கிரௌஞ்ச மலை

மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென் று நினைக்கிறான். பல சமயங்களில் அவன் அதை மீட்டும் மீட்டும் நினைப்பதில்லை. அதனால் அந்த நினைப்புச் செயலாக மாறுவதில்லை. எண்ணிய எண்ணத்தில் திண்மை இன்மையால் செயலாக மாறி அதில் வெற்றியடையுமட்டும் அந்த எண்ணம் சிதறாமல் இருப்பதில்லை. பல சமயங்களில் அவன் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறது. திண்ணிய நெஞ்சத்தில் எண்ணி, அந்த எண்ணத்தைப் பலகாலும் எண்ணி உரம் ஏற்றி, செயலில் இறங்கி, தளராது முயன்று உழைப்பவர்களுக்குக் கூட எண்ணிய அளவுக்கு வெற்றி கிடைப்பதில்லை. ‘அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை’ என்பது. போல ஓரளவு வெற்றி கிடைத்தாலே போதும் என்ற நிறைவு உண்டாகி விடுகிறது. ஒரே சமயத்தில் பல வேலைகளில் ஈடு படுகிறவர்களுக்கு எதுவும் முற்றுவதில்லை. ஒரே செயலில் ஈடுபடுகிறவர்களுக்கோ எண்ணிய அளவில் குறைவாகவே பயன் கிடைக்கிறது. இவ்வளவும் மனிதனது ஆற்றல் சிறியது என்பதைக் காட்டுகின்றன. அற்பசக்தி உடையவன் அவன்.

இறைவனோ எல்லாம் வல்லவன்; சர்வசக்திமான். அவன் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் இயங்கப் பண்ணுகிறான். அந்த அந்தப் பொருள்கள் தம்தம் இயல்புக்கேற்ப இயங்கும் படி ஆணை செலுத்துகிறான். அவனுடைய பேராற்றலே அதற்குக் காரணம். வரம்பிலா ஆற்றலுடையவன் கடவுள் என்பர் பெரியோர்.

முருகப் பெருமானுடைய பேராற்றலை முற்றும் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பும் அறிவும் நமக்கு இல்லை, ஆயினும் கந்த புராணத்தாலும், அருணகிரியார் முதலிய அநுபூதிமான்களின் திருவாக்குக்களாலும் ஓரளவு தெரிந்து கொள்கிறோம்.ஆயிரத்தெட்டுக் கோடி அண்டங்களை ஆண்டு அறுபத்தாறு கோடி அசுரர்களைத் தன் சேனாவீரர்களாகக் கொண்ட மாயாவியாகிய சூரபத்மனை முப்பத்து முக்கோடி தேவர்களால் அழிக்க முடியவில்லை. எல்லோருக்கும் வரம் வழங்கி வலியராக்கும் அவர்கள் வலிமை சூரனுக்குமுன் மங்கியது. இந்திரனுடைய ஆயுதங்கள் சூரனுடைய மாயத் துக்குமுன் ஒன்றும் செய்ய இயலாதவையாயின. அத்தகைய வலிமையுடைய சூரபன்மனை முருகன் அழித்தான். வேலை வீசி அவனை மாய்த்தான். சூரசங்காரம் என்பது தேவர் களுக்கு வியப்பைத் தரும் செயல். இறைவனுக்கோ விளையாட்டு.

முருகன் சூரனை அழித்த வீரத் திருவிளையாட்டை அழகு படப் பரஞ்சோதி முனிவர் பாடுகிறார்.

முருகன் ஆறுமுகம் உடையவன். அவன் ஒரே சமயத் தில் ஆறு காரியங்களை நிகழ்த்தும் வன்மை உடையவன். ஆறுமுகன் வலை எடுத்து வீசியதால் ஆறு நிகழ்ச்சிகள் நிகழ்ந்தனவாம். மறம் என்பது வீரம்; மறங்குலவு வேல் எடுத்து வீசிய குமரவேளின் திருவடிகளை வணக்கம் செய்கிறார் முனிவர்.

முருகன் வேலை ஓச்சினபோது ஆறு இடங்களில் ஆறு விளைவுகள் உண்டாயின. அந்த ஆறையும் மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டை அடக்கினார். முருகன் வேலை எடுத்து வீசியதால் இரண்டு கடல்கள் கலங்கினவாம்; இரண்டு மலைகள் பிளந்தனவாம்; இரண்டு தழல்கள் மூண்டனவாம். இந்த இரட்டைகளில் ஒன்று இயல்பானது: மற்றொன்று உருவகம்.

சுழலுகின்ற அலைகளையுடைய கடல் கலங்கியது. சூரபன்மன் பலவகையில் போர் செய்து செய்து தோல்வியையே அடைந்தான். பல்வேறு உருவங்களை எடுத்துப் போராடினான். அவ்வளவையும் முருகன் குலைத்தான். இறுதியில் அசுர வேந்தன் ஒரு மாமரமாகி உருவெடுத்துக் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். அப்போது முருகன் தன் வேலை விட்டான். அது முதலில் அந்தக் கடலைக் கலக்கிச் சுவறச் செய்தது. அதனால் உள்ளே புகுந்திருந்த சூரன் மறைவின்றி வெளிப் பட்டான். இது இயற்கைக் கடலின் அழிவு.

முருகன் அவுணக் கூட்டத்தை அழித்தான். சிங்க முகன், தாருகன், பானுகோபன், அவர்கள் தலைமையில் போரிட வந்தவர்கள் யாவரும் அழிந்தனர். அறுபத்தாறு கோடிபேர் அசுரர்கள் என்றால் அந்தக் கூட்டம் சிறியதாகவா இருக்கும்? பெருங்கடல் போல் படர்ந்து பெருகி நின்றது. அந்தக் கடலையும் தன் வேலால் முருகன் அழித்தான். இது உருவகக் கடலின் அழிவு.

கறங்குதிரைக் கருங்கடலும்
காரவுணப் பெருங்கடலும் கலங்க.

அடுத்தபடி இரண்டு மலைகள் பிளந்ததைச் சொல்கிறார். முருகன் கிரௌஞ்ச மலையைப் பிளந்தான். கிரௌஞ்சம் என்பது அன்றிற் பறவைக்குப் பேர். ஓர் அசுரன் அன்றில் வடிவத்தில் இருந்த மலையாக இருந்தான். அவனுக்குக் கிரௌஞ்சாசுரன் என்று பெயர். அந்த மலை எப்போதும் பறந்துகொண்டே இருக்கும். மக்கள் நிரம்பியுள்ள இடத்தில் மேலிருந்து வந்து தங்கும். அதன்கீழ் அகப்பட்டுப் பல்லாயிர மக்கள் சாவார்கள். அன்றில் இணைபிரியாத அன்புக்கு உதாரணமாக விளங்குவது. அதன் உருவத்தை எடுத்துக் கொண்டவன் அசுரனாதலின் நேர்விரோதமாகப் பகையையும் பயத்தையும் அழிவையும் வளர்த்தான். அந்த மலையின்மேல் வேலை ஓச்சிப் பொடிப் பொடியாக்கினான் முருகன். இது இயற்கையான மலையைப் பிளந்த திருவிளையாடல்.

கிரௌஞ்ச மலைக்குள் ஒளிந்துகொண்டு மாயம் செய் தான் சூரபன்மன். கிரெளஞ்ச மலையைக் குத்திச் சென்ற வேல் சூரபன்மனுடைய மார்பையும் குத்திப் பிளந்தது. அந்த அசுரனுடைய நெஞ்சு உள்ளும் புறமும் கல்லைப் போன்றது; மலையைப் போலக் கடினமானது; ஈரமற்றது. அதையும் துளைத்துப் பிளந்தது முருகனது மறங்குலவு வேல். இது உருவக மலையைப் பிளந்த திருவிளையாடல்.

கார்வந்து
உறங்குசிகைப் பொருப்பும்சூர்
உரப்பொருப்பும் பிளப்ப,

இவற்றோடு இரண்டு தழல்கள் மூண்டனவாம். முருகன் வேள்வியைக் காப்பாற்றும் அருளையுடையவன்.

“அந்தண்மறை வேள்வி காவற்கார”

என்று அருணகிரி முனிவர் பாடுவார்.

“ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே”

என்பது திருமுருகாற்றுப் படை.

வேள்வி செய்து அமரர்களுக்கு அவியை அளிப்பது அந்தணர் தொழில். வேள்வியால் அவியுணவு பெறும் தேவரை “அவியுணவின் ஆன்றோர்” என்று கூறுவார் வள்ளுவர். அவர்களுடைய உணவைத் தட்டிப் பறிக்கக் காத்திருப்பவர் அசுரர்கள். தேவர்களுக்கும் அவுணர்களுக்கும் பகையாதலால் தேவர்கள் உணவுபெறும் வேள்விகளைக் குலைக்க அசுரர் முந்துவர். விசுவாமித்திர முனிவன் செய்த வேள்வியைக் குலைக்க வந்த அரக்கரை இராமன் மாய்த்த கதை இராமாயணத்தில் வருகிறது.

அசுரர் வேள்வியை அழிக்க வந்தால் அவர்களை அழித்துத் தேவர் தம் உணவைப் பெறும்படி அருள்பவன் முருகன். அதனால் அவனை வேள்வி காவலன் (பரஸ்தோமரக்ஷன்) என்று பெரியோர் கூறுவர். வேள்வியில் ‘சுப்ரம்மண்யோம்’ என்று மும்முறை கூறி ஓமம் செய்வது மரபு. முருகன் வேள்வியைக் காப்பாற்றும் பெருமான் என்னும் எண்ணத்தால் இவ்வாறு சிறப்புச் செய்கிறார்கள் வேட்கும் அந்தணர்.

முருகன் அசுரர்களை அழித்ததனால் அவர்களால் வரும் இடர் இன்றி முனிவர் வேள்வி செய்கின்றனர். வேள்வித் தீ யாதொரு தடையும் இன்றி வானளாவ எழுந்து மூள்கின்றது. இது இயற்கையான தழலின் வளர்ச்சி.

சூரனும் பிற அசுரர்களும் மாய்ந்தமையால் அவர்களுடைய மனைவிமார் மங்கலம் இழந்தனர். அசுரர்களோடு ஒன்றி இன்புற்ற வாழ்வு குலைந்தது. “இப்படி நேர்ந்ததே” என்று அவர்கள் பொருமுகிறார்கள். வயிற்றில் பகீரென்று தீப் போன்ற துயரமும் அச்சமும் ஓங்குகின்றன. இது உருவகத்தீயின் எழுச்சி.

மறை உணர்த்தோர் ஆற்றும்
அறம்குலவு மகத்தழலும்
அவுணமடவார் வயிற்றின் அழலும் மூண.

இவ்வாறு இரண்டு கடல் கலங்க, இரண்டு வரை பிளப்ப, இரண்டு தழல் மூள ஆறுமுகத்தையன் திருவிளையாடல் செய்தான். அவன் வேலெடுத்து ஓச்சினவுடன் ஆறுமுகமாக அதன் விளைவுகள் தோன்றின. திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதியார் இப்படி முருகனை வணங்குகிறார்.

ஓம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *