
அகத்தியர் ஞானம்
அகத்தியர் சித்தர்களிலே தலைசிறந்தவராகக் கருதப் படுகிறார். தமிழுக்கு முதலில் இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்பது புலவர்கள் கொள்கை. அந்த இலக்கணத்துக்கு அகத்தியம் என்று பெயர். அது முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நூல் என்பர். ஆனால் அந்நூல் இக்காலத்தில் கிடைக்கவில்லை.
அகத்தியர்க்குச் சிவபெருமான் தமிழ் இலக்கணத்தை உபதேசித்தார். முருகன் அகத்தியர்க்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தார். இவ்வாறு புராணங்கள் கூறும்.
அகத்தியர் பொதிய மலையிலிருந்து தமிழைப் போதித்து வருகிறார் என்றும் உரைப்பர்.
அகத்தியர் பெயரிலே ஏராளமான வைத்திய நூல்கள் வழங்குகின்றன. அகத்தியர் பெயரால் சில மருந்துகளின் பெயர்களும் உண்டு. இன்று அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்களிலே வைத்திய நூல்கள்தாம் மிகுதியாக இருக்கின்றன.
இன்று அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள் எல்லாம், சரித்திரத்துக்கு எட்டாத நாளில் வாழ்ந்த காலத்தவராகக் கருதப்படும் அகத்திய முனிவரே பாடியனவா? நேரே அவர் வாயால் சொல்லப்பட்டனவா? அவைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்கள் தாமா? என்று ஆராயவேண்டும். இப்படி ஆராய்ந்தால் அவைகள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவைகள் அல்ல என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.
அகத்தியர் பெயரால் வழங்கும் மருத்துவ நூல் பாடல்கள், இன்று வழங்கும்- பொதுமக்கள் பேசும்- எளிய நடையிலேதான் அமைந்திருக்கின்றன. நடையின் போக்கு பழமையானதாக- ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய மொழியாக- காணப்படவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் வளர்ந்து வந்திருக்கும் கலப்புத்தமிழ் நடையிலேயே அமைந்திருக்கின்றன. ஆயினும் அந்நூல்களில் சொல்லப்படும் விஷயங்கள் பழங் காலத்தவை. அகத்திய முனிவரால் ஆராய்ந்து சொல்லப் பட்டவை என்று ஒப்புக்கொள்வதில் தவறில்லை. ஆகவே அகத்தியரின் கொள்கைகளை- அவர் கண்டறிந்த உண்மைகளைச் செவி வழியாக- கர்ணபரம்பரையாக- அறிந்தவர்கள் இருந்தனர்; பிற்காலத்தினரான அவர்கள் அவ்வுண்மைகளை அகத்தியர் பெயராலேயே பாடி, நூல்களாக வைத்தனர். இவ்வாறு கொள்ளுவதுதான் பொருத்தமாகும்.
அகத்தியர் ஞானம் என்ற பெயரிலே பதினெண் சித்தர் ஞானக்கோவையில் இருபத்தாறு பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்கள் மக்களுக்கு அறிவு புகட்டும் பாடல்கள்; சித்தர்களின் மத- சமுதாயக் கொள்கைகளை விளக்கும் பாடல்கள். மக்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டும் கருத்துள்ள பாடல்கள் அகத்தியர் ஞானத்தில் காணப்படுகின்றன.
“வேத சாத்திரங்கள் மக்களை ஏமாற்றுவதற்கு ஏற்பட்டவை. புராணங்களால் மக்களுக்கு நன்மையில்லை. உடலை மட்டும் நம்பி வாழ்ந்த அறிவற்றோர்க்கே அவைகள் ஏற்பட்டவை.”
புராணங்களில் பரிபாஷைகள் உண்டு; மூடர்கள் அவைகளை அறியமாட்டார்கள். கல்லையும் செம்பையும் தெய்வம் என்று நம்பி அலைவார்கள். இதனால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு திரிவார்கள்.
புராணங்களிலும், புரட்டுக்களிலும் நம்பிக்கை வைத்தவர்கள் சாதிவேற்றுமை பாராட்டித் திரிவார்கள்; உடல்வேறு, ஆன்மா வேறு, கடவுள் வேறு என்று நம்புவார்கள். மூன்றும் ஒன்று என்பதை உணர்ந்து உடலைப் பாதுகாப்பவன், ஏனைய மக்களின் நல்வாழ்வுக்காகவும் உழைப்பவன். தந்நலங் கருதாதவன் ஆகிய பண்புள்ளவனே ஞானி; அவனே அறிவுடையவன்; உண்மையை உணர்ந்தவன். இக் கருத்துக்களை அகத்தியர் ஞானத்திலே காணலாம்.
தான் என்ற பெரியோர்கள் உலகத் துள்ளே
தாயான பூரணத்தை அறிந்த பின்பு
ஊண்என்றே உடலைநம்பி இருந்த பேர்க்கு
ஒருநான்கு வேதம்என்றும், நூலாம் என்றும்
தேனென்ற பதினெட்டுப் புராணம் என்றும்
தேவர்என்றும், தேவியென்றும் ரவிதான் என்றும்
நான்என்றும் நீயென்றும் சாதிபல வென்றும்
நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே
என்பது அகத்தியர் ஞானப் பாடல். இதன் பொருளைக் கண்டால் உண்மைகள் விளங்கும்.
“எல்லாவற்றிற்கும் அடிப்படையான முழு உண்மை அறிந்தவர்களிலும் அகங்காரம் பிடித்தவர்கள் உண்டு. அவர்கள் தாம் தான் என்ற ஆணவம் படைத்த பெரிய மனிதர்கள். இந்த உடல் வெறும் மாமிசப் பிண்டம்; இதனால் ஒன்றும் ஆகாது என்று நம்பியவர்களுக்காக அவர்கள் பல கற்பனைகளைச் செய்து வைத்தார்கள். அவைகள் நான்கு வேதங்கள் என்பன; அவைகளைப் பின்பற்றியன ஆகம நூல்கள் என்பன; தேன்போல் இனிக்கும் பதினெட்டுப் புராணங்கள் என்பன. அவைகளில் தேவர்கள், தேவிமார்கள், சூரியர்கள் என்றெல்லாம் எழுதி வைத்தனர்; அவர்களைப் பற்றிய கதைகள் புனைந்துவைத்தனர்; மக்கள், நான் வேறு சாதி; நீ வேறு சாதி என்று பிரிந்து சண்டை போடும்படி கூறிவைத்தனர். இவைகளையெல்லாம் உலகில் உள்ள சுயநலக்காரர்களின் பிழைப்புக்காகச் செய்து வைத்தார்கள். இதுவே மேலே கண்ட பாடலில் அடங்கியுள்ள பொருள்.
இப்பாடல், வேதங்கள், ஆகமங்கள், ஏனைய நூல்கள், புராணங்கள் எல்லாம், தந்நலங்கொண்ட அறிஞர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யப்பட்டவை. இந்த மாமிச உடல் நிலையற்றது என்று நினைப்பவர்களே அவற்றை நம்பி அறிவிழப்பார்கள். உடலின் உண்மையறிவோர் உடம்பைக் காப்பாற்ற முடியும், உடம்பால் இன்பந் துய்க்க முடியும் என்ற உண்மையை அறிந்தோர் அந்நூல்களால் மயங்கமாட்டார்கள்; என்ற கருத்துடன் விளங்குவதைக் காணலாம். கடவுளர்களைப் பற்றி வழங்கும் புராணங்கள் எல்லாம் பொய்யுரைகள், மக்கள் குலத்தைப் பிரித்துவைக்கும் கருத்துள்ளவை என்று தெளிவாக உரைத்தது இப்பாட்டு.
பாடினார் இக்கதைதாம்; சொல்லப் போனால்
பரிபாஷை அறியார்கள் உலக மூடர்;
சாடுவார் பலபலநூல் பார்த்துப் பார்த்து
தமைமறந்து படுகுழியில் வீழ்வார்; சாவார்;
வாடுவார் நாமமென்றும், ரூபம் என்றும்
வையகத்தில் கல், செம்பைத் தெய்வம் என்றும்
நாடுவோர்; பூரணத்தை அறியா மூடர்.
நாய்போலே குரைத்தலைவார்; வழிகா ணாரே.
இதுவும் அகத்தியர் ஞானத்தில் உள்ளது. புராணங்களை நம்புவோர் அடையும் நிலைமையை விரித்துரைக்கின்றது இச்செய்யுள்.
மக்களை மூடர்களாக்கவே இப் புராணக்கதைகளைப் பாடினார். அப் புராணங்களிலும் பரிபாஷைகள் உண்டு. ஆனால் உலகில் மூடர்கள் பலர் அப் பரிபாஷைகளை அறிய மாட்டார்கள். அவைபோன்ற இன்னும் பல நூல்களையும் படித்துப் படித்துச் சண்டையிடுவார்கள்; தன்மை அறியாமல் மறந்து கரையேற முடியாத ஆழமான குழியிலே வீழ்ந்து தவிப்பார்கள்; மீள முடியாமல்- அறிவுக் கரையிலே தாவிப் பிடித்து ஏற முடியாமல்- அந்த மூடப் படுகுழியிலேயே மடிவார்கள். கடவுளுக்கு- நம் உடம்பில் உள்ள மெய்ம்மைக்கு- பூரணத்துக்குப் பெயரும் உருவமும் கற்பிப்பார்கள்; இவ்வுலகில், கல்லிலும், செம்பிலும் உருவம் செய்து வைத்திருப்பதைப் பார்த்து அவற்றில் தெய்வம் இருப்பதாகத் தேடுவார்கள்; பரிபூரணப் பொருள் இருக்கும் இடம் அறியாத ஏழையர் செயல் இது. இவர்கள், நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுவது போல, ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொள்ளுவார்கள்; உண்மைவழி இன்ன தென்று அறியமாட்டார்கள்.
இவ்வாறு புராணங்களால் உண்டாகும் கலகத்தை- ஒற்றுமையின்மையை- எடுத்துரைத்தது இப் பாடல்.
புராணங்களால் விளையும் தீமையை மேலே காட்டியவாறு எடுத்துக் கூறியது அகத்தியர் ஞானம். இதோடு நிற்கவில்லை; மக்கள் உணர வேண்டிய உண்மை இன்னது என்பதையும் தெளிவாகச் சொல்லுகின்றது.
வாழாமல் உலகம்விட்டு, வேடங்கள் பலவும் பூண்டு
வயிற்றுக்காய் வாய்ஞானம் பேசிப் பேசி,
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை;
தனைஅறியாச் சண்டாளன் முழுமாடு அப்பா;
பாழாகப் பாவிகள்தன் சொல்கே ளாதே!
பதறாதே! வயிற்றுக்கே மயங்கி டாதே!
கேளாதே! பேச்செல்லாம் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே! உடல்உயிர் என்று உணர்ந்தி டாயே.
புராண வேதாந்தங்களை நம்பி, துறவி வேடம் பூண்டு, பிச்சையேந்தித் திரிவோர்க்கு அறிவுரை கூறுவது போல அமைந்திருக்கின்றது இப்பாடல். இப்பாடல் கூறும் உண்மையைக் காண்போர் சித்தர்களின் தத்துவத்தையும் காண்பார்கள்.
புராண வேதாந்த போதத்தை நம்பி உலக வாழ்வைத் துறக்க வேண்டாம்; உலக வாழ்வில் இன்பம் இல்லை; நிலையற்ற உடலை நம்பி வாழ்வது துன்பத்திற்கே இடம் என்று கருத வேண்டாம்; பலப்பல வேஷங்களைப்பூண்டு திரிய வேண்டாம்; வயிற்றுப் பிழைப்பின் பொருட்டு வாய் ஞானம் பேசி அலைய வேண்டாம். உடல் நிலையற்றது; உலகம் பொய்; சாவு மெய், வாழ்வு பொய் என்று சொல்லிக் கொண்டு வறியவர்களின் வீடுகளிலே சென்று பிச்சையேற்பவன் மூடன்; அவன் தன்னை யார் என்று ஆராய்ந்து பார்க்காத சண்டாளன்; அவன், உருவில் மனிதனாயிருந்தாலும் செய்கையில் அறிவற்ற மாடு. ஆகையால் வீணாகப் பாவியர்கள், வஞ்சகர்கள், வேஷக்காரர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்காதே! நம்பாதே! அவசரப்படாமல் ஆராய்ந்து எதனையும் செய்; வயிற்றுப் பிழைப்புக்காகப் பொய்களை மெய்கள் என்று நம்பி அறிவழியாதே! பிறர் பேச்சைக் கேட்கவேண்டாம்; பிறர் பேச்சுக்களைக் கேட்டு அறிவு கலங்காதே; குழப்பம் அடையாமல் உறுதியுடன் நடந்து கொள். உடலேதான் உயிர்; உடல்வேறல்ல, உயிர் வேறல்ல; இரண்டும் ஒன்றேதான். இந்த உண்மையை உணர்ந்து கொள்வாயாக.
இவ்வாறு, உடலும் உயிரும் ஒன்றேதான் என்ற சித்தர் கொள்கையை வலியுறுத்தியது இப்பாடல். மேலும்,
உடல்உயிரும், பூரணமும் மூன்றும் ஒன்று;
உலகத்தில் சிலபேர்கள் வெவ்வே றென்பார்
என்று சொல்லுகிறது அகத்தியர் ஞானம். கடவுள் வேறு, ஆன்மா வேறு, உடலாகிய மாயை வேறு என்பதை மறுக்கிறது இவ்வடி. இதனால் சித்தர்கள் பதி, பசு, பாசம் என்று கூறுவதை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. மாயையின் கூறு என்று சொல்லப்படும் உடம்பும், தனியானது என்று சொல்லப் படும் உயிரும், பூரணம் என்று சொல்லப்படும் பதியும் ஒன்றேதான். இவ்வுலகில் இந்த உண்மையறியாத சிலர்தான் வேறுவேறு என்பார்கள் என்பது மேலே காட்டிய தொடரின் தெளிவான பொருளாகும்.
மேலே காட்டியவை உடம்பின் உண்மையை எடுத்துக் காட்டின. உடல் உண்மையென்பதை மறக்காதே; யோக மார்க்கத்தில் நின்று உடம்பைப் பாதுகாத்துக் கொள் என்பதே அகத்தியர் ஞானம் காட்டும் வழியாகும். சித்தர்களின் உண்மையான கொள்கையைக் காண்பதற்கு இந்த அகத்தியர் ஞானமும் சிறந்த கருவியாக விளங்குகின்றது. மேலே காட்டிய பாடல்களே இதற்குப் போதுமான சான்றாகும்.


