அரக்கர்கோன் இராவணன் அருந்தவம்

அரக்கர் என்பவர் மறப்போர் வீரர். அன்னார் ஒருகால் வானவரோடு புரிந்த பெரும் போரில் தோல்வி யுற்றனர்; இலங்கை யரசும்,செல்வமும் இழந்தனர்; பாதலம் புகுந்து பதுங்கி வாழ்வாராயினர். தருக்கிழந்த அவ்வரக்கர் குலம் தலையெடுக்கத் தசக்கிரீவன் தோன்றினான் அரக்கர் குலக் கொழுந்தாய் விளங்கிய அவ்வீரன், தன் குலப்பெருமை குன்றி நிற்கக் கண்டு மனம் குழைந்தான். ஆண்மை நிறைந்த அரக்கர் மானமழிந்து, ஏறுபோற் செல்லும் நடையிழந்து, ஏங்கி நிற்க, கின்னரர் தலைவனாகிய குபேரன் விமானமூர்ந்து, இலங்கையை ஆளக்கண்டு, தசக்கிரீவன் மனங் கொதித்தான். ஐம்புலன்களையும் அடக்கியாற்றும் அருந்தவத்தின் வலிமையாலேயே அரக்கர் பெருமை இவ்வுலகில் மீண்டும் நிலைபெறும் என்று அறிந்த அவ்வண்ணல், ஓர் அழகிய கொன்றைவனம் குறுகிப் பல்லாண்டு பெருந்தவம் இயற்றினான். அரக்கர் காளை இயற்றிய தவத்தின் பெருமை அறிந்த அயன், அவன் முன்னர்த் தோன்றி உயரிய வரங்களை உவந்தளித்தான். அவ்விதமே, தசமுகன் தம்பியாய்த் தோன்றிய கும்பகர்ணன், நீரில் மூழ்கியும், நெருப்பில் நின்று நெடுந்தவம் புரிந்தும், பல வரங்களைப் பெற்றான். அருந்தவம் முயன்று பெருவரம் பெற்ற வீரர்களை ஆர்வமுறத் தழுவி அரக்கர் அகம் களித்தனர். அரக்கர் குலம் தலையெடுத்தது என்னும் ஆர்ப்பொலி எங்கும் நிரம்பியது.

வரத்திலும் வலிமையிலும் தலைசிறந்த தசக் கிரீவனை எதிர்க்க அஞ்சிக் குபேரன் இலங்கையை விட்டு அகன்றான். அப்போது, இழந்த தனம் அடைந்தவர் போல் அரக்கர் மீண்டும் தம் பழம்பதியிற் குடி புகுந்தனர். தவப்பெருமை சான்ற தசமுகன், இலங்கை மாநகரில் மணிமாட மாளிகைகள் நிருமித்து, மயன் மகளாகிய மண்டோதரியை மணந்து, மன்னர் மன்னனாக விளங்கினான்.

இங்ஙனம் செயற்கரிய தவம் செய்து சிறப்புற்ற தசக்கிரீவன், சிவனடியே சிந்திக்கும் செல்வனாயமைந்தான். சிவபெருமானையே மனமொழி மெய்களால் வழிபடும் மாண்பு வாய்ந்த இலங்கை நாதனது மேனியில் இலங்கிய திருநீற்றின் பெருமையை, “இராவணன் மேலது நீறு, எண்ணத் தகுவது நீறு”, என்று திருஞான சம்பந்தர் போற்றிப் புகழ்ந்தார். ‘மந்திரமாவது நீறு; வானவர் மேலது நீறு’ என்று எடுத்துத் திருநீற்றின் பெருமை கூறப் போந்த திருஞான சம்பந்தர்,இராவணன் மேனியில் இலங்குவது வெண்ணீறு என்று ஏத்துவாராயின், அந்நீற்றினை யணிந்த இலங்கேசன் பெருமை அளவிடற் கெளிதோ? முழுநீறு பூசிய முனிவரே போல், இலங்கை வேந்தன், திண்ணிய மேனியில் வெண்ணீறணிந்து மாதொரு பாகனை மனக்கோயிலில் அமைத்து மகிழ்ந்தான்; தேவர்க்கும் மற்றுமுள்ள யாவர்க்கும் முதலாய முழு முதற்பொருளை அருமறையாற் போற்றி வழிபடும் அறிஞனாய் விளங்கினான்; பண்ணொன்ற இசைபாடும் அடியார்க்கு மண்ணும் விண்ணும் கொடுக்கும் மணிகண்டன் பெருமையை வீணையிலமைத்து விண்ணோரும் வியக்கப் பாடினான். இம்மன்னன் மனைவியா யமைந்த மண்டோதரி, கற்பின் செல்வியாய், கலை ஞானமும் சிவஞானமும் பெற்று விளங்கினாள். இங்ஙனம் மனமொத்த மனையாளொடு சைவசமய சீலனாய இலங்கை வேந்தன் இல்லறம் நிகழ்த்தினான்.

இவ் வேந்தனுக்கு இராவணன் என்னும் பெயர் இறைவனாலேயே அருளப்பெற்ற தென்பர். ஈசன் வீற்றிருந்தருளும் வெள்ளி மாமலையை அசைத்த இலங்கை மன்னன், அம் மலையின் கீழகப்பட்டு நெரிந்த நிலையில் அலறி அழுது, அறியாது செய்த பிழை பொறுக்குமாறு பணிந்து பன்னருஞ் சாமகீதம் பரிவுடன் பாடலுற்றான். மனம் குழைந்தழுத இலங்கை நாதனுக்கு இன்னருள் சுரந்த ஈசன், இராவணன் என்ற பெயரும், நெடிய நாளும், கொடிய வாளும் அருளினான் என்பர். இப் பெயரின் வரலாற்றைக் கம்பரது கவிதையிலே காணலாம். நன்றி மறவாத கும்பகர்ணன் அமர்க்களத்தில் ஆவி துறந்தான் என்றறிந்த நிலையில், அளவிறந்த சோகத்தால் அழுதரற்றிய அரக்கர் கோமான்,

“அண்டத் தளவும் இனைய பகர்ந்தழைத்துப்
பண்டைத்தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்”

என்று கவிஞர் கூறும் மொழிகளில், இராவணன் என்ற சொல்லின் பொருள் இனிது விளங்கக் காணலாம்.

இறைவனளித்த இணையற்ற வாளின் வன்மையால் மூவுலகையும் வென்று, முட்டின்றி முறை செய்தல் இலங்கை வேந்தனுக்கு எளிதாயிற்று. கால தூதர் போன்ற காலகேயர் தலைகளை, அவ்வாளின் வன்மையால் இராவணன் அறுத்தெறிந்த கால முதல், அவன் பெயரைக் கேட்ட அளவிலே, கருவிலமைந்த மகவும் கலங்குவதாயிற்று. இன்னும், தன் கொடிய வேற் படையால் மாளாத கழுகின் வேந்தனை. ஈசனருளிய இலங்குவாளாலேயே இராவணன் ஈர்ந்து கொன்றான்.

இத்தகைய வீரம் வாய்ந்த இலங்கை வேந்தன் சிவபிரானையே முழு முதற் கடவுளாகக் கொண்ட வாலியாரின் உயிர் நண்பனாக அமைந்தான். வலிமை சான்ற வீரர் இருவரும், வழிபாட்டிலும் ஒற்றுமை யுடையவராக இருந்தமையால். தெய்வ மணக்கும் தேவாரப் பாமாலையில் இலங்கும் பேறு பெற்றனர். இலங்கை வேந்தன் ஈசன் அருள் பெற்ற உண்மையைச் சிவஞான செல்வராய திருஞான சம்பந்தரும், சொல்லின் செல்வராய திருநாவுக்கரசரும், பதிகந் தொறும் அமைத்துப் பாராட்டுவராயினர். இவ்வாறு தெய்வத் திருமுறையில் ஆன்றோர் இருவரும் பாடியதன் கருத்தினை,

“மண்ணுலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையில்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த
ஆக்கப்பாட ருள்செய்தார்”

என்று சேக்கிழார் இனிதெடுத்துரைத்தனர்.

இத்தகைய புகழ்மாலை பெற்றுயர்ந்த அரக்கர் கோன், இறுதியாக இராமனுடன் போர் புரியப்போந்த நிலையிலும், இறைவனை வழிபட்டுச் சென்ற முறை சாலச் சிறந்ததாகும். உலகெலாம் கலக்கி வென்ற மைந்தனாகிய மேகநாதனை இழந்து, மூலபலம் முறிந்து, ஆணிவேரிழந்த மரம்போல் அசைந்து ஆடிய அரக்கர் கோமான்,

” ஈசனை இமையா முக்கண்
இறைவனை இருமைக் கேற்ற
பூசனை முறையிற் செய்து
திருமறை புகன்ற தானம்
வீசினன் இயற்றி மற்றும்
வேட்டன வேட்டோர்க் கெல்லாம்
ஆசற நல்கி ஒல்காப்
போர்த் தொழிற் கமைவதானான் ”

என்று கம்பர் அருளிய கவியில் அவ் வழிபாட்டின் திறம் இனிது இலங்குவதாகும்.

இருப்பதோ அன்றி இறப்பதோ என்ற நிலை எய்திய போதும், இருமையும் தரும் பெருமானாகிய ஈசனை முறை வழுவாது வழிபட்டுச் சென்ற மன்னவன் சீலம், அரனடியார் மனத்தை அள்ளுவதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *