
சிற்றம்பலம்
கி. வா. ஜகந்நாதன்
தேவார அறிவு தமிழ் மக்களிடத்தில் வளராமல் இருப்பது வியப்பன்று. வரவரக் குறைந்து போகுமாயின் அதுவும் வியப்பாகாது. பண்ணோடு முறையாகத் தேவாரத்தைப் பாடுவது கூட இப்போது அருகி வருகின்றது. பழைய மரபு என்றால் வேப்பங் காயாக எண்ணும் சிலர், தேவாரம் பாடும் புண்ணியச் செயலை உடையவராக இருந்தும், அப்பாடல்களுக்குரிய பண்ணை மாற்றிச் சினிமாமெட்டில் பாடுவதற்கும் துணிந்து விட்டார்கள். வேதமாக எண்ணிப் பக்தியுடன் பாடுவதற்குரியது தேவாரம். வேதத்துக்குச் சுரம் அமைந்தது போலத் தேவாரத்துக்குப் பண்கள் அமைந்திருக்கின்றன. திருமுறைகளைக் கண்டெடுத்த இராசராசன் அவற்றை அப்படியே வெளிப்படுத்தாமல், பண்களுடன் பாடுவது இன்றியமையாதது என்று அறிந்தே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய மரபிலுதித்த மங்கையொருத்தியின் உதவியினால் பண்களை அமைக்கச் செய்தான். தேவாரத் திருமுறைகளின் வகுப்பே பண்ணை அடிப்படையாகக் கொண்டது. இன்ன இன்ன பண்ணுக்கு இத்தனை பதிகங்கள் என்ற வரையறையை இந்த வகுப்பில் காணலாம். அப்படியிருக்கப் பண்களை மாற்றி ஓதுவதும், சினிமாப் பாட்டாக எண்ணும்படி ராகம் அமைத்து ஓதுவதும் தேவாரத்துக்குரிய தெய்விகப் பண்பைக் குறைத்துவிடும்.
தேவாரம் ஓதுவதும், தேவாரத்தின் இலக்கியச் சுவையை நுகர்ந்து இன்புறுவதுமாகிய செயல்கள் தமிழ் மக்களிடத்தில் மிகுதியாக இருக்கவேண்டும் என்ற விருப்பத்தினால் இதனை இங்கே தெரிவிக்கலானேன். திருமாலடியார்கள் திவ்யப் பிரபந்தத்தைப் பாதுகாக்கும் முறையையும், அதற்கு உரை பல தோன்றிச் சிறப்புற்று விளங்கும் செய்தியையும் நினைத்துப் பார்த்தால் தேவாரத்துக்குச் சிவனடியார்கள் செய்தது எள்ளளவுகூட இல்லை என்பது தெரியவரும்; தேவாரம் மீண்டும் பழைய நிலையைப் பெறுவதோடு, அதிலுள்ள இலக்கியச் சுவையை அறிந்து இன்புற்றும் பிறரை இன் புறச் செய்தும் வரும் முயற்சிகள் பல்க வேண்டுமென்று இறைவன் திருவருளை வழுத்துகிறேன்.