர் வந்ததாம். தொட்டிலைத் தொட்டி என்றும் வழங்குவர். முருகன் தொட்டிலில் என்றும் இளைய குழந்தையாக வளர்வதனால் அந்த ஊரில் இன்றும் யாரும் குழந்தைகளைத் தொட்டிலில் விடுவதில்லை. துணியைக் கட்டி அந்தத் தூளியில் விடுவதே வழக்கமாக இருக்கிறது.

இந்தத் தலத்துக்கு ஒரு தமிழ்ப் புராணம் இருக்கிறது. அதனைப் பாடியவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். அந்தப் புராணத்தில் முருகன் இங்கே தொட்டிலில் வளரும் வரலாற்றைச் சொல்லும் “விளத்தொட்டிப் படலம்” என்ற பெயருடன் ஒரு படலமே இருக்கிறது. அந்த வரலாற்றை இங்கே பார்க்கலாம்.

வில்வ வனமாகிய விளத்தொட்டியில் எழுந்தருளியிருக்கும் அம்பிகை கரும்பிரத நாயகி. சிவபெருமானுக்கு வில்வ மூல நாதர் என்று திருநாமம்.

எம்பெருமானும் எம்பெருமாட்டியும் இந்தத் திருத் தலத்தில் எழுந்தருளி, வந்து பணிவார்களுக்கு வேண்டிய நலங்களை வழங்கி மகிழ்ந்திருந்தனர். அப்போது தனக்கு ஒரு மகவு வேண்டும் என்ற விருப்பம் அம்மைக்கு உண்டாயிற்று.

எப்போதும் கன்னியாக இருக்கும் அம்மை இந்தத் தலத்தில் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தக் கருதினாள். இறைவன் சுடர்க் கண்ணிலே பொறியாகத் தோன்றிப் பின்பு சரவணப்பூம் பொய்கையில் ஆறு வேறு குழந்தைகளாக வளர்ந்த முருகனைத் தன் கையால் அணைத்து ஓர் உருவமாக்கிப் பொற்கிண்ணத்தில் கறந்த பாலை ஊட்டியருளினாள், முன்பு. முருகன் தன் திருவயிற்றில் பிறந்து, குழந்தைக்குச் செய்ய வேண்டிய அருமைப்பாடுகளை யெல்லாம் செய்து அவனை வளர்க்க வேண்டும் என்று திருவுள்ளங் கொண்டாள், எம்பிராட்டி. இறைவனும் உடம்பட்டான்.

அவ்வாறே முருகனைக் கருக்கொண்ட பிராட்டி ஒரு நல்ல நாளில் குழந்தையைக் கருவுயிர்த்தாள்.

“இருநகிலும் பச்சை நரம் பெழுந்தோட மெய்விளர்ப்பக்
கருமுதிர்ந்து, பெருந்திருப்பாற் கடல் உயிர்த்த முழுமதிபோல்,
பொருவில்சலஞ் சலம்உயிர்த்த முத்தேபோல்,பொற்புமலி
திருமகவை இனிதுயிர்த்தாள் சேண்உலகெலாம் உயிர்த்தாள்.”

[நகில் – தனம். விளர்ப்ப – வெண்ணிறம் பூண. உயிர்த்த -பெற்ற. பொரு இல் – ஒப்பற்ற. சலஞ்சலம் – உயர்ந்த சாதிச் சங்கு. சேண் உலகு – நெடுந்தூரம் பரவிய உலகங்கள், உயிர்த்தாள் – பெற்றாள்.]

பிறந்த குழந்தையைக் கண்டு அளவற்ற மகிழ்பூத்து எண்ணெய் நீராட்டினாள் கரும்பிரத நாயகி. திருமகளும் கலைமகளும் அம்மைக்குப் பாங்கியராக இருந்து ஏவல் புரிந்தார்கள். நீராட்டி மெய் துடைத்துத் திருநீற்றுக் காப்பு அணிந்து பால் கொடுத்து வளர்த்தாள். கண்கொள்ளா அழகுடன் குழந்தை வளர்ந்து வந்தது.

முருகன் குப்புறக் கிடந்து ஒரு காலை மேலே தூக்கி உதைந்து செங்கீரையாடினான். பொற்றொட் டாமரைக் குளத்தில் உறங்கினான்.

அம்மை தாலாட்டினாள். அவன் இருந்து சப்பாணி கொட்டினான். தன் தாய் தந்தையர் ஆவலுடன் அணைக்க அவர்களுக்கு முத்தம் அளித்து உவகை ஊட்டினான். மெல்ல மெல்லத் தளர்நடையிட்டு நடந்தான். அப்போது உமையும் பிறரும்,

“வருகசுரர் குலக்கொழுந்தே,வருகமறைப் பெருந்திருவே
வருகமழ இளங்களிறே, வருகஅருட் பசுங்குருந்தே,
வருகசுடர் மணிவிளக்கே, வருகநறுஞ் சுவையமுதே,
வருகஇரு கண்மணியே, வருக வருக”

என்று ஆவலோடு அழைத்து இன்புற்றனர். அம்புலி மானை முருகன் வாவா என்று அழைத்தான். திருவீதியிற் சென்று புழுதி திருமேனியிற் படிய விளையாடிச் சிறுமியர் கட்டிய சிற்றில்களையெல்லாம் தன் திருவடியால் சிதைத்தான். சிறு பறை கொட்டினான். சிறு தேர் உருட்டினான்.

இப்படிக் குழந்தை பலவகை விளையாடல்களையும் அயர்வது கண்டு கண்ணும் மனமும் குளிர்ந்தாள், கரும்பிரத நாயகி. உச்சியில் கொண்டை அணிந்து, நுதலில் பொட்டணிந்து, கண்ணுக்கு மையிட்டு, காதுக்குக் குதம்பை புனைந்து, மார்பில் ஐம்படை புனைந்து, அரைக்கு மணி கட்டி, காலுக்குத் தண்டை பூட்டி அழகு கண்டு மகிழ்வுற்றாள். அவனை அணைத்து அணைத்து இன்புற்றாள். பலகால் முத்தமிட்டுப் புளகம் போர்த்தாள். அவன் நடப்பதைக் கண்டு கண்டு பூரித்தாள். மென்மழலை கேட்டு உவகைக் கடல் குனித்தாள். இப்படியே என்றும் இளம் பருவம் மாறாமல் முருகன் குழந்தையாகவே இருக்க, தான் அவனை இடைவிடாமல் சீராட்ட வேண்டுமென்ற ஆர்வம் உண்டாயிற்று, அம்மைக்கு.

தன்னுடைய விருப்பத்தை இறைவனிடம் தெரிவித்தாள் கரும்பிரதநாயகி. “எம்பெருமானே, இளங் குழந்தையினால் தாய் தந்தையர் அடையும் இன்பத்துக்கு ஈடாக எதுவுமே இல்லை. குழந்தைப் பருவம் தீர்ந்து பெரியவனானால் கொஞ்சி அணைத்து முத்தமிட்டுச் சீராட்டி அவற்றால் வரும் இன்பம் அடைய முடியாது. இவன் என்றும் இளையனாக இருந்தால் என்றும் மாறாத இன்பம் அடையலாம். இவனைச் சரவணத்தில் குழந்தையாக அடைந்தபோது அமரர்கள் சூரனை அழிக்க வேண்டுமென்று வேண்டினார்கள். அதனால் குழந்தையாக இருந்தவன் குமரனாக வளர்ந்தான். அமரர் சேனைத் தலைவனானான். சூரசங்காரம் செய்தான். குழந்தையினிடம் காணும் இன்பத்தை எப்போதும் பெற இயலவில்லை. அப்படி இன்றி இத்தலத்தில் இவன் என்றும் இளைய குழந்தையாக இருக்கும்படி அருள் புரியவேண்டும்” என்று வேண்டினாள்.

“உன் விருப்பம் நிறைவேறட்டும்” என்று இறைவன் திருவருள் பாலித்தான்.

‘எப்போதும் தொட்டிலில் விட்டுத் தாலாட்டுப் பாடி இன்புற ஆவல் எழுகிறது. ஆதலின் முருகன் தொட்டிற் பருவத் தினனாக இருக்கவேண்டும். இந்த ஊருக்கும் தொட்டியினால் பெயர் அமையவேண்டும்’ என்று பின்னும் வேண்டினாள் பிராட்டி.

இறைவன்,”அவ்வாறே ஆகுக” என்று அருளினான். அன்றிலிருந்து இங்கே முருகன் தொட்டியில் வளரும் இள முருகனாகவே எழுந்தருளியிருக்கிறான். அவன் தொட்டியில் வளர்வதனால், அவனுக்குச் சமானமாக மானிடக் குழந்தைகளுக்குத் தொட்டில் இடுவது முறையன்று என்று எண்ணி இந்த ஊரினர் தம் குழந்தைகளைத் தொட்டிலில் விட்டுத் தாலாட்டுவதில்லை; தூளி முதலியவற்றில் விட்டு உறங்கச் செய்கின்றனர்.

“தொட்டியமர்ந் தொருபால சுப்பிரமணியச்செம்பொற்
கட்டிஇனி தென்றும் உறுங் காரணத்தால் அனையவிளத்
தொட்டிநகர் வாழ்வார்தம் சூழ்மனையின் மழத்தொட்டி
கட்டிஅறி யார்வேறு கட்டிவளர்த் தோங்குவார்.”

[தொட்டி-தொட்டில். மழத்தொட்டி – குழந்தைகளுக்குரிய தொட்டில். வேறு – வேறு வகையான தூளி முதலியவற்றை வளர்த்து – உறங்கச் செய்து.]

அங்கங்கே இப்படி முருகன் சம்பந்தமாகப் பல வரலாறுகள் வழங்கி வருகின்றன. அவை அனைத்தும் கந்தபுராணக் கதைக்குப் புறம்பாக இருக்கலாம். சில சிறந்த கருத்தோடு இருக்கலாம். சில அவ்வளவு உயர்ந்தனவாக இராமலும் இருக்கலாம். ஆயினும் முருகப் பெருமானை என்றும் குழந்தையாகவே வைத்து வழிபடும் ஆவலால் அப்படி ஒரு சிற்பமும் அதற்கு ஒரு வரலாறும் அன்பர்கள் அமைத்துக் கொண் டார்கள் என்று ஆராய்ச்சி மனப்பான்மையோடு முடிவுகட்டலாம். எப்படியானாலும் முருக வழிபாடு தமிழர் நெஞ்சில் எப்படியெல்லாம் புகுந்து உருவாகிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

ஒம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *