அகப்பேய்ச் சித்தர்

இவர் மனத்தைப் பேயாக உருவகம் செய்து பாடியிருக்கிறார்; ஆதலால் அகப்பேய்ச் சித்தர் என்று பெயர் பெற்றார். இவருடைய பாடல்கள் முழுவதும் உள்ளத்துக்கு உபதேசம் செய்வதாகவே அமைந்திருக்கின்றன. மனத்தைப் பார்த்து இவர் செய்யும் உபதேசம் மக்களுக்குச் செய்யும்- கூறும் – அறிவுரை யாகவே அமைந்திருக்கின்றது.

சைவம் என்பதற்கு அன்பு என்பது பொருள். ஆதலால் சைவர் என்பவர்கள் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும்; அகங்காரம் அற்று வாழவேண்டும். அகங்காரம்- அகந்தை- அழிந்த இடத்திலேதான் அன்பு வளர முடியும். ஆதலால் சைவர்கள் முதலில் ஊன் உணவைக் கைவிட வேண்டும். இதைக் கைவிட்டு அனைவரிடமும் அன்பு காட்டுவோரே குற்றமற்ற சைவராவார் என்று பாடுகிறார். இதனை,

தான்அற நின்றஇடம்- அகப்பேய்!
சைவம் கண்டாயே!
ஊன்அற நின்றவர்க்கு- அகப்பேய்!
ஊனம் ஒன்று இல்லையடி!

என்ற பாடலால் காணலாம்.

மற்றொரு பாடலிலே பிறவித் துயர் நீங்குவதற்கு வழி கூறுகிறார்.

இனிப் பிறந்து இறந்து துன்பப்படாமல் இன்பம் அடைய வேண்டும் என்றால் யாருக்கும் தீமைகளைச் செய்யாதே; உண்மையான துறவு பூண்டவர்கள்- பேராசையைக் கைவிட்டவர்கள்- தீய காரியங்களைச் செய்யமாட்டார்கள், செயலற்றுச் சும்மாதான் இருப்பார்கள் என்று பாடுகிறார். இதுவும் அன்பு நெறியைப் பின்பற்றுவோர் கைக்கொள்ள வேண்டிய ஒழுக்க மாகும். இதனை,

பிறவி தீரவென்றால்- அகப்பேய்!
பேதகம் பண்ணாதே!
துறவி யானவர்கள்- அகப்பேய்!
சும்மா யிருப்பார்கள்

என்பதே அப்பாடல்.

தீமை செய்யாமல் அறநெறியில் நின்று வாழ்வோர் மக்களுள் வேற்றுமை பாராட்ட மாட்டார்கள். உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பிரிவினையை மதிக்க மாட்டார்கள்; மக்கள் அனைவரையும் ஒரே சாதி யென்றுதான் நினைப்பார்கள்; எல்லா மக்களிடமும் சமத்துவமாகத்தான் நடந்து கொள்ளுவார்கள். இது, தன்னை அறிந்தவர்களின் செயலாகும். இதனை,

சாதிபேதம் இல்லை- அகப்பேய்!
தானாக நின்றவர்க்கு
ஓதி உணர்ந்தாலும்- அகப்பேய்!
ஒன்றுதான் இல்லையடி!

என்ற பாடலால் காணலாம். அகப்பேயே! தாமே எல்லா சக்தியும் படைத்தவர்கள் என்பதை உணர்ந்து நின்றவர்க்குச் சாதி பேதம் இல்லை. அவர்கள் எவ்வளவு மிகுதியாக வேத வேதாந்தங்களை ஓதி உணர்ந்திருந்தாலும் தான் என்ற கர்வம் ஒன்றுஅவர்கள் உள்ளத்தில் இல்லை என்பதே இதன் பொருள்.

சாத்திரங்களின் மூலம் கடவுளைக் கண்டுவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனம், கடவுளைக் காட்டும் சாத்திரங்கள் ஒன்றுமேயில்லை. இவ்வுலகில் நம் கண்முன் நடமாடும் எவையும் இறைவன் அல்ல; இவைகளையெல்லாம் கடந்ததே கடவுள். கடவுளைக் கண்ணால் காணவும் முடியாது; உள்ளத்தால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது என்று பாடுகிறார். இதனை,

சாத்திரம் இல்லையடி; – அகப்பேய்!
சலனம் கடந்ததடி
பார்த்திடல் ஆகாதே; – அகப்பேய்!
பாவனைக்கு எட்டாதே!

என்ற பாடலால் காணலாம்.

கடவுளைச் சாத்திரங்களில் காண முடியாது; சஞ்சரிக்கும் பொருள்களில் காண முடியாது; கண்ணால் பார்க்க முடியாது; உள்ளத்தால் கற்பனை பண்ணவும் முடியாது- என்றால் கடவுளைக் காணுவதுதான் எப்படி? அதற்கு வழியேயில்லையா? இக் கேள்விகளுக்கு அகப்பேய்ச் சித்தரே பதில் சொல்லி விடுகிறார். கடவுளைக் காணமுடியும்; அதற்கான வழி உண்டு என்று தெளிவாகச் சொல்லுகிறார்.

தன்னை அறியவேண்டும்; தன்னுடைய இயல்பை- ஆற்றலை- உணரவேண்டும்; தன்னை அறிந்து தீயநெறியிலே பிளவை- பிரிவை உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேரவேண்டும். இந்த உண்மையை அறியாமல் இதற்கு மாறானவைகளை அறிவது மனிதத்தன்மையுள்ள அறிவாகாது, பேய்த்தன்மையுள்ள அழிவாகும் என்று பாடுகிறார். இதனை,

தன்னை அறியவேண்டும்- அகப்பேய்!
சாராமல் சாரவேண்டும்;
பின்னை அறிவதெல்லாம்- அகப்பேய்!
பேய்அறிவு ஆகும் அடி!

என்ற பாடலால் காணலாம்.

இவ்வாறு தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறியவர், மற்றொரு பாடலில் இன்னும் தெளிவாகக் கூறியுள்ளார்.

நான் சும்மா ஒப்புக்காகச் சொல்லவில்லை; உன் மேல் ஆணையிட்டு உறுதியாகச் சொல்லுகிறேன். நீருடன் உப்புக் கலந்திருப்பது போல உன்னுடனேயே இறைவன் இருக்கின்றான்; தெய்வத்தன்மை இருக்கின்றது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாக வாழ்வாயாக! என்று பாடுகிறார். இதனை,

ஒப்பனை அல்லவடி; – அகப்பேய்!
உன் ஆணை சொன்னேனே!
அப்புடன் உப்பெனவே- அகப்பேய்!
ஆராய்ந் திருப்பாயே!

என்ற பாடலால் காணலாம்.

அன்பு நெறியே உண்மையான சைவமாகும்; பிறவித் துன்பம் தீர்வதற்கு வழி, தீமைகள் செய்யாமல் இருப்பது; சாதிபேதம் பாராட்டாமையே செருக்கின்மைக்கு அடையாளம்; சாத்திரங்களின் மூலம் கடவுளைக் காணமுடியாது; கடவுள் நம்முடன் கலந்தே இருக்கின்றான்; அவனை நமக்குள்ளேயே காணவேண்டும். இவ்வுண்மைகளை மேலே காட்டிய அகப்பேய்ச் சித்தர் பாடல்களிலிருந்து அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *