கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்?

சாதாரணமாகச் சில விலங்குளையும், செடி கொடிகளையும் நாம் பார்க்கிறோம். அவை மக்கட் சமுதாயத்திலிருந்து பெற்றுக் கொள்வது மிக மிகக் குறைவு. ஆம்; அவை பெற்றுக் கொண்டதைப் போன்று பன்மடங்கு பயனைத் திருப்பிக் கொடுக்கின்றன. ஒரு கறவை மாட்டை எடுத்துக் கொள்வோம். அது ஒரு ரூபாய் மதிப்புள்ள தீனி தின்றால், இரண்டு அல்லது மூன்று ரூபாய் மதிப்புள்ள பாலை நமக்குத் தருகிறது; ஒரு தென்னை மரம்! அதற்கு நாம் செலவழிப்பது எவ்வளவு, அது நமக்குத் திருப்பித் தருவது எவ்வளவு, என்று நீங்களே எண்ணிப் பாருங்கள். இப்படி விலங்குகளும், செடி, கொடி, மரங்களும் சமுதாயத்திலிருந்து சிறிதளவு பெற்றுக் கொண்டு, பெருமளவு திருப்பிக் கொடுக்கின்றன. மனிதனோ சமுதாயத்திலிருந்து பெருமளவு பெற்றுக் கொள்கிறான்; சிறிதளவு திருப்பித்தரக்கூட, விருப்பங் கொள்ளாது வெட்கப்படுகின்றான். அப்படி ஏதேனும் கொஞ்சம் கொடுக்கத் தயாரானாலும் கொடுக்கும் அளவிற்கதிகமான பாராட்டை அவன் பெற விரும்பும் நிலையைப் பார்க்கிறோம். சமுதாயத்திற்கு நிரம்பக் கொடுக்க வேண்டும். அதுதான் சிறந்த சமுதாயப் பண்பு; தூய அன்புடையவர்களின் இலட்சியம்.

அப்பரடிகள் பல ஆரவாரச் செயல்களை, போலிச் சடங்குகளைத் தம் பாடல்களில் சற்றுக் கடுமையாகவே சாடிச் சொல்கிறார்.

கங்கை ஆடிலென்?
காவிரி ஆடிலென்?
பொங்கு தண்கும
ரித்துறை ஆடிலென்?
ஓங்குமா கடல்
ஒதநீர் ஆடிலென்?
எங்கும் ஈசன்
எனாதவர்க் கில்லையே!

என்று கேட்கிறார். நீ கங்கையில் போய் நீராடி வந்திருந்தாலும் காவிரியில் போய் நீராடி வந்திருந்தாலும் என்ன பயன்? எங்கும் ஈசன் இருக்கிறான் – எவ்வுயிர்க்குள்ளும் ஈசன் உறைகிறான் என்பதை நீ உணரவேண்டும்! உயிர்களிடத்து அன்பு செய்தல் வேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஓவியத்தை உதாசீனப்படுத்திவிட்டு, ஒதுக்கித் தள்ளி விட்டு, ஓவியனைப் பாராட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது? இப்படிச் செய்வதால் ஓவியனைத் திருப்தி படுத்திவிட முடியுமா? கவிதையைக் கழிவுக் கூடையில் போட்டுவிட்டுக் கவிஞனைப் பாராட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது? அப்படிச் செய்வதால் கவிஞன் திருப்தி அடைந்து விடுவானா? படைப்புக்கு நாம் வழங்குகிற பாராட்டுக்கள் தாம் ஓவியனுக்கும் கவிஞனுக்கும் நாம் செய்கிற சிறப்பு.

குழந்தைக்கு நாம் அளிக்கிற பாராட்டுத்தான் அக்குழந்தையின் தாய்க்கு நாம் செய்கின்ற சிறப்பு. இதுதான் உலக இயல்பு. ஆனால் நமது சமுதாயத்தில் இன்று நடப்ப்தென்ன? இறைவனுக்கு எல்லா வகையான சிறப்புக்களும் செய்கின்றோம். ஆனால் இறைவனின் உடைமையாக – உறைவிடமாக, இறைவனை உணர்த்தும் பிரதிபிம்பமாக – நிழற்படமாக இருக்கின்ற மனித சமுதாயத்தை – மனித உயிர்களை – மனித குலத்தைப் புழுதியிலே புரள விட்டுட்டு, சாக்கடையிலே மிதக்கும் புழுக்களைப் போலத் துடிக்க விட்டுட்டு மனித குலத்தின் அப்பனாக – அம்மையாக – அன்புடைய மாமனும் மாமியுமாக – ஒண்பொருளுமாக விளங்குகிற இறைவனை எப்படித் திருப்திப்படுத்த முடியும்? சிறப்புச் செய்யமுடியும்?

ஓம் நமசிவாய ஒம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *