இலங்கை அணங்கு திரிசடை

கார்மேகத்தின் இடையே இலங்கும் கதிரொளி போன்று, இரக்கமற்ற அரக்கர் வாழ்ந்த இலங்கை மாநகரில் திரிசடை என்னும் நல்லாள் தோன்றினாள். அம்மங்கை இளமையிலேயே விபீடணன் தனயை என்னும் தகைமைக்கேற்ற அறிவும் சீலமும் அமைந்து விளங்கினாள் ; மது மலிந்த இலங்கைமா நகரில் மயக்குங் கள்ளைக் கண்ணெடுத்தும் பாராத கன்னியாக அமைந்தாள்; ஊனைத் தின்று ஊனைப் பெருக்கும் அரக்கர் நிறைந்த நகரில் புலால் உணவை அறவே ஒழித்த புனிதவதியாக இலங்கினாள்; இத்தகைய நல்லொழுக்கம் வாய்ந்த நங்கை, அழகிலும் சிறந்து நாளொரு மேனியாக வளர்ந்தாள்.

இலங்கை வேந்தன், சீதையை வஞ்சனையாற் கவர்ந்து, அசோக வனத்தில் சிறை வைத்துப் பல்லாயிரம் அரக்கியரைக் காவலாக அமைத்தான். அக் கருமனத் தரக்கியர் இடையே, புலிக் குழாத்தினடுவே அகப்பட்ட புல்வாய்போற் சீதை மயங்கினாள். கறுத்துப் பருத்த மேனியும், வளைந்து இதழதுக்கும் எயிறுகளும் உடைய அரக்கியரைக் கண்டு சீதை அஞ்சி நடுங்கினாள் ; இடி முழக்கம் போன்ற அவர் குரலைக் கேட்டு ஏக்கமுற்று வாடினாள். தலைவனைப் பிரிந்து அருந் துயரில் ஆழ்ந்த திருமகள் அரக்கியர் கொடுமையால் ஆற்றொணாத் துயரடைந்து, வெந்த புண்ணில் வேல் புகுந்தாற் போல் மனம் நொந்து வருந்தினாள்.

இத்தகைய துன்பத்தால் நலிந்த மங்கைக்குத் திரிசடை உயிர்த் தோழியாக அமைந்தாள். சீதையை மனத்தளியிலமைத்த இலங்கை மன்னன், அம்மங்கையின் மென்மைக்கும் செம்மைக்கும் ஏற்ற முறையில் நல்லியல் வாய்ந்த ஒரு நங்கையைத் தோழியாக அமைக்கக் கருதி அப்பணியைத் திரிசடைக்கு அளித்தான். நற்குணங்களெல்லாம் ஒருங்கே அமைந்த சீதைபால் திரிசடை தலையாய நேசம் பூண்டு ஒழுகினாள்; நாதனைப் பிரிந்த நங்கைக்கு நல்ல உயிர்த்துணையாக அமைந்தாள்; தலைவனை நினைந்து தளர்வுற்ற தலைமகளைத் தக்க மொழிகளால் ஊக்கி உயிர்ப்பித்தாள். அரக்கன் கொடுமையை எண்ணிச் சீதை நடுங்கிய போதெல்லாம் அந்நங்கையை நல்லுரைகளால் தேற்றினாள்; கணவனைப் பிரிந்த துயரத்தால் உறக்கமற்ற தலைமகளோடு தானுந் துயிலாது கண் விழித்திருந்தாள். இத்தகைய தோழியைத் திருமகள் தன் அன்னையாகவே கருதி அவள் பால் தலையாய அன்பு செலுத்தினாள். நேசம் என்னும் பாசத்தால் பிணிப்புற்ற இருவரும் ஒருவருக்கொருவர் உயிர்த் துணையாயினர்.

மையல் நோயால் நையலுற்ற இலங்கை நாதன் தன் கற்பினுக்குத் தீங்கு செய்வானோ என்று அஞ்சி அயர்ந்த சீதையின் மயக்கம் தீர்க்கக் கருதி, மலரோன் சாப வலிமையைத் திரிசடை எடுத்துரைத்தாள். முறையாக மணம் புரிந்த மங்கையரையன்றி மற்றைய மாதரை இலங்கை வேந்தன் தீண்டுவானாயின், அவன் தலை வெடிக்கும் என்று முன்னமே அயன் அருளிய சாபத்தைத் திரிசடை நன்றாக அறிந்திருந்தாள்; அச் சாபத்தின் வரலாற்றையும், வலிமையையும் சீதையிடம் எடுத்துரைத்து, அம்மங்கையின் மனத்துயரை மாற்றினாள். அச்சாபத்திற்கு அஞ்சியே அரக்கன் தன் மெய் தொடாது தானிருந்த நிலத்தை அகழ்ந்தெடுத்து அசோகவனத்தில் வைத்தான் என்னும் உண்மையைச் சீதை அறிந்து கொண்டாள். இவ்வாறு தனக்கு உயிர் அளித்த தோழியின் கருணையை,

“அன்ன சாபம் உளதென ஆண்மையான்
மின்னு மௌலியன் மெய்மையன் விபீடணன்
கன்னி என்வயின் வைத்த கருணையால்
சொன்ன துண்டு துணுக்கம் அகற்றுவாள் “

என்று சீதை அநுமனிடம் மனமாரப் புகழ்ந்து போற்றினாள்.

சஞ்சலத்தால் நைந்த சீதையின் நெஞ்சினைத் தேற்றி அம்மங்கைக்குப் புத்துயிரளித்த பெருமை திரிசடைக்கே உரியதென்னும் உண்மையை அசோக வனத்தில் அறிந்த அநுமன் அளவிறந்த ஆனந்த முற்றான்.

இன்பமும் துன்பமும் கலந்த இவ்வுலக வாழ்க்கையில் உற்றார் உறவினருடன் உள்ளங் கலந்து பேசுந்தோறும் துன்பம் குறையும்; இன்பம் அவரொடு பேசுந்தொறும் நிறையும். ஆகவே, துன்பத்தைக் குறைத்தற்குத் துணைவர் வேண்டும் என்றும், எவரிடமும் எடுத்துரையாது மனத்தகத்தே அடைத்து வைத்த துன்பம் இதயத்தைப் பிளக்கும் ஆற்றல் வாய்ந்த தென்றும் அறிந்தோர் கூறுவர். பொறுக்க லாற்றாத பெருந்துயர் அடைந்த சீதை அத்துன் பத்தைத் தன் தோழியிடம் சொல்லி ஆற்றிய தன்மையாலேயே ஆவி தாங்கியிருந்தாள் என்பது இனி தறியப்படும்.

இரவும் பகலும் இராமனையே எண்ணி ஏங்கிய சீதை ஒரு நாள் சில மெய்க் குறிகள் கண்டு மயங்கினாள். தன் இடக்கண்ணும் தோளும் புருவமும் துடிக் கக்கண்ட திருமகள் தலைவனுக்கு என்ன நேருமோ என்றஞ்சி, அன்னை போல் விளங்கிய தோழியை அன்பொடு நோக்கி. அம்மையே! முன்னால் முனிவரொடும் தம்பியோடும் என் காதலன் மிதிலைமா நகரில் வந்தபோது என் இடப்புருவமும் தோளும் கண்ணும் துடித்தன; அப்பால் என் ஆவி நாயகன் நாடு துறந்து காடுபுகுந்த நாளில் வலக்கண்ணும் தோளும் புருவமும் துடித்தன ; பின்பு நஞ்சனைய இலங்கை அரக்கன் என்னை வஞ்சனையால் கவர்ந்த நாளிலும் வலம் துடித்தது; இப்போது வலப்புறம் துடியாது இடப்புறம் துடிக்கின்றது; இதனால் என்ன நேருமோ என்று அஞ்சுகிறேன்; இதன் உண்மையை ஆராய்ந்து சொல்வாய்” என்று வினயமாக வினவினாள். திருமகள் கூறிய சொற்களை அமையக்கேட்ட தோழி அகமகிழ்ந்து, அருமருந்தே! உன் அருமை நாயகன் இங்கு விரைவில் வருவான் என்பதை இக் குறிகள் அறிவிக்கின்றன. நான் கண்ட கனவும் உனக்கு நற்காலம் விரைவில் வருமென்று நன் குணர்த்துகின்றது. எந்நாளும் துயிலுறாத நான் நேற்றுச் சிறிது கண்ணயர்ந் திருக்கையில் கனவொன்று கண்டேன். இலங்கையின் வேந்தன் சிவந்த ஆடையணிந்து, தலையில் எண்ணெய் பூசி, பேய் பூண்ட தேர் மேலேறித் தென் திசை நோக்கிச் சென்றான். அவ்வேந்தன் மக்களும் சுற்றமும் மற்றைய அரக்கரும் அங்ஙனமே தென்திசை நோக்கிச் சென்றார்கள். அரக்கர்கோன் ஆதரித்து வளர்த்த அசோக வனம் அழகிழந்து அழிந்தது. ‘பொன் கொண் டிழைத்து மணியைக்கொடு பொதிந்த மன்னன் மாளிகை இடியுண்டு பொடியாய் விழுந்தது. பிடிகள் மதம் பொழிந்தன. பேரிகைகள் அடிப்பாரின்றியே இடிபோல் முழங்கின. கருமேகங்கள் வெடிபட அதிர்த்தன. விண்மீன்கள் உதிர்ந்தன. ஞாயிறு பிளந்து எரிந்தது. கல்லெனத் திரண்ட இலங்கை வீரர் புயங்களில் விளங்கிய கற்பகமாலை நறுமணம் கமழாது புலால் நாற்றம் கான்றது. இலங்கை மாநகரிலே தீப்பற்றியது. வாடாவிளக்குகள் அவிந்தன. தோரண கம்பங்கள் ஒடிந்தன. பூரண கும்பங்கள் மதுக்குடம்போற் பொங்கின. வேழங்களின் வலிய கொம்புகள் முறிந்து விழுந்தன. மதியினைப் பீறி மின்னொளி யெழுந்தது. கருமேகங்கள் குருதிமழை பொழிந்தன. அரக்க மங்கையர் கழுத்திலமைந்த மங்கல நாண்கள் அறுந்து விழுந்தன. மயன் மகளா கிய மண்டோதரியின் அழகிய கூந்தல் அவிழ்ந்து அருகேயிருந்த விளக்கில் வீழ்ந்து எரிந்து கருகிற்று. புலிக்குழாத்தின் நடுவே வந்த இரண்டு அரிகள் இலங்கையின் மத கரிகளை வளைந்து போர் செய்து கொன்றன. இந்நகரினின்றும் ஓர் அழகிய மயில் வெளியே சென்றது. ஒளியமைந்த திருமகள் தன் கையில் மணி விளக்கேந்தி இலங்கைநாதன் மாளிகையினின்றும் வெளிப்பட்டு என் தந்தையின் மாளிகை புகுந்தாள். அந்நிலையில் என்னை நீ எழுப்பி விட்டாய்” என்று தான் கண்ட கனவை விரிவாக எடுத்துரைத்து வணங்கி நின்றாள். இவ்வாறு கண்ட கனவினால் இலங்கை மாநகரம் அழியும் என்றும் அரக்கரெல்லாம் இறந்தொழிவர் என்றும், சீதை சிறையினின்றும் மீள்வாள் என்றும், திரிசடையின் தந்தை இலங்கைக்கு மன்னன் ஆவான் என்றும் தெளிந்து இருவரும் மனமகிழ்ந்தார்கள். அரக்கியர் கொடுமையால் ஆற்றொணாத் துயர் அடைந்த மங்கைக்கு அக்கனவே அருமருந்தாக அமைந்தது. நாயகனைக் காணலாமென்னும் காதலால் நங்கை, அரக்கர் செய்த புன்மை எல்லாம் பொறுத்து ஆவி காத்து அமைந்தாள்.

திருமகளைத் தன் தீய கருத்துக்கு இசைவிக்கக் கருதிய இலங்கை வேந்தன், நயத்தால் தன் கருத்து முற்றுப் பெறாதென்றறிந்து, பயத்தால் அம்மங்கையைப் பணிவிக்க எண்ணினான்; “அயோத்திமா நகரில் அருந்தவம் புரியும் பரதனையும், மிதிலைமா நகரில் அரசு புரியும் மன்னனையும் வென்று வேரறுப்பேன்” என்று ஒரு நாள் வஞ்சினம் கூறினான்; மாயையால் ஓர் அரக்கனை மிதிலை அரசன் போல் ஆக்கி, அவனைப் பாசத்தாற் பிணித்துச் சீதையின் கண்ணெதிரே கொண்டு வருமாறு ஆணையிட்டான். அரக்கன் மாயத்தை அறியாத சீதை, மாயத் தந்தையை உண்மைத் தந்தை என்றெண்ணி மயங்கி அழுதாள்; கைகளை நெரித்தாள் ; கண்ணை மோதினாள். நெருப்பில் விழுந்த மலர் போல் வாடிச் சுருண்டாள் ; ஏங்கினாள் ; நடுங்கினாள்; “ஐயோ! தந்தாய்! என்னால் உனக்கும் இத்துன்பம் வந்ததோ! மன்னர் மன்னனாய் மதிக்கப் பெற்ற நீ, அரக்கன் பாசத்தில் அகப்பட்டு மானமிழந்து உயிர் வாழ்தல் ஆகுமோ! பெண்ணைப் பெற்ற பாவத்தால் இப்பெரும் பழியைப் பெற்றாய். என் சிறையும் உன் சிறையும் நீக்குவார் எவரையும் காண்கிலேனே!” என்று ஏங்கி அழுதாள். இவ்வாறு தன் தந்தையின் துயர் கண்டும் மனம் திரியாத சீதையின் திண்மையைக் கண்ட அரக்கர்கோன் அம் மாய மன்னனைச் சிறையிடப் பணித்தான். தன் தந்தையென வந்த மாயனும், இரக்க மற்ற இராவணனும் மறைந்த பின்னர், சீதை அருந்துயரில் ஆழ்ந்தாள்; தந்தைக்கு நேர்ந்த மானத்தை எண்ணி மனமுடைந்தாள்; தலைவனும் தந்தையும் தன்னால் அடைந்த பகையையும் பழியையும் நினைந்து நைந்தாள்; அந்நிலையில் திரிசடை திருமகளை அன்போடு நோக்கி இசையினுமினிய சொற்களால், “அன்னமே உன்னெதிரே சற்று முன் வந்தவன் உன் தந்தை அல்லன்; இங்குள்ள அரக்கரெல்லாம் மாயையில் மிக வல்லவர்; அவ்வரக்கருள் ஒருவனாய மருத்தன் என்பவனே மாயையால் உருவம் மாற்றி மிதிலை மன்னனென வந்தான்; ஆதலால் உன் தந்தை மானமழிந்தான் என்று மனம் வருந்தாதே” என்று கூறி மயக்கம் தெளிவித்தாள். இதனை,

”உந்தை யென்று உனக்கெதிர் உருவமாற்றியே
வந்தவன் மருத்தனென்றுளன் ஓர்மாயையான்
அந்தமில் கொடுந்தொழில் அரக்கனாமெனச்
சிந்தையில் உணர்த்தினள் அமுதின் செம்மையாள்”

என்று கம்பர் அழகுறக் கூறியுள்ளார். திரிசடை கூறிய சொற்களால் மனந்தேறி மங்கை ஒருவாறு துயரம் தீர்ந்தாள்.

இவ்வாறிருக்கையில் இலங்கை வேந்தன் சேனைக்கும் இராமவீரன் சேனைக்கும் இலங்கைமா நகரிற் கடும்போர் நிகழ்ந்தது. வில்லின் செல்வனாய மேக நாதன் விண்ணிலே மறைந்து நின்று வெம்மையும் கொடுமையும் நிறைந்த மலரோன் படையை மாற்றார் மீது ஏவினான். அப்படை வலியால் இலக்குவன் முதலிய எல்லா வீரரும் அடியுண்டு மண்மேல் விழுந்தார்கள். வீரர் அனைவரும் மடிந்து கிடக்கக் கண்ட இராமனும் மனங் கலங்கி மயங்கி மண்ணிடைச் சாய்ந்தான். பகைவர் அனைவரும் தன் படைக்கலத்தாற் பாழாயினர் என்று அறிந்து மகிழ்ந்த மேகநாதன், நிகழ்ந்த செயல்களை இலங்கை வேந்தனிடம் எடுத்துரைத்தான். அப்போது மன்னனும் மைந்தனை மெச்சி எல்லையற்ற இன்பமுற்றான்.

அமர்க்களத்தில் இறந்து கிடந்த இராமனைச் சீதை தன் கண்களாற் காணின் இனி உய்யும் வழி இல்லை யென்றறிந்து தன்னைக் கணவனாக ஏற்றுக்கொள்வாள் என்று எண்ணிய இலங்கை வேந்தன் அத் திருமகளை அழைத்துச் சென்று அமர்க்களத்தைக் காட்டுமாறு அரக்கியர்க்கு ஆணை செய்தான். அங்ஙனமே சீதையை ஒரு விமானத்திலேற்றி இராமன் மயங்கிக் கிடந்த இடத்திற்கு இரக்கமற்ற அரக்கியர் கொண்டு சென்றார்கள். திரிசடையும் சீதையுடன் விமானத்திற் சென்றாள். மயங்கிக் கிடந்த நாயகனையும் மற்றைய வீரரையும் கண்ட சீதை, அனைவரும் இறந்தார் என்று எண்ணி, நஞ்சுண்டவள் போல் நடுங்கி அழுதாள். கல்லும் புல்லும் கரைந் துருக அம் மங்கை அழுதபோது பெண்மணிக ளெல்லாம் அழுதனர்.

“மங்கை யழலும் வானாட்டுமயில்கள்
அழுதார் மழவிடையோன்
பங்கிலுறையும் குயிலழுதாள்
பதும மலர்மேல் மாதழுதாள்
கங்கையழுதாள் நாமடந்தை யழுதாள்
கமலத் தடங்கண்ணன்
தங்கையழுதாள் இரங்காத அரக்கிமாரும்
தளர்ந் தழுதார்”

என்று கவிஞர் கூறுமாறு விண்ணுலக மாதரும், மண்ணுலக மாதரும் இரங்கி அழுதார்கள். தலைவன் இறந்த பின் உயிர்வாழ இசையாத சீதை அந்நிலையே நாயகன் மீது விழுந்து ஆவி துறக்கத் துணிந்தாள். அப்போது அருகே நின்ற திரிசடை அம்மங்கையைத் தழுவிப் பற்றி, சுற்றி நின்ற அரக்கியரை எல்லாம் விலக்கி, அருந்துயரில் ஆழ்ந்த திருமகளை நோக்கி, ‘அம்மா! இதுவும் அரக்கர் மாயமென்றறிவாய்!, முன்னமே மாயமான் விடுத்ததும், பின்பு மிதிலை மன்னனை வகுத்ததுவும் மாயம் என்று அறிந்தாய் அல்லையோ ?”

“மாயமான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும்
போயமா நாகபாசம் பிணித்தது போனவாறும்
நீயமா நினைவாய் மாள நினைதியோ நெறியிலாரால்
ஆயமா மாயமொன்றும் அறிந்திலை அன்னம் அன்னாய்”

“அன்றியும் நாம் கண்ட கனவும், நன்னிமித்தமும் பழுதாகுமோ? அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் அறவுரையும் பொய்க்குமோ? அண்டர் நாயகனான இராமனது வீரத்தன்மையை அயர்க்கலாமோ? மெய்ப்பொருளாய அப் பெருமானுக்கும் அழிவு நேருமோ? இராமன் அழிந்தால் இவ்வண்ட கோளம் பிளக்கும் அன்றோ? ஆதவனும் நிலைகுலையு மன்றோ? மலரோன் படைவலியால் வீரர் அனைவரும் மயங்கினரே யல்லால் மாண்டாரல்லர்; இம்மயக்கம் தீர்ந்து இன்னும் இறைப் பொழுதில் எழுவார்கள். ஆதலால் மனம் வருந்தாதே” என்று திருமகளைத் தேற்றினாள். அப்பொழுது சீதை சிறிது சிந்தித்து அன்பு நிறைந்த தோழியை அமர்ந்து நோக்கி,

“அன்னை நீ உரைத்த தொன்றும்
அழிந்திலது ஆதலானே
உன்னையே தெய்வமாகக் கொண்டு
இத்தனை காலம் உய்ந்தேன்
இன்னம் இவ் இரவுமுற்று மிருக்கின்றேன்
இறத்தல் என்பால்
முன்னமே முடிந்ததன்றே”

என்று மாற்றமுரைத்து ஒருவாறு மயக்கம் தீர்ந்தாள். அந் நிலையில் சோகத்தாளாய சீதையை மீண்டும் விமானத்தில் ஏற்றி அசோகவனத்திற் கொண்டு சேர்த்தார்கள்.

அப்பால் அநுமான் மருத்துமாமலை எடுத்து வந்த போது மலரோன் படையால் மயங்கிய வீரர் எல்லாம் முன்போல எழுந்து ஆரவாரித்தனர். அப் பேரொலியைக் கேட்ட நிலையில் திரிசடை கூறிய மொழிகளை நினைந்து திருமகள் அகமும் முகமும் மலர்ந்தாள். பகைவரெல்லாம் அழிந்து ஒழிந்தனர் என்று செம்மாந்து களியாட்டயர்ந்த இலங்கை மன்னனும் மற்றைய அரக்கரும் காலைக் குமுதம் போல் கூம்பினார்கள். முன்போலவே இப்பொழுதும் இலங்கைக் கன்னியின் சொல் அழியாமை கண்டு சீதை மனங் களித்து நாயகனைக் காணலாம் என்னும் காதலால் ஆவி காத்து அமைந்தாள். இவ்வாறு தனக்குத் தோழியாயமைந்த கன்னியை அன்னையாகவும், காக்கும் தெய்வமாகவும் கொண்டு புனையா ஓவியம் போல் இலங்கையில் உயிர் வாழ்ந்தாள் சீதை.

இலங்கைப் போரில் எண்ணிறந்த அரக்கரும். மேகநாதனும், இராவணனும் மடிந்த பின்னர்ச் சீதையைச் சிறையினின்றும் அழைத்து வருமாறு இராம அநுமனை அனுப்பினான். செந்தீயில் மூழ்கி எழுந்து மாசற்ற கற்பின் பெருமையை உலகெலாம் அறியக் காட்டிய சீதை, தன் ஆருயிர் நாயகனுடன் அயோத்திமா நகரம் செல்லப் புறப்பட்டபோது, இலங்கைக் கன்னியாய தோழியை நோக்கி, “அன்னையே! இந் நகரில் இணையற்ற அணங்காக எந்நாளும் இனிது வாழ்க” என்று மையறு மனத்தால் வாழ்த்திப் பிரியாவிடை பெற்றுப் போயினாள்.

பல்வகைச் செல்வமும் பல்கி யோங்கிய இலங்கை மாநகரில் தந்தையாய விபீடணன் மன்னனாக விளங்க, கனிந்த மனம் வாய்ந்த கன்னி, செம்மை சான்ற சீதையைச் சிந்தையிலமைத்து, ஒரு சடையளாய்த் தவஞ் செய்த திருமகளைக் காத்த திரிசடை என்று உலகோர் போற்ற இலங்கை அணங்காக இனிது வாழ்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *